ஒவ்வொரு முறை துவங்கும் பொழுதும்
இதுவே இறுதியானதாக இருக்க வேண்டுமென்ற
வேண்டுதலுடனேயே தோன்றுகிறது முதல் வரி.
(இடைவெளி)
தடுமாறித் தடுமாறித்
தேம்பிக் கொண்டிருக்கின்றன வார்த்தைகள்.
துப்புகின்றன என் முகத்தில்
உன்னால் இது மட்டுமே முடியுமென்று.
இது ஒரு ஆவேசமான பிதற்றலாக மாறி விட்டது.
அங்கே ஒரு போராளி இறந்து கிடக்கிறாள் நிர்வாணமாய்.
அவளது கனவெல்லாம் நிறைந்திருந்திருக்கக் கூடும்
நிலவால்
கவிதையால்
சிரிப்பால்.
அவள் வேண்டியது எல்லாம் ஒரு
பிடி தாய் மண்ணாக இருந்திருக்கலாம்.
ஒரு துளிக் கண்ணீர் கூட இல்லாமல்
வெறித்திருக்கும் உன் கண்கள்
என்ன சொல்கின்றன தோழி?
தமிழினத்தில் பிறந்தது ஒரு சாபம் என்றா?
எனது பிரேதத்தை தான் உங்களால் தொட முடிந்தது
என்ற ஏளனமா?
நீங்கள் துரோகத்தை தின்று உயிர் வாழும்
கோழைகள் என்றா?
பன்றி ஒன்று அவள் உடைகளை கவ்விக் கொண்டு நின்று கொண்டிருந்தது.
அங்கே ஒரு சிறுவனின் மூளை
சரிபாதியாய் பிளந்து கிடந்தது.
அவனது கனவு ஒழுகிக் கொண்டிருந்தது குருதியாக.
அவன் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரம்
காணாமல் போயிருந்தது.
பன்றி மேலும் மேலும் வேட்டையாடிக் கொண்டே இருந்தது.
ஒரு போராட்டத்தின் கேவல் அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.
துரோகத்தின் வாடை வீசிக் கொண்டிருந்தது.
மன்னிப்பதற்கான அனைத்து தகுதிகளும் அங்கே பிணங்களாய்
சிதறிக் கிடந்தன.
மானத்தின் கடைசி ஒட்டுத் துணியும் அங்கே
எரிந்து போய் கிடந்தது.
உங்கள் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை நாங்கள்.
போய் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்.
ராட்டை சுற்றுங்கள்.
கூட்டம் கூட்டமாக கோஷம் போடுங்கள்.
உங்களுக்கே தெரியும் உங்கள் கோமாளித்தனங்கள்.
கை ஏந்துவது என்பதற்கான அனைத்து சாத்தியங்களும்
வெட்டப்பட்டு விட்டன.
பொறுமை
சாதுர்யம்
அமைதி
இன்னும் எத்தனையோ அர்த்தமற்ற வார்த்தைகளை
உங்கள் உதடுகள் பிதற்றட்டும்.
எப்படியும் நாளை காலை மறந்து போவீர்கள்
ஒரு துர்கனவென.
அவள் கண்கள் தீராமல் தேடிக்கொண்டிருக்கின்றன
ஒரு
கொலை வாளை.
அந்த சிறுவனின் நட்சத்திரம் பத்திரமாய்
பதுங்கியிருக்கிறது
உங்கள் குரல்வளையை
கடித்துத் துப்புவதற்கு.
அது வரை
நீங்கள் ஆடிக்கொள்ளுங்கள்
உங்கள் வெறியாட்டங்களை.
உங்கள் முட்டாள்தனத்திற்கு பெயரிட்டுக் கொள்ளுங்கள்
பெருமையென.
நன்றாய் நக்கிக் கொள்ளுங்கள் சூனியக்காரியின்
கால்களை.
கொலை வாள்கள் வெகு நேரம் உறைகளில் தங்கியிருப்பதில்லை.
நட்சத்திரங்கள் வெகு நாட்கள் பதுங்கியிருப்பதில்லை.
அதுவரை
பாரதியின் கல்லறையருகே காத்திருக்கிறேன்..
மானம் போற்று!
ரௌத்திரம் பழகு!!
- முத்துவேல் ஜனகராஜன், சென்னை (