அருந்ததியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை எதிர்க்கும் ஒவ்வொருவரும், நியாயமான அக்கோரிக்கைக்கு எதிராக ‘பூச்சாண்டி'யாய் முன்நிறுத்துவது, ஆந்திராவில் நடைமுறையில் இருந்த ‘வகைப்படுத்தி தனித்தனியே இடஒதுக்கீடு வழங்கும் முறை'க்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத்தான். அத்தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றங்களை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அக்கோரிக்கை குறித்து ஆராய, மய்ய அரசு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற உஷா மெஹ்ரா தலைமையில் ஒரு தேசிய ஆணையத்தை நியமித்ததும், அவ்வாணையம் அண்மையில் தனது அறிக்கையை வழங்கி இருப்பதும் தெரிந்திருக்கலாம். உச்ச நீதி

மன்றமும், ‘மாலா'(ஆந்திராவில் உள்ள ஒரு பட்டியல் சாதி)க்களும் எழுப்பிய கேள்விகளுக்கும், மறுப்புகளுக்கும் என்னென்ன பதில்களை உஷா மெஹ்ரா ஆணையம் வழங்கி இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

usha_mehra 1. வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களில் முக்கியமானது: “பட்டியல் சாதிகள் என்பவை ஒருமித்த குழுவாக அமைபவை. அவற்றை வகைப்படுத்துதலின் மூலம் பிரிக்கக் கூடாது.''

பரம்பரைத் தொழில், சாதிய நடைமுறைகள், கிராமங்களின் பவுதீக ரீதியான அமைப்பு முறை முதலியவை-பட்டியல் சாதிகள் என்பவை, ஒருமித்த குழுவாக விளங்கவில்லை என்னும் உண்மையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளன என்று ஆணையம் கூறுகிறது. "மாலா'க்கள் விவசாயக் கூலி வேலையையும், "மாதிகா'க்கள் தோல் தொடர்பான வேலைகளையும் தம் குலத் தொழிலாகக் கொண்டவர்கள். இவற்றுள் "மாலா'க்களின் தொழில், "மாதிகா'க்களை விட ஒப்பீட்டளவில்-தூய்மையானதாகவும் மாதிகாக்களின் தொழில் தீட்டானதாகவும் கருதப்படுகின்றன. மாலாக்களும், மாதிகாக்களும் ஒன்றாக உணவருந்துவதில்லை.

ஒவ்வொரு சாதியும் தமக்குள் அகமண முறையைத் தான் மிகவும் கறாராகக் கடைப்பிடித்து வருகின்றன. மாலாக்கள் சாதி இந்து குடியிருப்பை அடுத்து வசிக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து மாதிகாக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு இடையிலான பவுதீகத் தூரத்தை சமூகத் தூரமாகவும் காண முடியும். சாதிப் படிநிலை அடுக்கு, ஆந்திராவிலுள்ள பட்டியல் சாதிகளுக்கிடையில் நடைமுறையில் உள்ளது.

ஆணையம், தனது கள ஆய்வுகளின் போது நேரில் கண்டறிந்த மேற்கண்ட உண்மைகளை முன்வைத்து, "பட்டியல் சாதிகள் ஓர் ஒருமித்த குழு அல்ல' என்று உறுதிப்படுத்துகிறது. தனது கருத்துக்கு அரணாக, “இந்து மதத்தில் சமமான இரு சாதிகள் என்பது இல்லை'' மேலும், “சாதி அமைப்பு முறை என்பது ஏணியின் படிகளைப் போன்றது. ஒவ்வொரு சாதிக்கும் மேல் வேறொரு சாதி இருக்கிறது. அவற்றுக்கிடையே மரியாதை ஏறு வரிசையிலும், வெறுப்பு, அவமதிப்பு ஆகியவை இறங்கு வரிசையிலும் இருக்கின்றன'' என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துக்களையும் முன்வைக்கிறது ஆணையம். அதோடு, ஒருமிப்பு என்ற பெயரில் வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்குவதற்காகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பு, சமவாய்ப்புக்கான உரிமையை நிரந்தரமாகக் குலைத்து விடுவதாக இருந்து விடக்கூடாது என்று ஆணையம் எச்சரிக்கவும் செய்கிறது.

