கீற்றில் தேட...

முன்னுரை

 மனிதன் விலங்கினை நோக்கியும் விலங்கு மனிதனை நோக்கியும் செயற்கை நுண்ணறிவு காலம் செய்யப் போகிறது எனலாம். எனவே விலங்குகள் பற்றி அறிவது சிறப்பு. தொல்காப்பியத்தில் மா என்னும் ஓரெழுத்து ஒருமொழியாக உள்ள இச்சொல் அழகு, குதிரை, யானை, மரம் போன்ற பல்வேறு பொருள்களில் பொருண்மை தந்தாலும் ‘விலங்கின் பொதுப்பெயராகவே’ (சதுரகராதி,ப.151) உள்ளது என்பதை அறிய முடிகிறது. மா என்பது பெரிய, மாமரம் எனும் பொருள்களையும் தருகிறன. தொல்காப்பியர் விலங்கின் பெயரையே குறிப்பிடுவதாக உரையாசியர்கள் வழி காண முடிகின்றது. இதனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஐவகை நிலப்பகுதிகளில் வாழ்ந்த விலங்குகள் பற்றியும் அவற்றிற்கு பெயர்கள் வைத்த முறைகளையும் வாழ்வியலையும் பற்றிக் காண்போம்.

விலங்கு – விளக்கம்

 விலா எழும்பை முதன்மையாகக் கொண்ட விலங்காக உள்ளதனால்தான் தற்காலத்தில் விலங்கு எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். மனிதனும் விலங்கின் வகையாக இருந்தாலும் விலங்கிலிருந்து விலங்கி அதாவது விலகி மனதால் “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது”என மனதால் அறிந்து மனிதனாக மாறிவிட்டான். விலங்கிலிருந்து விலகி இருந்து விலங்கின் செயல்பாடுகளையும் உற்று நோக்கி தன் வாழ்வியலைக் கற்றுக் கொண்டான். சங்கப் புலவர்கள் வாழ்வியலை விளக்க மா எனும் விலங்கை தம் பாடல்களில் பதிவு செய்துள்ளதை அறியலாம்.

மனிதனும் விலங்கின வாழ்வியலும்

விலங்கிலிருந்து விலகி இருந்து விலங்கின் செயல்பாடுகளையும் உற்று நோக்கக் வாழ்வியலைக் கற்றுக் கொண்டன். அப்படிக் கற்றுக் கொண்ட ஒன்றுதான் தற்கொலை செய்து கொள்ளுதல் ஆகும். அப்படி முதன்முதலில் பிரிவு உணர்ச்சி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விலங்கு குரங்காகும் என்பர். இவற்றினைச் சங்க இலக்கியங்களில் காணலாம். டார்வின் கூற்றுப்படி இவன் குரங்காக இருக்கின்றக் காலத்திலே தற்கொலைக் கருத்து இவன் மூலையில் பதிந்திருக்க வேண்டும். மனிதனும் பிரிவுணர்ச்சி, தனிமையுணர்வு போன்ற காரணங்களால் தற்கால மனிதர்கள் தற்கொலையில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிய முடிகின்றது.

முல்லை நிலம் காட்டும் விலங்குகள்

 பெண்மானை மான்பிணை, மடப்பிணை, மடமா என்பர். மான்பிணையின் மாண்பினை ஐங்குறுநூறு (401,434) குறிப்பிடுகிறது. இரலை என்பது ஆண்மானைக் குறிக்கும். (குறுந்.65) கலைமான் என்பதும் ஆண் மானையே குறிப்பிடுவர். புள்ளிமான்களை புகரி எனக் குறிப்பிகிறது குறுந்தொகை (பா.391). திரிமருப்பு என்பதும் மானினமாகும். மரைக்ணம் என்பது மான் கூட்டம் என்பர். இவற்றில் மறி என்பது மான்குட்டியை மட்டும் அல்லாது செம்மறி எனும் ஆட்டினத்தையும் குறிக்கும். ஆடுதலை, சிறுதலை, துரு என்பவை செம்மறி ஆடுகள் ஆகும். இன்று உள்ள வெள்ளாட்டை வெண்மறி என்கிறது அகநானூறு (அகம்.104). முயல் பற்றி ஐங்குறுநூறும் (ஐங்.421) அகநானூறும் குறிப்பிடுகின்றன.இவ்விலங்கு முயன்று முயன்று(முயற்சி செய்து முயற்சி செய்து) தாவிக் குதித்து ஓடுவதனால் முயல் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

