கீற்றில் தேட...

சில சம்பவங்கள் நம் நினைவுகளில் சிறு சிரிப்பை எப்போதும் கொண்டிருக்கும். அதை ஆச்சரியமும் அபத்தமும் ஒரு சேர அங்கீகரித்துக் கொண்டிருக்கும்.
விடை காணாத எத்தனையோ தத்துவ விசாரணைகள் இருந்த போதிலும்... சிறு பிள்ளை விளையாட்டு போல சில கண்ணாமூச்சி ரேரேக்கள் நம்ப முடியாத ஆனால் நம்ப வேண்டிய கதைக்கும் நிகழ்வுக்கும் இடையே மிக மெல்லிய ஓடையில் நீரில்லாமலும் மிதந்து கொண்டிருக்கும்.

காற்று வாக்கில் விரிந்த காட்சிகளை இங்கே அடுக்குகிறேன்.

இப்படி எல்லாம் நடக்குமா... கதை விடறான் என்று நினைத்தால்... நம்பச் செய்ய என்னிடம் என் சொற்களைத் தவிர வேறொன்றும் இல்லை.

நம்புவது தாண்டி நடந்த சம்பவங்களில் இருக்கும் சுவாரஸ்யம் காலத்துக்கும் ஆச்சரியமானது.

எப்படி இது நடந்திருக்கும் என்ற கேள்விக்கும் எப்படித்தான் இது நடந்திருக்கும் என்ற கேள்வியின் கேள்விக்கும் இடையே போர்வையை போர்த்தியபடியே எழுந்த வாக்கில் சுவரோரம் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன். தலைக்குள் யோசனை. சட்டென அந்தக் காலை நேர வெளி என்னை சூழ்ந்து கொண்டது போன்ற சொல்லொணா தவிப்பு. வீதியில் நடப்போர் என்னை இயல்பாக பார்த்தாலும்... நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பார்ப்பதாகவே தோன்றுகிறது.

என்ன பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட திட்டமா... சட்டு புட்டுன்னு காப்பிய குடிச்சிட்டு எந்திரிச்சு பள்ளிக்கூடம் கிளம்பு என்று கத்தியபடியே பாட்டி அடுப்பில் காலை உணவுக்கான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

எனக்கா.. உள்ளே இருப்பு கொள்ளாத கோபமும் பதற்றமும். இல்லையே நைட் போட்ருந்தேனே... கழட்டிட்டு ஏன் தூங்க போறேன்... அது பழக்கமும் இல்லை. எத்தனை மணிக்கு வந்து படுத்தேன்.. ரவியண்ணனோட பேசிட்டு வீட்டுக்கு வர 10 ஆகிடுச்சு. வந்ததும் அப்படியே திண்ணையில் தயாராக இருந்த படுக்கையில் விழுந்தாச்சு. இப்ப மாதிரி இல்லை. படுக்கும் போதே பாதி தூக்கம் தூங்கின காலம் அது. படுத்ததும் தெரியல. தூங்கினதும் தெரியல. இந்தா இப்ப பாட்டி எழுப்பவும்தான் எந்திரிக்கிறேன். அப்ப இடைல யாரு வந்தா... ட்ரவுசர் எங்க... போர்வையை நன்றாக இழுத்து போர்த்தி அப்படியே அமர்ந்திருந்தேன். என் கண்கள் வெறுக் வெறுக்கென வீதி அளந்து கொண்டிருந்தது.

யார் இந்த வேலைய பாத்திருப்பா...

நான் அப்படியே அனிச்சையாக அண்ணார்ந்து பார்க்க.. அங்கே கொடியில் அழகாய் தொங்கிக் கொண்டிருக்கிறது என் ட்ரவுசர். நெற்றி சுருக்கி ஆச்சரியம் தாங்காமல் பார்த்தபடியே இருக்கிறேன். ஒருவேளை நான்தான் கழட்டி போட்டுட்டு தூங்கினேனா. அப்படி ஏன் பண்ண போறேன். ம்ஹும்.. நான் பண்ணல. நான் அப்டியெல்லாம் பண்ண மாட்டேன். உள்ளிருந்து கொந்தளித்த கோபத்துக்கு வழி தெரியவில்லை. அப்ப யாரு கழட்டுனது. கொஞ்ச நேரம் திக்கு முக்காடி போனேன்.

