திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக பெரும் பான்மையாக உள்ள இசுலாமியப் பகுதியாக மேலப்பாளையம் (பழைய பெயர் மங்கை நகர் பாளையக்காரர்களின் மேற்கு பகுதியில் அமைந்த பாளையமானதால் மேலப்பாளையமாயிற்று. இதனை, ஆலிப்புலவர் மிஃராஐ; மாலையில் ‘பொருள்வளர் மங்கை நகர்ப்பதியான்’ என்றுறைக்கின்றார்), பொட்டல்புதூர், வீரவநல்லூர், பத்தமடை, கடையநல்லூர், ஏர்வாடி போன்ற பகுதிகளை குறிப்பிட்டு அடையாளப்படுத்தினாலும் பரவலாக எல்லா இடங்களிலும் இசுலாமியர் வாழும் ஏரியாவாகவும் தெருக்கலாகவும் பரந்து விரிந்துள்ளதைக் காண முடிகிறது

 குமரியும் நெல்லையும் முதல் இறைநேசர்கள் அடக்கவிடங்கள் இருக்கின்றது என்ற கல்வெட்டு குறிப்புகள் உள்ளது. இதனை, “குமரி மாவட்டத்தின் கோட்டாறு நகரில், ஈராக் நாட்டு கர்ஸிம் (இறைநேசர்) அவர்களுடைய அடக்கத்தலம் உள்ளது. அதில் ஹிஜ்ரி4 (கி.பி.624) என்று குறிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோதரிஸா மலையில் உள்ள அப்துல்ரஹ்மான் (இறைநேசர்) அவர்களுடய அடக்கத்தலத்தில் ஹிஜ்ரி8 (கி.பி.628) எனப் பொறிக்கப்பட்டுள்ளது. நபிகளாரின் காலத்திலேயே திருமறையின் ஒளியை ஆர்வத்துடன் தமிழுகத்திற்கு ஏந்தி வந்த இறைநேசர்களின் முதல் அணியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதில் ஐயமில்லை”1 என்று கூறுவதன் மூலம் நெல்லை இரண்டாமிடம் பெற்று விளங்கி உள்ளது

 இசுலாம் இந்திய மண்ணில் இரண்டற கலந்து ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அன்னிய பிரதிநிதியாகவே பார்க்கும் வழக்கத்தில் உள்ளது. இசுலாமியப் பண்பாட்டு வாழ்வியலுடாக அவர்களின் சமூக கட்டமைப்பைக் காணும் தோறும் தமிழ்ச் சமூக பண்பாட்டு தொல் வாழ்வியல் வழிபாட்டு முறைமைகள் ஊடற கலந்து புதிய சமய அடையாளமாக வெளிப்பட்டு நிற்கிறது. அரபு மண்ணிலிருந்து வந்தேறிய மதமாக அரபிய இலக்கிய ஆளுமைக் கலவைகள் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் புகுந்து தமிழ் இலக்கிய பரப்பில் புதிய இலக்கிய படைப்பாக்க பாணியினைச் செய்துள்ளது.

