இன்றைய அறிவியல் அறிஞர்கள் நுண்ணோக்கியால், பார்க்கும் பொருளையும் காட்சியையும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் நுண்ணோக்கி பார்த்திருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் தானியங்கு கருவிகளை உருவாக்கினர். இயற்கையை நுண்ணறிவோடு நோக்கும் திறன்பெற்றவர்களாக இருந்தனர். மனித சமுதாயத்தின் நுண்மையான முதிர்ச்சியே அறிவியலின் முயற்சியாகும். அறிவியலின் முதிர்ச்சியே நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாகும். இயற்கையின் நுண்ணறிவோடு இயங்கிய மனிதன் தான் செயற்கை நுண்ணறிவால் செயல்பட ஆரம்பித்தான் அதன் விளைவுதான் உணவு, உடை, இருப்பிடம், பண்பாடு, மரபு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கம், ஒழுக்கம், கல்வி, அறிவு, ஆட்சி ஆகியவையாகும். இவைகளில் இயங்கிய மனிதன் இவைகளை இயக்கும் மனிதன் ஆனான். தான் இயக்கிய இயந்திரங்களைத் தற்பொழுது தானே அதாவது தானாகவே தன்னைப்போல் இயங்க வைக்கிறான். இதன் அறிவைத்தான் “செயற்கை நுண்ணறிவு” என்கிறான். இத்தொழில் நுட்பம் பல்வேறு தொழிலில் சாதித்துக்கொண்டு இருந்தாலும் கல்வித் துறையில் வளர்ந்து வரும் வளர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.ai 710செயற்கைநுண்ணறிவு - விளக்கம்

 செயல் + கை = செயற்கை ஆகும். செயல் என்பது செயல்படுதல், கை என்றால் “ஒழுக்கம” என்பார் வீரமாமுனிவர்( .விரமாமுனிவர், சதுரகராதி, ப.65.) அதாவது உணர்தல் எனப் பொருள்படும். இதனை உணர்ந்து செயல்படுதல் என்பதாகும். நுண்மை + அறிவு = நுண்ணறிவு ஆகும். நுண்மை என்றால் “கூர்மை” எனப்படும்.(.விரமாமுனிவர்,சதுரகராதி, ப.116) அறிவு என்பது அறிதல் ஆகும் அதாவது கூர்மையாக அறிதலாகும்.

செயற்கை நுண்ணறிவின் தோற்றம்

 கணினி, கணினித் தொடர்புடையச் சாதனம், எந்திரம் போன்ற இயந்திரங்களில் காணப்படும் அறிவுக் கூர்மைதான் செயற்கை நுண்ணறிவு என்பர். இது அறிவியல்,பொறியியல் போன்ற துறைகளில் வியக்க வைக்கும் அறிவை புகுத்தும் தொழில்நுட்பமே நுண்ணறிவு எனலாம். மனிதனைப் போலவே பகுத்தறிந்து சிந்திக்கும் இயந்திரக் கருவிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று முதன்முதலில் தெரிவித்தவர் தத்துவஞானி ‘ராமோன்லல் என்பவரே ஆவார். இவர் 13-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர். இவர்தான் செயற்கை நுண்ணறிவின் பிதாமகன் எனக் கூறுவர். ஆனால் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) எனும் சொல்லை 1955-ல் சான் மெக்கார்த்தி என்பவரே கூறினார். இவரையே செயற்கை நுண்ணறிவின் தந்தை என்பர்.

