நேற்று முட்டை வாங்கும் போதுதான் கவனித்தேன். முட்டைகளை பாலிதீன் பையில் போட்டு அப்படி இப்படி சுற்றி முடிச்சிட்டு தருகிறார் கடைக்காரர். முன்பெல்லாம் காகிதத்தில் வெகு நேர்த்தியாக உள்ளடுக்கி மடித்துக் கட்டி டொயின் போட்டு கட்டித் தருவார்கள்.
யோசித்துக் கொண்டே வீடடைந்தேன். நினைவு அவிழ்ந்து கொண்டது.
எந்த பொருள் வாங்கினாலும்.. காகிதத்தில் பொட்டலம் கட்டி கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து அதைப் பிரிக்கும் பெரியவர்களுக்கு உதவுவதே இப்போது நினைத்தாலும் அப்படி ஒரு வாசம் நிறைந்த நினைவாக இருக்கிறது. கடலையா... மாவா... சர்க்கரையா... சிப்ஸ்ஸா... எது ஒன்றையும் காகிதத்தை இடது கை செய் நேர்த்தியோடு பிடிக்க... வலது கையால் ஒரு சுருட்டு சுருட்டி... அடிப்பாகத்தில் ஒரு மடிப்பு அணை போட... மேலே கூமாட்சியாக ஒரு கோபுரம் போல செய்து அதனுள் பொருட்கள் விடப்பட்டு மேலே மூன்றடுக்கு மடித்தலொடு பிறகு டொயின் கொண்டு மேலிருந்து கீழாக வழித்து பிறகு அப்படியே பக்கவாட்டில் என சுழன்று மிக அழகாக ஒரு அந்த நேர கற்றல் நிகழும். பொட்டலம் தயார்.
கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் டொயின் கண்டு சுழன்று கொண்டே இருக்க அதிலிருந்து உருவ உருவ வரும் டொயின்... பொட்டலம் கட்டுபவரின் கைகளில் ஒரு பொம்மலாட்டமே நடத்தும். கட்டப்பட்ட பொட்டலங்களை ஒன்றன் மீது ஒன்று வைத்து பையோடு வீடுவரை தாங்கும் யுக்தி அது.
இப்போது தள்ளு வண்டியில் கடலை கட்டித் தருகிறார்களே. அப்படி பொட்டலத்தில் மளிகை சாமான்கள் கட்டிய காலம் அது. இப்போது நாமே சென்று நமக்கு தேவையான பொருட்களை சிறு தள்ளு டப்பாவில் எடுக்கும் அளவு வசதி வந்து விட்டாலும்... சிறுவயது ஊர்க்கடைகளும் அது கொண்ட பொட்டல வாசனைகளும் நினைவுக் குறிப்பிலிருந்து அவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
இப்போது எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் கவர். எண்ணெய்க்கு கூட கவர் என்றால்... இத் தலைமுறைக்கு பிறகு நினைத்து பார்க்க காலி டப்பா தான் இருக்கும் இல்லையா. நீட்டிய பொருளை எடுத்தெடுத்து தரும் இந்தக் கால கடைப் பையன்களுக்கு வீடு வரை அவிழாத பொட்டலம் கட்ட தெரியுமா என்றால்.. சந்தேகம் தான். அதுவும் டொயின் கொண்டு சுற்றிலும் கட்டி விட்டு அதை அறுத்து விடுவதற்கு எதிர்ப்பக்கம் திருகி ஒரு சொடுக்கில் ஓர் உதறு உதறி காற்றுவாக்கில் கட் செய்யும் வித்தை காணக் கிடைக்காதது.
வாழ்வின் எந்தவொரு பகுதியும் பிற்பாடுதான் பேரழகாக மாறுவதை நினைவுக் குறிப்புகள் அப்படியாகவே கொண்டிருக்கின்றன. அதைத்தான் தத்துவ ஞானிகள் பெரும்பாலும் சொல்வது. அவ்வப்போதே வாழ்ந்து விட முழு கவனத்தையும் அந்த நேர நிகழ்வில் வைக்க வேண்டும் என்று. அப்படி அந்த நேரத்தில் வாழ தெரியாத அறியாமை தான் பிறகு நினைவுகளில் நிம்மதி தேடி பழசை அசை போட்டுக் கொண்டிருக்கின்றது.
