
அலைபேசிக்குப் பின்னால்
ஆயிரம் கதைகள்..!
பிரியங்கள் நிறமிழந்ததன்
அடையாளமாக இருக்கலாம்..!
விருப்பங்கள் நிராசையான
துயரின் குறியீடாக இருக்கலாம்..!
வார்த்தைகளில்..
வெளிப்பட்டு விடாத
வன்மங்களின்..
எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்..!
துரோகத்தை மறக்கும்..
தருணமாக இருக்கலாம்..!
சொற்களால்..
இட்டு நிரப்ப முடியாத
சோகத்தின் நிகழ்வாக இருக்கலாம்..!
நீங்கள் அழைக்கும் நபர்
புணர்ச்சியின்..
உச்சத்தில் இருக்கலாம்..!
மரணத் தருவாயில்
இருக்கலாம்..!
மரணித்தும் இருக்கலாம்..!
அலைபேசியால்..
அழைக்க முடியாத நபரை..
காலத்தின் அலைகள்
கரை சேர்க்கக் கூடும்..!
மெளனத்தின் வலி
தாங்கவியலாத..
அப்பொழுதுகளில்
வார்த்தைகள் வெடிக்கக் கூடும்..!
மீண்டும்..
உரையாடல் தொடங்கலாம்..!
எல்லோரின் அந்தரங்கத்தையும்
அறிய நேர்ந்த அலைபேசி
தண்ணீரில்..
தவறி விழுவதன் மூலம்
தற்கொலை செய்கிறது..!
உலர வைப்பதன் மூலம்
அதன் ஒத்துழையாமை இயக்கம்
சில காலம் ஒத்தி வைக்கப் படுகிறது..!
-அமீர் அப்பாஸ் (