பாட்டியா கத்துகிறது. மயிலு நேரமாச்சு. என்ன யோசனை என்கிறது. இன்னைக்கெல்லாம் என்ன கதை சொன்னாலும் லீவு போட விட மாட்டேன் என்கிறது. ஐயோ பாட்டி யாரு லீவு போடறேன்னு சொன்னது. கேட்கவும் முடியவில்லை. இரு பாட்டி எந்திரிக்கறேன் என்று முனகுகிறேன். என் கண்கள் ஒருமுறை போர்வைக்குள் போய் வருகிறது.

போட்ருந்த ட்ரவுசர் அதுவா கழண்டு கொடியில் போயி தொங்குமா.. எப்படி. பார்த்து கொண்டே அமர்ந்திருக்கிறேன். பேய் பிசாசு எல்லாம் நினைவில் வந்து விட்டது. பாட்டி உள்ளே எதையோ எடுக்க போன நேரம் பார்த்து படக்கென எகிறி ட்ரவுசரை இழுத்து போர்வைக்குள் வைத்தே போட்டுக்கொண்டேன். இழுத்த இழு... ட்ரவுசர் போட்டு எழும் வரை கொடியில் அசைவு இருந்தது. ஆனாலும் கோபமும் யோசனையும் தீரவேயில்லை. அன்று முழுவதும் யாராவது பசங்க என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்களா என்று கூர்ந்து கவனித்தேன். அவனா இருக்குமோ.. இவனா இருக்குமா... ஒருவேளை அந்த புள்ள அதான் அந்த கிளி அவ வேலையா இருக்குமோ.. ஒளிந்து ஒளிந்து ஒவ்வொருவராக பார்த்தேன். ம்ஹும். அவர்கள் எல்லாரும் இயல்பாகவே இருக்கிறார்கள். அப்புறம் எப்படி போட்டிருந்த ட்ரவுசர்... கொடி மேல கிடக்கும். நண்பர்களிடம் சொல்லவும் வெட்கமாக இருந்தது. ட்ரவுசர் கழட்டினது கூட தெரியாம தூக்கமா.. போடா தூங்கான் என்று சொல்வார்கள். கையில் கட்டியிருந்த வாட்ச்சை கழற்றிக் கொண்டு போகும் வரை தூங்கின சம்பவம் எல்லாருக்கும் தெரியுமே. ஐயோ... கர்த்தரே... என்று வானம் பார்த்தேன்.

வீதியை ஒட்டிய திண்ணையில் தான் தூக்கம். வீதியில் செல்வோர் யார் வேண்டுமானாலும் திண்ணையில் வந்து அமரலாம். யாரை சந்தேகப்படுவது. அவர்கள் அது குறித்தான எந்த குறிப்பும் நமக்கு விடவில்லை. தேடித் தேடிப் பார்த்து விட்டு ஒரு கட்டத்தில் அப்படியே விட்டு விட்டேன். ஆனால் இன்று வரை நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

அடுத்து ஒரு சம்பவம்...

நானும் சுப்ரவும் தோள் மீது கை போட்டுக்கொண்டு புட்பால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ஞாயிறு. ஐந்தாவது படிக்கையில் நடந்தது.

ஆட்டம் பில்லு மட்டத்தில் - மைதானத்தில் இளவெயிலொடு கூடிய இசை போல மெட்டமைத்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், வீர கால்களின் வசீகரமும்... இந்த கோல் போஸ்ட்டுக்கும் அந்த கோல் போஸ்ட்டும் இடையே கதகளி ஆடிக்கொண்டிருந்தது. காற்றில் பறக்கும் பந்தை காலில் சுழற்றும் ஆச்சரியம்.. மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நின்றபடியே ஒரு தியானம் என்று தான் இப்போது சொல்ல வேண்டும். அப்போது சொல்லவேண்டுமானால்... நின்றதையே மறந்து போன விளையாட்டு மந்திரம்.

பந்து எந்தப் பக்கம் பறக்கிறதோ அந்தப் பக்கம் ஒருசேர போகும் ரசிகர்களின் பார்வைகளில் வண்ண வண்ண சிறகுகள். வெறி பிடித்த சத்தத்தோடு தாவி தாவி... காற்றில் அலைமோதும் கண்களில் பந்து மட்டுமே தெரிகிறது. அந்தரத்தில் நடக்கும் ஆக்ரோஷ வீச்சு... இன்றும் வார்த்தைகள் பறக்கின்றன... என்றால் அன்று பந்து எப்படி பறந்திருக்கும்.

