மானுட சிறப்பு அழுகையும் சிரிப்பும். இரண்டையும் உணராதவன் மானுட பிறழ்வு.

தனிமையில் அழுவதும் இனிமையில் சிரிப்பதும் இயல்பு. ஆனால்... சாலையில் அழுவது.... அதுவும் ஒரு திறந்த வேனில்...

கூலி தொழிலாளர்கள் அவர்கள். வட்டத்தில் முன்பக்க ஓரத்தில் அமர்ந்திருந்த ஒருத்தி எதையோ சொல்லிக் கொண்டே விசும்புகிறாள். அவ்வப்போது எதிரே அமர்ந்திருக்கும் கொஞ்சம் வயதில் மூத்தவள் அவள் கண்களை துடைத்து துடைத்து விடுகிறாள். அழுகைக்கு ஒரு நேரம்... பேச்சுக்கு ஒரு நேரம் என்று இல்லை. இரண்டையும் ஒன்றுக்கொன்று தொந்தரவு இல்லாமல் நடத்துகிறாள். ஏன் அழுகிறாள். அதுவும் பொதுவெளியில்.

எழுத்துக்காரன் கண்கள் சிமிட்டி விட்டான். வேதனை பார்த்தபடியே என் பைக் அந்த வண்டியின் பின்னாலேயே சென்றது.

ஆடுகளை அடைத்து போவது போல தான் அந்த வண்டி. குத்த வைத்து நெருக்கி நெருக்கி அமர்ந்திருக்கும் ஒருவரின் முகத்திலும் எந்த பாவனைகளும் இல்லை. வெற்றிடம் நிரப்பிய வெற்று முகங்கள். அவ்வளவே. அந்த கூட்டத்தில் ஒருத்தியின் அழுகை... அதுவும் நியாயம் சொல்லிக்கொண்டே அழுவது போல இருக்கிறது. அருகே அமர்ந்திருக்கும் சிறுவன் அந்த முகத்தை அண்ணாந்து பார்த்தபடியே இருக்கிறான். அழுகையை ஆமோதிப்பது போல தான் எதிரே இருப்பவளின் தலை அசைத்தலும். வாய் கோணி கோணி சரியாகி... மூக்கு விடைத்து விடைத்து அமுங்கி.. கண்களில் ஒரு நேரம் பொங்கி.. மறுநேரம் அடங்கி... என்று அழுகைக்கு தான் எத்தனை பாவனை. நெற்றியில் விதி மடங்கும் வரிகள். கன்னத்தில் சூடு பறக்கும் விரிவுகள். மூக்கு சுழிந்து உதடு பிதுங்குதல்...சட்டென ஒரு பாவப்பட்ட ஓவியம் கசங்குவது போல...அந்த பெண்ணை பார்க்க பார்க்க முகம் ஏந்திக் கொள்ள தோன்றியது.

என்ன தான் பிரச்சனையாக இருக்கும். என்ன பிரச்சனையாக இருந்தாலும் பொதுவில் நாலு பேருக்கு மத்தியில் அழுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவள் அதை ஒரு நிகழ்த்தாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள். நைந்த புடவைக்கு மேலே தோளில் கிடக்கும் கந்தலாகி போன துண்டால் அவ்வப்போது அந்த கறுத்த முகத்தை துடைத்துக் கொள்கிறாள். அழுதழுது படிந்த கண்ணீர் வடும்பு கன்னத்தில் நன்றாகவே தெரிகிறது. நமக்கு வண்டியை நிறுத்தி என்னாச்சு என்று கேட்டு விடலாம் போல படபடப்பு.

விடிந்ததில் இருந்தே அழுதிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சி சமையல் செய்யும் போதும் இருந்திருக்கும். பிறகு கிளம்பி வேலைக்கு செல்கின்ற இதோ இப்போதும் தொடர்கிறது.

ஒரு கட்டத்தில் அந்த வண்டி வேகம் எடுக்க.. எனக்கோ சிந்தனை தடுப்பு. நிறுத்தி விட்டேன். இருந்தும் கண்ணீரின் வெம்மை என்னை தீண்டுவது நிற்கவில்லை.

இதே போல வேறு சில சம்பவங்களும் உண்டு.

"நானும் ரவுடிதான்" படத்தில் நயன்தாரா சாலையில் கூனி குறுகி துக்கம் தாளாமல் வெடித்து அழுதபடியே வரும் காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படி... நானே கூட படித்து முடித்த ஆரம்ப கட்டத்தில் ஒரு நேர்காணலில் தோல்வி கொண்டு வேலை இல்லை என்று வெளியேறி அந்த கம்பெனி காம்பவுண்ட் ஒட்டிய மரத்தினடியே நின்று அப்படி அழுதிருக்கிறேன். (அதன் பிறகு பல நேர்காணல்களில் நேர்காணல் செய்பவரை கதற விட்டதெல்லாம் காலத்தை திருப்பி போட்டு மொத்தி எடுத்த கதை) கண்கள் சிவக்க... அந்த நேர துக்கத்தை அப்படி அழுது தான் தீர்க்க முடிந்தது. ரேஸ் கோர்ஸ் ரோடெல்லாம் கண்களில் இல்லை. தோல்வி மட்டும் தான்.

