தனது சக தேர்தல் ஆணையரின் மீது சேற்றை வாரி வீசியதன் மூலமாக நம்மைப் போன்றோரின் சந்தேகங்களை, நீண்ட நாள் விமர்சனங்களை உண்மையாக்கிய தேர்தல் ஆணையர் கோபாலசாமி தனது பதவிக்கு சிறிதும் பொருந்தாத, தகாத வகையில் தனது உள்ளார்ந்த இனப் பற்றை வெளிப்படுத்தியுள்ளார் என்றால் மிகையல்ல. முடிந்தால் பதவிக் காலம் முடிந்தபின் இதற்கென தனக்கோ தனது உறவினர்களுக்கோ பாராளுமன்ற அல்லது சட்ட மன்ற இடங்களைக் கேட்டு வாங்கி தனது இன மக்களுக்காக மேலும் பணி புரியலாம் அதையும் நமது ஊடக நண்பர்கள் சமுதாயப் பணி என்று உயர்வாய் எழுதலாம். புரிய முடியாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாய மக்கள் இவரை நல்லவர், வல்லவர் என வாழ்த்தலாம்.

Naveen_chawla_and_gopalsamyமிகவும் பிரமாதமாய் கோபாலசாமி கூறுகிறார் 'ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராய் இருக்க வேண்டுமென்று'. உண்மைதான். இதைதான் நாங்களும் விரும்புகின்றோம். ஆனால் 'ஸீஸரின் மனைவியாயிருந்து விடுபடும் ஒருவர், ஸீஸரின் மனைவியாய் பதவியேற்கக் கூடியவரைக் கூறுவது' அவர் தான் மனைவியாய் வாழ்ந்த போது எப்படி வாழ்ந்திருப்பார் என்று சந்தேகப்படும்படி உள்ளது என்பதுதான் நம் பொது மக்களின் கேள்வியாக உள்ளது. தமிழின் பிரபல பொன்மொழியான 'தான் ...... , பிறரை நம்பாள்' என்பது நம் நினைவில் வந்து போகின்றது.

இதையே ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பாரேயானால் அவரின் பிறப்பை / ஜாதகத்தை நம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் குறிப்பாக நம் ஊடக நண்பர்கள் இந்நேரம் சந்தி சிரிக்க வைத்திருப்பர். இருபத்து நான்கு மணி நேரத்தில் சுமார் இருபது மணி நேரம் தோலுரித்து சந்து சந்தாக கருத்து கேட்டு பொதுவில் அவரை கிட்டத்தட்ட தூக்கில் தொங்கவிட்டிருப்பார்கள்.

இது பற்றி நாட்டின் மிகப் பெரும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கருத்துத் தெரிவிக்கும்போது 'சட்ட அமைச்சருக்கும், நவீன் சாவ்லாவிற்கும் ஏதோ தொடர்பிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளாதாக' கூறியுள்ள கருத்தை சிறிது ஆராய்ந்து பார்த்தோமேயானால் கோபாலசாமியின் நடவடிக்கை 'பாரதீய ஜனதா கட்சிக்கும் கோபாலசாமிக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாகவும்' புரிந்து கொள்ள முடியும்.

சில காலங்களின் முன் திரு டி.என்.ஷேசன் அவர்களை தேர்தல் ஆணையராக நியமிக்கும் முன்பாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காஞ்சிபுரம் வந்து சந்திர சேகரேந்திரரை சந்த்தித்துப் பேசிய பின் நியமித்ததாக செய்திகள் வந்தன. இதில் பிரச்சினைக்குரிய விஷயம் என்னவென்றால் சந்திர சேகரர் யார்? ஒரு சநாதன தர்மத்தைக் கட்டிக் காக்கும் மடாதிபதி. மேலும் வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இவரின் எண்ணங்கள் எதை நோக்கியதாகயிருக்கும்? எல்லா மக்களின் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்வதாக எப்படியிருக்கும்? இதெல்லாம் ராஜீவ் காந்தியின் தவறு என்று கூறலாமா? அல்லது சாதீய இயக்கங்கள் கூறுவது போல் அரசை இன்றும் வழி நடத்துவது வர்ணாசிரம தர்மமாகயிருக்கிறது எனலாமா? இதை இந்த ஒரு சார்புத் தன்மையை ஏன் மீடியாக்கள் எழுதுவதில்லை எழுதினாலும் கேள்விக்குள்ளாக்குவதில்லை?.