 அரேபிய பாரசீக மொழித் தாக்கமும் இசுலாமிய மத உணர்வும் தமிழ் இசுலாமியப் படைப்பு வெளியில் தெக்கி நிற்கும் ஆளுமை உணர்வுகளாக தமிழ் அரபு இலக்கிய வடிவமாக உள்ளது. வெளியே உள்ள பிற சமயத்தினராலும் சமூகத்தினராலும் புரிந்து கொள்ள முடியாது போனதற்கு அரபுத் தமிழின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது எனலாம். தமிழ் இசுலாமியப் படைப்பு வெளியை அலங்கரித்தவர்களில் உமறுப்புலவர், இராமநாதபுரம் குணங்குடி மஸ்தான் சாகிபு, மதுரை வண்ணக்களஞ்சியப் புலவர், சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் இவர்களைக் கடந்தும் பல கவிஞர்கள் (சூரத்துஸ்ஹிஅரா), இறைநேசர்கள் (அவுலிகள்), சூஃபிகள் தமிழ் இலக்கிய வெளியில் காப்பியங்கள், சிற்றிலக்கியங்களான கிஸ்ஸா(கதை சொல்லல் என்ற முறையில் கூறுவது), நாமா(நாமே என்ற பாரசீகச் சொல் தமிழில் நாமா என்று மருவி உள்ளது. இச்சொல் கதை,வரலாறு, நூல் என்ற பல பொருளைத் தருகின்றது), பரணி இலக்கியம் போல படைப்போர் என்னும் இலக்கியம், மசலா (கேள்வி–பதில் கொண்டதாக அமைவது), முனாஜாத்து (ஆண்டவனையும் அவனது தலை சிறந்த அடியவார்களையும் அருள்புரியுமாறு பாடுவது) போன்ற அரபு, பாரசீக இசுலாமிய அறிமுகங்கள் தமிழுக்கு கிடைத்தன. தமிழ் சிற்றிலக்கியங்களில் காட்டப்படும் போதை வஸ்துவான காம ரச வாத போக்குகள் இசுலாமிய சிற்றிலக்கியங்களில் பயன் படுத்தப்படவில்லை. அது முழுக்க முழுக்க இறைநேசம் தேடி அன்புருகவும் இறைவனை நாடும் கனிவும் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இவைமட்டுமின்றி ஞானக் கவிதைகளான சூஃபி கவிதைகள், தத்துவங்கள், கதைகள் எனப் பல தந்து சென்றுள்ளனர். நவீன இலக்கிய காலத்தில் உரைநடையிலான சிறுகதை, புதினம் என்னும் தளங்களுக்குள்ளும் கட்டுரை வடிவங்களுக்குள்ளும் தமிழ் இலக்கியப் பரப்பில் நீண்ட வரிசையுடன் வலம் வருகின்றனர்.

சூஃபிசம்

 சூஃபி என்பதை ஆங்கிலத்தில் ஆரளடைஅ ஆலளவைஉ (முஸ்லிம் மிஸ்டிக்) எனப்படுகிறார்கள். இவர்களை இசுலாமிய ஞானிகளாக, மெய்ஞ்ஞானிகளாக, முஸ்லிம் சித்தர்களாக, ஆத்ம ஞானிகளாக, இறைநேசர்களாக, இறையடியார்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இதனை, “சூஃபி என்னும் அறபுச் சொல்லுக்குப் பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. ஆன்மீக ஞானத்திற்கு அறபியில் தஸ்வ்ஷஃப் என்னும் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். தஸ்வ்ஷஃப என்னும் சொல் ‘தூய்மை’ எனப் பொருள்படும் ‘ஸஃபாவத்’ என்னும் அறபு அடிச் சொல்லில் இருந்து வந்தது என்பர். ‘ஸஃபாவத்துல் கல்பு’ என்றால் உள்ளத் தூய்மை என்று பொருள். இதிலிருந்து தோன்றிய ‘தஸவ்வுஃப்’ எனப்படும் இஸ்லாமிய ஆத்ம ஞான வழியில் அடியெடுத்து வைப்பவர் ‘சூஃபி’ என்று அழைக்கப்பட்டார்” 2 இதனையே எச்.ஷாஹூல் ஹமீது, ‘இஸ்லாமிய ஆன்மீக நெறிக்கு சூஃபித்துவம் என்று சொல்லலாம்’ என்கிறார் . மேலும், “தஸவ்வுஃப் அல்லது இஹ்ஸான் அல்லது சூஃபித்துவம் என்பதன் சாராம்சம் இதுதான். உணர்வுகளை அழித்துக் கொள்ளுவதில் சூஃபித்துவம் நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக உணர்வுகளை முறைப்படுத்தி, தள்ளுவன(ஹராம்) தள்ளி, கொள்ளுவன (ஹலால்) கொண்டு இறைவனை உணர வழிகாட்டுவது” 3

 இசுலாம் தமிழகத்திற்குள் பரவியதற்கு காரணம் அரேபிய வணிகர்களும் சூஃபிகளுமே இருந்திருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்திருக்கிறது. இதனை வலுப்படுத்தும் ஆதாரமாக, “இஸ்லாத்தின் ஆழ்ந்த பொருளை அதன் போதனைகளை விளக்கியதிலும், சிறந்த முறையில் எடுத்தியம்பியதிலும் சூஃபிகளைப் போல உயர்ந்த பங்களிப்பை முஸ்லிம் அறிஞர்களோ, உலமாக்களோ, சட்டநிபுணர்களோ செய்யவில்லை” 4 என்ற மேற்கோளை எடுத்துக் கொள்ளலாம். சூஃபிகள் வழியே பரவியதினால் தூய்மை, அன்பு, மனித நேயம் மிக்கவரானதால் அவர்களுள் இறந்தவர்கள் அடக்கவிடங்கள் தர்ஹாக்களாக மாறி வழிபடப்பட்டு வருகிறது. தர்ஹாக்கள் நடைமுறையில் இறைவழிபாடல்ல என்றாலும் இதுவே சமய நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்குகின்றது.