பழசென்று வந்து விட்ட பிறகு இருக்கும் இன்னும் சில நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று கேட் வைத்தே வீடுகள் கட்டப்படுகின்றன. பெரும்பாலும் திண்ணைகள் என்ற வடிவமே இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் திண்ணைகள் கட்டுவதே வழிப்போக்கர்கள் உட்பட வீதியில் நடை போடும் யாவரும் அமர்ந்து ஓய்வெடுக்க தான். திண்ணையில் அமர்ந்து காலாட்டுவது... காலுக்கு உடற்பயிற்சி. ஓடிக்கொண்டே இருக்கும் வெளிச்சமும் இருளும் சற்று அமர்ந்து ஒன்றுகூட... அவ்வப்போது காக்கா குருவிகூட உக்காந்து உக்காந்து நடந்து பார்க்கும் சிறு விளையாட்டுக்கும்... திண்ணைகள் தேவை.
மாலை வேளைகளில் மனிதர்கள் கூடுமிடமாக இருந்த திண்ணைகள்... ராத்திரியில் உறங்கும் இடமாகவும் உருமாறும். சொந்தங்கள் கூடி திண்ணையில் தூங்குவது ஒரு காலத்தின் வழக்கம். எத்தனையோ இரவுகளில் திண்ணையில் அண்ணன் தம்பி தங்கை மாமன் மச்சான் பக்கத்து வீட்டு பையன் புள்ள என்று வரிசையோடு வரிசையாக படுத்து உறங்கி இருக்கிறேன். அந்த முனையில் படுத்திருப்பவனும் இந்த முனையில் படுத்திருப்பவனும் போர்வையை மாற்றி மாற்றி இழுக்க இடையே படுத்திருக்கிறவனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. . அதுவே ஒரு விளையாட்டு போல இருக்கும். குதூகலமும் ஆனந்த கூப்பாடும் உள்ளத்தில் குலவையிடும். ஒற்றைப் போர்வையின்கீழ் ஒரு கூட்டு வாழ்வுமுறை அழகின் ஆராதனை போல.... நினைத்தாலே தாலாட்டுகிறது.
பெரும்பாலும் நான் நடுவில் இடம் பிடித்துக் கொள்வேன். எப்போதாவது ஓரத்தில் படுக்க வாய்த்து விடும். அந்தப் பக்கம் திரும்பி படுத்து போர்வையை மெல்ல விலக்கினால் இருட்டு வெளி இம்சிக்கும். சட்டென திரும்பி எனக்கடுத்து படுத்திருக்கும் தம்பியை இறுகப் பற்றிக் கொள்வேன். இதயத்தின் சடுகுடு அது.
ஊர் நாட்டில் அதிகாலை காற்று விசுவிசுவென அடித்து துவம்சம் செய்யும். அப்போது ஒருவரின் மூச்சு ஒருவரோடு சேர்ந்து இறுக்கி நெருக்கி படுத்துக் கொண்டு சிறு சூட்டில் நிஜமாகவே அது ஒரு கனா காலம்தான். அதுவும் அதிகாலையில் விழித்துக் கொள்ளும் மாமா சித்தப்பா தாத்தா என்று அவர்கள் தூக்க கலக்கத்தில் பேசிக்கொள்ளும் உரையாடல்கள்... கேட்கவே அப்படி ஒரு கிளர்ச்சி உண்டாக்கும். அதிகாலை காற்றுக்கும்... சாம்பல் பூத்த அந்த நேர மசமசப்புக்கும்.. அவர்களின் பேச்சு... பொருள் கொண்ட வாழ்வின் இருத்தலை வெளிப்படுத்தும். அந்த அதிகாலை அமைதியில் அரைத் தூக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அவர்களின் குரல் ஓர் ஆதுர சேமிப்பில் இருந்து கசியும் அரவணைப்பாக இருக்கும். சிறு கரகரப்பில் நின்று நிதானமாக நடைபோடும் மென் அசைவு அதில். பேச்சு சக மனிதர்களைப் பற்றி இருக்கும். நடந்த நிகழ்வுகளைப் பற்றி இருக்கும். அமானுஷ்யங்களைப் பற்றி இருக்கும். சுவாரஷ்யம் நிரம்பிய சிறு சிறு சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும். சில நாட்களில் கதைகள்கூட இருக்கும். பேய் சம்பவங்கள் பேச்சில் அடிபடும் போதெல்லாம் கொஞ்சம் நெருக்கி அடித்து சுருண்டு படுத்துக் கொள்வது சுகானுபவம். பாதுகாப்பு உணர்வு தரும் அம்மாதிரி சூழல் பிறகு வாய்க்கவே இல்லை. வீட்டுத் தலைவனாக நாமே ஆகி விட்ட இக்காலத்தின் சுவடுகளில் பயமும் படபடப்பும் ஓர் இயல்பு நிலை இருப்பாக மாறி விட்டதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அட நேரமாச்சு எந்திரிச்சு காப்பி போடு என்று சித்தியை எழுப்பி விட்டு கூட மாட ஒத்தாசை செய்யும் ராஜு சித்தப்பாவை நினைத்துக் கொள்கிறேன். அவரை மாமா ராசுப்பையன் என்று தான் அழைப்பார். இல்லீங் மச்சே... ஆமங் மச்சே என்று அவரின் மொழியே அப்படி ஒரு ரீங்காரத்தில் இருக்கும்.