இவர்களனைவரும் தங்கள் சமுதாயத்திற்காக தங்கள் பதவியை பயன்படுத்தாத உத்தமர்களாய் வேடமிடுவதும், அதை ஊடக நண்பர்கள் உலகமெங்கும் பரப்புவதும், இவர்கள் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவாக தங்களை பாவித்துக் கொண்டு இந்த உலகிலுள்ள வர்ணாசிரமத்திற்கெதிரான அநீதிகளைக் களைய முற்படுவதுமான நகைச்சுவை நாடகங்களை நமக்கெல்லாம் புரியாத தேவ பாஷையில் நடத்த முற்படுகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள சம்பவங்களின் கோர்வையை ஆராய்ந்து பார்ப்போருக்கு திரு கோபாலசாமியின் இன்னொரு முகமும் புரியும். பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான அருண் ஜேட்லியின் தலைமையிலான குழு தேர்தல் ஆணையரான நவீன் சாவ்லா மீது கடந்த ஜனவரி 30, 2008 அன்று கொடுத்த புகார் மனுவை கடந்த ஜுலை 20,2008 வரை கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றதால் அது முடியும் வரை எந்தவித நடவடிக்கையும் இன்றி வைத்திருந்ததாகக் கூறும் கோபாலசாமி இன்று காலங் கடந்த தனது பரிந்துரைக்கு தேர்தல் ஆணையரான நவீன் சாவ்லாதான் காரணம் என்பதாகக் கூறியுள்ளது வியப்பளிக்கும்.

தனது சக ஆணையரான நவீன் சாவ்லா மீதான பரிந்துரைகளுக்கு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவு 324(5) ஐக் காரணம் காட்டும் கோபாலசாமி இதற்கு முன் தேர்தல் ஆணையம் TN சேஷன், தேர்தல் ஆணையர் எதிர் இந்திய அரசு (1995) என்ற வழக்கில் எடுத்த நிலைப்பாட்டிற்கு மாறாகவும், ஜுன் 2006 ஆம் ஆண்டில் கோபாலசாமிக்கு முன்னர் ஆணையரான B B TANDON அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆணைய நிலைப்பாட்டிற்கு எதிராகவும், இந்திய அரசின் முன்னாள் அட்டார்னியும் மூத்த வழக்கறிஞருமான திரு அசோக் தேசாய் அவர்கள் ஆணையத்திற்கு கொடுத்த சட்ட கருத்திற்கு எதிராகவும் பாரதீய ஜனதாக் கட்சியின் கருத்தை மட்டும் முழுமையாகக் கருத்தில் கொண்டு வானளாவ செயல்பட எத்தனித்துள்ளார் என்பது விளங்கும்.

கோபாலசாமியின் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புகை தெரிவித்த நவீன் சாவ்லா மேற்கூறிய காரணங்களைப் பட்டியலிட்டு தனது நிலைப்பாட்டினைத் (உச்ச நீதிமன்றத்தில் ஜுன் 2006-ல் தெரிவிக்கப்பட்ட ஆணைய நிலைப்பாட்டினை) தெரிவித்ததுடன், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 324(5)ன் நிலை பற்றிய தலைமைத் தேர்தல் அதிகாரியான கோபாலசாமியின் விளக்கம் பற்றியும் மேலும் இந்த மனு மீதான விசாரணையில் கோபாலசாமி எந்த வகையில் இடம் பெற முடியும் என்பது பற்றியும் தெளிவாக்குமாறு கோரி செப்டம்பர் 12, 2008 அன்றே பதிலளித்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. மேலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இது குறித்து மத்திய அரசின் சட்டத்துறைச் செயலாளர் விஸ்வநாதன் அவர்களுக்கு பாரதீய ஜனதாக் கட்சியின் இந்தக் கோரிக்கை குறித்து அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ தெரிவிக்கப்பட்டுள்ளதா (ஏனென்றால் 324(5) ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்) என்பது குறித்தும் மேலும் அரசு இது குறித்து என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்றும் அறிய வேண்டி எழுதியுள்ளார். (இதைதான் 04.02.2009 டைம்ஸ் ஆப் இந்தியா - நான்கு மாதங்களுக்கு முன்பே சாவ்லா தன்னை தலைமத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க மத்திய அரசை கோரியதாக செய்தி வெளிய்ட்டுள்ளது - தன் இன உணர்வைத் தலைப்பாக்கி). மேலும் இந்த தனது பதிலானது மனுவின் தகுதிகளின் அதிப்படையிலானது அல்ல என்றும், தனது பதிலானது பாரபட்சமற்ற ஒன்று என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து ஆணையமானது சாவ்லா எழுப்பிய அரசமைப்புச் சட்டத்திலுள்ள சிக்கல்களை நிராகரித்ததுடன் (அதாவது திரு கோபாலசாமி அவர்கள் நிராகரிக்கின்றார் - ஆணையத்தின் மாண்பு நிலைநாட்டப்படுகின்றது ??) சாவ்லாவை மனுவின் தகுதிகளின் மேலான அவரின் வாதங்களைத் தரப் பணிக்கிறது.

