வெளிச்சம் வியாபித்த பெருவெளியில்
பெயரிடப்படாத பறவையின் இறகொன்று
மென்காற்றில் சுழன்றபடி
முற்றிலும் எதிர்பாராத நாளொன்றில்
என் விரல்களை வந்தடைந்தது

அதன் வண்ணம்
அதன் வாசம் மற்றும்
அதன் மென்மை
எனக்கு பரிட்சியமான
ஒரு பறவையின் பெயரினை
நினைவூட்டி செல்கிறது.

எனது காதுகளை குடையவும்
எனது அலமாரியை அலங்கரிக்கவும்
எப்போதாவது மை-தொட்டு எழுதவும்
என்னோடே பயணித்துவருகின்றது
அந்த பறவை விட்டு சென்ற இறகு. 

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பறவையின்
ஒவ்வொரு இறகென
என்னை வந்தடைந்த வண்ணமாய்
இறகுகளால் நிரம்பி வழியத்தொடங்கியது- வாழ்வு

இப்படியாய் காலம் கடந்து
இறகுகளை ஒன்றுசேர்த்து ஒரு சிறகாகவும்
சிறகுகளை ஒன்று சேர்த்து ஒரு பறவையாகவும்
என்னை நான் உருவாக்கிக்கொண்டு
பறக்கத்தொடங்கினேன்.

தனது இறகுகள் இழந்த சூட்சமத்தை
அறிந்துவிட்டிருந்த பறவைகள்
 பறக்கத்தயங்கி பீதியில்
கூடடைந்து விட்டன.

- ரஞ்சித் பிரேதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It