விடியலில் இத்தனை வெளிச்சம் இருக்கும் என்பதே எனக்கு அப்போது தான் தெரிந்தது. அது இதற்கு முன் என் மலைகளில் நான் காணாதது. மரங்கள் மேல் படாமல் வரும் வெளிச்சம் எனக்கு புதிது. ஊர் நாட்டு அதிகாலை இத்தனை பயங்கரமாக இருக்கும் என்பதை அந்த வயது நான் மிரண்டபடியே பார்த்திருக்கிறேன்.
எழும் போதே முகத்தில் அடிக்கும் வெளிச்சம்... செவியில் படரும் குரல்கள் என... ஒரு பாதியில் ஆரம்பிக்கும் ஆரம்பம் போல எனக்கு அந்த தொடக்கத்தை பிடிக்கவே முடியாது. எழுந்து உடல் களைய அமர்கையில்... அப்போதே பலர் நடப்பதும்... ஏதேதோ பேசிக் கொண்டிருப்பதும்... தேநீர் வாங்க கடைக்கு செல்வதும்.. வாங்கி வந்த தேநீரை ஊற்றி ஊற்றி ஒவ்வொருவருக்காய் தருவதும்... ஒரு வினோத காட்சி அமைப்பில் நானும் அமர்ந்திருப்பேன்.
எங்கள் மலையில்... மெல்ல மெல்ல தான் சூரிய வெளிச்சம் மேலே படும். இங்கே என்னடானா எடுத்ததுமே படக்கென மேலே விழுந்து வியர்க்கவும் செய்து விடுகிறது. கழுத்து பக்கம் முதுகு பக்கம் பழக்கம் இல்லாத சூடு புரளும்.
பெரும்பாலும் ஆண்கள் சட்டையில்லாமல் நடமாடுவது எனக்கு புதிது. சட்டைக்கு மேல் சட்டை.. அதற்கு மேல் ஸ்வெட்டெர் போட்டு திரிந்த எனக்கு சட்டையில்லாமல் இருப்பது அழுது விட தோன்ற வைப்பது. பிறகு அதற்கு பழகி சட்டையின்றி இருப்பதே சமாதானம் என்ற நகர்தலையும் ஊர் நாட்டு வாழ்க்கை கற்பித்தது தனி.
படுத்தபடி கண் விழிக்கையிலேயே எதிரே பல வீடுகளுக்கு இடையே தெரியும் பாலமுருகன் திரையரங்கத்தின் தலை.. அதில் தான் எத்தனை ஆசுவாசம். எத்தனை அற்புதம். எனக்கு சொல்ல முடியாத சந்தோஷம் அந்தக் காட்சியில்... தினம் தினம் கிடைக்கும். காலை வெயில் படருகையில் கிடைக்கும் வண்ணத்தில் அந்த தலை உச்சியும் .. பாலமுருகன் என்று எழுதி இருக்கும் அந்த பலகையும்... இனம் புரியாத குதூகலத்தை எனக்குள் நிகழ்த்தும். என்னவோ நம்பிக்கை அது. வீட்டு நினைவு வரும் போதெல்லாம் அந்த தியேட்டர் தலை தான் ஆறுதல்.
நண்பன் ஒருவன் வந்த பிறகு அந்தக் காலைகள் வேக வேகமாய் வந்தன. அதுவும் சனிக்கிழமை என்றால்... புலர்ந்து கொண்டிருக்கும் பொழுதை சற்று பொறு என பிடித்தபடி கால் மேட்டில் நிற்பான் லக்கி. கரிய உருவம். குண்டு வடிவம். முதல் முறை பார்க்கையில் வெருக்கென துள்ளினேன். ஈ என பற்களை காட்டியபடி நிற்கும் அவனோடு பின் தொடர்வது அப்படி ஓர் ஆனந்த அகநிறைவு. வீட்டைப் பிரிந்து சொல்லொணா சோகத்தில் இருப்பவனுக்கு இந்த மாதிரி காலை நேரம்.. அதுவும் சனிக்கிழமை கால நேரம்... ஆகச்சிறந்த மன மயக்கிகள். என்னை பாதுகாப்பதே வேலை போல நடந்து கொள்ளும் நண்பன் என்று அது ஓர் அழகிய கனா காலம் தான்.
கரும்பாறைக்கு கைகால் முளைத்தது போல அவன்... அதில் சிறு செடியின் தலையாட்டல் நான்.
காடலைய முடிவெடுத்து வீதி கடக்கையில் மெத்தை வீட்டை கடக்காமல் போக முடியாது. அந்த வீட்டில் காலிங் பெல் இருக்கும். அதை அடித்து பார்க்க அப்படி ஓர் ஆனந்தம். முதல் முறை அடித்து விட்டு ஓடிய போது மூச்செல்லாம் பெல் சத்தம். பிறகு ஆளில்லாத போதெல்லாம் அடித்து விட்டு ஓடி விடுவதில் மன சாந்தி. அதே போல அந்த வீட்டு மெத்தைப்படியில் ஏறி மேலே சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் வெகு நாட்களாக எனக்குள் இருந்தது. அந்த வீட்டு காம்பவுண்டுக்குள் எத்தனையோ நாட்கள் அஞ்சாங்கல் விளையாடி இருக்கிறேன். ஆனால் மெத்தைக்கு செல்ல வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு யோசனையே யாருக்கும் வராது. மிலிட்டரி தாத்தா எப்போதாவது மாலை நேரங்களில் மெத்தையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பார். அவரைப் பார்க்கவே ஆசையாக இருக்கும். ஒரு நாளாவது இந்த மெத்தையில் நின்று விட வேண்டும் என்ற ஆவல் அள்ள அள்ள குறையாத ஆசையாய் எனக்குள் ஊறிக்கொண்டே இருக்கும்.
