கவிதை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொரு விதமாக வளர்சசிப் பெற்றோ. மாற்றம் அடைந்தோ வந்துள்ளது, மரபு என்னும் பெயரில் கட்டுப்பட்டிருந்தது, இலக்கணத்துக்குட்பட்டிருந்தது, பாரதியின் வருகைக்குப் பிறகே கவிதையில் மாற்றம் ஏற்பட்டது, மரபிலிருந்து விடுதலைப் பெற்றது, புதுக்கவிதையின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது, படிமம். குறியீடு என ஓர் அலங்காரத்தை ஏற்படுத்திக் கொண்டு அவைகளுள் சிக்குமுண்டது, சிறப்பும் பெற்றது, குறியீட்டின் ஒரு வடிவமே படிமம் என்றாலும் படிமத்துக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு, படிமம் கவிதையை ஒரு படி உயர்ததியது என்று திட்டவட்டமாக கூறலாம்,
படிமம் என்பது புதுக்கவிதைக்கு உரியது எனினும் மரபிலுள்ள உருவகமே புதுக்கவிதையில் பெயர் மாறி தொடர்கிறது, ‘உவமை உருவகங்களின் பரிணாம வளர்ச்சியே படிமம்’ என கைலாசபதி சுறியுள்ளது கவனிப்பிற்குரியது, மெய். உரு என்பவை படிமப் பன்புகள் என தொல்காப்பியமும் கூறுகின்றது,
Image என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழச் சொல்லே படிமம், பிம்பம். உரு காட்சி என்றும் அழைக்கப்படுகிறது, ஆயினும் படிமமே பிரபலம்,
மேலைநாடுகளில் நிகழ்ந்த தொழிற் புரட்சிகளால் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்பட்டன, அக்காலச் சூழலில் ஏற்பட்ட அம்மாற்றம் படைப்புகளிலும் காணப்பட்டது, இதனால் பல புத்திலக்கியங்கள் தோன்றின, குறியீடுக் கவிஞர்கள் இயங்கி வந்தாலும் எஸ்ரா பவுண்டு, அமி லோவல், லாரன்ஸ், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்ற கவிஞர்கள் படிம உத்தியைக் கையாண்டு படிமக் கவிதைகளை எழுதி வளர்த்து வந்தனர்.
படிமத்துக்கு பல விளக்கங்கள் உண்டு. ‘சொற்களால் வரையப்படும் ஓவியம்’ என சி,டே, லூயில் கூறுவார், கவிதையைச் செம்மைப்படுத்துவதும் செறிவுபடுத்துவதும் சிறப்புப் படுத்துவதும் படிமமேயாகும், கவிதையைக் காட்சியாகத் தோன்றச் செய்வது படிமம் எனப்படும், மனத்திற்கும் அறிவிற்கும் கவிப் பொருளை உணர்த்துவதும் படிமமே, படிமம் புதுக்கவிதைக்கு வெறும் அலங்காரமல்ல தன் ஜீவநாடி சத்து ஏற்றும் சாதனம் என்று விளக்கியுள்ளார் சி,சு, செல்லப்பா. மொழியைக் கவிதையாக்கும் ஓர் அருமையான கருவியே படிமம் என்றும் குறிப்பிடலாம். மிக முக்கியமாக படைப்பாளனின் அனுபவத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றதே படிமம். குறிப்பாக ‘தீப்பந்து போன்ற சூரியன்’ என்னும் உவமத்தை ‘தீப்பந்து சூரியன்’ என்று சுருக்கி எழுதினால் அது படிமம். படிமத்திற்கு சுருக்கமே தேவை. ‘போன்ற’ சொற்கள் தேவையற்றது.
ககனப் பறவை
நீட்டும் அலகு,
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை,
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை,
கடவுள் ஊன்றும்
செங்கோல், என ‘மின்னல்’ஐக் கவிஞர் பிரமிள் வருணித்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம், தலைப்பை வைத்தே ஒவ்வொரு வரியையும் படிமமாக்கிக் காட்டியுள்ளார். விடுகதைத் தன்மையும் ஒவ்வொரு படிமத்திலும் காண முடிகின்றது.