2. பட்டியல் சாதிகளில் உறுப்பினர்கள் என்பவர்கள் சாதிகள், இனங்கள், பழங்குடிகள் ஆகியவற்றிலிருந்து சேர்க்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் அறிவிக்கையின் மூலம் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளனர். அதில் கைவைக்க எவருக்கும் உரிமையில்லை என்பது, வகைப்படுத்துதலுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள மற்றொரு வாதம். பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளில் இருந்தும், ஆணையம் நேரில் மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்தும்-ஆந்திராவிலுள்ள 59 பட்டியல் சாதிகளில் 55 முதல் 56 சாதிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பயன்கள் சென்றடையவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான ஒதுக்கீட்டுக்குப் பலன்கள் ஒரு சில சாதிகளாலேயே மறித்துக் கொள்ளப்படுவதால், குடியரசுத் தலைவரின் அறிவிக்கை மூலம் பெறப்பட்ட இப்புதிய அந்தஸ்து, எந்தப் பலனையும் அந்த 56 சாதிகளுக்கு அளிக்கவில்லை என்று கருத்து தெரிவிக்கிறது ஆணையம். அரசியலமைப்புச் சட்ட (பட்டியல் சாதிகள்) ஆணை 1950இன்படி, பல்வேறு சாதிகள் அடைந்த புதிய அந்தஸ்து பெருமளவுக்கு, குறிப்பிட்ட ஒரு சில சாதிகளுக்கு மட்டுமே நன்மை பயப்பதாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பயன்கள் பட்டியல் சாதிகளுக்குள் நியாயமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வகைப்படுத்தி, ஒதுக்கீடு வழங்குவது அவசரத் தேவையாக இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கிறது.

3. வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சமத்துவம் என்ற கொள்கைக்கு எதிரானது என்பது அடுத்த வாதம். இவ்வாதத்தை, அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த கருத்துக்களை விரிவாக மேற்கோள் காட்டி, ஆணையம் மறுக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள், நிர்வாகத்தில் அதுவரையிலும் பங்கு பெற முடியாத சில குறிப்பிட்ட சாதிகளுக்குப் பயனளிக்கும் வகையில் விதி 16(4) அய் வகுத்தார்கள். வரலாற்றுப் பூர்வமான காரணங்களால் நிர்வாகம் என்பது ஒன்று அல்லது ஒரு சில சாதிகளால் கட்டுப்படுத்தப் படுவதாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். மற்றவர்களும் அரசுப்பணிகளில் நுழைவதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்று அம்பேத்கர் விரிவுபடுத்தியதையும் சுட்டிக் காட்டுகிறது. அரசுப் பணிகளில் போதிய அளவுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையையே விதி 14(4)இல் கீழ் அடையாளம் காணப்படுவதற்கான ஒரே சோதனை என்றும், பெரும்பான்மையான சமூகங்கள் சமமாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படும் போது மட்டும்தான் சமத்துவம் உறுதி செய்யப்படுவதாக இருக்கும் என்றும் கருத்துரைக்கிறது ஆணையம்.

Janarthanan தான் திரட்டிய தரவுகளிலிருந்து, தற்போது ஆந்திராவில் ஒதுக்கீட்டுப் பயன்களை ஒரு சில சாதிகள் மட்டுமே அனுபவிக்கின்றன. வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்கும் முறை நடைமுறையில் இருந்தபோது, பயன்கள் அனைத்துச் சாதிகளுக்கும் சீராகப்பகிர்ந்து வழங்கப்பட்டன. எனவே, வகைப்படுத்துதல் சமத்துவத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல; மாறாக, சமமான பங்கீட்டுக்கான ஒரு கருவியே என்று உறுதியாகத் தெரிவிக்கிறது.

4. தரமான கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான பிற நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொடங்க வேண்டும் அல்லது வகைப்படுத்துதலை நம்பியிருக்கக்கூடாது என்று இன்னொரு வாதம் முன்வைக்கப்பட்டது.

