புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பாரதிதாசனைப் பற்றிய புதுமைப்பித்தனின் மதிப்பீட்டை எனக்குத் தெரிந்த அளவிற்குக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 பாரதிதாசன் 29.04.1891ல் பிறந்து 21.04.1964ல் மறைந்தார். 73 ஆண்டுகள் பாரதிதாசன் வாழ்ந்துள்ளார். புதுமைப்பித்தன் 1906ல் பிறந்து 1948ல் மறைந்தார். புதுமைப்பித்தன் வாழ்ந்தது 42 ஆண்டுகள். பாரதிதாசன், புதுமைப்பித்தனைவிட 15 ஆண்டுகள் மூத்தவர் எனினும் இவர்கள் இருவரும் சமகாலத்தவர்கள். நெருங்கிய நண்பர்கள்.

1931க்குப் பின்பு நடத்திய மணிக்கொடியில் பாரதிதாசனும் பற்பல சிறந்த கவிதைகளைப் படைத்துள்ளார்.

மணிக்கொடியில் வந்த பாரதிதாசன் கவிதைகளை பாரதியின் பிரதான சீடர்களில் ஒருவராகவும், பின்னாளில், சக்தி, மஞ்சரி முதலிய பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர.வும், பேராசிரியர் கே. சுவாமிநாதனும் மற்றும் பலரும் மிக உயர்வாக மதித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போலவே மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தனும், பாரதிதாசனை கவிதா ரீதியிலும், கருத்து ரீதியிலும் பாரதியாருக்குப் பின் வந்த கவிஞர்களில் தலைசிறந்தவராகக் கருதினார். ஏனெனில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பாரதியின் உயிர்நாடியான கொள்கைக்கு தமது வாழ்நாள் முழுவதும் பாரதிதாசன் விஸ்வாசமாய் இருந்தார் என்பதைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார்.

பாரதிதாசனை ஒரு புதுமைக் கவி என்றும், புரட்சிக் கவி என்றும், புதுமைப்பித்தன் கருதினார். பாரதிதாசனின் பாண்டியன் பரிசு என்ற நூலுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரையே இதற்குச் சான்றாகும்.

“தமிழர்களுக்கு பாரதியார் விட்டுச்சென்ற செல்வங்களில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், இவற்றைத் தவிர பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினமும் ஒருவர்” என்று அழுத்தம் திருத்தமாக புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை இன்றைய தமிழ் இலக்கியப் படைப்பாளர்களும், ஆய்வாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். இது புதுமைப்பித்தனுக்கோ பாரதிதாசனுக்கோ நியாயம் செய்வதாகாது.

40களில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் முல்லை முத்தையா நடத்தி வந்த முல்லை என்னும் மாத இதழ் அலுவலகத்தில் பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு. இருவரும் மிக நெருங்கிய தோழர்களாக விளங்கினர் என்பதையும் முல்லை இதழின் ஆசிரியராக இருந்த தொ.மு.சி ரகுநாதன் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.

29.07.1946ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அறிஞர் அண்ணா முயற்சியால் பாவேந்தர் பாரதிதாசனாருக்கு, நிதி திரட்டப்பட்டு, ரூ. 25,000 பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிதி திரட்டும் குழுவில் புதுமைப்பித்தனும் ஒரு உறுப்பினராக இருந்தார் என்பதும், புதுமைப்பித்தனும் தன் பங்காக ரூ.100/- அன்பளிப்பு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று புதுமைப்பித்தன் எந்தப் பத்திரிக்கையிலும் வேலை பார்க்கவில்லை. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தார். அந்த நிலையிலும் புதுமைப்பித்தன் ரூ. 100/- அன்பளிப்பு செய்துள்ளார் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