படிமம் என பொதுவாக சொல்லப்பட்டாலும் அதிலும் பல வகை உள்ளன. அவை அழகியல், கொள்கை முழக்கம், அங்கதம், நிகழ்ச்சி, முரண் பொருள், புதுமையியல், தொன்மவியல், மிகை நவிற்சி, தத்துவம், இனிவரல் என வகைப்படுத்துகிறார் கவிஞர் மித்ரா. சமயம், தொன்மம், மூலம், அடிக்கருத்து, இயற்கை, தன்னியல்பு என்கிறார் கவிஞர் சிற்பி. ஆயினும் மனப்படிமம், அணிப்படிமம், குறியீட்டுப் படிமம் என மூன்று பிரிவுகளிலே அனைத்தும் அடங்கியுள்ளது. மனப்படிமத்தை ஜம்புலன்களால் எழும் காட்சி என்றும் அணிப்படிமத்தை இலக்கிய மொழிநடை வாயிலாகத் தோன்றுவது என்றும் குறியீட்டுப் படிமத்தை புரியாத உண்மைகளைப் புரியச் செய்வது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கவிதை மரபைத் தோற்றுவித்தவர் பாரதி எனினும் ந.பிச்சமூர்த்தியே புதுக்கவிதையை முழுமையாக எழுதியவர். படிமத்திலும் சில எழுதியுள்ளார்.
இழைப்புளி சீவிய
மரச்சுருள் ஒன்று
கால் மீது காற்றில்
உருண்டு சிரிக்கிறது ஒலி நயப்படிமத்துக்குச் சான்று. உருண்டது என்பது காட்சி. சிரித்தது என்பது ஒலி நயம்.
கவிதையை ஓர் இயக்கமாகக் கொண்டு சென்றவர்கள் வானம்பாடியர். மக்களுக்காகப் பாடியவர்கள். அவர்களில் ஒருவர் கவிஞர் மீரா. அவர் படிமத்தைக் கையாண்டு எழுதிய கவிதை
முப்பது நாட்களாய்
அலுவலகத்தில் அடைகாத்திருந்து
ஒரு நாள்
ஊதியக் குஞ்சைப் பொரித்துப்
பார்க்கும் நேரம் பார்த்து
கணக்காய்
கொத்திப் போக பறந்து வரும்
கடன்காரப் பருந்து.
இதில் ஊதியக் குஞ்சு, கடன்காரப் பருந்து படிமங்களாக உள்ளன. ஓர் அரசு ஊழியரின் நிலையைப் படிமம் மூலம் விவரித்துள்ளார். சமூக அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளது. வானம்பாடி இயக்கத்தின் மற்றொரு கவிஞர் சிற்பி.
வானம் காயப்பட்டுக் கிடந்த விடியற்பொழுது உவமை உருவகத்துடன் படிமம் இக்கவிதையில் முன்னிற்கிறது. காயப்பட்டுக் கிடந்த என்னும் வரியே படிமமாக காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.
அவையெல்லாம்
பஞ்சு அணைக் கட்டுகள்
நாமெல்லாம்
அஞ்சாத
அமிலநதியின்
அலைப்படைகள் என்னும் கவிஞர் தமிழன்பனின் கவிதையில் படிமங்கள் உருப்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. வானம்பாடிக் கவிஞர்களிலேயே படிமங்களைப் பெருமளவு பயன்படுத்தியவர் என்னும் விமர்சனமும் உண்டு. ‘படிமத்துக்காகப் படிமம்’ என்று குற்றஞ்சாட்டுமளவுக்குப் படிமவெறி அல்லது பிடிப்பு நமது கவிஞரை ஆட்கொண்டுள்ளது் என திரு.க.கைலாசபதி குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
ஆசைக்குழந்தையொன்று
ஆகாயத்தில் பறக்க விட்ட
பலூன் அது. கயிறிழுத்துத் தரை
சேர்க்க மறுத்துவிட்ட பலூன்
இது க.நா.சுப்பிரமணியம் எழுதிய படிமக் கவிதை. பலூனே இங்கு படிமமாக அமைகின்றது.