அ) பட்டியல் சாதிகள் துணைத் திட்டம் ஆ) பட்டியல் சாதிகள் துணைத் திட்டத்துக்கான சிறப்பு மய்ய உதவி இ) பட்டியல் சாதிகள் வளர்ச்சிக் கழகம் ஆகியவை ஆந்திர மாநிலத்தில் பட்டியல் சாதிகள் வளர்ச்சிக்காக நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்கள் ஆகும். மேற்கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த தெளிவான விதிமுறைகளும் உள்ளன. அதிகமான முதலீடு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் ஆகியவற்றுக்கிடையிலும், பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட சாதிகள் பின் தள்ளப்பட்டு, ஒரு சில சாதிகளே பெரும்பான்மைப் பலன்களை அறுவடை செய்து கொள்ளும் நிலைமை தான் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சில சாதிகளைத் தவிர, பெரும்பான்மையான தலித் சாதிகள் எவ்வித மேம்பாடும் இல்லாமல் இரங்கத்தக்க நிலையில்தான் இருக்கின்றன. இத்தகைய சாதிகளின் முன்னேற்றம் குறித்து நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உடனடியாக எதுவுமில்லை. இந்த ஆணையத்தின் பார்வையில் வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை தான் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.

5. வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்குவது என்னும் முயற்சி, சில சுயநல சக்திகளால் தங்களது சுயநல நோக்கங்களுக்காகச் செய்யப்பட்டது என்பது, அவர்கள் முன்வைக்கும் அடுத்த வாதம். ஆந்திராவிலுள்ள தலித் சாதிகளுள் பெரும்பான்மையானவை வகைப்படுத்துதலுக்கு ஆதரவாக கோரிக்கை மனுக்களை இவ்வாணையத்திடம் அளித்திருக்கிறார்கள். மேலும், இக்கோரிக்கை நெடுங்காலமாக மாதிகா சாதியினரால் முன்வைக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆந்திராவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இக்கோரிக்கை நியாயமானது என்று ஏற்றுக் கொள்கின்றன. அதனால்தான் மூன்று முறை இக்கோரிக்கைக்கு ஆதரவான தீர்மானம், ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனவே இக்கோரிக்கை, தனிப்பட்ட சிலரால் அல்லது ஒரு கட்சியால் தங்கள் அரசியல் லாப நோக்கங்களுக்காக முன்வைக்கப்படுகிறது என்ற வாதம் அர்த்தமற்றது என்று ஆணையம் அதை நிராகரிக்கிறது.

6. பட்டியல் சாதிகளின் இடஒதுக்கீட்டுக்கான அளவுகோலாகக் கருதப்படும் தீண்டாமை என்பதற்குப் பதிலாக, வகைப்படுத்துதலின் விளைவாக சாதி என்பது அளவுகோலாக மாறுகிறது. இடஒதுக்கீட்டின் நோக்கம் தேசிய ஒருமைப்பாடுதான். இது வகைப்படுத்துதலுக்கு எதிராக முன்வைக்கப்படும் கடைசி வாதம். அரசுப் பணிகளில் மிகக் குறைந்த அளவில் இருக்கிறார்கள் என்பதால்தான் பட்டியல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இக்கருத்து, இந்திரா சகானி எதிர் இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 364 ஆம் பத்தியில், “அரசின் கீழ் இருக்கின்ற பணிகளில் போதிய அளவுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத தன்மை தான் சட்டவிதி 16(4) இன் கீழ் ஒரு வகுப்பு அடையாளம் காணப்படுவதற்கான ஒரே சோதனை'' என்று குறிப்பிடப்படுவதன் மூலம் மேலும் வலுப்பெறுகிறது.