செயற்கை நுண்ணறிவு கருவிகள்

 மனிதன் தன்னைப் போன்று பகுத்தறியும் கருவிகளை உருவக்கி செயல்பட வைப்பதே செயற்கை நுண்ணறிவாகும். “மனிதரின் நுண்ணறிவுத் திறனைச் செயற்கையாக உருவாக்குவதன் வழியாக ஓர் இயந்திரத்துக்கு மனிதரைப் போலவே கற்கும் திறனும் சிந்திக்கும் திறனும் பிரச்சனைகளுக்கு முடிவு காணும் திறனும் இருந்தால் அந்த இயந்திரம் செயற்கை நுண்ணறிவு இயந்திரமாகக் கருதப்படுகிறது. அது ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு மனிதர்களால் கற்றுக் கொடுக்கும் தரவுகளின் அடிபடையில் ஆராய்ந்தும் பகுத்தறிந்தும் தமது குறிக்கோளை அடையும்” என்பர் (தி இந்து தமிழ் நாளிதழ், 14-3-2020, ப.6) பொதுநல மருத்துவர் கு.கணேசன் அவர்கள்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள்

 ஓட்டுநர் இல்லா கார் தொழிற்சாலை, மருத்துவத்துறை, வங்கிகள், கல்வித்துறை, மேலாண்மைத்துறை, செய்தித்துறை, நீதித்துறை, தகவல் தொழிலநுட்பத்துறை, விஞ்ஞானத்துறை, பொறியியல்துறை, சமூகவலைதளம், கூகுள், மொழியியல்துறை, வேளாண்மைத்துறை, ஆட்டோமொபைல், ஆசிரியர்பணி, வீடியோ விளையாட்டுகள் போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம்.

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் வகைகள்

 கூகுள் எனும் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் டீப்மைண்ட் எனக் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம். மைசின் என்ற செயற்கை நுண்ணறிவு இயந்திரமும் வாட்சன் சூப்பர் கம்ப்யூட்டர் எனக் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரமும் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் மக்களின் கூட்டங்களை மிகத் துல்லியமாகக் காட்;டும் கூகிள் நேவிக்கேசன் நாம் சொல்லுகின்றதைக் காதில் கேட்டு பதில் கூறும் அலெக்சா கூகிள் வாய்சு போன்ற பல செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் இன்று பல்கிப் பெருகி வந்துகொண்டிருக்கின்றன.

கணினியும் செயற்கை நுண்ணறிவும்

 செயற்கை நுண்ணறிவு என்பது கணினியை அடிப்படையாகக் கொண்டு மிக நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதனைப் போலவே சிந்திக்க வைக்கும் ஒரு நுண்மையான தொழில்நுட்பந்தான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு வகுப்பறையில் கற்றல் முறையை மேம்படுத்தி வருகிறார்கள். “கணினி வழிக்காட்டுதலாலேயே கற்கும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு வலுப்பெற்று வருகிறது” என்பார் இரா.ராசுக்குமார்.(இரா.ராஜ்குமார், எதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்)

பாடத்திட்டம் தயாரித்தல் முறையில் செயற்கை நுண்ணறிவு

 இன்றைக்கு தொழில்நுட்ப முறை வளர்ந்து வரும் சூழலில் மாணவர்களுக்கானப் பாடத்திட்டத்தை உருவாக்கப்பட்டு வருகிறது. “தொழில்நுட்பக் கல்வி முறையில் மட்டும் அல்லாமல் மருத்துவக் கல்வி, உயிரிக்கல்வி, மேலாண்மைக்கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி முறையிலும் இனி வரும் காலங்களில் பாடத்திட்டத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது.”என்பார் இரா.ராசுகுமார்அவர்கள். (இரா.ராஜ்குமார், எதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்)

வகுப்பறையில் செயற்கை நுண்ணறிவு

 வகுப்பறையில் மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கிறார்களா? இல்லையா? என்பதை ஆசிரியர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை, மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியரை பார்த்துக்கொண்டே இருந்தாலும் அவர்களின் மனங்கள் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கின்றன. இவற்றையும் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது.”சீனா, சிங்கப்பூர் போன்ற மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. உதாரணமாக சீனாவில் சில பள்ளிகளில் வகுப்பறையில் கண்டறிய செயற்கை நுண்ணறிவு நுட்பம் வாய்ந்த கேமராக்கள் மற்றும் மாணவர்களின் மூளையின் செயல்பாடுகளை உடனுக்குடன் ஆசிரியரின் கணினியில் பார்த்து அறிந்துகொள்ளவும் பயன்படுகிறது. பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவனுக்கு சிறப்பு பயிற்சிகளைக் கொடுக்க பரிந்துரை செய்யும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.” எனப் பேரா,இரா.ராசுக்குமார் கூறுவதின் மூலம் அறியமுடிகின்றது. (இரா.ராஜ்குமார், எதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்)

