“அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்டவனே!” என்று பாடித்துதித்த அடியார்கள் இன்று “அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலே!” என்று ஊழலின் பெருமையை உயர்த்தி உரைக்கும் காலம் இது. ஆண்டவன் சன்னதியில்கூட ஊழல் நிகழும் காலமும் இதுதான். கர்ப்பக்கிரகத்தில் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும் கடவுள் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் காலம்கூட இதுதான். ஆண்டவனுக்கு முன்னால் ஆதிசேஷனின் நீளத்தில் நீண்டு நிற்கும் பக்தர்கள் வரிசையை “பைபாஸ்” செய்யவேண்டுமா? ஒரு ஐந்து ரூபாய்க்கு அந்த ஆன்ம சுகமளிக்கும் சக்தி இன்று இருக்கிறது. “நீ எப்படியாவது போய்த்தொலையடா தமிழனே!” என்று கடவுளே கைவிரித்து விட்டபிறகு “நீ புலம்பி என்ன ஆகப்போகிறது?” என்று இந்தக்கட்டுரையைப் படிப்பவர்கள் சலித்துக்கொள்ளக்கூடும்.

Corruptionஎன்ன இருந்தாலும் படித்தவர்கள் இல்லையா நாம்? “படித்தவன் பாவம்செய்தால் பாவம், பாவம், அம்போ என்று போய்விடுவான்” என்று ஒருவன் சாபம்விட்டு அல்லவா போயிருக்கிறான்? இந்த அவலத்தை ஒரு சங்கெடுத்து ஊதிவைப்போம் என்ற கடமையுணர்வில் எழுதப்பட்டதுதான் இந்தக் கட்டுரை.

அண்மையில் தமிழக அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்திருக்கிறது. கணிசமான அளவில் ஊதிய உயர்வு கிடைத்திருப்பதில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அரசு ஊழியர்கள் நம்முடைய முதல்வரை சந்தித்து நன்றிகூறிய புகைப்படத்தில் அந்த இன்ப அதிர்ச்சி நன்றாகவே தெரிந்தது. ஊழியர்களின் முகத்தில் பரவிநின்ற மகிழ்ச்சி மெள்ள மெள்ள அவர்களை அலுவல்ரீதியாக சந்திக்கவரும் ஏழை எளிய மக்களின் முகங்களிலும் பரவவேண்டும் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள்.

ஆனால் அதே செய்தித்தாளின் அடுத்த இதழில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஒரு சார்பதிவாளரின் முகம் மறைத்த புகைப்படம் வெளியாகி இருந்தது. சார்பதிவாளருக்கு மட்டுமா இந்த நிலை? வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், காவல்துறை அதிகாரி, பொறியாளர், கருவூல அதிகாரி, பாஸ்போர்ட அலுவலக அதிகாரி என்று பிறைநிலவைப்போன்று முகம்மறைத்து போஸ்கொடுத்த புகைப்படங்கள் வெளியாகாத செய்தித்தாள்களும் இல்லை; செய்தி சேனல்களும் இல்லை. இந்த பத்திரிக்கைகளும் செய்தி சேனல்களும் செய்யும் குசும்பு வேலைக்கு அளவே இல்லை. முகம் மறைத்து போஸ்கொடுக்க மறுக்கும் இந்த அதிகாரிகளை துரத்திச்சென்று படம் எடுப்பதுடன் தங்களுடைய கடமை தீர்ந்துவிட்டதாக இந்த நிருபர்கள் நினைப்பது இல்லை. அதிகாரியின் அட்டகாசமான வீட்டையும் பலகோணங்களில் படமெடுத்து பொதுமக்களின் வயிற்றெரிச்சலை இவை வாரிக்கொட்டிக்கொள்கின்றன. இந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது ஏதாவது நோயின் வெளிப்பாடாக நிச்சயமாக இருக்க முடியாது. பெரிய வீட்டை பராமரிக்கவேண்டாமா? மனைவியின் ஆசையை பூர்த்திசெய்ய வேண்டாமா? சிலருக்கு துணைவியும் இருக்கலாம். அவரை கிணற்றில்கொண்டுபோய் தள்ளிவிட முடியுமா? தேவைகளும் ஆசைகளும் பெருகிப்போனதன் விளைவுதான் இந்த அவலங்களும் அவமானங்களும்.

ஏழை எளிய மக்களுடன் அதிகமான தொடர்புடைய வருவாய்த்துறையின் செயல்பாடு அதன் பாரம்பரிய பெருமைக்கு ஏற்றதாக இன்று இல்லை. சாதிச்சான்று, வருமானச்சான்று போன்ற பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான சான்றுகளைப் பெறவரும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்; காக்கவைக்கப்படுகிறார்கள். அன்றாடங்காச்சிகளாக இருக்கும் இவர்கள் அன்றைய கூலிவேலைக்குப் போவதைத் தவிர்த்து வருவாய்த்துறை அலுவலகங்களில் காத்துக்கிடப்பதை காணச் சகிக்கவில்லை. குறைந்தபட்சம் ஏழை எளிய மாணவர்கள் சம்பந்தப்பட்ட சான்றுகளை வழங்கும் அலுவலர்களாவது லஞ்சம் வாங்காமல் இருக்கலாம். “அரசாங்கத்தில் வேலை பார்த்தால் லஞ்சம் வாங்கலாம்” என்கிற எண்ணத்தை பிஞ்சுகளின் மனதில் விதைக்கக்கூடாது. “லஞ்சம் எப்போதும் தொடர்கதைதான்.....”என்ற புதிய பாடலுக்கு இது வழிவகுத்துவிடும்.

