கீற்றில் தேட...


அளப்பரிய கருணையை
அள்ளித்தரும் தேவனின்
எல்லையில்லா கொடை
அந்த சுக வனத்தில்
பரிபூரணமாக இருந்தது.

தவிர்க்கவேண்டிய
கனியின் சுவை குறித்தான
எச்சரிக்கைகளை
மனதார ஒப்புக்கொள்ளும்
தயக்கத்தின் இடைவெளியில்
தேடுதல் குறித்தான
கனி மரத்தின் நிழல்
சபிக்கப்பட்ட சர்ப்பமென
படர்ந்துகொண்டே போகிறது
இருவர் மனதிலும்.

வியர்வை சிந்தும்
கடுமையான உழைப்பையும்
மரணம் குறித்தான அச்சத்தையும்
அவர்கள் தவிர்த்திருக்கலாமெனினும்
வெட்கம் கலந்த காமமே
அவசியமாக இருந்தது
ஆதாமிற்கும், ஏவாளிற்கும்
அந்நாளிலேயே.

------------------------------------------------

மரம், கனி மற்றும் அது

மாலை நிழல்களைப்போல
காத்திருப்பின் தருணங்களும்
நீண்டுகொண்டே போகிறது.

துளியும் தயக்கம் இல்லாத
குழந்தைகளின்
நிர்வாண அங்கீகாரத்தில்
கைகளைக்கோர்த்து
வனத்தில் வலம் வந்த
ஆதாமும் ஏவாளும்
இரவின் முகவரிக்காலங்களில்
ஆகக்கூடிய மட்டும்
தங்களுக்கான இடைவெளிகளை
தவிர்க்க முயல்கிறார்கள்.

துளியும் முன்னேற்பாடில்லாத
வெகு இயல்பான பாவனையில்
அவர்களின் கண்கள் மட்டும்
பொய்யாக அபிந‌யிக்க
தரையிறங்குகிறது
எதிர்பார்ப்பின் தருணங்கள்
புறவெளியைத்தீண்டிய
ஒரு பறவையைப்போல.

நேரம் கடந்துபோக
இருவரின் தயக்கமான
முன்மொழிதலை
புறக்கணித்தவாறு
தொடர் முத்தங்களின்
பரிவர்த்தனையில்
அரங்கேற்றிக்கொள்கிறது
அவர்களுக்கான காமம்
அனிச்சையாக