 புரவி, வயமா, நிமிர்பரி, கலிமா, மாவிரை போன்ற சொற்கள் எல்லாம் குதிரை எனும் விலங்கின் பெயரைக் குறிப்பாக ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. பரி, வண்பரி, நன்மா, நெடுமான் ஆகியவற்றை நற்றிணையும் குதிரை, இவுளி போன்றவற்றை அகநானூறும் பரிமா என்று கலித்தொகையும் குறிப்பிடுகிறது. சங்க அக இலக்கியங்களான இந்நூல்களில் குதிரை முல்லை நிலக் கருப்பொருளாக உள்ளது. அகப்பொருள் கூறும் இலக்கண நூல்களில் குதிரை பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை எனலாம். காளைமாடுகள் பற்றி நல்ஏறு என அகநானூறும்(334) காரி, வெள்ளை எனும் காளைமாடுகளைக் கலிததொகையும்(4,5,103) புகர் என்பது கபிலக்காளை என்பர் இது சிவப்புநிறக் காளையாகும்.(கலி.107). நாகு, ஆநாகு ஆகியவை பசுவைக் குறிக்கும்(கலி.109,110). புல்லினம் என்றால் ஆட்டைக் குறிக்கும்(கலி.107). இவ்விலங்கினங்கள் எல்லாம் முல்லை நிலக் கருப்பொருளாக முல்லைத்திணைக் குறிப்பிடுகிறது.

குறிஞ்சி நிலம் காட்டும் விலங்குகள்

 தகர் என்பது செம்மறி ஆட்டுக்கிடா என்று கூறுவர்.(ஐங்.218) ஆனால் புருவை என்பது செம்மறியின் பெண்ணாடு என்பர்.(ஐங்.238) கேழல் என்பது பெண் பன்றியையும் ஒருத்தல் என்பது ஆண் பன்றியையும் குறிக்கும்.(ஐங்,263,266) வருடை என்பது மானைக் குறிக்கும். வரையாடு பற்றி குறுந்தொகை(குறுந்.26) குறிப்பிடுகிறது. வரை என்றால் மலையாகும். அதனால் இது வரையாடு என பெயர் பெற்றது. முசு என்பது குரங்கு வகையாகும். (குறுந்.38) உழை என்பது மான் கூட்டமாகும். வேழம் ஆண் யானையாகும்.(குறுந்.100) கலை என்பது ஆண்மான் ஆகும்.(குறுந்.153) ஞமலி என்றால் நாய் ஆகும்.(குறுந்.179) மூதா என்றால் பசுவாகும்(குறுந்.204). கறைவிரல், ஏறு, இனக்கலை என்பவை கருங்குரங்குகள் எனபர்(குறுந்.373,385).

 ஆமான் என்பது காட்டுப்பசு எனபர்.(நற்.57) மடங்கல் என்றால் சிங்கம் என்கிறது நற்றிணை (நற்.57). முளவுமான் என்பதை முள்ளம்பன்றி எனக் கூறுவர்(நற்.85). உழுவை எனும் விலங்கை புலி என்பார் (நற்.104) எண்கின் என்பது ஆண் கரடியைக் குறிப்பிடுவர்(நற்.125). மலைப்பாம்பு பற்றி நற்றிணை மாசுணம் என்கிறது(நற்.261) குறிஞ்சி நிலத்திற்குச் சாரல் என்ற பெயரும் உண்டு சாரல் பகுதில் இருந்ததனால் சாரல்பாம்பு என்பது சாரப்பாம்பு என மருவிருக்க வேண்டும். கறாஅம் என்றால் முதலை என்பர் (நற்.192). சேதா என்றால் மலைப்பசு என்கிறது நற்றிணை(நற்.359). யாளி எனும் ஒருவகை விலங்கை சிங்கம் என்கிறது மாறனலங்காரம் எனும் இலக்கண நூல். ஆனால் யாளி என்பதனை அகநானூறு ஆளி என்று குறிப்பிடுகிறது(அகம்.78,252). இதனை ஒருவகை விலங்கு என்பார் ச.வே.சுப்பிரமணியன்.

