திராவிட இயக்கத் தமிழர் பேரவை, அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீட்டு விழாவைச் சென்னையில் மிகச் சிறப்பாக நடத்தியது.

ambedkar_bharathidasanகடந்த 24.04.2010 சனிக்கிழமை சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் மாலை 6 மணிக்கு இவ்விழா தொடங்கியது.

இம்மலர் வெளியீட்டு விழாவுக்குத் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் தோழர் சுப.வீரபாண்டியன் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியின் தொடக்க மாகப் பேரவையின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் எழில். இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார், நூலக ஆணைக்குழுத் தலைவர் திரு. கயல்தினகரன், பேரவையின் வடக்குமண்டலச் செயலாளர் தோழர். மு.மாறன் முன்னிலை வகித்தனர்.

அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பரதிதாசன் பிறந்தநாள் மலரைச் சென்னைப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.திருவாசகம் அவர்கள் வெளியிட, முதல்படியைத் தமிழக அரசின் தில்லிச் சார்பாளர் திரு. கம்பம் செல்வேந்திரன் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திராவிட முன்னேற்றக் கழக மாநிலத் தொண்டரணிச் செயலாளர் தோழர் பொள்ளாச்சி மா. உமாபதி, பேராசிரியர் அரங்கமல்லிகா ஆகிய சான்றோர்கள் செறிவு மிகு கருத்துரைகளை வழங்கினார்கள்.

விழாவின் சிறப்பாளர்கள் அனைவரும், புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகிய இரு பெருமக்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள், வரலாறு தழுவிய செய்திகள், அவர்களின் பகுத்தறிவுச் சமூக எழுத்துப்பணிகள், செயல்பாடுகள் பற்றியும், மலரில் இடம்பெற்ற கட்டுரைகளின் திறன்கள் பற்றியும் மிகச் சிறப்பாகவும், நயம்படவும் விளக்கமாகவும் பேசினார்கள்.

சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் பேரவையின் பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். குறிப்பாக இம்மலர் உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்து சிறந்த முறையில் ஒளியச்சு செய்து கொடுத்த இரா. உமா, அழகிய வடிவமைப்பை நூலுக்குத் தந்த இசாக், சிறந்த முறையில் மலரை அச்சிட்டு அளித்த ஜெம் கிராபிக்ஸ் உரிமையாளர் சாதிக்பாட்சா ஆகியோரும் சால்வைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டனர்.

கூட்ட அரங்கம் நிரம்பி இருந்த மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கினார் பேரவையின் மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் சிற்பி செல்வராஜ்.

விழாவின் இறுதியாக விழாவைச் சிறப்பு செய்த சிறப்பு அழைப்பாளர்கள், விழாவுக்கு வருகை தந்த தோழமை அமைப்புகள், பேரவைத் தோழர்கள், பொதுமக்கள் அனைவருக்கும், பேரவையின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் மரைக்காயர் சேக்தாவூத் இனிய நன்றியினைக் கூறி விழாவை நிறைவு செய்தார்.

Pin It