 பற்றற்ற நிலையில் ஏக இறைவன் ஒருவனே அவரை வழிபடும் முறையோடு ஏகத்துவத்தின் சாரத்தை முதலில் மொழிந்தவர்கள் இவர்கள் தான். ஐந்து வேலை தொழுகை செய்தல், நேன்பு நேற்றல், இறைவனை அண்டி எப்பொழுதும் இருந்தல் போன்ற நிலைகளை ஞான வழி முறையில் தூய்மையான சிந்தனைச் செயலுடன் இறைநாட்டம் புரிந்தனர். இவை,

1,         தாஅத் (கீழ்ப்படிந்து நடந்தல்)

2,         ஷரீஅத் (மார்க்க சட்டம்)

3,         தரீக்கத் (பயிற்சி நிலை)

4,         ஹகீக்கத் (இறைவனின் நெருக்கத்தைப் பெற்ற உண்மையாதல்)

5,         மஃரிபத் (இறைஞானம்)

6,         அகீத்த (இறைவனின் மீது கொள்ளும் அளவிலா அன்பு)

இந்த ஆறு நிலையில் தான் ஏக இறைவனைக் கண்டடைந்தனர்.

சூஃபிகள்

 மனம், ஞான சிந்தனையில் மொழியை நூற்கும் மெய்ஞ்ஞான பற்று, உயிர் தேடல், ஒளிப் பொருள் தேடல், மவுன நிலை, தூய்மை என்பன போன்ற சூஃபிகளின் வாழ்வு. உலகம், உயிர், மனம் பற்றிய கருத்தாக்கத்தோடு ஐீவராசிகளின் வாழ்க்கைத் தேடலை சூஃபிகள் மெய்மையைக் காட்டி நிற்கின்றனர். தூய்மைப்படுத்தல் என்கிற உலகாயத்தை முன் வைத்து தூய பேருண்மையைத் தரிசிப்பது என்பதான நடவடிக்கையைக் கோட்பாட்டுருவமாக்கினர்

 ஹெச்.ஜி.ரசூல் “ துன்னுன் மிஸ்ரி(கி.பி.769-862), மன்சூர் ஹல்லாஜ்(கி.பி.858-922), கஸ்ஸாலி(கி.பி.1058-1111), முஹயத்தீன் இப்னு அல்அரபி(கி.பி. 1165), அப்துல் காதர் ஜிலானி(கி.பி.1078-1166), காஜா முகீனுதீன் சிஷ்தி(1141-1236), மௌலவி ஜலாலுத்தீன் ரூமி(1207-1273) என உலக அளவில் சூபி ஞானிகள் முக்கியத்துவம் பெற துவங்கினர். இந்திய மண்ணில் அலிய்யுப்னுல் ஹஜ்வீரி, பதீதுத்தீன் கஞ்சேகர்(1175-1265) அலாவுத்தௌலா சிம்னானி(1261-1336) ஷெய்கு நிஜாமுதீன் அவுலியா(1325), ஷா ஒலியுல்லா, ஷராபுத்தீன் அகமது மனோ” 5 என்பனப் போன்றோர்கள் இருந்துள்ளனர் என்கிறார்.