சூளைச் செங்கல் குவியிலிலே
தனிக்கல் ஒன்று சாகிறது என்பது ஞானக்கூத்தனின் படிமக்கவிதை.
இருள் இலைகள், ஒளிச்சாம்பல், காலக்குளம், நெருப்பு விநாடி, பாதரசப்புன்னகை, பரிதிப்புன்னகை, மூளைச்சிலந்தி. சூரியதீபம், அக்கினி புஷ்பம், ஆவேச அக்கினி, நெஞ்சக் குளம், வார்த்தைத் தவளை, வெளிச்சப்பூஎன்பவை படிமத்துக்கு எடுத்துக்காட்டுகள்.
புதுக்கவிதையை வளர்த்தெடுத்ததில் படிமத்திற்கு ஒரு முக்கியப்பங்குண்டு. படிமம் கவிதையை அழகுப்படுத்தியது. அலங்காரப்படுத்தியது. வாசகனுக்குள் காட்சியை ஏற்படுத்தியது. கவிஞர்களும் படிமத்தைக் கவிதையில் போட்டி போட்டு அமைத்து வாசகனுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவு கோல் உண்டு. ஓர் எல்லை உண்டு. படிமம் கவிதையில் கவிஞர்களால் கையாளப்படும் ஓர் உத்தியேயாகும். படிமங்கள் கவிதையாகி விடாது. அளவை மிஞ்சக் கூடாது. அலங்காரப்படுத்த வேண்டிய படிமம் கவிதையைக் காயப்படுத்தி விடக் கூடாது. மரபிலிருந்து விடுதலைப் பெற்ற கவிதை புதுக்கவிதை என்னும் பெயரில் படிமச் சிறையில் சிக்கி விடக் கூடாது என்றும் கவிஞர்கள் தொடர்நது குரல் கொடுத்து வருகின்றனர்.
கனத்த படிம ஆடை
அணி அலங்கார
ஒப்பனைகளுடன்
அரங்கேறி உங்கள்
அடையாளம் தெரியவில்லை
எனக்கு
மேடையின் பின்னே
ஒப்பனை அறையில்
எளிய வாசலில்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க என்று கவிஞர் புவியரசு படிமம் பயன்படுத்துவோரை மெல்ல விமர்சித்துள்ளார். பறவை விமானம் ஆகாது என்பது போல் படிமம் கவிதையாகாது என்கிறார்.
படிம
உருவகக்
குறியீடு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ எப்போது யாசிக்கப் போகிறாய்? என கவிஞர் கலாப்பிரியா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலை வேண்டியுள்ளார்.
படிமத்துடன் உருவகம் குறியீடு ஆகியவையும் வேண்டாம் என்கிறார். கவிஞர் முழுமையாக மறுக்கவில்லை.
படிமம் அல்லாமலும்
கவிதை உண்டு
படிமத்திற்காகப் படிமம்
ஆபரேக்ஷனுக்காக ஆபரேக்ஷன் என கவிஞர் தமிழ்நாடனும் விமர்சித்துள்ளார்.
உவமை, உருவகம், உள்ளுறை உவமம், குறியீடு என்னும் வரிசையிலே படிமம் கவிதைளில் காண முடிகிறது. கவிதைக்கு படிமம் தேவை. படிமமே கவிதையாக இருக்கக் கூடாது. புதுக்கவிதையின் வளர்ச்சியில் படிமத்திற்கு முக்கியப்பங்குண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். வாசிப்பின் ஒரு பரிமாணம் என படிமத்தை உணர்ந்து வாசிக்க வேண்டும். படிமக்கவிதை மனத்தில் நிகழ்த்திக் காட்டும்.
படிமம் என்னும் எல்லையைத் தமிழ்க் கவிதை எட்டியுள்ளது என்பது மெய். எல்லையைத் தாண்டாமல் இருப்பதே தமிழ்க் கவிதைக்கும் சிறப்பு.
கவிதை அரசனுக்கு
படிம மகுடம்
சூட்டுவோம்.
இலக்கிய உலகில்
அழியாப் புகழைக்
கூட்டுவோம்.
-பொன்.குமார் (