இந்தியாவில் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகின்றதோ என்று அய்யப்படும் அளவுக்கு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டதும், எல்.கே. அத்வானி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். அதன் பிறகு குஜராத், பெங்களூர் என பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி நடைபெறும் ஒரிசாவில் இந்து வெறித்தாக்குதலுக்கு கிறித்துவர்கள், மீண்டும் ஒருமுறை இரையாக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்கியதில் ஏற்பட்ட பிரச்சனையால், காஷ்மீரில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் தொடர்கிறது. இவை எல்லாவற்றிற்கும் ‘முஸ்லிம் தீவிரவாதம்' தான் காரணம் என ‘இந்து பயங்கரவாத' பத்திரிகைகள் எப்போதும் போல் மக்களின் சிந்தனையை பாழ்படுத்துகின்றன.
ஒவ்வொரு மதக்கலவரமும், குண்டு வெடிப்பும் ‘இந்து ஒற்றுமை'யை பலப்படுத்துகின்றன. அதனால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கவும், அறுவடை செய்யவும் இத்தகைய சதித்திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியும் இந்து வாக்குகளைப் பெரிதும் நம்பியிருப்பதால், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு திராணியின்றி இருக்கிறது. சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை. இந்துத்துவ சிந்தனை எல்லா கட்சிகளிலும் ஊடுறுவி இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால் தான் அரசியல் கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதில் ஓரளவே உண்மை இருக்கிறது. இது, தேர்தல் கால செயல் திட்டம் மட்டுமே அல்ல.
ஒரு கால் நூற்றாண்டாக நாடெங்கும் இந்துத்துவ செயல்திட்டங்கள் - அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதிலும், அம்மக்களை அச்சுறுத்துவதிலும் அவை முனைப்புடன் செயல்படுகின்றன. தலித் மக்கள் சாதி - தீண்டாமைக் கொடுமைகளால் புறந்தள்ளப்படுகின்றனர் என்றால், முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்படுகின்றனர். இந்நாட்டின் தொல்குடி மக்களான முஸ்லிம்கள், பண்பாட்டு ரீதியாகவே மோசமானவர்கள் என்ற தோற்றம், குழந்தைகளின் பாடத்திட்டம் முதல் வரலாற்று நூல்கள் வரை திணிக்கப்பட்டு, இன்று அரசியலிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
மதவாதத்திற்கு எதிரான பல்வேறு கட்சிகளும், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக மட்டுமே அணுகுகின்றன. இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவான கட்சிகள் - எதிரான கட்சிகள் என்று எளிய விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
தலித்துகளுக்கு எதிரான அரசியல் தவறு எனில், ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவான அரசியலும் தவறுதான். அதே போல, முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் தவறு எனில், ‘இந்து'க்களுக்கு ஆதரவான அரசியலும் - முஸ்லிம்களுக்கு எதிரானதுதான். சிறுபான்மை மக்கள் நாட்டின் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணம், ‘இந்துக்கள்' என்று தவறாக அடையாளப்படுத்தப்படும் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை நிரந்தர அடிமைகளாக்குவதற்காகத்தான் என்பது உணரப்பட வேண்டும்.
‘இந்துக்கள் பெரும்பான்மை'யினர் எனில், அவர்கள் ஏன் சிறுபான்மை மதத்தினரைப் பார்த்து அச்சப்பட வேண்டும்? இந்துக்கள் சிறுபான்மையினர் என்ற உண்மையை மறைப்பதற்காகத்தான் ‘இந்து பெரும்பான்மை' வாதம் முன்னிறுத்தப்படுகிறது. இந்து வர்ணாசிரம தர்மத்தில் முதல் மூன்று நிலையில் இருப்பவர்கள்தான் இந்துக்கள்; அவர்கள் மக்கள் தொகையில் 5 சதவிகிதமே உள்ளனர். இந்து வர்ணாசிரமக் கொள்கையால் கடும் பாதிப்பிற்குள்ளாகும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கண்டிப்பாக இந்து கொள்கையின் ஓர் அங்கமாக இருக்கவே முடியாது. இப்பெரும்பான்மை மக்கள் மூவர்ணத்தினருக்கும் உடலுழைப்பை நல்கவே நிர்பந்திக்கப்படுகின்றனர். இத்தகையதொரு அடிமைத் தனத்தை ஒரு பண்பாடாகவே (இந்து மதம்) மாற்றியதில்தான் பார்ப்பனியம் வெற்றி கண்டுள்ளது.
இவ்வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பான்மை மக்கள் மீது ‘இந்து' அடையாளம் திணிக்கப்பட்டது. இந்த அடையாளத்தை உறுதிப்படுத்தவே சொந்த சகோதரர்களான முஸ்லிம்களையே தீவிரவாதிகளாக / எதிரிகளாக சித்தரிக்கின்றனர். இச்சூழ்ச்சியை முறியடிக்காமல் ‘இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை' மட்டுமே முன்னிறுத்தி ‘இந்து பெரும்பான்மை' பயங்கரத்தை முறியடித்து விட முடியாது.