கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நடந்திய வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் அந்த கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, ‘‘சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே... கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வீட்டுப் பையனையே... இது போதும், இது போதுமே எனக்கு வேறேதும் வேண்டாம் அம்மா,’’ என சாதிவெறியோடு உறுதிமொழி ஏற்க வைத்தது சமூக ஊடகங்களில் பரவி விவாதங்களை ஏற்படுத்தியது.

கொங்கு பகுதியில் பல ஆண்டுகளாக நடந்துவரும் சாதிய வன்கொடுமைகள் கோகுல்ராஜ் படுகொலைக்குப் பின்னால்தான் பொதுவெளிக்கு வரத் துவங்கியது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் தன்னுடைய முழுநேர வேலையாகவே தான்சார்ந்த கவுண்டர் சாதி பெண்கள் வேறு சாதி ஆண்களுடன் பேசுவதை கண்காணிப்பதையும், தடுப்பதையும் முடிந்தால் மாற்றுசாதி ஆண்களைத் தாக்குவதையும் கொலை செய்வதையும் செய்து வந்தான்.

இவை எல்லாம் பெரும்பான்மை கவுண்டர் சாதியினரின் ஆதரவோடு நடைபெறவில்லை என்றாலும், அந்த சாதியில் இருக்கும் பணம் படைத்தவர்களின் ஆதரவோடுதான் நடைபெற்றது என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.

பொருளாதார பலம் படைத்த கவுண்டர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு தன் சொந்த சாதியினர் மத்தியில் தீவிரமான சாதிவெறியை தூண்டிவிட வேண்டிய கட்டாயம் இருந்தது.valli kummi baluஇப்படி கவுண்டர் சாதியினரை ஓரணியில் திரட்டி அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதன் மூலம் பொருளாதார ஆதாயங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும் தங்களுடைய சாதிவெறியையும் நிலைநாட்டிக் கொள்ள முடியும்.

கொங்கு மண்டலப் பகுதியில் புற்றீசல் போல பெருகி இருக்கும் எல்லா கவுண்டர் சாதி அமைப்புகளுமே வெளிப்படையாக சுயசாதி பெருமை பேசுவதையும், தலித் மக்களுக்கு எதிராக விஷம் கக்குவதையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றன.

தற்போது கவுண்டர்சாதிப் பெண்களிடம் வாக்குறுதி வாங்கிய கே.கே.சி பாலு சார்ந்திருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்தக் கட்சியின் தோற்றமே தலித்துகளுக்கு எதிரானதாகத்தான் ஆரம்பித்தது.

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (PCR ) நீக்க வேண்டும் என பல போராட்டங்களை கொங்கு மண்டலம் முழுவதும் அந்த கட்சி நடத்தி இருக்கின்றது.

கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் “வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அந்த சட்டத்தை செயல்படுத்துவதில் மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துப் போராடுகின்ற அரசியல் கட்சிகளும், அமைதி காக்கின்ற அரசியல் கட்சிகளும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் ஓட்டுகளை குறிவைத்தே செயல்படுகிறார்கள். ஆனால் விசாரிக்காமல் கைது செய்யலாம் என்று இருக்கின்ற உட்பிரிவு தான் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே பகையை ஏற்படுத்தி இணக்கமாக இருப்பதைத் தடுக்கிறது..." என்று அறிக்கை விட்டார்.

அப்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிஜேபி கூட்டணியில் இருந்தது. தற்போது திமுக கூட்டணிக்கு வந்தாலும் இன்னமும் தன்னுடைய சாதிய அஜண்டாவை அந்த கட்சி மாற்றிக் கொள்ளவில்லை.

மாறி மாறி கூட்டணி வைப்பவனின் ஒரே நம்பிக்கை நாம் எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தாலும் நம் சாதிக்காரர்கள் நமக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும் என்றால் தன் சொந்த சாதிமக்களிடம் தொடர்ச்சியாக சாதிவெறியைத் தூண்டி விடுவதும் அவர்களை சாதிய அணிச்சேர்க்கை செய்வதும் மிக முக்கியமானது.

அதற்காகத்தான் ஊர் ஊராகச் சென்று கவுண்டர் சாதிப் பெண்களை மட்டும் அழைத்து வள்ளி கும்மி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். கும்மி சொல்லிக் கொடுப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். முதன்மை நோக்கம் கவுண்டர் சாதிப் பெண்களிடன் சுயசாதிப் பெருமித உணர்வை ஏற்படுத்துவதும் சாதியக் கலப்பு நடக்காமல் தடுப்பதும்தான்.

இதே நிகழ்ச்சியில் கவுண்டர் சாதிப் பையன்களிடம் உறுதிமொழி வாங்கிய போது, அவர்கள் கவுண்டர் சாதி பெண்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுக்கச் சொல்லவில்லை. காரணம் பல கவுண்டர்சாதி ஆண்கள் திருமணம் ஆகாமல் முதியவர்களாக இன்னமும் சுற்றிக் கொண்டிருப்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கூட கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குச் சென்று வேறு சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் கவுண்டர் சாதியினர் மத்தியில் அதிகமாகவே இருந்தது. நீங்கள் கொங்கு மண்டல பகுதியில் இப்படியான நபர்களை ஊருக்கு இரண்டு பேரையாவது பார்த்துவிட முடியும்.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இப்போதெல்லாம் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் யாரும் இவர்களை நம்பி பெண்கொடுப்பதில்லை. காரணம் இவர்கள் திருமணம் செய்து அழைத்துவரும் பெண்களை சாணியள்ளவும், மாடு மேய்க்கவும் விட்டுவிடுவதோடு ஓர் அடிமைப்போல நடத்துவதும் ஒரு காரணமாகும்.