ஆட்ட இடைவேளை.

அப்போது தான் ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கும் யாவரும் நான் உள்பட மூச்சே விட்டோம் என்று நம்பலாம். அத்தனை தீர்க்கமான பார்வையோடு நின்றது நின்றபடியே இருந்து... அப்பாடா என கொஞ்சம் ஆசுவாசத்தில் உடல் அசைய சட்டென அதிர்ந்து பார்த்தேன். பார்க்க பார்க்கவே விலகினேன். என்னடா இது... என்று ஒன்றுமே புரியவில்லை.

நான் தோள் மேலே கை போட்டிருந்த சுப்ர சற்று தள்ளி நின்று கொண்டிருக்கிறான். நானோ ஒரு புள்ளை தோள் மேலே கை போட்டிருக்கிறேன். அந்த புள்ளையும் என் தோள் மேலே கை போட்டிருக்கிறது. சட்டென இருவருமே விலகினோம். இதுவரை இந்த புள்ளைகூட நான் பேசினதே இல்லை. எனக்கு ஜூனியர் வேற. மாயத்தில் நிற்பது போல உணர்ந்த நொடியை இப்போது உணர்கிறேன். அப்போது பேச்சே இல்லை. எச்சில் விழுங்கியபடியே அந்த புள்ளையையே பார்த்து அப்படியே ஒதுங்கி கொய்யா மரத்துக்கு நிழலுக்கு சென்று விட்டேன். அடியே கிடந்த கல்லில் அமர்ந்து விட்டேன். அந்த புள்ளையும் என்னையே பார்த்தபடி நகர்ந்து சற்று தூரம் போய் விட்டது. என்ன இது... எப்படி நடந்தது.

என் நண்பன் சுப்ரமணி தோள்ல தான் கை போட்டிருந்தேன். எப்படி இந்த புள்ள... ஐயோ.. யோசிக்கவே முடியவில்லை. மயக்கத்தில் இருந்து எழுந்தவன் போல அப்படியே அமர்ந்து விட்டேன். ஒருவர் தோளில் இருந்த கை இன்னொருவர் தோளுக்கு எப்படி போனது.. அப்படி போனது கூடவா தெரியவில்லை. உலகமே அடைத்த காதுக்குள் ஒன்றுமே கேட்காத தருணம் சில நொடிகள் வந்த போனதை நினைவு கூறுகிறேன். அதன் பிறகும் இதுவரை அந்த புள்ளையிடம் நான் பேசியது இல்லை. இப்போதும் சிரிப்பு வருகிறது.

சிந்தனைக்குள் சிக்காத ஒரு சில நிமிடங்கள் காற்றில் சமநிலை கொண்டு நிற்பதை உணர்கிறேன். தோள் மாறிய கையில் சொரணையற்ற தோகையை காற்றில் பறந்த பந்தின் எந்த நொடிசுழற்சி சூடியதோ.

அடுத்து ஒரு சம்பவம்...

எனக்கு பிடித்த ஒரு சீப்பு இருக்கிறது. என் தங்கை அவள் மூன்று வயதில் அந்தப் பிஞ்சு கையால் எடுத்து என்னிடம் கொடுத்தது. அது அவளின் சீப்பு தான். ஏனோ எதற்கோ கொடுத்தாள். ஆனால் அதை இப்போது வரை வைத்திருக்கிறேன்.

32 வருடங்களாக அது ஒரு வாழ்வை கொண்டிருக்கிறது.

ஆனால் சம்பவம் என்னவென்றால்... நான் பத்தாவது படிக்கையில் ஒரு டேன்ஸ் நிகழ்வு. ஒப்பனை அறையில் நிறைய பேர் வந்து போய் இருப்பார்கள். கூட ஆடுகிறவர்கள்... மேக்கப் போட்டு விடுகிறவர்கள்... ஆர்வ கோளாறில் எட்டிப் பார்ப்பவர்கள்.. என் நண்பர்கள்... ஆடுபவர்களின் நண்பர்கள்... நிகழ்வு நடத்துகிறவர்கள்... சில பெற்றோர்கள் கூட உள்ளே வருவதும் அவரவர் பிள்ளைகளுக்கு ட்ரெஸ் பண்ணி விடுவதும்... மேக்கப் செய்து விடுவதும் என்று அது ஒரு கட்டுப்பாடு இல்லாத அறையாக இருக்கும். நான் ஆடி முடித்து கிளம்புகையில் தான் கவனிக்கிறேன்.

