வேட்டை 1
******************
பொதுவாக முன் இரவு நேரங்களில் வேட்டைக்கு செல்வதுண்டு.

வேடனுக்கு வேட்டை காட்டில். நகர கவிஞனுக்கு வேட்டை ரோட்டில்.

மனிதர்களிடம் கொட்டிக்கிடக்கும் படைப்புகளை வேட்டையாடும் தனித்த நடை இது. தகித்த ஓட்டமும் இது. சிந்தனைக்கும் சித்திரத்துக்கும் இடையே வித விதமாய் மனிதர்கள். எங்கு போகிறார்கள் என்பதெல்லாம் போய் எங்கும் போகிறார்கள் என்று ஆகும் போது... நல்ல வேட்டை ஆரம்பம் ஆகி இருக்கும்.

பட்டும் படாமல் பார்க்க வேண்டும். உத்து பார்த்து என்ன என்று முறைத்தவன்லாம் உண்டு.

சமூகத்தை ஆராய்வது சும்மா இல்லையே. அது கூட ஆதி மண்ணை தோண்டுவது போல தான். ஆபத்து நிறைந்தது. ஆனாலும் அது தான் வேலை என்றான பின் தேடல் தொடர தானே வேண்டும்.

வேகத்தடையில்... ஒவ்வொரு வண்டியும் ஒவ்வொரு விதமாக ஏறி இறங்குவதை ஓரம் நின்று பார்த்தேன். இரு கால் முளைத்த மரமாய்... அப்படி கரும்பலகை தாண்டி வளர்ந்த கிளையோடு நிற்கும் கற்பனைக்கு மூச்சு முட்ட உயிர் கொடுத்தல் வேட்டையில் மன்னனாகும் முயற்சி.

தூரத்திலேயே ஸ்பீட் பிரேக் இருக்கென்று உணர்ந்து அதற்கு தகுந்த வேகத்தில் வரும் வண்டிகள் ஜாக்கிரதையாக வேகம் குறைந்து வழுக்கி கொண்டே ஏறி பதமாக இறங்கி செல்கின்றன. ஸ்பீட் பிரேக் -ஐ உணராத வண்டிகள் கிட்ட வந்து சடன் ப்ரேக்கிட்டு... டயர் அதிர்ந்து உடல் குலுங்கி ஏறி இறங்குவதை பார்க்கலாம். அப்படி ஒரு வஸ்து சாலையின் இடையே வயிறு புடைத்த பாம்பென கிடப்பதையே சில வண்டிகள் அறியாது. வாழ்ந்தா வீடு செத்தா சுடுகாடு என்பதாக அப்படியே வந்து அப்படியே போவார்கள். ம்ஹும். பறப்பார்கள். சில வண்டி பாத யாத்திரை போவது போல போகும். அதற்கு வேகத்தடை ஒரு கேடு. அந்த வண்டி எல்லா இடத்திலேயும் அப்படி தான் ஊரும்.

ப்ரேக்கிட்டு குலுங்கி நாக்கு கடித்து வெட்கம் காட்டி போன பெண்ணும் உண்டு. ரகசிய மின்னல் போல. ராத்திரி ஜன்னல் போல. சட்டென திறந்து மூடும் வாலிப வயசு. போன் பேசிட்டே போகிற கூட்டத்துக்கு ஸ்பீட் பிரேக் ஒரு பொருட்டே இல்லை. அலைக்கற்றை சாலையில் ஓடும் வண்டிகள் மயிர்க்கற்றை விசிறியபடியே செல்ல... வேகத்தடைகள் மதிப்பிழந்து குப்புற கிடக்குங்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வண்டிகளோடு ஏறி இறங்குவது ஒரு சாயலுக்கு புது தேர் சோதனை ஓட்டம் பார்ப்பது போலவே இருக்கும்.

இங்க ஸ்பீட் பிரேக் இருக்கென்று தெரியும் தான். அதற்காக இத்தனை மெதுவாக ஊர்ந்து வர வேண்டுமா என்று தோன்றும் அளவுக்கு மெல்ல உருட்டும் மேதாவி கண்ணாடிகளும் உண்டு. வர்ற வேகத்துக்கு அப்படியே வண்டியில் நிமிர்ந்து நின்றபடியே கடக்கும் ஸ்பீடர்களும் உண்டு. வண்டி கழுத்தில் ஏறி இறங்குவது போல கழுத்தை ஆட்டும் சில வண்டிக்காரர்களை ரசிக்கலாம். பாவங்கள் மாறினாலும்... பரவசங்கள் நிகழத்தான் செய்கின்றன.

