புராண காலம் தொட்டு நாம் பெண்ணின் கண்ணீர் கதைகளைக் கேட்டு வருகிறோம். பொதுவாகக் கண்ணீர் கதைகள் அலுப்பூட்டுபவை. ஆயாசப்படுத்துபவை. அதுவும் பெண்ணியவாதம் பேசினால் இப்போது அதைக் கேட்க ஆளில்லை. சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில்தான் மேற்கு நாடுகளில் பெண்ணியம் உச்சகட்டத்தை அடைந்தது. ஐம்பது ஆண்டுகளுக்குள் எல்லாருக்கும் பெண்ணின் உயர்ந்துபோன குரலைக் கேட்க விருப்பமில்லாமல் போய்விட்டது. பெண்ணியத்தை ஆவேசத்துடன் முன்னிறுத்தும் பல படித்த பெண்கள் மேடையில் வாய்ப்பு கிடைக்கும் பேச்சுத்திறமை உள்ளவர்கள் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோஷமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கோஷமெழுப்பாமலே ஆண் உலகத்தில் புகுந்து விளையாடி சாதனை புரிபவர்கள் இன்று அநேகம். இரண்டு இன உலகத்து உன்னதங்களையும் அனுபவிக்கும் புத்திசாலிகள் அவர்கள். சுயமுன்னேற்றம் என்பது சுய ஞானத்தால் அடைவது என்று உணர்ந்தவர்கள்.

 பேசவோ கோஷமெழுப்பவோ, குறைந்தபட்சம் வீட்டிற்குள் குரலெழுப்பவோ முடியாத பெண்கள் என்ன செய்வார்கள்? உணர்வு நிலை என்பது அறிவைப் பொருத்ததா? படிப்பறிவில்லாதவர்களுக்கு சூடு சொரணை என்று ஒன்று இருக்காதா? எத்தனையோ துன்பத்தை அனுபவித்துக்கொண்டு வாய்மூடி மௌனியாக வாழ்ந்த எத்தனையோ பெண்களின் கதைகளை எனது குடும்பத்திலேயே நான் கேட்டிருக்கிறேன்.

செக்கு மாடுகளைப் போல இவர்களால் எப்படி இயங்க முடிகிறது என்று நான் நினைப்பேன். அவர்களது இயலாமையைக் கண்டு, நிர்க்கதியைக் கண்டு விசனம் ஏற்படும். கோபம் கூட வரும். தோற்பவர்களை யாரும் மதிப்பதில்லை. ஆனால், பல சந்தர்ப்பங்களில் நான் எதிர்பாராத தருணங்களில், மிக சாமன்ய பெண்கள், கிராமத்து படிப்பறிவில்லாத பெண்கள் தங்களது சமிக்ஞைகளால் எனக்கு அசாதாரணமான வெளிச்சங்களைக் காண்பித்திருக்கிறார்கள். உலகத்தின் எல்லா சாமான்ய மூலைகளிலும் இத்தகைய அசாதாரண வெளிச்சங்கள் காணக்கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தச் சமிக்ஞைகள் உலகத்தின் மறுபாதிக்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமோ பொறுமையோ கரிசனமோ இல்லாததே இதற்குக் காரணம்.

ஒரு முறை நான் தில்லியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, படிப்பறிவில்லாத பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண் மஹாபாரதக் கதையை அற்புதமாகக் காலட்சேபம் செய்வதாகப் பரவலாக தில்லியில் புகழ் பரவி இருந்தது. மத்திய அரசு நிர்வாகத்தின் கண்களுக்கு இத்தகைய திறமை பட்டுவிட்டால், ஆதரவுக்கும் விளம்பரத்துக்கும் கவலை இல்லை. திறந்தவெளி அரங்கில் நிகழ்ங்சி ஏற்பாடாகி இருந்தது. சிறுமி மேடைக்கு வந்தாள். 12 வயது என்று சொன்னார்கள். பத்து வயதுதான் சொல்லமுடியும்.

அவளது ஒல்லி உடம்பை மிக எளிய நூல் புடவை தழுவியிருந்தது. அவளது சிறிய இடையில் வெள்ளியிலான பழங்குடி ஒட்டியாணம். காலில் தண்டைகள். இவ¢வளவுதான் அலங்காரம். மிக சாதுவான தோற்றம். திரௌபதி கௌரவர் சபைக்கு இழுத்து வரப்படும் காட்சியைச் செய்யப்போகிறாள். நிகழ்ச்சி ஆரம்பித்தது. மந்திரக்கோல்பட்டது போல சிறுமியின் முகம் மாறிப்போனது. அவள் மேடையில் முன்னும் பின்னும் நடந்த ஒய்யாரம் அசத்திற்று. வாளை ஏந்திய வீரனைப்போல ஒரு விசித்திரமான சுருதிபோடும் கருவியைப் பிடித்தபடி அவள் குரலைப் பாத்திரத்துக்கு ஏற்றபடி உயர்த்தி தாழ்த்தி குழைத்துப் பாடினாள். அவளது மொழி யாருக்குப் புரிந்திருக்கும் என்று தெரியாது.