 தமிழ் நாட்டில் காலத்தால் முந்திய சூஃபியாக காயல்பட்டினம் சையது அஹமது வலியுல்லாஹ் (இறப்பு கி.பி.1038) திருச்சியில் இஸ்லாம் பரவ காரணமாக இருந்த நத்தர் வலியுல்லாஹ் (இறப்பு கி.பி.1226) இவரைப் பற்றிய ஓர் கட்டுரையை செ.சு.நா.சந்திரசேகரன், ‘இசுலாமியர்களின் தர்கா வழிபாடு’ என்னும் தலைப்பில் தன்னனானே நாட்டுப்புறவியலுக்கான காலாண்டிதழ், ஜனவரி-மார்ச்,1999-இல் வெளிவந்துள்ளது. முத்துப் பேட்டை ஷேக் தாவூத் வலியுல்லாஹ். நாகூர் சையது ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ் போன்றோர் சூஃபி தத்துவவாதிகளாகவும். தக்கலை பீர்முகம்மது அப்பா வலியுல்லாஹ், குணங்குடி மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் போன்றோர் சூஃபிக் கவிஞர்களாகளும். ஆத்தாங்கரை சையது அலி ஃபத்திமா, தென்காசி ரசூல் பீவி, கீழக்கரை ஆசியா உம்மா போன்றோர் பெண் சூஃபியாகவும். தர்ஹாக்களில்லாத சூஃபிகளாக யாகோபு சித்தர், இளையான் குடி கச்சிபிள்ளை அம்மாள் போன்றோர் உள்ளனர்.

 தக்கலை பீர் முகம்மது அப்பா என்று அழைக்கப்படும் மெய்ஞ்ஞானி, சூஃபி தத்துவவாதி, சூஃபிக்கவிஞர் என்று குறிப்பிடப்படுபவர். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் அல்லர். இவர் முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதியான தென்காசியில் பிறந்தவர். உலக ஞானம் பெற நாடோடியாக திரிந்து தவக்காலங்கள் பல நூற்று, தக்கலையில் சமய ஞானம் பரப்பி மறைந்த மெய்ஞ்ஞானியாவார். இவர் பிறந்த இடத்தைப் பற்றி இவர் பாடிய பாடல் ஒன்றில் இவரே குறிப்பிடுகிறார். இந்த வெண்பாவைக் காண்க,

 “தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்

 தன்பாலன் இக்கதையைச் சாற்றினான்- வெங்காயம்

 சுக்கோ சிவனிருப்பான் சுரோணிதமோ அல்லவிஞ்சி

 ஹக்கோஎன் றுள்ளறிந்தக் கால்” 6

 இவர் தென்காசி வட்டத்தைச் சேர்ந்த கனிகபுரம் சிற்றூரில் வாவாஞ்சியின் மகன் சிறுமலுக்களுக்கு புதல்வராக பிறந்தார் என்று தெளிவுரையில் கூறப்படுகிறது. இதனால் பீர்முகம்மது அப்பாவை திருநெல்வேலியில் பிறந்தவர் என்று சேர்த்து கொள்வதில் எந்தத் தப்புமில்லை என்றே நினைக்கிறேன். தென்காசி பாண்டியர் ஆட்சியின் கீழ் இருந்தாலும் தென்காசியின் பக்கமுள்ள சில பகுதிகள் தென்திருவிதாங்கூர் ஆட்சியில் இருந்துள்ளது. இலஞ்சி, இலத்தூர்,சுரண்டை பக்கமுள்ள சாம்பவர்வடகரை வரை இருந்துள்ளதை ஆதாரங்கள் உள்ளது.

 மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பாவின் நூல்களாக, ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞானப்புகழ்ச்சி, ஞானமணிமாலை, ஞானக்குறம், ஞானரத்தினக்குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞ்ஞானச்சாரனூல், ஞானநடனம், ஞான முச்சுடர்ப்பதிகங்கள், ஞான விகட சமர்த்து, மஃரிபத்து மாலை, மெய்ஞ்ஞான அமிர்தக்கலை, மிகுராசு வளம், ஈடேற்றமாலை, பிஸ்மில் குறம், திருநெறி கீதம், குறமாது, ஞானக் கோவை, ஞான ரத்னா வளி, இவை தவிர இவர் எழுதியதாக ஞானத்திறவுகோல், ஞானசித்தி, ஞான உலக உருளை, ஞானக்கண், ஞான மலை வளம், மெய்ஞ்ஞானக்களஞ்சியம், ரோசுமீசாக்குமாலை, முதலியனவை கருதப்படுகின்றன.

