புதுநானூறு - 4

வாள், வலந்தர, மறுப்பட்டதினும் ஆரியர்
மாள் சூதினாலே களம் வென்றனர்
பழங்குடிப் போரில் ஆடவர் மாண்டிட
அழகுயர்ப் பெண்டிரை வென்றவர் கொள்ளும்
மரபினை மாற்றி அடிமை கொண்டனர்
நிரந்தரச் சுரண்டல் நிலைக்கும் வண்ணம்
பண்படு மக்களின் அறிவை முடக்கினர்
வன்கொடு மையினால் கல்வியை மறுத்தே
கல்வித் தாயை யிழந்த அனாதையாய்
அல்லும் பகலும் அரற்றித் திரியும்
சூத்திர மக்கள் பிரிவின்றி கூடி
சாத்திரம் கற்பது முதன்மைக் கடமை
கல்வித் தாயை யீன்ற பின்னர்
பல்வழி களிலும் வலிமை கொண்டு
ஏய்த்துத் திரியும் ஆரியர் ஆட்சியைப்
பாய்ந்து பறிப்பதும் நம்கட னன்றோ
பறித்த விடத்தில் சூத்திரர் ஆட்சியை
நெறியுடன் அமைப்பதும் நீங்காக் கடனே.
 
(வாள் குருதிக் கறை படிந்து செந்நிறம் அடைந்ததை விட, மாய்க்கும் சூதினாலேயே ஆரியர்கள் போரில் வென்றனர். குழுக் கூட்டமாய் வாழ்ந்த காலத்தில், போரில் வெல்பவர்கள் ஆடவர்களைக் கொன்று விட்டு, பெண்களைத் தம்முடன் இணைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் ஆரியர்கள் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக்கினார்கள். தங்கள் சுரண்டல் கொள்ளையை நிரந்தரமாய் வைத்துக் கொள்ளும் பொருட்டு வலுக்கட்டாயமாக (ஆரியர்களினும்) பண்பாட்டுடன் வாழ்ந்த மக்களுக்குக் கல்வியை மறுத்து அறிவு வளர்ச்சியை முடக்கி வைத்தனர். கல்வி மறுக்கப்பட்டதால் தாயற்ற அனாதைகள் போல் திரியும் சூத்திரர்கள் தங்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடி அனைத்து விதக் கல்விகளையும் கற்பது முதல் கடமையாகும். தாய் குழந்தைகளைக் காப்பது போல் காக்கும் கல்வியைப் பெற்ற பின், பல வழிகளிலும் நம் வலிமைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை ஏய்த்துத் திரியும் ஆரியர் ஆட்சியைப் பாய்ந்து பறிப்பதும் நமது கடமையாகும். அவ்வாறு பறித்த இடத்தில் சுரண்டலற்ற சூத்திரர் ஆட்சியை அமைப்பது நம்முடைய நீங்காத கடமையாகும்)

- இராமியா

Pin It