ஆனால் அது பிரச்சினையாக இருக்கவில்லை நிச்சயம். 12 வயது உருவத்திலிருந்து துரியோதனன் வெளிப்பட்டான் .ஆணவத்தோடு தோள் தட்டி ஆர்ப்பரித்தான். கொண்டு வா அந்த தாசியை என்றான். சிறகை ஒடித்து கக்கத்தில் மறைத்துக்கொண்ட அவலத்துடன் பாண்டவர்கள் தலையைக் குனிந்து அமர்ந்திருக்கிறார்கள். சிறுமி மறு விநாடி துச்சாதனனாய் மாறினாள். அசிங்கமாகப் பேசி அரங்கம் பதைக்க, பாஞ்சாலியை இழுத்துவரக் கிளம்புகிறான். அரங்கம் மூச்சை அடக்கிக்கொண்டு அமர்ந்தது. பின்னணி இசை நின்றது. ஆஹா ஆஹா என்று பின்னால் குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஆண்களடங்கிப் போனார்கள், அந்தங் சிறுமியின் அடுத்த ரூபத்தை எதிர்நோக்கி.

பாஞ்சாலி வருகிறாள் விக்கித்து, அதிர்ந்து, துயரத்தின் எல்லையைக் கடந்து செத்துப்போனவர்களைப் போல ஒடுங்கிப்போன கணவன்மார்களைப் பார்க்கிறாள். சட்டென்று நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். சிறுமியின் முகத்தில் இருந்தது அதிர்ச்சி மட்டும் இல்லை இளக்காரம் “சீ பேடிகளா” என்கிற வெறுப்பு. ரோசமுள்ளவர்களாக இருந்தால் அந்தப் பார்வையிலேயே பாண்டவர்கள் சாக வேண்டும். என்னை நானே காப்பாற்றிக் கொள்வேன் என்கிற வீம்பு தெரிகிறது, சிறுமியின் கண்களில். துச்சாதனன் சேலையை இழுக்கிறான். டி.வி. பாஞ்சாலி போல இவள் கண்ணீர் விடவில்லை. ’இழு’ என்கிறாள் கம்பீரத்துடன். ‘உனக்குதாண்டா அவமானம். எனக்கு இல்லை ‘ என்பது போல. எனக்கு சிலிர்த்துப்போயிற்று. வியாசரின் பாஞ்சாலி இல்லை இவள். இவளே அசல் பாஞ்சாலி என்று தோன்றிற்று. இந்தப் பாஞ்சாலியைக் கண்டு அரங்கத்தில் உள்ள தில்லி மாநகரத்து மேல்தட்டுப் பெண்களுக்கெல்லாம் புதிய பலம் வந்ததுபோலத் தோன்றிற்று.

இது போலத்தான் எத்தனையோ சாமான்யப் பெண்கள், குடிசைகளில், வயற்காடுகளில், கஞ்சிக்கும் கூழுக்கும் அவதிப்படும் அவலத்துக்கு இடையில் தங்களுக்கு என்று ஒரு எண்ணமும் பார்வையும் அசாதாரணத் துணிவும் இருப்பதை தங்கள் பாணியில் சமிக்ஞையின் மூலம் நான் எதிர்பாராத தருணங்களில் எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். திடீரென்று வாய்த்த தரிசனங்களாய் நான் மெய்சிலிர்த்த தருணங்கள் அவை. சில ஆண்டுகள் முன்பு, சேலம் மாவட்டத்தில் பெண்சிசுக் கருக்கொலையைப் பற்றி ஆய்வு செய்யச் சென்றிருந்தேன். வயற்காட்டில் வேலை செய்யும் பெண்கள் சிலரிடம் பேசுகையில் அவர்கள் பாடும் நாட்டுப்பாடல்களைக் கேட்க ஆர்வம் ஏற்பட்டது. ‘எனக்கு ஒப்பாரிதான் பாடத் தெரியும்’ என்றாள் ஒரு பெண். அதைத்தான் பாடேன் என்றேன் நான். அங்கிருந்த கல்லுரலின் மேல் அந்தப் பெண் உட்கார்ந்ததும் மற்ற பெண்கள் வட்டமாக நிற்க திடீரென்று காற்று கனத்துப்போயிற்று. அந்தப் பெண் பாட ஆரம்பித்தது.

வெள்ளி நெருப்புப் பொட்டியும், சீமை பீடிக்கட்டும்
எனக்கு வந்த பீமருக்குப் பிடிக்குமுன்னு
நான் தெருக்கோடியிலே நிக்கையிலே,
அந்த வேசி வெச்ச கை மருந்து உங்களுக்கு தங்கிச்சா பந்தியிலே
வீதி அறியாத வீடு வந்து சேராத நீரும் வந்தீரோ பாடையிலே

பாடிக்கொண்டிருந்த பெண் கேவினாள். சுற்றிலுமிருந்த பெண்கள் அழுதார்கள் தங்கள் அடிமனத்துத் துயரங்களை அவளது கண்ணீரில் சேர்த்துக் கரைப்பவர்கள் போல. சில விநாடிகளுக்கு நானே அந்தப் பெண்ணாக மாறிப்போனதுபோல இருந்தது. தாசி வீடே கதி என்று இருந்த புருஷன் சடலம் தெருக்கோடியில் வருகிறது. நான் பிச்சியைப்போல வெள்ளி நெருப்புப்பெட்டியும் அவனுக்குப் பிடித்த பீடிக்கட்டுமாக தெருவில் காத்து நிற்கிறேன் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு.

