அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது தேர்தலுக்குப் பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் தங்களுடைய கல்விக்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு சார்பில் எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லையாம். அதிமுக ஆட்சியிலும் இதே பிரச்சினை இருந்ததாம். இந்தச் செய்தி தமிழகத்துப் பெற்றோர்கள் காதில் தேன் பாய்வதுபோல் இருக்கும் என்று அரசு நினைக்கிறது. ஆனால் ஏமாளித் தமிழர்களின் காதில் பூ சுற்றும் வழக்கமான வேலை இது.

Govt. schoolஅரசின் இந்த அறிவிப்பின் மூலம் தனியார் பள்ளிகள் அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் பிரச்சினையில் திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் என்பதை அரசே சொல்லாமல் சொல்லுகிறது. இவர்களின் கள்ளக்கூட்டணி எதற்காக? யாரைக் காப்பாற்ற?

இந்தப் பிரச்சினை குறித்து சிட்டிபாபு கமிட்டியின் அறிக்கை பெறப்பட்டு அதை நடைமுறைப்படுத்தினார்களாம். விவகாரம் கோர்ட்டுக்குப் போயிற்றாம். கோர்ட்டு சொன்ன தீர்ப்பில் “தனியார் பள்ளிகள் அள்ளிக் குவிக்கும் கட்டணம் ஆனாலும் சரி, ஆசிரியர்களுக்கு விட்டெறியும் சம்பளமானாலும் சரி..... அது அவர்களுடைய உரிமை” என்று சொல்லப்பட்டதாம்.

பொதுமக்களின் கஷ்டத்தை தோள்கொடுத்து தாங்கவேண்டிய அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததா இல்லையா? அரசு கோர்ட்டிற்கு அளிக்க வேண்டிய பதில் மனுவை தாக்கல் செய்ததா இல்லையா? இல்லையெனில் ஏன்? யாரைக் காப்பாற்ற? கோர்ட்டு தீர்ப்பினால்தான் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கமுடியாமல் போயிற்றாம். மாவட்ட வாரியாக அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் அமைத்திருப்பதாகவும் அந்தக் குழுக்களின் நடவடிக்கையினால் தனியார் பள்ளிகள் அதிகமான கட்டணம் வசூலி ப்பது பெருமளவில் தடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசு அறிவிப்பு கூறுகிறது.

அரசின் முன்னெச்சரிக்கை பாராட்டிற்குரியது. அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுக்களின் செயல்பாட்டால் அதிகமான கட்டணம் வசூலிப்பது பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கிறதாக நாமும் நம்புவோம். அதெல்லாம் சரி....... எந்தெந்த ஊர்களில் எந்தெந்த பள்ளிகளில் இந்த அதிகாரிகள் தலையிட்டார்கள்? யார் யாருக்கு நிவாரணம் கிடைத்தது என்கிற விவரத்தையும் கொசுறாக வெளியிட்டால்தானே அரசின்மீது நம்பிக்கை பிறக்கும்?

நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பிறகு அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறதாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்த சட்டரீதியான நடவடிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்பது அந்த அய்யனார் சாமிக்குத்தான் வெளிச்சம்.

அரசின் இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருதவும் இடமுண்டு. இது தேர்தல் காலம். கள்ளப்பணம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யும் காலம். தேர்தலுக்கு முந்தைய இரவில் கால் முளைத்து பதுங்கிப் பதுங்கி கள்ளப்பணம் தவழும் காலம். பிரியாணி விருந்தில் இலைக்கு அடியில் அந்தப் பணம் ஒளிந்துகொள்ளும் காலம். தனியார் பள்ளிகளின் கள்ளப்பணத்தை கள்ளத்தனமாக கவர்ந்திழுக்கும் மிரட்டலாகக்கூட இந்த எச்சரிக்கையை நாம் கருதலாம்.

கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் எல்லாம் மார்ச் மாதத்திலேயே ஆண்டுவிழா நடத்தி.... அதிகாரிகளை அழைத்து அன்பளிப்பு கொடுத்து... ரிகார்டு டான்ஸ் போட்டு விளம்பரம் செய்து... ஏப்ரல் மாதத்திலேயே கல்லா கட்டும் வைபவத்தை முடித்துக்கொள்ளும்போது தேர்தல் முடிந்து இவர்கள் நடவடிக்கை எடுத்து பெற்றோர்களுக்கு நிவாரணம் அளிப்பார்களாம். அதை நாம் நம்ப வேண்டுமாம். “எந்தக்காலத்திலடா தமிழா, நரிதின்ற கோழி கூவியது?” என்று நாம்தான் கூவவேண்டும். ‘கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போயிற்று’ என்று சாவடியில் சாய்ந்துகிடப்பன் கூடச் சொல்லுவானே?

இந்த அரசியல் கேலிச்சித்தர்கள் காட்டும் வித்தைகள் நமக்கெல்லாம் பழகிப்போன ஒன்றுதான். தேர்தலுக்குப் பிறகு ஒரு அதிகாரியை விட்டு பேட்டி கொடுக்குமாறு செய்வார்கள். அந்த பலிகடா அதிகாரி இப்படி பேட்டி அளிப்பார்.
”தனியார் பள்ளிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக யாராவது புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.”

நீங்களே சொல்லுங்கள். நம்முடைய பிள்ளைகளின் படிப்பு முக்கியமா? அல்லது பள்ளிநிர்வாகத்துடன் விவகாரம் முக்கியமா? பள்ளி நிர்வாகத்தின்மீது புகார் கொடுக்க நமக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

குதிரை ஓடிப்போனபின் குதிரைலாயத்தைப் பூட்டும் அரசே நீவிர் வாழ்க! இன்னும் வளர்க! 

- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It