நிலத்தை வாங்குவதும் விற்பதும் அன்றாட நிகழ்வு. இந்த பரிவர்த்தனைகளை முறைப்படுத்தும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. மொத்த அலுவலகமே கூண்டோடு சிறை வைக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு; சன்னல் வழியாக லஞ்சப்பணத்தை ஊழியர்கள் வீசியெறிந்த சம்பவங்களும் உண்டு. ‘சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சளைத்தவர்கள் இல்லை நாங்கள்’ என்பதைப் போல செயல்படுபவை இந்த வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள். இங்கெல்லாம் தரகர்கள் துணையுடன் போனால் காரியம் எளிதில் முடியும் என்பது ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் தெரியும். ஒரு “எட்டு” போட்டுக்காட்டி லைசென்ஸ் வாங்கவும், ‘இப்போதே கழன்று விழுவோமா?....இன்னும் கொஞ்சதூரம்போனதும் விழுவோமா?’ என்ற நிலையில் கரும்புகையை காறித்துப்பிக்கொண்டு ஒடும் லாரிகளுக்கு தகுதிச்சான்று வாங்கவும் இடைத்தரகர்கள் இல்லாமல் இங்கெல்லாம் காரியம் நடக்காது.

Corruptionநிலங்களின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் ஒரு ஆவணமாகிய சிட்டா அடங்கல் பெறுவது, பட்டா மாற்றம் செய்வது போன்ற பணிகளுக்காக ஒவ்வொருநாளும் ஏராளமான பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகங்களை நாடிவருகிறார்கள். இவர்களின் அனுபவங்களை ஊடகங்கள் பேட்டியெடுத்து வெளியிட்டால் நமக்கெல்லாம் “அடி உதை பட்டாலும் பரவாயில்லை. ஆஸ்திரேலியாவிலேயே குடியேறிவிடலாம்” என்கிற எண்ணம் உண்டாகிவிடும். இதையெல்லாம் உணர்ந்த அரசு அவ்வப்போது குறைதீர்க்கும் கூட்டங்களை ஏற்பாடு செய்து காலையில் மனுக்களைப்பெற்று மாலையில் மனுக்களுக்கான உத்தரவை வழங்குகிறது. மாலையில் உத்தரவை வழங்கும் அதிகாரி மறக்காமல் புகைப்படம் எடுத்துக்கொள்வார். மறுநாள் அது செய்தித்தாள்களில் வெளியாகவேண்டிய பொறுப்பையும் அந்த அதிகாரியே கவனித்துக்கொள்வார். பெயரளவிற்கு வழங்கிய அந்த அரைகுறை உத்தரவில் இருக்கும் பிழையைத் திருத்துவதற்காக அந்த ஏழைக்குடிமகன் அதற்கப்புறம் அலைந்த அலைச்சல் எந்த புகைப்படத்திலும் வருவது இல்லை. அரசாங்கத்திற்குச் சொந்தமான சாலையை பட்டாபோட்டுக்கொடுத்த ஒரு அரைகுறை உத்தரவை வைத்துக்கொண்டு அந்த ஏழை என்ன பாடுபட்டிருப்பான் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்!

அரசாங்க அலுவலலகங்களில் தேங்கிக்கிடக்கும் கோப்புகளுக்கு கால்முளைத்து ஊர்வலமாகப் போனால் எப்படியிருக்கும் என்று ஒரு கவிஞன் கற்பனை செய்து பார்த்தான். அந்தக்கோப்புகள் கால்முளைத்து வீதியில் இறங்கிப்போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் சிகப்பு நாடாவினால் அதைக்கட்டி வைத்திருக்கிறார்கள் என்று அவனே தீர்ப்பும் சொன்னான். லஞ்சப்பணத்தை எதிர்பார்த்து அரசு அலுவலகங்களில் முடக்கப்பட்டிருக்கும் எத்தனையோ கோப்புகள் இன்று எலிகளுக்கும், பூச்சியினங்களுக்கும் வாழ்விடமாகிப் போயிருக்கின்றன. ஓர் அலுவலகத்தில் காலியான நாற்காலிகளின் மேல் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறிகளின் எண்ணிக்கையை வைத்து அந்த மேல் அதிகாரியின் யோக்கியதையை நீங்கள் கணித்துவிடலாம்.

பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ஒரு வகை என்றால் அதிகாரிகளிடமே லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதெல்லாம் இருந்தால்தானே அது ஒரு முழுமையான அரசாங்கம் ஆகும் என்று நீங்கள் முனகுவது எனக்குக்கேட்காமல் இல்லை. ஓர் அதிகாரியின் பயணப்படி பட்டியலை ‘ஓகே’ செய்யும் இன்னொரு அதிகாரி லஞ்சம் வாங்குவதில் என்ன தவறு என்கிறீர்கள். நான் பொய்யான பயணப்படி பட்டியலை இங்கு சொல்லவில்லை. உண்மையான பயணப்படி பட்டியலுக்கு லஞ்சம் வாங்கக்கூடாது என்றுதான் கூறுகிறேன். ‘பி எஃப்’ பணத்தில் லோன் கேட்டு நிற்கும் தன்னுடைய சக ஊழியரிடமே லஞ்சம் வாங்கும் ஊழியர்களும் இந்த அரசாங்கத்தில்தான் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அரசு இப்போது தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திருக்கிறது. ஊதிய உயர்வு கணக்கை தயார்செய்து கொண்டு ஒர் ஊழியர் கருவூலத்திற்குப் போவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உரிய காலத்தில் அவரது கணக்கை எந்தவித எதிர்பார்ப்புமின்றி கருவூல அலுவலர் ‘ஓகே’ செய்துவிட்டதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அடுத்து நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், “அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வால் ஊழல் குறைந்துபோய்விட்டது” என்று நீங்கள் கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்! 

- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It