கற்றல் முறையில் செயற்கை நுண்ணறிவு

 இயல்பாக மனித ஆசிரியரிடம் கற்கின்ற முறை போய் இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் மூலமே மாணவர்கள் வகுப்பறையில் பாடம் கற்கப் போகிறார்கள்.”மாணவர்களின் கற்றல் திறனறிந்து அதற்குத் தகுந்தவாறு ஆசிரியர்களைப் போல இயந்திரக் கருவிகளே பாடங்களைப் போதிப்பதே கல்வி சார் செயற்கை நுண்;ணறிவின் அடிப்படையாகும்.”(புதிய அலை…கற்கும் முறையில்) Dinamani, https://www.dinamani.com) எனக் கூறுவதால் எதிர்காலத்தின் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியினை அறியமுடிகின்றது.

பள்ளி, கல்லூரிகள் இல்லா உலகம்                                                                            

 மாணவர்கள் விரும்பும் பள்ளி,கல்லூரி போய் இனி வரும் காலங்களில் தான் விரும்பும் மனித ஆசிரியரிடமோ அல்லது செயற்கை நுண்ணறிவு ஆசிரியடமோ மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்கபோகிறார்கள். ”இணையவழி கற்றல் பள்ளி,கல்லூரிகளின் ஒரு பகுதியாக மாறவிருக்கிறது. பாடத்திட்டத்தை வகுக்கும் போதே இணையவழி கற்றல் அதன் அடிப்படையாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை”(புதிய அலை…கற்கும் முறையில் Dinamani, https://www.dinamani.com) என்றக் கூற்றால் அறியலாம்.

 விளையாட்டு முறையில் கற்றல் கற்பித்தல்

 இனிமேல் மாணவர்கள் பாடங்களை விளையாடிக் கற்கப் போகிறார்கள். உடற்கல்வி படிப்புப் போன்று விளையாட்டு மாணவர்களாக அனைத்துத்துறை மாணவர்களும் மாறப்போகிறார்கள்.”கணினி அல்லது இணையவழியான விளையாட்டுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பாடங்களை ஈடுபடுத்துவது கற்றலை எளிமைப்படுத்தும். அறிவியல், வரலாறு, மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விளையாட்டாக மாற்றி அதன் வழி கற்றுக்கொடுக்கும் போக்கு பரவலாகும்.” (புதிய அலை…கற்கும் முறையில் Dinamani, https://www.dinamani.com) கணினிக்கும் இயந்திரமாகிய ரோபோவிற்கும் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்கின்ற முறையே செயற்கை நுண்ணறிவாகும். இக்கருவிகளே மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன் கொண்டதாக மாற்றுவதே செயற்கை நுண்ணறிவு கல்விமுறையாகும். “அறிவு,அனுபவஅறிவு,நினைவுத்திறன், செயல்திறன் உணர்வுகளைக் கையாளும் திறன் என பல்வேறு செயல்பாடுகளை மனிதனை அடிப்படையாகக் கொண்டு கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.” என்பார் இரா.குணசீலன். (இரா.குணசீலன், செயற்கை நுண்ணறிவுத் திறனும்…வேர்களைத் தேடி (https:www.gunathamizh.com) என இரா.குணசீலன் குறிப்பிடுவதனால் அறியமுடிகின்றது.