வகைப்படுத்துதலின் மூலம் மாநில அரசு இடஒதுக்கீட்டுப் பயன்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கும் விதமாக, நடைமுறையில் உள்ள பட்டியலை நுண் பகுப்பு மட்டுமே செய்கிறது. இதன் விளைவாக, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உகந்த ஒரு சூழலை இது ஏற்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் இட ஒதுக்கீட்டின் பெரும்பான்மைப் பயன்களைப் பிற சமூகங்களை ஏமாற்றமடையச் செய்துவிட்டு தான் மட்டும் அனுபவிக்கும்போது, அங்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எந்த இடமும் மிச்சம் வைக்கப்படவில்லை என்று கருத்துத் தெரிவிப்பதன் மூலம் இக்கடைசி மறுப்பையும் நிராகரிக்கிறது ஆணையம்.

ஆணையத்தின் பார்வைகளும், பரிந்துரைகளும் என்ற பகுதியில் ஆணையம் ஆந்திராவின் வகைப்
படுத்துதல் குறித்த தனது பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கிறது. அவற்றுள் முக்கியமான சிலவற்றைக் காணலாம் :


1) அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமையை தடை செய்துவிட்டது. ஆனால் மரபு ரீதியான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களிடையே மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், பிறரை விட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பலன்கள் ஒரு சாதியால் மறிக்கப்பட்டு, பிறர் தவிக்கும் நிலையைத் தடுக்க ஒரு முறையியல் கண்டறியப்பட வேண்டும். இடஒதுக்கீட்டுப் பயன்கள் ஒரு வகுப்பு அல்லது ஒரு குழுவினரிடம் மட்டும் குவிந்து, பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட சாதிகள் புறக்கணிக்கப்படும் நிலை நீடித்தால், இடஒதுக்கீடு தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தையே அது சீர்குலைத்துவிடும்.

2) ஆந்திராவில் "மாலா' மற்றும் அதோடு தொடர்புடைய ஒரு சில சாதிகள் மட்டுமே சலுகைகள், இடஒதுக்கீட்டுப் பயன்கள் ஆகியவற்றை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனுபவிக்கின்றன. அதோடு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். முதலான பதவிகளையும், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், ஊராட்சிப் பதவிகள் போன்றவற்றிலும் மிகப் பெரும்பான்மையானவற்றை இச்சாதிகளே அனுபவிக்கின்றன.

3) அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதி 15இன் 4ஆவது விதி பொதுக்கல்வி நிறுவனங்களில் கல்வி இடங்களைப் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்வதும், அவர்களின் முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் பிற சிறப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் ஒரு மாநிலத்தின் கடமை என வரையறுக்கிறது. அதேபோல, சட்டவிதி 16இன் 4ஆவது விதி, தனது கருத்தின்படி போதிய அளவுக்குப் பிரதிநிதித்துவம் செய்யப்படாத பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சாதகமான பணி நியமனங்களையும், பணிகளையும் ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

4) அரசியலமைப்புச் சட்டத்தின் 341ஆவது விதி, குடியரசுத் தலைவரின் அட்டவணையில் சாதிகள் சேர்க்கப்படுவதற்கு அதிகாரமளிப்பதோடு, அவ்வட்டவணையில் எந்தச் சாதியையும் சேர்க்கவும் நீக்கவும் முடியாத அளவுக்குச் சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. இதன் பொருள் என்னவெனில், விதி 341இன் அதிகார வரம்பு ஒவ்வொரு மாநிலத்திற்குமான அட்டவணைச் சாதிகளின் பட்டியலைத் தயாரிப்பதற்கும், மாநிலங்கள் அந்தப் பட்டியலில் இருந்து எந்தச் சாதியையும் தனது விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப சேர்ப்பதையும் நீக்குவதையும் தடுப்பதை உறுதி செய்வது வரைக்கும் தான் என்பதே. விதி 341, குடியரசுத் தலைவரின் பட்டியலில் உள்ள அட்டவணைச் சாதிகளைப் பொறுத்து, ஒரு மாநில அரசு கட்டணச் சலுகைகள் / உதவித் தொகைகள் / விடுதி / ஒதுக்கீடுகள் / ஒதுக்கீடுகளின் அளவு / கல்விக்கு மட்டுமான இடஒதுக்கீடு / பணிகளுக்கான இட ஒதுக்கீடு / பணிக்குத் தேர்வு செய்யும் போது / பணி உயர்வுகளின் போது என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை.