கவுண்டர் சாதிப் பெண்கள் மாற்றுசாதி ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதெல்லாம் ஒரு சதவீதம் கூட இப்போதும் கிடையாது. ஆனால் இதை வைத்துக்கூட தன் சொந்த சாதி மக்களிடம் சாதிவெறியைத் தூண்டிவிட முடியும் என்று சாதிவெறியர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கவுண்டர் சாதிப் பெண்களை மாற்றுசாதி ஆண்கள் திருமணம் செய்து கொள்வதால்தான் கவுண்டர் சாதி ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்று சொல்லி கவுண்டர்சாதி ஆண்களுக்கு சாதிவெறி ஊட்டுகின்றார்கள். குறிப்பாக தலித்துகள் இப்படியான செயலைத் திட்டமிட்டு செய்வதாக விஷம் கக்குகின்றார்கள்.

பிரச்சினை பூதாகரமாக வெடித்த பின்னரும் கூட சாதிவெறியர்கள் மசியவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கே.கே.சி பாலுவிடம் ‘‘எங்க வீட்டு பொண்ணுங்களுக்கு நான் பதனம் சொன்னேன், இதுல என்ன சர்ச்சை இருக்கு? நிகழ்ச்சில பங்கேற்ற பெண்களோட பெற்றோர் சொன்னதால், அவர்கள் சம்மதத்தோட இந்த அறிவுரையைச் சொன்னேன். அவர்களை எங்கள் வீட்டுப் பெண்களாக நினைத்துத்தான் அறிவுரை சொல்லியிருகிறேன்." என்று திமிர்த்தனமாகப் பதிலளித்துள்ளார்.

இவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளராக களமிறங்கி தோல்வியைத் தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் "பாலு பேசியதை விமர்சனம் செய்து, அதை ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியமே இல்லை. வள்ளிக்கும்மி மூலம் பல கிராமங்களில் இருக்கும் மக்கள் தங்களுக்குள் சமூக தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். வள்ளிக் கும்மி நன்றாக நடந்து வருவதால் அதில் சிக்கலை ஏற்படுத்ததான் இப்படியெல்லாம் பேசுகின்றனர். வள்ளிக் கும்மி நடப்பதை பாசிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும், ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காத ஆதங்கத்தில் பாலு பேசிவிட்டார்" என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் கூறியிருக்கின்றார்.

திமுக கொங்கு பகுதியில் எதுபோன்ற அபாயகரமான ஆட்களை வளர்த்து விடுகின்றது என்று நாம் இதன் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவரை திமுகவில் இருந்து யாரும் இந்த செயலை கண்டிக்கவில்லை.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என்று பெயர் வைத்திருந்தாலும் முழுக்க முழுக்க கவுண்டர் சாதியினரை மட்டுமே முன்னிலைப்படுத்தும் சாதியக் கட்சி ஆகும் அது. தொடர்ச்சியாக கவுண்டர்சாதி வெறியை தூபம் போட்டு வளர்த்துவிடுவதன் மூலம் தனக்கான ஓட்டுவங்கியை உறுதிப்படுத்திக் கொள்ள பல்வேறு வழிகளில் வேலை செய்துகொண்டு இருக்கின்றார்கள். அதன் ஒரு பகுதிதான் கொங்கு கலைக்குழுவும்.

எல்லா சாதிக்குமான கட்சியாக இருந்தால் எதற்காக கவுண்டர்சாதிப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மட்டும் வள்ளி கும்மியை சொல்லிக் கொடுக்க வேண்டும்? கொங்குநாடு என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்காரனின் சொத்துமல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வள்ளிக் கும்மியும் எந்த ஒரு சாதிக்காரனின் சொத்தும் கிடையாது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கூட நாடார், சாம்பவர், வேடுவர், புலையர் என பல சமுதாய மக்கள் வள்ளிக் கும்மி நிகழ்ச்சியை நடத்தியாக வரலாறு இருக்கின்றது.

இதில் பெரிய கூத்து என்னவென்றால் முருகன் களவு மணத்தின் பிரதிநிதி. குறப்பெண்ணான வள்ளியை சாதி மறுப்புத் திருமணம் செய்தவன். அப்படி சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களின் வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கின்றேன் என்று அதைவைத்து சாதிவெறியை வளர்ப்பதுதான்.

கொங்கு பகுதியில் திமுக வளர்கின்றதோ இல்லையோ, கவுண்டர்சாதி வெறி தீவிரமாக வளர்ந்து கொண்டு இருக்கின்றது. கொங்கு மண்டலத்தில் வலுவாகக் காலூன்ற உருப்படியான திட்டங்கள் ஏதுமற்ற நிலையில் சாதிவெறியர்களிடம் திமுக சரணடைந்திருக்கின்றது. இதனால் திமுகவுக்கு சில இடங்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் தலித்துகள் மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It