உங்கூட்டுக்கு உரம்பரை வந்திருக்கா.. என்று உரம்பரைகள் வந்த வீட்டை ஊரே உல்லாசமாக பார்க்கும் அந்தக் காலம் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்ட காலம் என்பேன்.
அத்த புள்ள மாமன் பசங்க என்றொரு அட்டவணை இன்று அவ்வளவாக வெளிப்படுவது இல்லை. அப்போதெல்லாம் அது ஓர் அழகியல் தோரணையாக ஊரு ஊருக்கு வீதி வீதிக்கு வீடு வீட்டுக்கு ஒரு தொன்றுதொட்ட உறவின் அட்டகாசமான ஈர்ப்பு விதியை அக்காலம் கொண்டிருந்தது உண்மை தான். எழுதுவதற்காக இட்டுக்கட்டி சொல்லிக் கொண்டிருக்க வில்லை. அப்படி ஒரு வாழ்வை 80 களில் பிறந்தவர்கள் இன்னும் நினைவில் சைக்கிளோட்டி கொண்டிருப்பார்கள் என்பது திண்ணம். ரெட்டை ஜடை பிள்ளைகளை இன்று காண்பதரிது. அப்போது எந்தத் தலையும் ரெண்டு ஜடையில் நாட்டியம் போடும். அதில் ஒன்று பூ இருக்கும். ஒன்றில் ரிப்பன் இருக்கும். தலைக்கு குளித்தால் புஸுபுஸு ஜடைகள். இல்லையெனில் வழித்தெடுத்த நடு நேரில் பிரித்தெடுத்த இரு ஜடைகள். பார்க்கவே பெரும் பிள்ளைகள் கூட சிறுபிள்ளை சூடிய சித்திரம் போல தோன்றுவார்கள். இன்றோ சிறு பிள்ளைகள்கூட பெரும் பிள்ளை பாத்திரமாக தெரிகிறார்கள்.
ரெட்டை ஜடை பற்றி யோசிக்கையில்... தாவணிகள் பற்றியும் அதன் நீட்சி காற்றினில் அசைவதை பற்றிய எண்ணங்களையும் தடுக்க முடிவதில்லை. தாவணியில் எந்தப் பெண்ணும் பேரழகியாக இருப்பாள். மாமன் பொண்ணுங்க மவுசு கூடி இருப்பார்கள். வண்ண வண்ண வளையல்களில் தாவணி பாவாடை... தீபாவளியைத் தித்திப்பாக்கியது. பொங்கலை பொக்கிஷ சம்பவமாக்கியது. ஏன் ஞாயிறைக் கூட நம்பிக்கைக்குரியதாக்கியது.
பாவாடை சட்டையில் குட்டி குட்டி தேவதைகள் நடமாடிய காலம் அது.
கடந்த வாரம்கூட அமரும் நானும் இது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாம் 70 களின் வாழ்வையும் உணர்ந்தவர்கள். 90 களின் வாழ்வையும் உணர்ந்தவர்கள். 70களில் பிறந்தவர்களுக்கோ 90களில் பிறந்தவர்களுக்கோ இந்த வாய்ப்பு கிடைக்காது. 80கள் அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த பிறப்பு. 2000க்கு பிறகு பிறந்தவர்கள் ஆட்களே வேறு. அவர்கள் நம் கணக்கிலேயே இல்லை. அது தனி யுகம்.
