வறுமையும், சுரண்டலும், எழுத்தறிவின்மையும், மூடநம்பிக்கைகளும் இருக்கும்வரையில் கடவுள்களும் இருக்கும், கடவுள்களுக்கு ஏஜென்டாக சாமியார்களும் இருப்பார்கள், இவர்களை நம்பி ஏமாறும் அப்பாவி மக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

nithyananda_00காலையில் எழுந்து தொலைக்காட்சிகளில் ராசிபலன் பார்த்து, சாமியார்களின் சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டு, மதவாதிகளின் பிரசங்கங்களை கேட்டுவிட்டுதான் மற்றவேலை எனுமளவிற்கு, வாழும் பகுத்தறிவுச் சொந்தக்காரரின் தொலைக்காட்சி முதல்  கிட்டத்தட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களை மூடநம்பிக்கைகளின் பிடியில் விழவைத்துள்ளன. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்குக் கிடைக்கும் பணம் மட்டும் காரணமல்ல, அது முதலாளித்துவத்தின் திட்டமிட்டச் சூழ்ச்சியும் கூட.

நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் மக்களின் விடுதலை தாகத்தைத் தட்டி எழுப்பி அவர்களை விழிப்படையச் செய்து, சுதந்திரத்திற்கு போராட்டத்திற்கு அணிதிரட்டிய முற்போக்குப் பத்திரிகைச் சமூகம் இன்று, கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் சிக்கிச்சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதற்கான சிறந்த உதாரணம்தான்...

கடந்த ஒருமாதமாக, நித்தியானந்தனின் ஆன்மீகம் முதல் ஆயில் மசாஜ் வரை அளவுக்கு அதிகமாகவே அநேகமாக அனைத்து ஊடகங்களிலும் அம்புக்குறியிட்டு காட்டியாகிவிட்டதால் அதுகுறித்த விளக்கப்படங்களோ செய்திகளோ ஏதும் தேவையில்லை. அதிலும் குறிப்பாக,  சன் டிவியும் நக்கீரன் இதழும் பத்திரிகைச் சமூகத்தை எந்த அளவிற்கு தரம் தாழ வைக்கமுடியுமோ அந்த அளவிற்கு தரம் தாழ்த்தியுள்ளன.

‘நித்தியானந்தன் மீது ஆதாரத்துடன் பாலியல் குற்றச்சாட்டு’ என ஒற்றைவரியில் முடிக்கவேண்டிய செய்தியை பகுதி 1, பகுதி 2 என பாலியல் சர்ச்சை குறித்த குறுந்தகடுகளை வைத்துக்கொண்டு அடித்த கொட்டம் மக்கள் மத்தியில் முகம் சுழிக்கச் செய்துள்ளன.

இந்த நித்தியானந்தனை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்து, வளர்த்துவிட்டவைகள் இதே ஊடகங்கள்தான். அச்சு ஊடகமாயின் பக்கம்பக்கமாக விளம்பரங்களும் கட்டுரைகளும், விடிந்து எழுந்தால் தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட சாமியார்களின்  சொற்பொழிவுகளையும், மதவாத கருத்துக்களையும் காண்பித்து மூடப்பழக்கவழக்கங்களை அறிவியல் சாதனம் மூலம் வளர்க்கின்றன.

மக்களுக்கு முன்னோடிகளாக இருக்கவேண்டிய முன்னாள் முதல்வர்களும், இன்னாள் முதல்வர்களும், மத்திய மாநில அமைச்சர்களுமே தங்கள் பிரச்சனைத்தீர இப்படிப்பட்ட சாமியார்களின் காலில் விழுந்து, பாதை பூஜை செய்து, தீர்த்தம் வாங்கிக் குடிகிறார்களென்றால் சாதாரண மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு இந்தச்சாமியார்களை நம்புவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் நித்தியானந்தனின் சர்ச்சையை பெரிதுபடுத்தவில்லை. அவரை வளர்த்துவிடும் போது கிடைத்த லாபத்தைவிட, அவர் குறித்த பாலியல் செய்திகளும் படங்களும் அதிக லாபம் தருகின்ற காரணத்தால்தான். குறுந்தகடுகளை வைத்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பேரம் பேசி, பேரம் படியாத காரணத்தினால்தான் அம்பலத்திற்கு வந்ததாக தகவல்கள் உள்ளன.