இவற்றை எல்லாம் அந்த மாநிலத்திற்கேற்ப வழங்குவது, அந்தந்த மாநிலத்தின் பொறுப்பும் கடமையுமாகும். இந்த நடைமுறையில் இடஒதுக்கீடு வழங்கவும், அவ்விட ஒதுக்கீட்டின் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்கவும் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது.இவ்வாறான இடஒதுக்கீடு சீராக அனைத்துச் சாதிகளுக்கிடையிலே பங்கிட்டுக் கொள்ளப்படவில்லையெனில், அதை நிவர்த்தி செய்யும் வகையில், வகைப்படுத்துதல், முறைப்படுத்துதல், நியமனம் செய்தல் என்ற எந்த முறையையும் மேற்கொண்டு, பலன்கள் அனைவருக்கும் சென்று சேர நடவடிக்கை மேற்கொள்வது, மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

5) 46ஆவது சட்டவிதி, “பட்டியல் சாதிகளின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்புக் கவனத்துடன் மாநில அரசு மேம்படுத்த வேண்டும். அதோடு, சமூக அநீதியிலிருந்தும் எல்லா விதமான சுரண்டல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்'' என்று கூறுவதன் மூலம் மாநில அரசு, பட்டியல் சாதிகளையும் சமூக அநீதியிலிருந்து பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறது.

ஆணையம் சேகரித்து, ஆய்வு செய்த தரவுகளிலிருந்து ஆந்திராவிலுள்ள பட்டியல் சாதிகள் ஒருமித்த குழுவாய் அமைந்தவை அல்ல. அவை ஒரேயொரு வகுப்பாய் அமைந்தவையும் அல்ல. அவை பலதரப்பட்டவை. கேரள மாநில அரசு எதிர் என்.எம். தாமஸ் என்ற வழக்கில், நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் பின்வருமாறு தீர்ப்பளித்தார்: “கீழ்நிலையில் இருப்பவர்களிலும், ஆகக் கீழாய் இருப்பவர்களுக்கும், பட்டியல் சாதிகளுக்குள்ளே சமமற்றவர்களாய் இருப்பவர்களுக்கும்-ஒரு சாதி அனுபவிக்கும் அதே விதமான பாதுகாப்புச் சலுகை, உத்தரவாதம் ஆகியவை வழங்கப்படுவதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை ஆகும். அவ்வாறு செய்வதென்பது அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 14, 15, 16 ஆகிய விதிகளுக்கு முரணான ஒன்றைச் செய்வது ஆகாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 341 ஆகிய விதிகளை மீறுவதாகவும் அது அமையாது.''

silai ஆந்திரப் பிரதேச மாநில அரசு நீதிபதி ராமச்சந்திர ராஜு ஆணையத்தின் அறிக்கையைப் பார்வையிட்ட பிறகு, இட ஒதுக்கீட்டு நடவடிக்கைகளின் முழு பலனையும் அடைவதற்காக அவரவர்களின் பொதுத் தொழில், சமூகச் சூழ்நிலை, பின்தங்கிய தன்மை முதலானவற்றைப் பொறுத்து-பட்டியல் சாதிகளை ஏ, பி, சி, டி என்று நான்கு குழுக்களாக வகைப்படுத்துவது அவசியம் என்று உணர்ந்தது. தங்களது உண்மையான பிறப்பு அடையாளத்தின் அடிப்படையில் தான் பட்டியல் சாதிகள் பலன் அடைந்து, அதன் மூலம் தங்களது தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் வழிகளைப் பெறமுடியும் என்பதையும், குடியரசுத் தலைவரின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் இத்தகைய வழிகளையும் தகுதிகளையும் பறிகொடுத்துவிட்ட பிற சாதிகளோடு அவர்களை இணைத்துப் பார்க்க முடியாது என்பதையும்-முன் குறிப்பிட்ட சாதிகளோடு ஒப்பிடும் போது, இவர்கள் சமமற்றவர்களாக மாறிவிட்டார்கள் என்பதையும் மாநில அரசு உணர்ந்தது. எனவே வகைப்படுத்துதல் நியாயமானதே என்ற முடிவுக்கே வந்தது.