டயர் வண்டி ஓட்டிய குதூகலத்தை ஒவ்வொரு முறை வேகத்தடையில் ஏறி இறங்குகையிலும் நான் உணர்கிறேன். வண்டி ஓட்டுதல் ஒரு கலை. அதை உணர்ந்து உள்ளார்ந்து கொண்டாடி ஓட்ட வேண்டும். இயந்திரத்தை இயந்திரம் ஓட்டுகிறது போல அப்படி ஓட்டி சென்று தூங்கி விடுவதில் என்ன இருக்கிறது.

மனிதர்கள் விசித்திரமானவர்கள். வெறும் கண்களை விட்டு போன் கண்களால் வானவில் பார்க்கிறவர்கள்.

*
வேட்டை 2
******************
அப்படியே நகர நகர நகரம் நர்த்தனமிடுதலைக் கோரமாக்கி கொண்டிருக்கும்.

தோன்றும். இந்தா வந்துட்டு இருக்காரே அவர் பேர் என்னவா இருக்கும். பார்க்க குண்டா வயசாகி இருக்கிறார். அப்போ பேர் பழனிசாமி தான். இவர்... நார்மல் பாடி. நடுத்தரம். சுரேஷ்னு இருக்கலாம். அந்த லேடி... மீனா தான்.... கண்ணாடி போட்ருக்கே. அந்த புள்ள நெத்தில விபூதி. ஒருவேளை கார்த்திகாவா இருக்குமோ.

இப்படி ஆளுக்கு தகுந்த பெயர்களை சூட்டி பார்ப்பதில் கணக்கு கண்டிப்பாக மேட்ச் ஆகாது. பழனிசாமி பாலாஜியாக இருக்கலாம். மீனா மாலதியாக இருக்கலாம். சுரேஷ் பெருமாளாக இருக்கலாம். யாருக்கு என்ன பேர் என்று பார்த்ததும் கண்டுணர முடியாத உண்மை எத்தனை வளைவுகளால் அடுக்கப்பட்டிருக்கிறது. இல்லையா. எனக்கு கூட பேர் பிரான்சிஸ் என்று யாரும் நம்பலாம். பிரேம் என்ற பெயரை ஒல்லியாக இருப்போருக்கு சூடி பார்க்கிறேன்.

சிறு வயதில் எந்த பெயரில் யாரை பார்த்தோமோ அதன் தாக்கம் காலம் முழுக்க இருக்கும் போல் தான். இப்போது வரை கோவிந்தசாமி என்ற பெயர் எனக்கு ஐயஹோ தான். அதுவும் ஹிந்தி நடிகர் கோவிந்தாவின் ஆட்டத்தை விரும்புகிறவனாக இருக்கும் போதும். மோசஸ் என்ற பெயரின் வலிமையும்.. தீர்க்கமும் அப்படியே காணாமல் போக... அந்த பெயரோடு சிறுவயதில் நான் பார்த்த அவர் தான் காரணம். ரமேஷ் என்ற பெயர்கள் எப்போதும் குவிந்து கிடக்கின்றவை. வீதிக்கு ஒன்று பார்த்திருக்கிறேன். ஆதலால் அதன் ஒவ்வாமை இப்போதும் உண்டு. கிருத்திகா என்றாலே குண்டு என்ற பிம்பம் கல்லூரி காலம் விதைத்தது. காயத்ரி என்றாலே அழகி என்பதும் அப்படி தான். பாலா என்றாலே சுயநலம். அப்துல் சமத் என்றாலே துயரம்...இப்படி பெயர்களின் வழியே ஒரு பெரும் நினைவு நம்மில் புதைந்திருக்கிறது.

ஆள் ஸ்மார்ட்டாக இருப்பார். பெயர் பப்பரப்பாவாக இருக்கும். மொக்கை நடைக்கு சொந்தக்காரருக்கு ராஜா என்று இருக்கும். இப்படி பெயர்கள் கொண்ட பரிசோதனைகள் சாலையெங்கும் எழுத்துகளை குதிக்க விட்டு ஆட்டுவிக்கும். பிரியங்கா பிரியா பிரியதர்சினி இதெல்லாம் ரெண்டு ரூபாய்க்கு பத்து என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து விட்டார்கள். வீட்டுக்கு ஒரு பிரியா இருப்பார்கள். எங்க வீட்டில் கூட அஞ்சு பிரியாக்கள். வைக்கும் போதே தலையில் அடித்துக் கொண்டிருக்கிறேன்.

வீட்டில் ஒரு பெயர். கோப்பில் ஒரு பெயர் என்று ஆள் போதாமையை பெயர்கள் நிறைத்ததுண்டு. எனக்கே இப்போது யுத்தனையும் சேர்த்து எட்டு பெயர்கள்.