32 வயதில் பலநூறு கோடிகளுக்கு அதிபதி, எப்படி வந்தது இவ்வளவுப் பணம் எந்தெந்த பெரிய மனிதர்கள் எந்தெந்தக் காரணத்திற்காகக் கொடுத்தார்கள், உலகின் பலநாடுகளில் கிளைகள் எப்படி வந்தன, அரசு ஆக்கிரமிப்பு நிலங்கள் ஏதாவது சிக்கியதா, கணக்கில் வந்த, வராத கணக்குகள் எவ்வளவு என்பது போன்ற சமூகப் பொருளாதாரக் குற்றங்களை பெரிதுபடுத்தாமல், அவரது பாலியல் குறித்த சர்ச்சைகளையே குறிவைத்து தாக்குவதற்குக் காரணம் மக்கள் கீழ்த்தரமான சிந்தனைகளில் நேரத்தைச் செலவிடவேண்டும் என்பதற்காகத்தான்.

எந்தச் செய்தியை பரபரப்புச் செய்தியாக்கவேண்டும் எந்தச் செய்தியை வெளியில் தெரியாமல் மூழ்கடிக்கவேண்டும் என்ற திட்டமிடல்களோடுதான் இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் களத்தில் நிற்கின்றன. தங்கள் நலனையும் தாங்கள் சார்ந்த அரசின் நலனையும் கருத்தில்கொண்டு இவற்றைச் செய்கின்றன.

இடுபொருட்களின் விலைஉயர்வு, கடன் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் நடைபெறும் விவசாயிகளின் தற்கொலைகள்,   கடன்சுமை மற்றும் வறுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் குடும்பங்கள், வேலையிலாத்திண்டாட்டம், அர்ஜுன்சென் குப்தா கமிட்டியின் கணக்கின்படி நாளொன்றுக்கு 20 ரூபாயில் குடும்பம் நடத்தும் 83.77 சத மக்கள், இரவினில் உணவின்றி படுக்கைக்குச் செல்லும் 20 சதமான மக்கள், சரியான ஊட்டச்சத்தில்லாமல் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட 54 சதம் பெண்கள், ரத்த சோகையுடன் பிறக்கும் 80 சதம் பெண் குழந்தைகள், விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கான உரிமைகள் கேட்டு போராட்டம் நடத்தும்போது தடியடிபட்டு மண்டை உடைந்து ரத்தம் சிந்தும் அப்பாவி மக்கள்  போன்ற பிரச்சனைகளெல்லாம் இந்த ஊடகங்களுக்கு பரபரப்புச் செய்திகளாகத் தெரியவில்லை. மேற்கண்ட பிரச்சனைகளுக்கும் ஆளும் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆனால், பாலியல் சர்ச்சைக் குறித்த செய்திகளுக்கும் படங்களுக்கு மட்டும் முன்கூட்டியே ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் மற்ற நிகழ்ச்சிகளில் ‘முக்கிய அறிவிப்பு’ என அறிவிப்பு கொடுத்து கிளுகிளுப்பு ஊட்டுகிறது. மேலும், கதையல்ல நிஜம், நடந்தது என்ன, பூதக்கண்ணாடி போன்ற ஒருசில நிகழ்ச்சிகள் மூலம் சமூகத்தில் அசம்பாவிதமாக விழும் எழவுகளைக் கூட காசாக்கி வேடிக்கைப் பார்ப்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.

காஞ்சி சங்கராச்சாரியார் கொலைவழக்கில் சிக்கியபோதோ, மத்திய பிரதேச மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தீவிரவாத வழக்கில் பிரக்ஞயாசிங் தாகூர் என்ற சாமியாரினி கைதுசெய்யப்பட்டபோதோ, மதவாதிகளின் அங்கீகாரம் பெற்ற பல சாமியார்கள் ஆக்கிரமிப்பு, பொருளாதார மற்றும் கொலைக்குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டபோதோ வரிந்துக் கட்டிக்கொண்டு களமிறங்காத மதவாத அமைப்புகள் தற்போது நித்தியானந்தன் வழக்கில் களமிறங்கியிருப்பதற்குப் பின்னால் ஒரு மதவாத அரசியல் இருப்பதைக் காட்டுகிறது.

பிரேமானந்தன், கல்கி முதல் நித்தியானந்தன் வரை மக்கள் முன்பு அம்பலப்பட்டு நின்றாலும், வழக்கில் சிக்கியச் சாமியர்கள் மிகச்சிலரே. இன்னும் ஊரையே வளைத்து  வைத்திருக்கும் ஆன்மீக அம்மாக்களும் நான்தான் சாமி என்று சுத்திக்கொண்டிருக்கின்ற சாமியார்களும் சிக்காமல் வலம் வருகின்றனர். இன்னும் புதுப்புதுச் சாமியார்களையும் ஆன்மீகவாதிகளையும் இந்த ஊடகங்கள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு ஆன்மீகவாதிகளையும் சாமியார்களை நம்பாமல் அறிவியலையும் வீதியிலிறங்கி நடத்துகின்ற போராட்டங்களையும் நம்பி வெற்றி காணும்போதுதான் இப்படிப்பட்ட சாமியார்களின் வருகை தடுத்து நிறுத்தப்படும்.

-இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It