வகைப்படுத்துதலுக்கு முன்பிருந்த நான்காண்டுகளிலும், வகைப்படுத்துதல் நடைமுறையில் இருந்த நான்காண்டுகளிலும், வகைப்படுத்துதல் தடை செய்யப்பட்டதற்குப் பிந்தைய மூன்றாண்டுகளிலும், கல்விச் சேர்க்கை, பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில்-பட்டியல் சாதிகளின் சாதி வாரி மற்றும் குழுவாரி பயனீட்டாளர்களின் புள்ளி விவரங்கள் வகைப்படுத்துதலின் போது, இடஒதுக்கீட்டுப் பயன்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் உத்தரவாதப் படுத்துவதாகவும் இருந்தன என்பதையும், வகைப்படுத்துதல் நடைமுறையில் வருவதற்கு முந்தைய ஆண்டுகளிலும் வகைப்படுத்துதல் தடை செய்யப்பட்டதற்குப் பிறகான ஆண்டுகளிலும் அவை எவ்வாறு பலன்களைப் பறி கொடுத்துவிட்டு நின்றன என்பதையும் வேறுபடுத்திக்காட்டுவது அவசியமானது. பட்டியல் சாதிகளிலுள்ள அனைத்துச் சாதிகளும் சமமாக முன்னேறவும், தங்கள் மக்கள் தொகைக்கு உரிய விகிதத்தில் இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெறவும் உதவுவதே-பட்டியல் சாதிகள் இடஒதுக்கீட்டை முறைப்படுத்துதலின் நோக்கமாக இருந்தது.

ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ உள்ள பட்டியல் சாதிகளில் உள்ள பல்வேறு சாதிகள், இனங்கள், பழங்குடிகள் ஆகியோருக்கு ஆக்கப்பூர்வமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமானால், சட்டவிதி 341(1) மற்றும் (2)இல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அனுமதி வழங்கலாம் என்பதே இவ்வாணையத்தின் கருத்து. சட்டவிதி 341 இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகள், இனங்கள், பழங்குடிகள் ஆகியவற்றுக்கு மாநில அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு-எந்த விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு மாநில சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், தான் இயற்றும் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் வகைப்படுத்துதல் / நுண் பகுப்புச் செய்தல்அய் செய்யலாம் என்று தெரிவிக்கும் அரசியலமைச் சட்டத்திருத்தத்தின் மூலம் இச்சட்டப் பூர்வ அனுமதி வழங்கப்படலாம்.

குறைந்தபட்சமாக ஒரு பணியிலிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியோ அல்லது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியோ, தலைமை வகிக்கும் ஒரு சட்ட ஆணையம் திரட்டிய தரவுகளின் அடிப்படையில் மாநில சட்டமன்றம் இவ்வாறான பரிந்துரைகளை செய்யலாம் என்பதையும் மேற்சொன்ன சட்டத்திருத்தம் குறிப்பிடலாம். பட்டியல் சாதிகளுள் உள்ள பல்வேறு சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மாநில அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் எந்தளவுக்குப் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன என்பதைக் குறித்த தரவுகளை அவ்வாணையம் திரட்டலாம். பட்டியல் சாதிகளில் உள்ள ஒவ்வொரு சாதிக்கும், இனத்துக்கும், பழங்குடிக்கும் அல்லது சாதி, இனம், பழங்குடி ஆகியவற்றின் பகுதிக்கும் அல்லது அவற்றிலுள்ள குழுவுக்கும் அதன் மக்கள் தொகைக்கு உகந்த விதத்தில் எந்தெந்த விகிதத்தில் இட ஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மாநில சட்ட மன்றம் திட்டவட்டமாகத் தெரிவிக்கலாம். ஆணையம் இவ்வாறு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341ஆவது விதியைத் திருத்தம் செய்து கீழ்க்கண்டவாறு 3ஆவது பிரிவை அதோடு இணைத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

