என்னை நிறுத்தி
என் கவிதைப்பற்றி
எதுவும் கேட்காதீர்கள்

அந்தக்கணத்தில்
பனியாய் இறங்கியவை
பறவையைப்போல்
சிறகு விரித்தவை

நானும் அந்தக்கணமும்
ஒன்றிப்புணர்ந்த பொழுதில்
சிந்தியவை;
சிந்தித்தவை

மீண்டும்
சேதாரமின்றிச்
சேகரிக்கமுடியாது

அந்த’நான்’
இப்போது என்னிடமில்லை

இப்போது என்னிடம்
வேறொரு நான்

நாளைக்கு
இன்னொரு நான்

காலநதியாய் ஓடிக்கொண்டிருக்கையில்
மீண்டும் நான் மீண்டு
நேற்றைக்கு வரமுடியாது

கால்கள் விரைய
வழிவிடுங்கள்

இன்னொரு நானும்
கவிதையும்
நாளை சந்திப்போம்

Pin It