கருப்பையா.. எத்தனை அழகான பெயர். ஆனால் சிறு வயதில் நான் கண்ட கருப்பையாக்கள் இப்போது வரை இந்த பெயரோடு ஒண்ட விடாமல் செய்து விட்டார்கள். அப்புறம் இந்த சித்ரா. ஐயையோ அடித்து துவைத்து ஒவ்வொரு வீட்டு கொடியிலும் தொங்க விட்டிருப்பார்கள். பாரதி யார் என்றே தெரியாத ஆளுக்கு பாரதி என்ற பெயர் இப்போதும் கூட இருக்கிறது. குஞ்சாயி என்றால் சட்டென்று பிடித்து விடுகிற மாதிரி... கோபால் என்றால் இடைவெளி நிச்சயம்.

சிறுவயதில் எனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த சிவகுமார் பெயரில் அப்படி ஒரு வசீகரம் உணர்ந்திருக்கிறேன். இப்பவும் என கதை மாந்தர்களுக்கு சிவகுமார் என்ற பெயர் தான் அடிக்கடி. ஜானி சின்ன வயது எதிரி. இப்போது நண்பன் தான். ஆனாலும் வில்லனுக்கு ஜானி தான் பெயர். சில பெயர்கள் எல்லாம் கணக்கிலே கூட கிடையாது. நேரடி சாமி பெயர்களை அவரவர் மீண்டும் வைத்துக் கொள்ளட்டும். குழந்தைகளுக்கு வேண்டுதல் என்று வைத்து அவர்களை பத்தாங்கிளாஸில் பதற விட கூடாது.

சாலையில் செல்லும் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வாழ்வு தான்.. இல்லையா. பொருந்துவது பொருத்திக் கொள்வது எல்லாம் வாழ்வதில் தான் இருக்கிறது. ஒன்று சொல்லி வேட்டை இரண்டை முடிக்கலாம்.

பாரில் வேலை செய்யும் முதியவர் ஒருவரின் பெயர் ரஜினி.

வேட்டை 3
******************
யாரோடு அமர்ந்திருக்கிறாய்... யாரோடு பேசுகிறாய் என்பதில் இருக்கிறது நீ யாரென்று.

தகுதியற்றவர்கள் கூட சேருகையில் சேருகிறவர் தகுதியும் இழக்கப்படுகிறது. எப்போதும் ஊறுகாய் ஆகாதே. எப்போதும் ஆறுதல் தேடாதே.

காதுகளை உபயோகப் படுத்தாத மனிதர்களிடம் பேசாமல் இருப்பது உகந்தது. பேசிக்கொண்டே இருப்போரிடம் காதுகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. தான் பேசுவது தான் சரி. தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவது நோய். யார் எது பேசினாலும்... அதை மறுத்து... அது அப்படி இல்லை என்று பேசுவது வியாதி. மூவர் இருக்கையில் இருவர் ரகசியம் பேசாதீர்கள். அது குற்றம். உடன் இல்லாத ஒருவரைப் பற்றி புறம் பேசாதீர்கள் அது தப்பு. எல்லாமே மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது தான். ஆகையால்... போகும் போது ஃபேன் ஆப் பண்ணிட்டு போய்டுங்க என்று யாராவது சொன்னால்.. இது கூட எனக்கு தெரியாதா... நான் யார் தெரியுமா என்று கொந்தளிக்க கூடாது. புன்னகைத்துக் கொண்டே சரி என்று சொல்லி டாட்டா காட்ட வேண்டும்.

எது பேசினாலும் தன் பேச்சு தான் முன்னால் நிற்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பது ஒரு வித பதற்ற நிலை. பாதுகாப்பற்ற மனநிலையின் வெளிப்பாடு... அவர்களை திரும்ப திரும்ப பேச வைக்கிறது. நாலே விஷயங்களை வைத்துக் கொண்டு ஒரே ஆளிடம் நான்கு முறை பேச வைக்கிறது. தள்ளி இருப்பது நல்லது. பேச பேசவே கவனம் கலைபவர்கள்.... தங்களை பற்றியே சதா சிந்திப்பவர்கள்.... ஆகவே ஆகாது. ஒரு டீ வாங்கி கொடுத்து அனுப்பி விட வேண்டும். சமமாக அமர்ந்து விவாதித்தால்... விளங்காது.

எல்லாம் தெரிந்தவனை கூட வைத்திருந்தால்... உருப்படாது. எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓடுகிறவனோடு சேர்ந்து கொண்டால்... வாழ்வு தீராது.

பேச்சு வேறு. அறிவுரை வேறு. சிலருக்கு பெரும்பாலும் வித்தியாசம் தெரிவதில்லை. எது பேச தொடங்கினாலும்... அறிவுரையில் சென்று நிறுத்தி விடுகிறார்கள். பொதுவாகவே அறிவுரைக்கு செருப்படி தான் தீர்வு என்கிறவன். வேண்டும் என்றால் கொஞ்சமாக - சம்பந்தப்பட்டோர்- ஊறுகாய் மாதிரி யோசனை வழங்கலாம். மற்றபடி அவரவர் ஞானத்தை அவரவர் தான் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

வேட்டை தொடரும்...

- கவிஜி

Pin It