அதே போல பொள்ளாச்சி பேருந்தில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை கவனித்திருக்கிறேன். நான் கவனிக்கிறேன் என்று தெரிந்ததும் குனிந்து தடுமாறியவளுக்கு ஆறுதல்... நான் பார்வையை திருப்பிக் கொண்டது தான். பொதுவில் சாலையில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தாண்டி அழும் கண்கள்... நிஜமாகவே உடைந்த மனதுகள் தான்.

அழுகையைப் போலவே தான் சிரிப்பும். தனியாக சிரிப்பவரை எங்கேனும் எப்போதேனும் பார்க்க நேரிட்டு விடும். (போன் பார்த்துக் கொண்டே சிரிப்பவன் தனி. அது கணக்கில் இல்லை) எதையோ நினைத்து இடம் பொருள் காணாது சிரித்து விடுகிறவரை வழியெங்கும் ஆங்காங்கே கண்டு கொண்டு தான் இருக்கிறோம். நேற்று கூட ஒரு சிறுவன் என்ன நினைத்தானோ... ஸ்கூல் பேக் முதுகில் ஆக்சிஜனுக்கு ஏங்க... கையில் லேஸ் பாக்கெட். தின்றபடியே புன்னகைக்கும் முகத்தில்... இடம் பொருள் இல்லை. இசைத்த மாதிரி இருந்தது அவன் நடை.

தானும் புன்னகைத்து அறிமுகம் இல்லாதவரிடமும் அதை தொடர்ந்தபடியே டீ குடிக்கும் ஆட்களை பார்த்திருக்கிறேன். பொதுவில் வரும் அழுகைக்கு பின் யாரோ இருப்பது போல சிரிப்புக்கு பின்னும் யாரோ இருக்கத்தானே செய்கிறார்கள்.

துரோகத்தை பற்றி நானும் நண்பனும் விலாவாரியாக பேசிக்கொண்டிருக்க.. ஒரு 30 வயது மதிக்கத்தக்க துப்புரவு தொழிலாளி எங்கள் பின்னால் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

"எங்க அண்ணங்க எல்லாம் சேர்ந்து இப்பிடித்தாங்க ஏமாத்தினாங்க..." என்று சொன்னவருக்கு... கண்களில் தாரை தாரையாக கொட்டிய கண்ணீரை துடைக்க சொற்களின்றி அமைதியானோம்.

பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே மெல்ல புன்னகைத்த வாலிபனை பார்த்திருக்கிறோம். ஆள் லவ்வுல இருக்கான் போல என்று நாங்கள் கிண்டல் கூட அடித்தோம்.

பாணி பூரி தின்றபடியே தானாக சிரித்துக் கொண்ட பெண்ணை பார்த்து ரசித்திருக்கிறேன். பூ கட்டிக்கொண்டே சிரித்த பூக்கார பெண்ணை புகைப்படம் எடுப்பது போல கண்களில் கிளிக்கி இருக்கிறேன். எதுத்த வீட்டு வேலைக்கார பெண் மூக்கை உரிந்து சேலை தலைப்பால் துடைத்துக் கொண்டே வாசல் பெருக்குவதை சில போது பார்த்திருக்கிறேன்.

ஒரு நொடி பூ மலருவது போல... அது அழுகையோ சிரிப்போ.. இடம் பொருள் அற்று எப்போதாவது நிகழ்ந்து விடுகிறது. யார் இருக்கிறார்.. யார் கவனிக்கிறார் என்றெல்லாம் இல்லை. அது பீறிட்டு கிளம்பும்... மானுட உணர்வு. அந்த நேர ஆறுதல் அந்த அழுகைக்கு தேவையாய் இருக்கிறது. அந்த நேர வெடிப்பு அந்த சிரிப்புக்கு அவசியமாய் இருக்கிறது. சட்டென சிறுபிள்ளையாய் மாறிவிடும் ஆக சிறந்த தருணங்கள் அவை. அதை திட்டமிட்டு செய்ய முடியாது. திகட்ட திகட்டவும் செய்ய முடியாது. தெரியாமல் நடப்பதாக நம்பும் மனது தானாக வெளி வந்து தன்னை மலர்ந்து விடும்.

தோழியோ காதலியோ... பஸ் ஏற்றி விட்டு கை காட்டிய பிறகும் சிரித்துக் கொண்டே நின்றவனை கண்டிருக்கிறேன். அன்றைய நாளுக்கு அவன் தான் மலர்ச்சி.

தனியாக சிரிப்பவரை லூசு மாதிரி சிரிக்கிறான்/ள் எனும் பொதுமை... தனியாக அழுகிறவரை அப்படி சொல்வதில்லை. சட்டென நெருங்கி ஐயோவென ஆற்றுப்படுத்த முனைய தூண்டும் அழுகை சிரிப்பை விட பலமானது. அதனால் தான் முதலும் முடிவும் அழுகையாகவே இருக்கிறது. பொது இடங்களில் காணப்படும் அழுகை துயரத்தின் நீண்ட நெடிய வளைவு. தூசு விழுந்தது போல எத்தனை சமாளித்தாலும்... கண்ணுள்ளார் கண்டு விடுவார்.

- கவிஜி

Pin It