 மேலும் இதைப்போல சூஃபி கவிஞராக அதுவும் பெண் சூஃபிக் கவிஞராக தென்காசியில் ‘இறசூல் பீவி, ஹக்மா, கதீஜா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்’ வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுள் இறசூல்பீவி எழுதிய நூலாக, ஞானாமிர்த சாகரம், கப்பல் சிந்து, தன்னிலை ஆனந்தக் கும்மி உள்ளது. இவர்களைப் போல கீழக்கரை அல்ஆரிபு செய்யது ஆசியா உம்மா மெய்ஞான தீப இரத்தினம் என்ற நூலை எழுதியுள்ளார். இளையான் குடி கச்சிபிள்ளையம்மாள் என்பவர் மெய்ஞான மாலை, மெய்ஞானக்கும்மி, மெய்ஞ்ஞானக்குறவஞ்சி, மெய்ஞ்ஞான ஊஞ்சல் என்ற நூல்களையும் எழுதியுள்ளார். மைமூன் போன்ற பெண் சூஃபிகளும் வாழ்ந்திருக்கின்றனர்.

 பழைய திருநெல்வேலியாக இருந்தால் ஆற்றாங்கரைப் பள்ளி வாசலில் கி.பி. 1629 யில் அடக்கப்பட்டிருக்கும். ஆற்றாங்கரை நாச்சியார் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வி செய்யதலி பாத்திமாவையும் காயல்பட்டினத்தில் அடக்கப்பட்டிருக்கும் சையது அஹமது வலியுல்லாஹ்வையும் சேர்த்து கொள்ள வேண்டியதிருக்கும்.

 மச்சரேகைச் சித்தர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். மது.ச. விமலானந்தம் நெல்லை மாவட்டம் காலங்குடியைச் சேர்ந்த மச்சரேகைச் சித்தர் என்று அழைக்கப்படும் இசுலாமிய சூஃபி, இவரது இயற்பெயர் செய்யது அப்துல் வாரிது ஆலிம் மௌலான ஐதரூஸ். இவரதுகாலம் 1842-1951வரை ஆகும். இவர் காருண்ய சதகம், முகைதீன் சதகம், முனாஜத்து சதகம், வேதாந்த சதகம், சிதானந்த சதகம், மோட்ச சதகம், காரண சதகம், மெய்ஞ்ஞான சதகம், பூரண சதகம், பேரின்ப சதகம், ஆகிய பத்துச் சதகங்களைப் பாடியுள்ளார். மேலும், இத்தொகுப்பு முழுவதும் ‘காலங்குடி மச்சரேகைச் சித்தரின் திருப்பாடல்கள்’ என்ற பெயரில் தமிழ்ப் பண்டிதர் ச.கந்தசாமி முதலியாரால் பார்வையிடப்பட்டு 1928ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீமஹந் தேவஸ்தான அச்சகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதைப்போல காலங்குடியிருப்பு மீரான் கனிப்புலவர் செய்யது முகம்மது புகாரி பிள்ளைத்தமிழ், கொம்பில்லா வண்ணம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் மட்டுமன்றி இவரைப் போன்ற ஞானிகள் உள்ளதை மது.ச. விமலானந்தம் ஒரு சிறுபட்டியலைத் தருகிறார். இதனை கீழே காண்க

 “அய்யம் பேட்டை அப்துல் கனிசாகிபு (ஞானாந்த ரத்தினம்): இலங்கை செய்கு முஸ்தாபா(மெய்ஞ்ஞானத் தூது): செய்யிறு முகம்மது காதிறு (ஞானப்பிரசன்னாக ரத்தினம்): வாலை மஸ்தான் சாகிபு (ஞான வாக்கியம்): செய்கு முகம்மது அப்துல்லா சாகிபு (மெய்ஞ்ஞான மனதலங்காரப் புகழ்ச்சி): செய்யிதுஅலிவாலை குருமஸ்தான் (ஞான ஒப்பாரி): குன்னாலி செய்கு முகியித்தின் சாகிபு (ஞானரத்தின சாகர மதாரியா) போன்ற புறு ஞானிகளும் குறிப்பிடத் தக்கவர்கள்”7 என்கிறார்.