 அணிலை அகநானூறு வெளில் என்று குறிப்பிடுகிறுது(அகம்.12). பிணவு என்பது பெண்புலி இரும்போத்து என்பது ஆண்புலி ஆகும்(அகம்.238). இசை உணரும் அசுணம் எனும் விலங்கை பற்றி அகம்(88) குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. ஞாளி என்பது நாயைக் குறிக்கும் இதுவே ஞமலி என்றும் பெயர். ஞமலி என்பது முல்லை நில விலங்காகவும் ஞாளி என்பது குறிஞ்சி நில விலங்காகவும் கருதலாம். ஊகம் என்பது கருங்குரங்கு என்பர். மலையில் ஐந்துதலை பாம்பு இருந்துள்ளது பற்றி கல்தொகை குறிப்பிடுகிறுது.(கலி.62). இவையெல்லாம் குறிஞ்சி நில விலங்கினங்கள் ஆகும்.

மருத நிலம் காட்டும் விலங்கினங்கள்

 மருத நில விலங்கினங்களாக எருமை, நீர்நாய் ஆகிய இரு கருப்பொருகளை மட்டுமே பொருளிலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. மேதி என்பது எருமை என்கிறது தமிழ்நெறிவிளக்கம். பகடு என்பது ஆண் எருமையாகும்(ஐங்.3) கெடிறு எனும் மீன் கெழிறு எனப் பெயர் பெற்றுள்ளது. பசுமீன் எனும் மீன் வகை பற்றி குறுந்தொகை (குறுந்.169) குறிப்பிடுகிறது. வராஅல் எனும் மீனே பின்பு விரால்மீன்,வெராமீன் என்று பேச்சு வழக்காயிற்று. முயிறுமூசு என்பதே முசுறு என இன்று மருவியுள்ளது(நற்.180). இது செம்பெறும்பு என்றே குறிப்பிடலாம் நத்தை எனும் கருப்பொருளேயே சுரிநந்து என நற்றிணை(நற்.280) குறிப்பிடுகிறது.

 மாண்நாகு என்பது பெண் எருமை என்பர் (அகம்.146) மூதா என்பது முதுமையான பசு அல்லது கிழட்டுப்பசு என்று கூறுவர். நந்தின் என்பது ஒருவகை ஊரும் பூச்சியாகும்.(அகம்.246) இன்று நத்தை போன்று நுகர் கொம்புகளோடு ஊரித்திரியும் பூச்சியாக இருக்கலாம். மூதாய் என்பது ஈசலைக் குறிக்கும்.(கலித்.85) இவையெல்லாம் மருத நில விலங்கினங்கள் எனச் சங்க அக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

நெய்தல் நிலம் காட்டும் விலங்கினங்கள்

 திமிலம் என்பது திமிங்கலம் என மருவிருக்கலாம் இதனை வீரசோலியம் எனும் இலக்கணநூல் குறிப்பிடுவதை அறியமுடிகிறது. வளைபணிலம் என்பது சங்கு என்பர்(ஐங்.106). பண்டைய பெண்மக்கள் வளை எனும் சங்கை அறுத்து வளையலாகப் பயன்படுத்திருக்கிறார்கள். அதனாலேயே வளையல் எனும் பெயர் பெற்றிருக்கலாம். சேயிறா என்பது ஒருவகை சிவந்த கடல்மீனைக் குறிக்கும்(ஐங்.196).