வினாத்தாள் தயாரிப்புமுறையில் செயற்கை நுண்ணறிவு

 இனிமேல் மாணவர்கள் எழுதும் தேர்விற்கு ஆசிரியர்கள் வினாத்தாள் தயாரிக்க வேண்டியதில்லை செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களே தயாரித்து அது சரியான முறையில் இருக்கின்றதா? தவறு இருக்கின்றனவா? என்பதை எல்லாம் ஆராய்ந்து செயல்படப்போகின்றது.”செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வர்த்தகம் 45 சதவீதமாக உயரும் என்று கூறப்படுகின்றது. வினாக்களைத் தயாரிப்பது அவை சரியாக இருக்கிறதா? என்று மதிப்பிடுவது மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவது அதன் அடிப்படையில் பாடங்களைச் சொல்லித் தருவது என்று மாணவர்களை மையப்படுத்தி கற்றலில் ஏராளமான மாற்றங்களைச் செய்யவிருக்கின்றது செயற்கை நுண்ணறிவு.” (புதிய அலை…கற்கும் முறையில் Dinamani, https://www.dinamani.com) என்று குறிப்பிடுவர்.

தேர்வு முறையில் செயற்கை நுண்ணறிவு

 தேர்வறையில் தேர்வுகள் எழுதும்பொழுது மற்றவரைப் பார்த்து எழுதுவது, கேட்டு எழுதுவது, துண்டுத்தாள் கொண்டுவந்து எழுதுவது, ஆள்மாறாட்டம் போன்ற பல்வேறு முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இவற்றை மேற்பார்வையாளரால் கண்டுபிடுக்க முடியவில்லை. மாணவர்களின் தவறான வழிகளைத் தடுப்பதற்கு நவீன கேமரா எனும் ஒளிப்படப் கருவிகள் தேர்வறைகளில் பொருத்துகிறார்கள். இக்கருவிகள் சாதாரண கேமராக்கள் அல்ல செயற்கை நுண்ணறிவுடையச் சாதனங்களாக உள்ளன. ”மருத்துவத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேர்வு மையங்களில் கேமரா பொருத்தப்படுவதுடன் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப முறையில் தேர்வுகளைக் கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காகப் பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது நடைமுறைக்கு வந்த பின் எந்த தேர்வுக் கூடத்தில் முறைகேடுகள் நடந்தாலும் அது குறித்த தகவல்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும்”(சுதா சேஷய்யன், மருத்துவ தேர்வில் முறை கேடுகள் தடுக்க செயற்கை… https://m.dinamani.com) என தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக் கழகத் துணைவேந்தர் சுதா சேசய்யன் கூறியக் கூற்றின் வழி செயற்கை நுண்ணறிவு முறையால் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் முறைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. இது போன்ற செயற்கை நுண்ணறிவு முறையில் இணையவழித் தேர்வுகளும் இன்று நடைபெற்று வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணியில் செயற்கை நுண்ணறிவு பயன்பட்டு வருகின்றது. அதற்கான மென்பொருள்களும் தயாரித்து வருகின்றனர்.

 முடிவுரை

 செயற்கை நுண்ணறிவு என்று கூறுவது கணினி அறிவியலோடு தொடர்புடையது. மனிதனைப் போன்று செயல்படக் கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கி அதற்கு உணர்திறனைக் கற்றுக் கொடுப்பதாகும். இதன் மூலம் மனதில் நினைத்ததையும் தானே மேம்படுத்திக் கொண்டு கற்கும் மாணவராக, கற்பிக்கும் ஆசிரியராக, பாடத்தைத் திட்டமிடுபவராக, வினர்த்தாள் தயாரிப்பவராக, தேர்வை நடத்துபவராக, விடைத்தாள் திருத்துபவராக தானே உருவாகிவிடும். இது நுண்மை அறிவைப் பெற்று உண்மை அறிவைத் தரும் கருவியாகும். வகுப்பறையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் இயக்கும் இயந்திரமாக செயற்கை நுண்ணறிவு சாதனம் உள்ளது. இந்திரனை நம்பிய காலம் போய் இனி இயந்திரனை நம்பும் காலமாகிவிட்டது நம் காலம்.

முனைவர் மு.கருப்பையா, தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்