மேலப்பாளைய இசுலாமியக் சூஃபிகள், கவிஞர்கள்

 காதிரு முஹியித்தீன் என்பவரின் உபதேச ரத்தினம் என்னும் நூல் 1901யில் அபூபக்கர் புலவர் பொருளுதவில் வெளிவந்துள்ளது. செய்யது முஹியித்தீன் கவிராயர் முகியித்தீன் பிள்ளைத்தமிழ், நவநீதபுஞ்சம் (முனாஜாத்து) என்ற நூல்களை எழுதியுள்ளார். காளை ஹஸனலிப்புலவர் என்பவர் கல்வத்து மாலை, ஹீசைன் படைப்போர், நபிகள்நாயகம்(ஸல்) பெயரிலும் முஹ்யத்தீன் ஆண்டகைப் பெயரிலும் மீறான் சாகிபு ஆண்டகைப் பெயரிலும் பூவடிச்சிந்தும் பாடியுள்ளார். மேலும், பஞ்சரத்தினத் தாலாட்டு, பஸீரப்பா மாலை இவை மட்டுமின்றி பல அரபுப்பாடலுக்கு தமிழாக்கம் செய்துள்ளார். தனி பாடல்களான பிராத்தனைப்பா, கல்வத்து நாதா, நாயகமாலை இயற்றியுள்ளார்.

 மீரான் சாகிபுப்புலவர் என்பவர் பாத்திமஸ்த்துஜஸ்ஸஃனா (பாத்திமா நாயகம் பிள்ளைத்தமிழ், ரசூல் நாயகம் பிள்ளைத்தமிழ் எழுதியுள்ளார். ஷாகுல் ஷமீதுப் புலவர் என்பவர் ஜயலானிய்யா பிள்ளைத்தமிழ், முகைதீன் ஆண்டவர் பேரில் தாய் மகள் ஏசல், நபி நாயகம் பேரில் தாய்மகள் ஏசல், எட்டிக்குடி ஏசல், சங்கீதக் கீர்த்தனை மஞ்சரி, ஆனந்த சாஹித்யம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

 மேலப்பாளையத்தில் இறைநேசர்கள் அடங்கியுள்ள 42 தர்காகள் உள்ளன. இவற்றுள், பசீர் அப்பா ஒலி, அபூபக்கர் தங்கள், ஞானியார்அப்பா, அப்துர்ரஹ்மான் தங்கள், ஜமால் செய்யது முஹம்மது ஆலிம் சாஹிப், கல்வத்து நாயகத்தின் கலீபாவான யூசுஃபு நாயகம், பச்சை ஒளலியா, மஸ்தான் ஒளலியா, ஹாஜி சாகுல் ஹமீது ஒளலியா ஆகியோர்களில் பசீர் அப்பாவும் ஜமால் செய்யது முஹம்மது ஆலிம் சாஹிப், சூஃபிகளாக வாழ்ந்தவர்கள்.

 ஹெய்க் பஷீர் அப்பா என்பவர் நாகூர் ஹாகுல் ஹமீது, நாயகம் பிள்ளைத்தமிழ், மெய்ஞ்ஞான சதகம், மெய்ஞ்ஞான ஆனந்தக் களிப்பு, நாகூரர் பிள்ளைத்தமிழ், வண்ணப்பாக்கள், கப்பல் பாட்டு, ஞான இசைப் பாடல்கள் போன்றன எழுதியுள்ளார். இவர் குழந்தையாக இருக்கும் போது வைசூரி நோயால் கண் பார்வை இழந்தவர். இயற்பெயர் முஹம்மது முஹ்யித்தீன் என்பதாகும். இவரைப் பற்றி மேலப்பாளையம் சேர்ந்த ஜமால் செய்யது முஹம்மது ஆலிம் என்பவர் ஞானப்புலவர் என்ற பாடலும் பஸீர் அப்பா மாலை என்ற நூலையும் எழுதியுள்ளார். இசுலாமியச் சதக நூல்களில் முதல் சதகமும் பழமையான சதக நூல் இவர் எழுதியது தான். இதனை, “மெய்ஞ்ஞானச் சதகம்’ கி.பி. 1801 இல் மேலப்பாளையத்தைச் சார்ந்த தக்கடி ஷெய்கு பஸீர் லெப்பை கலீபா என்பவரால் பாடப்பட்டது. இச்சதகத்தை அடுத்து ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கு இஸ்லாமியத் தமிழில் எந்தவொரு சதகமும் தோன்றவில்லை”. 8 என்று கூறிப்பிடும் போது முதல் இசுலாமியச் சதக நூல் தோன்றிய இடமாக மேலப்பாளையத்தைக் கூறலாம். மேலும், பஸீர்அப்பா என்னும் இன்னொருவர் ஷாஹில் ஹமீது பிள்ளைத்தமிழ் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலே குறிப்பிட்ட பசீர் அப்பாவும் இவரும் ஒருவர் தானா தெரியவில்லை. சமாயினா யூசுபு லெப்பை என்பவர் ரஹ்மான் முனாஜத்து என்ற ஒன்றையும் எழுதியுள்ளார். சதக்கத்துல்லா அப்பா என்று அழைக்கப்படடவர் பிறந்த இடம் இந்த மேலப்பாளையம் தான்.