 அத்திரி என்பது கோவேறு கழுதை எனக் குறிப்பிடுவர்.(நற்.278). இது நெய்தல் நிலத்து விலங்காக உள்ளது.கொழுமீன், நெய்தலைமீன் என நற்றிணைக் (நற்.127,291) குறிப்பிடுகிறது. இம்மீனில் எண்ணெய் எடுத்து கிளிஞ்சலில் ஊற்றி விளக்காக எரித்திருக்கறார்கள் பண்டைய தமிழ் மக்கள். இம்மீனில் கொழுப்பு அதிகமாக உள்ளதால் நெய் எடுத்து எண்ணெய்யாகப் பயன்படுத்திருக்கிறார்கள். கொழுப்பு அதிகமாக உள்ளதானால்தான் இம்மீனிற்கு கொழுமீன் என்றும் நெய்தலைகொழுமீன் என்றும் அழைத்திருக்கிறார்கள். இம்மீன் அதிகமாக இருக்கும் பகுதி அல்லது இடத்திற்கு ‘கொழும்பு’ எனப் பெயரிட்டிருக்கலாம். அதனால்தான் இலங்கையின் ஒரு பகுதிக்கு கொழும்பு என்று பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுவதற்கு இடம் உண்டு. கொழுப்பு என்பது மருவி கொழும்பு என்று பெயர் வந்திருக்கலாம்.

பாலைத்திணைக் காட்டும் விலங்கினங்கள்

 வறட்சியான வெயில் காலத்தில் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மாறி ஒருநிலக் காட்சியாக அதாவது பாலையாகக் காட்சி தரும் சூழலாகும். .இச்சூழலுக்கு ஏற்பவே முல்லை நிலக் கருப்பொருளும் குறிஞ்சி நிலக் கருப்பொருளும் வற்றிய வலியிழந்த யானையாகவும் புலியாகவும் செந்நாயாகவும் காட்சி தருகின்றன. எருவை என்பது ஒருவகையான் பிணந்தின்னிக் கழுகு அல்லது பருந்து என்பர்(ஐங்.335). நல்அரா என்பது நல்லபாம்பு எனக் கூறுவர்( குறுந்.43). ஓதி எனும் விலங்கை ஓந்தி, ஓணான் என்கிறது குறுந்தொகை (140). நவ்வி என்பது மானினத்தைக் குறிக்கும்.(குறுந்.282) வல்லியம் என்பது புலியாகும் (நற்.2). வழலை என்பது வழலைப்பாம்பு என்றும் பேச்சு வழக்கில் வழனைப்பாம்பு என்றும் கூறுவர் (நற்.92). சிதலை என்பதை கரையான் எனக் கூறுவர் (நற்.325), காரான் என்பது எருமையைக் குறிக்கும் (நற்.391). மரையா என்பது ஒரு விலங்காகும்.(அகம்.3) துரு, தகர் என்பது செம்மறி ஆட்டைக் குறிக்கும் (அகம்.35). நொள்ளை என்பது நத்தையாகும் (அகம்.53). சிலம்பி என்பதை சிலந்தி என்பர்.(அகம்.111) முசு என்பதை குரங்கு என்று கூறுவர் (அகம்.121) குஞ்சரம் என்பது யானையைக் குறிப்பிடுவர்.(அகம்.145).

விலங்கு பற்றிய ஆய்வு முடிவுரை

 ஒவ்வொரு நிலப்பகுதிற்கும் ஏற்பவும் பருவ காலச் சூழலுக்கு ஏற்பவும் விலங்குகளின் வண்ணமும் வடிவமும் அமைந்துள்ளதை அறியமுடிகின்றது. இதன் அடிப்படையிலேயே மக்களின் வாழ்வியலும் அமைந்துள்ளது. விலங்குகளின் பெயர்கள் நிலத்தின் தன்மைக்கும் காலத்தன்மைக்கும் ஏற்ப பெயரிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. விலங்குகளின் செயல்பாடுகளை உற்று நோக்கியப் புலவர்கள் மக்களின் அகச்செயல்பாடோடு ஒப்பிட்டு நோக்கி வாழ்வியல் செய்திகளைப் பதிவு செய்துள்ளனர்.

- முனைவர் மு.கருப்பையா, உதவிப் பேராசிரியர், தமிழித்துறை ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை, எஸ்.எஸ்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்