“மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு இடங்கொடுக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்திற்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

சோவியத் எழுத்தாளர் நிக்கொலாய் ஒஸ்றோவஸ்க்கிய் தனது வீரம் விளைந்தது என்ற நாவலில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நமது காலத்தைய முதுபெரும் கவிஞர்களில் ஒருவராகிய இ. முருகையன் கடந்த 27. 06. 2009 அன்று தனது 74வது வயதில் இறந்தார் என்ற செய்தி அவருடன் பழகிய நண்பர்கள், மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் ஏன் அவரது இலக்கிய கொள்கையுடன் முரண்பட்டவர்களைக் கூட கண்ணீர்க் கடலில் முழ்கச் செய்தது. இ. முருகையன் தாம் வாழ்ந்த காலத்தில் கவிஞர், விமர்சகர், மொழிப் பெயர்பாளர் என பல்துறைசார்ந்த இலக்கிய பங்களிப்பினை வழங்கியதுடன் ஆசிரியர், ஆசிரிய காலாசாலை விரிவுரையாளர், கல்வி வெளியீட்டுத் திணைகளத்தின் பதிப்பாசிரியர், யாழ் பல்கலைக பதிவாளர் என பல பதவிகளையும் வகித்துள்ளார். அவர் தனக்குக் கிடைத்த வாய்பையெல்லாம் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்பதில் தான் இவரது முக்கியத்துவம் சராசரி மனிதரிலிருந்து வேறுப்பட்டிருக்கின்றது. ஒருவருடைய வாழ்க்கை குடும்ப வட்டத்திற்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலைக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால் அம்மனிதரின் வாழ்க்கை ஏதோ ஒரு விதத்திலும் அளவிலும் சமூக முக்கியத்துவம் உடையவனவாகின்றது. இ. முருகையன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான ஓர் ஆளுமை. இந்த ஆளுமையின் தாக்கம் தமிழ் இலக்கிய உலகை வெகுவாக பாதித்துள்ளது.

இ. முருகையன் அவர்கள் தமது காலத்தில் ஆற்றல் மிக்க படைபாளியாக இருந்தமையினாலயே அவரது படைப்புகள் அவரை முக்கியமான கணிப்பிற்குரியவராக்கியதுடன் மாத்திரமன்றி நவீன தமிழ் கவிதை சம்பந்தமான பல சிக்கலான பிரச்சனைகளுக்கு ஒளி பாய்ச்சுவனவாகவும் அமைந்துள்ளன. தனிமனித அவல புலம்பல்களுக்கும் சமூக உணர்வுமிக்க படைப்புகளுக்குமான அடிபடை வேறுப்பாடு இதுதான். பாரதிக்குப் பின் வந்த கவிஞரான முருகையனில் பாரதி பரம்பரையின் பரிணாமத்தையும் காணக் கூடிதாக உள்ளது. அந்தவகையில் கவிஞர் இ. முருகையன் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான பாதையை வரித்து சென்றவர் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. யாவற்றுக்கு மேலாக அவர் தமிழ் அறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்கு சிந்தனையாளராகவும் அறியப்பட்டார்.

இ. முருகையனுடைய கருத்து சார்பின் வரலாற்றை விவரித்து நோக்குகின்றபோது அவை பல்வேறு பரிணாமங்களுக்குட்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். அவரது ஆரம்ப கால படைப்புகள் காந்தியம், வள்ளுவம், அறவொழுக்கம் என வெளிப்பட்ட அவரது சிந்தனைகள் ஜம்பதுகளின் பிற்பாதியில் மொழியுரிமை, சமூக முரண்கனை வெளிப்படுத்தும் உள்ளடக்கங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அறுபதுகளின் பின்னர் ஏற்பட்ட அரசியல் எழுச்சியி ஊடாக பொதுவுடமையில் நாட்டங் கொண்டவராக தன்னை வளர்த்துக் கொள்கின்றார். ஈழத்தில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில் தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.

பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்தவகையில் இன்று நேர்மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மாக்ஸியர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. இந்தப்போக்கின் தாற்பரியத்தினை நாம் இக்கவிஞரிடம் காணக் கூடியதாக உள்ளது.

சமூகத்தின் எண்ணற்ற முரண்களை நியாயப்படுத்தவோ சமரசப்படுத்தவோ முனையாத கவிஞர் இ. முருகையன் அவர்கள் வெறியாட்டு என்ற கவிதை நாடகத்தின் ஊடாக முரண்களின் தாற்பரியத்தை கவிவரிகள் கொண்டு சிறப்பாக தீடடியிருக்கின்றார்.

இனவாதம், இனவெறி என்பன கேவலமானதோர் பின்னணியில் மோசமானதோர் நிலையை எட்டியபோது இன அடக்குமுறைக்கு எதிராகக் கவிஞராகப் பரிணமிக்கின்றார். உழைக்கும் மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் பேரினவாதத்தை பெரிதும் சாடுகின்ற பண்பு கவிஞன் ஒருவனுக்கு இருக்கக் கூடிய ஆன்ம பலத்தையே எமக்குக் உணர்த்துவதாய் அமைகிருக்கின்றது.