பாரதிதாசனும், தன்மானம், பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இவற்றுக்காகக் கொள்கை உறுதியுடன் போராடிய ஒரு பேனா வீரர் என்பது புதுமைப்பித்தனின் மதிப்பீடாகும். அப்பொழுது பாரதிதாசன், திராவிட இயக்கக் கொள்கையின் பிரதான போர் முரசாக இருந்தார் என்பது புதுமைப்பித்தனுக்குத் தெரியும் என்றாலும், அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் வளர்ச்சிக்கு பாரதிக்குப் பின்னால், மிகச்சிறந்த பங்காற்றிய கவிஞர் பாரதிதாசன் என்பதே புதுமைப்பித்தனின் உள்ளக்கிடக்கையாகும். எனவேதான் பாரதிதாசன் மீது மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்.

 இருவருமே, புதிய பாதையில் புரட்சிகர உணர்வுடன் தமிழ் இலக்கியத்தைச் செழிக்கச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்டவர்கள்.

பாரதியாருக்கும், பாரதிதாசனுக்கும் இடையே உள்ள முக்கியமான கொள்கை வித்தியாசம் என்னவென்றால், பாரதி ஆத்திகர், பாரதிதாசன் நாத்திகர். பாரதியின் மறைவுக்குப் பிறகு, பாரதிதாசன் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும், ஒரு நாத்திகராக மாறியபொழுதிலும், தமது இறுதி மூச்சு உள்ள வரையில், பாரதியாரைத் தமது குருநாதராகவே பாரதிதாசன் கொண்டாடினார் என்பது மனங்கொள்ளத்தக்கது. தமது குருநாதர் பாரதியாரை யாராவது இழிவாகப் பேசினால், பாரதிதாசன் இம்மியளவும் பொறுத்துக்கொள்ள மாட்டார். எப்போதும் பாரதியின் லட்சியங்களைப் பரப்பும் தொண்டனாகவே பாரதிதாசன் தம்மைக் கருதினார்.

புதுமைப்பித்தனைப் பொறுத்த வரையில் அவர் ஆத்திகரா? நாத்திகரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் பண்டித ஜவஹர்லால் நேருவைப் போல ஒரு நிரீஸ்வரவாதியாகவே வாழ்ந்தார் எனலாம்.

காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற புதுமைப்பித்தனின் கதைகளே அதற்குச் சான்றாகும். பாரதிதாசன் பழுத்த நாத்திகராக இருந்தார். எனினும் இருவரும் பரஸ்பர அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர்.

ஆனால், புதுமைப்பித்தன் பாதையில் நவீன இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்கிற எழுத்தாளர்கள், பாரதிதாசனைப் புறக்கணிப்பதையே தம்முடைய இலக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களையும் கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் பாரதிதாசனை மட்டும் அன்றி, புதுமைப்பித்தனையும் அவமதிக்கின்றனர் என்பதே என் கருத்தாகும்.

பாரதியும், பாரதிதாசனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் பெரும்பாலும் கருத்தொற்றுமை கொண்டவர்கள். பாரதிதாசன் கவிதைத் துறையிலும், புதுமைப்பித்தன் சிறுகதைத் துறையிலும் மாபெரும் சாதனையாளர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இனவெறியும், ஜாதி வெறியும், மதவெறியும் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் பற்றும் சமநீதி உணர்வும் மங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மனித நேயத்தையும், மனித குல விடுதலையையும், ஒற்றுமையையும் உயர்த்திப் பிடித்த பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான கலங்கரை விளக்குகள் ஆவர்.

தமிழில் நவீனத்துவம் என்றும் புதுமைப்பித்தன் பாதையில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்றும் கூறிக்கொள்ளும் படைப்பாளிகளும், வேட்பாளர்களும், பாரதியில் இருந்து பாரதிதாசனைப் பிரித்துப் பார்ப்பதும், பாரதிதாசனில் இருந்து புதுமைப்பித்தனை பிரித்துப் பார்ப்பதும் போகாத ஊருக்கு வழி சொல்வதாகும் என்பதை உணர வேண்டும்.

Pin It