ஒரு நாள் மிலிட்டரி தாத்தா ஊருக்கு போன போது.. வேலைக்கார பாப்புக்காவிடம் கெஞ்சி... கைநிறைய கோண புளியங்காய் கொடுத்து சம்மதிக்க வைத்து படி ஏறி மேலே சென்றோம். அதுவும் விடிகாலையில் மெத்தை மேல் நின்று ஊரைச் சுற்றிலும் பார்ப்பது போல பரவசம் வேறொன்று இல்லை. அதுவும் அங்கிருந்து பார்க்க பாலமுருகன் தியேட்டர் இன்னும் பிரம்மாண்டமாய் தெரியும். தொடு திரையை விரித்து பார்க்க பெரிதாகும் காட்சி போல... பக்கத்தில் தெரிந்த தியேட்டர் முகப்பழகை இன்னும் நான் பார்த்து முடிக்க வில்லை.
படிகளை எண்ணிக்கொண்டே ஏறுவதும் இறங்குவதும் என அப்படி ஒரு ஆனந்த வடுக்கள்.
என்னவோ வீட்டுக்கே சொந்தக்காரன் போல அப்படி ஒரு பாவனை என் உடல்மொழியில் வந்து நின்றதை எல்லாருக்கும் காட்டினேன். வீதி கடப்போர் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் கண்ட கண்களில் நான் என்னை சிறுகுள்ளவனாக காட்டியிருக்க வேண்டும். அந்த நேர மன அலைகளை என்னால் பிடித்து வந்து இத்தனை காலத்துக்கு பிறகு கரையில் அடைக்க முடியவில்லை.
சுற்றிலும் கோரைப்புற்கள் வளர்ந்த காடு. கரையெங்கும் தென்னைகள் தகிக்க... நடுவே செல்லும் ஆறு என... கரையோரம் நானும் லக்கியும் சனி காலையில் வேட்டைக்காரன்களாகி விடுவோம். வேட்டை என்பது காலை நேர காட்சி என்றால்... வில் எங்கள் கண்கள். எப்போதும் நாங்கள் அமரும் கோட்டை மேட்டு (திப்பு சுல்தான் கட்டியது) மண் சுவர் மீது ஆளுக்கொரு ராஜாவா அமர்ந்திருப்போம். அந்த நேர காற்றுக்கு ஆளுக்கு கொஞ்சம் அழகு கூடி இருப்போம். அந்த ஆறு சென்று சேரும் ஏரிக்கு ரெண்டு மூன்று முறை போயிருக்கிறோம். இதே கரையைத் தொட்டு அப்படியே மெய்மறந்து போன நாட்கள் அவை. வீடு திரும்புகையில்.. மதியம் ஒன்று ரெண்டு ஆகி அதற்குள் பாட்டி ஊரையே சல்லடை போட்டு தேடி அந்த களேபரம் வேண்டாம் என்றே பெரும்பாலும் ஒம்பது மணிக்குள் திரும்பும் அளவுக்கு காடலையும் காலையை கால்களுக்குள் அடக்கிக் கொள்வோம்.
எத்தனை விதமான பறவைகள்... பார்க்க பார்க்க அவைகளோடு பேசிப் பார்க்கும் ஆசை இயல்பாகவே இயம்பி விடும். கோரை சருகுகள் மத்தியில் நாங்களும் குருகுகள் ஆன காலம் றெக்கை சூழ் ஞாபகம்.
சில நாட்களில் விசுவிசுவென காற்றின் போக்கு வித்தியாசமாக இருக்கும். கோடையில் கொப்பளித்தே பழகிய எங்களுக்கு அந்த மாதிரி காற்று மொழியை பிடித்து பிடித்து வேக வேகமாய் படிப்பது குளுகுளுவென இருக்கும். புரியாத அர்த்தங்களில் தான் எத்தனை ஒப்புவித்தல். அப்படியே அமர்ந்து விடும் நாட்களும் உண்டு. சும்மா வேடிக்கை பார்ப்பதை விட இந்த இயற்கைக்கு நாம் செய்யும் கைம்மாறு என்னவாக இருக்கும். இதெல்லாம் இப்போது உணர்ந்தது. அப்போது சிலை போல இருக்க எப்படியோ கற்றிருந்தோம். எது ஒன்றுக்கும் சிரித்துக் கொண்டே இருந்தது எப்படி என்று யோசிக்கிறேன்.
இப்போதும் புன்னகை அரும்புகிறது.
- கவிஜி