80கள் எனும் போது இளையராஜாவை விட்டு விட்டு குறிப்புகளை குவிக்கவே முடியாது. இன்னதென தெரியாத போதும் பாட்டில் என்னவோ இருக்கிறது என்று உணர்ந்த காலத்தை இசைக் குறிப்புகளாக நமக்கு முன்னும் பின்னுமாக இருந்தது இசை ராஜாதான். கல்யாணம் காது குத்து பூப்பு நன்னீராட்டு விழா என வீட்டு விசேஷங்களில் மைக் செட்டில் பாட்டா... அவர் பாடல் தான். வேனில் பயணமா அவர் பாடல் தான். திருவிழாவா அவர் பாடல்கள் தான். எல்லா சூழலுக்கும் பாட்டு போட்டிருக்கும் அவர் நம் வாழ்வின் ஒரு பகுதி என்றால்... இல்லை என்பவரின் ஆழ்மனமும் இல்லை இல்லை ஆம் என்றே சொல்லும்.
80களின் இளைஞர்கள் ஹிப்பி வைத்திருப்பார்கள். அது அத்தனை அழகு. நான்கூட 10 வயது வரை ஹிப்பித்தலையன் தான். காதை மறைத்திருக்கும் கட்டிங்கில் ஹீரோக்கள் அப்படியாகவே உருவானார்கள்.
மனுஷனும் மனுஷனும் சகஜமா பேசிக்கிட்ட ஒரு காலம் என்றே சொல்லலாம். மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும்... இன்று மனிதர்களிடையே நேரடி பேச்சு குறைந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். போனில் பேசுவது போல முகம் பார்த்து கண்கள் பார்த்து பேசுவது இல்லைதானே.
அதே போல இன்னொரு முக்கியமான விஷயம். நிச்சயமாக அக்கால கட்டத்தில் இந்த ப்ரோ கலாச்சாரம் இல்லை. அந்த வார்த்தை மிக கொடூரமாக 80களின் பிள்ளைகளை தாக்குவதை உணர்ந்தே இருப்பீர்கள். வயது மரியாதை வெங்காயம் ஒன்னும் கிடையாது. சகட்டுமேனிக்கு எல்லாரையும் ப்ரோ என்று அழைப்பது தடை செய்யப்பட வேண்டிய குற்றம். இதுவே அண்ணா என்று அழைக்கையில் அப்படியே இயல்பாகி விடுவதை அந்த ப்ரோக்களுக்கு யார் புரிய வைப்பது. அவன் அப்பா வயசுல இருக்கற மனிதனையும் ப்ரோ என்று அழைப்பவனை ஓர் அறை அறைந்தால்தான் என்ன.
உறவுகளோடு நட்புகளும் நம்பிக்கை தரும் வாழ்வியல் தத்துவத்தை அது அப்படி என்று புரியாமலே அதைக் கொண்டாடிய அந்தக் காலம் பலத்தோடு வாழ்வதை வாழ்ந்தே காட்டியது. புரிந்து கொள்ள தான் மூன்று பத்தாண்டுகள் ஆகி இருக்கின்றன. அது அப்படித்தான். முன்பே குறிப்பிட்டது போல அவ்வப்போதைய வாழ்வு பிறகுதான் புரிபடும். அதில்தான் ஒரு வழக்கமான இயல்பு இருக்கிறது. இல்லையெனில் ரூமிக்கு பக்கத்தில் ரூம் போட்டு தான் அமர்ந்திருக்க வேண்டும். புத்தனுக்கு பக்கத்தில் ஆலமரம் ஒன்றை பிடித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
எதுவுமற்று போகிற போக்கில் ஒரு நதியைப் போல கடந்ததால் தான் பிறகு கரையோரம் நிழல் ஒன்றில் அமர்ந்து நினைவுகளை அசைபோட முடிந்தது. இல்லையெனில் இப்படி ஒரு மீன் தீண்டும் மெய் உணர்வை காலக் கால்கள் கண்டடைந்திருக்காது.
- கவிஜி