புதுநானூறு - 2

மண்திணிந்த நிலனும்
நிலம் அடங்கும் விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
இயற்கைப் பொருட்கள் என்றும் உளதே
படைப்பெனக் கூறுவது நெறிபிறழ் மெய்ஞானம்
சிந்தனை என்பதே இல்லாத காலத்தும்
இறையெண்ணம் என்பதே உதிக்காத காலத்தும்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தது
பருப்பொருள் பூமியே அறிக அறிக
படைத்தவன் தத்துவம் இடையே வந்தது
மடமையை வளர்த்தே  தானும் செழிக்கிறது
இயற்கை விதிக்கும் நிரந்தரக் கடமையும்
மனிதன் விரும்பும் பருப்பொருள் விகிதமும்
நேராய் நிறுத்தும் அரசு அமைந்தால்
வேரிலே மடியும் கடவுள் தத்துவம்
 
(திணிந்த - செறிந்த, தலைஇய - தலைப்பட்ட, விசும்பு - வானம்)
 
மண் செறிந்த பூமியும், பூமியை ஒரு பகுதியாகக் கொண்ட வானமும் (அண்டமும்) வானத்திலுள்ள காற்றும், காற்றினால் பரவும் தீயும், தீயை அணைக்கும் நீரும் ஆகிய ஐந்து பூதங்கள் என்றும் உள்ளன. அவை படைக்கப்பட்டன என்று கூறுவது உண்மைக்கு மாறான தத்துவம். மனித இனம் தோன்றுவதற்கு முன் சிந்தனையும், இறைவன் என்ற எண்ணமும் தோன்றவில்லை. அந்தக் காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் வேண்டிய உணவை இப்பூவுலகம் வழங்கிக் கொண்டு தான் இருந்தது. உலகைப் படைத்தவன் (அதாவது கடவுள்) என்ற சிந்தனை, மனிதன் தோன்றிய பல காலத்திற்குப் பிறகு தான் தோன்றியது. அக்கடவுள் எண்ணம் மனிதர்களிடையே மடமையை வளர்ப்பதன் மூலம் செழித்து வளர்கிறது. இயற்கை விதித்து இருக்கும் நிரந்தரக் கடமையான உழைப்பை அனைவருக்கும் வற்புறுத்துவதும், உழைப்புக்கு ஏற்ற விகிதத்தில் பொருட்களைச் சரியாக விநியோகிப்பதுமான (சமதர்ம - சோஷலிச) அரசு அமைந்தால், கடவுள் தத்துவத்தின் ஆணிவேர் அறுபட்டுப் போய்விடும்

Pin It