அந்தப் பெண் தொடர்ந்தாள்:
நாம் பொறந்த காசியிலே
அதிமதுர சக்கரையும்
இங்க அனுப்பாட்டி போனாலும்
என்னெ பெத்தெடுத்த தாயாரே
உங்க அன்பிருந்தா போதுமின்னு
எந் தங்கப் பிறப்புகிட்ட தருக்கம்
சொல்லும் தாயிகிட்டே
நாம் பட்ட கஷ்டத்தைச் சொன்னேன்னா
உங்க தங்க முகம் சோர்ந்திருமே..

அநேகமாக ஒப்பாரி பாடும் தருணங்களில் நமது படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்கள் தங்கள் உள்மனத்து வேட்கைகளுக்கு எப்படி வடிகால் அமைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.

மதுரைக்கு அருகில் ராஜகம்பளத்தார் என்ற தெலுங்கு பேசும் பழங்குடி மக்கள் கம்பளநாயக்கனூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். தேவராட்டம் என்ற மிக அழகிய நாட்டியத்தை ஆண்கள் ஆடுவார்கள். அவர்களைப்பற்றி எழுதுவதற்கு நான் ஒருமுறை அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் பல பழங்குடி சமூகத்தில் ஆணாதிக்கமும் பெண் ஒடுக்குமுறையும் அவர்களது வாழ்வியலாகவே இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். அதன் அடிப்படையிலேயே அவர்களது பல சடங்குகளும் திருமண முறைகளும் அமைந்திருக்கும். மிகக் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் கட்டுக்கோப்பான சமூகம்.- பெண்கள் வாயே திறக்காமல் பூச்சிகளாக இருப்பது அதற்கு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றும். கம்பளநாயக்கனூர் பெண்கள் ஆட்டு மந்தைகள் போல் எனக்குப் பட்டார்கள். யாரும் என்னுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆண்கள் தேவராட்டம் ஆடும்போது அது தங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றைப்போல இவர்கள் தொலைவில் நின்று வெறித்துப் பார்த்தார்கள். எனக்கு மிக ஏமாற்றமாக இருந்தது.

சரியான ஜடங்கள் என்று தோன்றிற்று. அவர்களது சமையற்கட்டு தனி ஒற்றை அறைக் குடிசைபோல வீட்டிலிருந்து வேறுபட்டு இருந்தது எனக்கு விசித்திரமாக இருந்தது. வீட்டுப் பெண்ணைத் தவிர அதில் யாரும், வீட்டு ஆண்கள் முக்கியமாக உள்ளே அனுமதி இல்லை என்றது எனது ஆர்வத்தைத் தூண்டியது. யாரும் கவனிக்காத தருணத்தில் நான் ஒரு சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. அறையின் சுவரால் வண்ணச் சித்திரங்கள் இருந்தன. எல்லா சித்திரங்களிலும் பெண்கள்!

இரு கைகளையும் ஆகாசத்தை நோக்கித் தூக்கி நின்றார்கள் பறக்கத் தயாராக நிற்பதுபோல! அல்லது வானத்தைத் தொட ஏங்குபவரைப்போல. அடிவயிற்றுச் சீற்றமெல்லாம் அந்தக் கைகளின் வீச்சில் தெரிந்தது. தேவர்கள் போல நடனம் ஆடும் அந்த ஆண்களுக்கு இதைப் பற்றித் தெரியவே வாய்ப்பில்லை என்பது எத்தகைய சோகம்.!

திரை மறைவில் இருக்கும் சித்திரம் நமது கண்களுக்குப் படுவதில்லை. ஏனென்றால் நாம் என்ன பார்க்க நினைக்கிறோமோ அதைத்தான் பார்க்கிறோம். அத்தகைய கிட்டப் பார்வைக்கு நமது பிறப்பும் வளர்ப்பும் கலாச்சாரப் பின்னணியுமே காரணம் என்பதில் சந்தேகமில்லை. பெண் இனத்தைப் பற்றின உலகின் கணிப்பு இத்தகைய பார்வைக் கோளாறினால் ஏற்பட்டது என்றுதான் கொள்ளவேண்டும். நான் பெண்ணியவாதம் பேச வரவில்லை. நான் பெண் என்கிற காரணத்தால், பாதிக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்கிற காரணத்தால், என் இனத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன் என்று சொல்லலாம்.

எந்த அடிப்படைவாதமும் அதன் அடிப்படை மதமோ மொழியோ, இனப் பெருமிதமோ ஆண் ஆதிக்கமோ மற்றவரைப் புரிந்துகொள்ளும் இடைவெளி ஏற்படுத்தப்படாததாலேயே ஜனிக்கிறது.

Pin It