மழைக் கீற்றைப் பிடித்து
பூமிக்கும் வானுக்கும்
பாலம் அமைத்து
மின்னல் ஒளி உதவியோடு
இரவுகளைக் கிழித்தபடி
விரைந்து கொண்டிருக்கிறேன்
உன்னைத் தேடி.....
சாமான்ய தேசத்தில்
யாருமற்ற நேரத்தில்
ஒற்றைப்பனை நிழலிலே
உன் துயிலறையைப் பற்றி
துன்பக் கண்ணீர் வடிக்கின்றேன்
தினமும்
என் கனவுப்பாதையில்
கறுப்பு வெள்ளையாய்
உலவுகின்றன
உன் நினைவுகள்
மாலை நேரத்து
மந்தாரப் பொழுதுகளில்
என் உயிரோடு
அஸ்தமிக்கின்றன
உன்னோடு பழகிய
அந்தநாள் ஞாபகங்கள் .......
கானல்களின்
வரண்ட தேசத்தில்
நம் தொலைந்துபோன
வாழ்வைத்தேடி
ஆத்ம பயணம் தொடர்கிறேன்
விழிகள் கசிய
விம்முகின்ற மனதோடு
உயிர்கொண்டு உதிரத்தால்
உதிரத்தால் வரைகிறேன்
ஒரு கல்லறைக் காவியம்
என் காவியம்
முற்றாகும் முன்பே
உன் நினைவுகளோடு
சாவில் சங்கமிக்கப் போகிறேன்
இறப்பிலாவது வாழ்வோமே!
- இராமசாமி ரமேஷ் (