341(3) ஒரு மாநில சட்டமன்றம் அல்லது ஒன்றியப் பிரதேச சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டதன் பேரில், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட அல்லது பிரிவு (2)இன் கீழ் நாடாளுமன்றம் உருவாக்கிய சட்டத்தில் குறிப்பிட்ட அல்லது பிரிவு (2) இன் கீழ் நாடாளுமன்றம் உருவாக்கிய சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சாதியையோ, இனத்தையோ, பழங்குடியையோ அல்லது சாதி, இனம், பழங்குடி ஆகியவற்றின் பகுதியையோ அல்லது அவற்றிலுள்ள ஒரு குழுவையோ வகைப்படுத்தவோ அல்லது வகைப்படுத்துதலை நீக்கவோ வழிவகை செய்யலாம்.

உச்ச நீதிமன்றம் ஆந்திர மாநிலத்தின் நடைமுறையில் இருந்த வகைப்படுத்துதலை தடை செய்து உத்தரவு பிறப்பித்த போது, என்னென்ன சான்றுகளை, என்னென்ன வழக்குகளை முன்வைத்து தனது தீர்ப்புகளை வழங்கியதோ, அதே சான்றுகளை முன்வைத்து தான் வகைப்படுத்துதலுக்கு ஆதரவான தனது வாதங்களை ஆணையம் முன்வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், அம்பேத்கரின் எழுத்துக்களையும், வி.ஆர். கிருஷ்ணய்யரின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி தனது தடையைப் பிறப்பித்தது. ஆணையமும் அவற்றையே முன்வைத்து, தனது அறிக்கையை அளிக்கிறது. அவ்வாறே இந்திரா சகானி வழக்கை ஆணையம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே மேற்கோள் காட்டி தமது வாதங்களை முன்வைக்கின்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே ஆணையம் தனது செயல்பாட்டைத் தொடங்கியது என்பதால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து ஆட்சேபங்களையும் ஆணையம் நிதானமாகவும், சரியாகவும் அணுகி, தனது பரிந்துரைகளைத் தெளிவாக முன்வைக்கிறது. ஆணையத்தின் அறிக்கை, இப்போது தேசியப் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள் ஆணையத்தின் பரிசீலனையில் இருக்கிறது. அவ்வாணையத்தின் பரிசீலனை முடிந்து நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையத்தின் அறிக்கை, தாழ்த்தப்பட்டவர்களிலேயே இதுவரை புறக்கணிக்கப்பட்டவர்களின் மீதான கரிசனத்தோடு முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதால், இதைப் புறக்கணிக்க எந்தக் கட்சியாலும் எந்தக் குழுவினராலும் முடியாது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மொத்தத்தில், இதுவரை அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையின் கால்களில் அது நடந்து வருகிறது.

மேலும் இவ்வறிக்கை, தமிழ்நாட்டில் மேலெழும்பியுள்ள உள்ஒதுக்கீடு கோரிக்கையைப் பொறுத்த மட்டிலும் கூட, முக்கியத்துவம் உடையதாகிறது. மாலா சாதியினரின் ஆட்சேபங்களுக்கு ஆணையம் தெரிவிக்கும் பதில்கள், தமிழ்நாட்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீடுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கும் பொருந்தக்கூடியவை. அருந்ததியர்கள் மீது பிற தலித் சாதிகள் கட்டவிழ்த்துவிடும் தீண்டாமை வன்கொடுமைகள் இன்னும் கூடுதல் அழுத்தத்தையும், அவசியத்தையும் ஆணையத்தின் அறிக்கைக்கு வழங்கக் கூடியவை. எப்படியாயினும், நியாயப்பூர்வமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட முடியாத நிலையில் அரசின், நீதிமன்றத்தின் நிர்வாக ரீதியான நடைமுறைகளை முன்வைத்து முட்டுக்கட்டைப் போட முனைந்த மாலா சாதியினரைப் போன்றவர்களின் அத்தகைய முட்டுக்கட்டையையும் முறியடிக்கும் விதமாக வந்துள்ள இவ்வறிக்கை, அனைத்து ஜனநாயக சக்திகளாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் அய்யமில்லை.


Pin It