 இசுலாமிய சமய வரலாற்றை 743 செய்யுட்களில் மிஃராஜ் மாலை என எழுதிய ஆலிப் புலவர் மேலப்பாளையம் சேரன்மாதேவி வழியின் இடையில் உள்ள மேலச்செவலில் பிறந்து, பாளை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வாய்க்கால் பக்கம் அடக்கத்தலமாகி உள்ளார்.

 கடையநல்லூரில் மக்தூம் ஞானியார் தர்ஹா ( ராணிமங்கம்மாள் கொடுத்த தாமிரப் பட்டயம் இன்றளவும் தர்ஹாவில் பாதுகாக்கப்படுகிறது) ஷெய்ஹீனா வலியுல்லா தர்ஹா, மஸ்வூது நாயகம்(ரஹ்) தர்ஹா, கலந்தர் மஸ்தான் தர்ஹா, ஷெய்கு சிந்தா மதார் தர்ஹா, மாகன் துராப் ஸைபுல்லா ஹாஜா(ரஹ்) தர்ஹா, மல்கர்ஷா வலியுலடலாஹ் தர்ஹா, கல்வத்து நாயகம்(ரஹ்) தர்ஹா, கல்தைக்கா, அஷ் ஷெய்ஹ{ஹாஜா முஹ்யித்தீன்(ரஹ்) தர்ஹா, செய்யது அப்துல்லா கலீபா சாகிபு தர்ஹா, பீர்முகம்மது தர்ஹா (தக்கலை ஞான மேதை நினைவாக அமைந்துள்ளது), நாகூர் ஆண்டவர் நினைவு தர்ஹா ஆகியன உள்ளது.

 தமிழ் இசுலாம் பரப்பு வெளியில் சூஃபிகளின் தத்துவங்களும் கவிதைகளும் தமிழ் பரப்பில் ஞான தத்துவங்களாக இடம் பெற்று நிற்கின்றனர். நாட்டார் சார்ந்த பண்புடன், அன்பு கருணை அரவணைப்பு கொண்டவர்களாக விளங்கியுள்ளனர். மேலும் இசுலாமிய இறைநேசர்களாகவும் படைப்பாளிகளாகவும் சமூக நல்லிணக்கணத்தை பறைசாற்றி சென்றுள்ளனர்.

குறிப்புகள்

  1. எஸ்.எம். கமால், தமிழகத்தில் முஸ்லிம்கள்,ப.12
  2. உ.அலிபாவா, சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு, ப.57
  3. எச்.ஷாஹ{ல் ஹமீது, தமிழகத்தில் சூஃபித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், (எச்.ஹாமீம்முஸ்தபா, (தொ.ஆ.), சூஃபிகள் தர்ஹாக்கள்-சில மாற்று உரையாடல்கள);, ப.11
  4. மேற்கோள்: மேலது, பக். 13-14
  5. ஹெச்.ஜி.ரசூல், சூபி விளிம்பின் குரல்,ப.38
  6. கா.முகம்மது பாரூக்,(பதி), மெய்ஞ்ஞானி முகம்மது அப்பா இலக்கிய ஆய்வுக் கோவை,ப.154
  7. மது.ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், ப.409
  8. உ.அலிபாவா, மு.க.நூ.,ப.45

பிற நூல்கள்

ஆ.மு.செய்யது அப்துல்காதர், மேலப்பாளையத்து இறைநேச செல்வர்கள்-வலிமார்கள்

கா.ஜா. மைதின், மேலப்பாளை முஸ்லிம்களின் வரலாறு

- முனைவர் ச.இளங்கோமணி,
உதவிப் பேராசிரியர்,
தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி,
பாளையங்கோட்டை.

Pin It