அந்த சீப்பைக் காணவில்லை. அங்கும் இங்கும் தேடுகிறேன். ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன். பதற்றம் சில்லிடுகிறது. அதுவரை ஆடி ஆடி வியர்த்து கொந்தளித்திருந்த உடல்.. சட்டென உறைந்து சில் விடுகிறது. டேய் விளையாடாதீங்க என்றெல்லாம் மிரட்டுகிறேன். ஒருவருக்கும் தெரியவில்லை. நேரம் இரவு 11 க்கு மேல் ஆகி விட்டது. எந்த முகத்திலும் விளையாட்டோ விஷமமோ இல்லை. கிட்டத்தட்ட 7 பாடல்களுக்கு ஆடிய களைப்பு வேறு எனக்கு. சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத தவிப்பில்... பாவமாய் பார்க்கிறேன்.

அந்த சீப்பு தொலைந்து விட்டது. ரொம்ப டென்ஷன் ஆகி எல்லாரையுமே சந்தேகப்பட்டு... ம்ஹும்... ஆனால் அது கிடைக்கவே இல்லை. நாட்கள் நகர்ந்து விட்டன.

வருத்தம் இருந்தாலும்... நான் அதை மறந்து விட்டேன். ஆனால் அடுத்த வருட அதே நடன நிகழ்வு. அதே இடம். நிகழ்வு முடிந்து வீட்டுக்கு வந்த போது.. என் ஒப்பனை பேக்கில் அந்த சீப்பு இருக்கிறது.

எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். ஒரு பக்கம் யோசனை. எனக்கு நெருக்கமானவர்களை ஒவ்வொருவருவராக நினைவில் சீவி சீவி பார்க்கிறேன். ஒருவர் முகமும் ஆம் என்று மேட்ச் ஆகவில்லை. என்னோடு இருந்தவர்களை ஒவ்வொருவராக நோட்டம் விட்டு பேசி பார்த்து விட்டேன். ம்ஹும்... பதில் கிடைக்கவே இல்லை. அதிர்ச்சியாக இருந்தாலும்... எப்படியோ சீப்பு கிடைத்து விட்டது என்ற நிம்மதி என் கண்களில் அலைபாய்ந்தது.

யார் எடுத்தார் யார் வைத்தார்.. ஒன்றுமே இன்று வரை தெரியவில்லை. ஆனால் அதில் இரு ஹைட் அண்ட் சீக் விளையாட்டு இருக்கிறது.

இந்த மூன்று சம்பவங்களிலும்.. யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் யார்.. எவர் என்று பிடிபடவே இல்லை. எப்படி எந்த நொடியில் இது நிகழப்பட்டது... நிகழ்த்தப்பட்டது என்று என்னால் பிடிக்கவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருந்த காலத்தின் கழுத்தை என்னால் நெருங்கி கூர்ந்து கவனிக்க முடியவில்லை. என் அருகே என்னைத் தொட்டு என்னை சூழ்ந்துதான் நடந்திருக்கிறது. ஆனால் நினைவுகளில் பதியவில்லை. புரிபடாத மாயத்தின் வளையத்தில் கிட்டத்தட்ட ஒரு மாயாஜாலம்.

பார்க்க பார்க்க நிகழ்ந்த மேஜிக்.. காலத்தின் கண்ணாடியை ஊடுருவி ஒரு காட்சியை கட்டமைத்திருக்கிறது. முதல் ஒன்றை மற்றும் மூன்றாவதை முறையே நித்திரை கூட்டம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டாவது நிகழ்வை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது. விழித்து கொண்டிருக்கும் போதே நடந்த கண்கட்டு வித்தை அது. இல்லையா. மாயத்தை நிகழ்த்துகிறவர்கள் எங்கோ தூரத்தில் மறைந்து இருக்க வேண்டியதில்லை. பக்கத்தில் நம்மோடு ஏன் நாமாகவும் இருக்கலாம்.

- கவிஜி