இத்தகைய பலமான சிந்தனையை கொண்டிருந்த இ. முருகையன் அவர்களும் குறுகிய தமிழ் தேசியவாத சிந்தனையில் கவரப்பட்டு பல சந்தர்பங்களில் பல கவிதைகளை படைத்துள்ளமையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவொன்றாகும்.

இ. முருகையனுடைய இலக்கிய பங்களிப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவு முக்கியத்துவமானது அவர் வகித்த பதவிகளினூடக மேற்கொண்ட, சமூக நடவடிக்கைகள். அவர் ஆசிரியராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக கடமையாற்றிய காலத்தில் மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் இலக்கிய மன்றங்களை உருவாக்குகின்ற பணியினையும் மேற்கொண்டுள்ளார். அவருடைய தொழில்துறைசார்ந்த பங்களிப்பின் உச்சமாக கொள்ளத்தக்கது, அவர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பதிப்பாசிரியயராக கடமையாற்றிய காலமாகும். இக்காலகட்டங்களில் முன்னைய காலத்தினை விட மக்கள் இலக்கியங்கள் பாடத்திட்டமாக்கப்பட்டது. அத்துடன் கலைச்சொல் அகராதிகள் அதிகமாக வெளியிடப்பட்டன. கல்வி வெளியிட்டுத் திணைக்களத்தில் இவர் பதிப்பாசிரியராகக் கடமையாற்றிய காலகட்டம் பதிப்பு துறையில் ஓர் திருப்புமனையாகவே அமைந்திருந்தது. இவ்விடயம் விரிவான ஆய்வினை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.

கவிஞர் இ. முருகையனுடைய பிரிவினை ஒட்டி நினைவுப்பேருரைகள் அஞ்சலி உரைகள் இடம்பெறுவது ஆரோக்கியமானதாகும். இந்நிகழ்வுகள் அன்னாரின் பல்துறைசார்ந்த பங்களிப்புகளை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளன. இருப்பினும் அவர்தொடர்பில் செய்யவேண்டிய - செய்யக்கூடிய பங்களிப்புகள் பல உள்ளன. கவிஞரின் சகல படைப்புகளையும் உள்ளடக்கிய அடக்கத்தொகுப்பு ஒன்று இதுவரை வெளிவரைவில்லை. அவரது நினைவுதினத்தை முன்னிட்டு அத்தகைய தொகுப்பு ஒன்றினை வெளிக்கொணர வேண்டியது நமது கடமையாகும். அவ்வாறே அவரது பல்துறை சார்ந்த பங்களிப்பினை வெளிக்கொணர வேண்டியதும் அவசியமானதாகும்.

இ.முருகையன் தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடரல்லர். அவர் அத்தகைய அதிமானுடராகத் தன்னைக் கருதியவருமல்லர். வெறுமனே அவருக்கு வழிபாடு செய்வது வரலாற்றை பின்னோக்கித் தள்ளுவதுடன் அவரை சிறுமைப்படுத்துவதாகவும் அமையும். தவிரவும் அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகவோ, அல்லது பகிரங்கமாக எந்தவொரு அரசியற் கட்சியின் உறுப்பினராகவோ காட்டிக்கொண்டவர் அல்லர். ஆயினும் அவரது பல்துறைசார்ந்த பங்களிப்பு அவரை பொதுவுடைமை அரசியல் சார்ந்தவராகவும் அதுசார்ந்த இயக்கங்களுக்கு பலமான தத்துவார்த்தப் பங்களிப்பினை வழங்கிய சமூக விஞ்ஞானியாகவும் இனங்காட்டுகின்றது. இவ்விடத்தில் இவர் சீன இலக்கிய முன்னோடியான லூசுனுடன் ஒப்பு நோக்கத்தக்கவர். இந்தவகையில் இவர்குறித்த ஆழமான நுட்பமான ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையயாக உள்ளது.

உலகளாவிய ரீதியில் உழைக்கும் மக்கள் தம் அடையாளங்களை இழந்து நிற்கின்ற இன்றைய நாளில் கலை இலக்கியங்களும் மக்களின் நலனில் இருந்து அந்நியப்பட்டு நிற்பது தற்செயல் நிகழ்ச்சியல்ல. இத்தகைய முகடுதட்டிப்போனதோர் எல்லைப்பரப்பில் மீண்டும் ஒரு புனரமைப்புக்காக கலை இலக்கிய முயற்சிகளை எத்தனிப்புகளை மேற்கொண்டதில் கவிஞர் இ. முருகையனுக்குத் தனியிடமுண்டு.

பூப்பூக்காமலே சடைத்துவளர்ந்து பெருந்தோற்றம் காட்டி நின்றவர்கள் பலர். காய்ந்து கனிந்து அமைதியாக நின்றது முருகையன் என்ற பெருமரம். இவரது அன்பர்களாகிய நாம் இவர் சுமந்துவந்த பதாகையை தடம் புரளாத வகையில் முன்னெடுத்துச்செல்வதே இம்மனிதனுக்காய் நாம் ஆற்றும் புரட்சிகர அஞ்சலியாகும். 

- லெனின் மதிவானம்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It