கண்கள் அலைபாய்ந்தபடியோ
ஓரிடத்தில் நிலைகுத்தியபடியோ
வெகு நேரம் காத்திருக்க நேர்ந்தது
அவனுக்கு
இன்னும் சிலர் அவனைப் போலவே
இருந்தது ஆறுதலானது
வெகு சீக்கிரமே வந்து விடுவாரென அதனினும்
வெகு சீக்கிரமே அவன்
வர வேண்டியதானது

வெகு தாமதமாய் அவர் வந்தபோது - மேடைக்கு
வெகு அருகில் உடன் கொண்டு வரப்பட்டான்

அடர் ஒளியின் அதீத வெப்பமும்
கைகால் வீசவியலா குறுகிய வெளியும்
அவனை மிக மோசமாக அச்சுறுத்தலாகியது
எனக்குப் புரியாத பாஷையில் அவன்
நம் எல்லாரையும் சபித்துக் கொண்டோ
வாதையின் வலியேறிய ஓசைகளைக் கொண்டு
இந்நகரத்தை அழித்திடவோ முனைகையில்...
மந்திரி பேச்சை முடித்துக் கொண்டார்.

அவனது முறை வந்தபோது
ஊடகங்களின் வெளிச்ச வேட்டையில்
அவன் அமைச்சரின் கைகளில் இருந்த
உதவித்தொகை உத்தரவை
வாங்க மறுத்து முகத்தை
மறு திசை திருப்பிக் கைகளை
இறுகக் கட்டிக் கொண்டதன் காரணம்
எல்லோருக்கும் சொல்லப்பட்டது...
பாவம்... சித்தப்பிரமையற்றவன்!

மற்றபடி
மந்திரி கிளம்பிச் சென்ற பின்னரும்
பயனாளிகள் பலர் காத்திருந்தனர்
தங்களின்
முறைக்காக!

Pin It