இதனிடையே சட்டத்துறைச் செயலாளர் விஸ்வநாதன் அவர்களின் நவம்பர் 7, 2008 நாளிட்ட சட்டத் துறையின் இது குறித்த விளக்கக் கடிதம் திரு கோபாலசாமி அவர்களால் ஒதுக்கிவைக்கப்படுகிறது. சட்டத்துறைச் செயலாளர் விஸ்வநாதன் அவர்கள் சாவ்லா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அத்வானி மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அந்த மனுவானது ஜனாதிபதிக்கோ அல்லது நீதி மற்றும் சட்டத் துறைக்கோ அந்த மனுவைத் தயாரித்தவர்களாலோ அல்லது அதைப் பெற்றுக் கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரியாலோ அனுப்பப்படவில்லை என்றதுடன், சாவ்லாவிடம் விளக்கம் கேட்கப்படும் முன் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதையும் தெளிவாக்குகின்றது.

மேலும் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய ஏதுவான அரசமைப்புச் சட்டப் பிரிவு 324(5)ன் படி தலைமைத் தேர்தல் அதிகாரி மத்திய அரசின் ஒப்புதல் அல்லது மத்திய அரசின் கோரிக்கையின் பேரில் மட்டும்தான் பதவி நீக்கம் செய்ய இயலும் என்பதையும் சட்டத்துறை தனது கடிதத்தில் தெளிவு படுத்தியுள்ளது.

இதையெல்லாம் தனது விளக்கம் கோரிய கடிதத்திற்கு சம்பந்தமற்றவை என்று ஒதுக்கிய தலைமைத் தேர்தல் அதிகாரி கோபாலசாமி மேலும் இரண்டு நினைவூட்டுக் கடிதங்களை கொடுத்து டிசம்பர் 10 ஆம் தேதி பதிலைப் பெறுகிறார். தனது பதிலில் திரு சாவ்லா இந்த மனு மீதான விசாரணையில் கோபாலசாமி எந்த வகையில் இடம் பெற முடியும் (LOCUS STANDI) என்று கூறுவதுடன் தன் மீதான குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என்பதுடன் ஆதாரமற்றவை என்றும் குறிப்பிடுகிறார். மேலும் தனது தேர்தல் ஆணையர் பதவிக்கெதிராக எந்தவித காரணங்களுமின்றி, ஏதோ வேறுவொரு காரணத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்.

இதன் பின்னரும் அந்த எதோவொரு காரணத்திற்காக தன் கையிலிருந்த கடைசி ஆயுதத்தை வீசியதன் மூலமாக, ஒரு சிலருக்கு இந்த அதிகார பீடங்களின் செயல்பாடுகளை ஒன்றும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல என்று உணர்த்திச் சென்ற பெருமைக்குரியவராகிறார் நம் தலைமைத் தேர்தல் அதிகாரி.

தகுதி, திறமை என்று இத்தகையவர்கள் பல வழக்குகளில் குறிப்பாக இட ஒதுக்கீடு பற்றிய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்து வைக்கும் வாதம், இந்தக் கூத்துக்களையெல்லாம் கண்டும் காணாதது போல் நீதிமன்றம் நடந்து கொள்வதால் எடுபட்டுக் கொண்டுள்ளது. இதனால்தானே மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மை மக்களுக்காக எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதை உச்ச நீதிமன்றத்தில் கேலிக்குரியதாக்குகின்றனர். இவையெல்லாமே மக்களுக்கானவை என்றால் மக்கள் அனைவரின் வளர்ச்சிக்காகத்தானே இருக்க வேண்டும். அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட சாரார் தாங்கள்தான் அறிவில் முதிர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்வதும், அதை முன் மொழியக் கூடியவர் இந்த நாட்டில் ஜனாதிபதியாக சேவை செய்ததும் பெரும்பான்மை மக்கள் விழிப்புணர்வின்றி வாக்களிப்பதால்தானே?

இதையெல்லாம் புரிந்து இந்திய சமுதாய வளர்ச்சியின் மைல்கல்லாக கருதப்படக் கூடிய பெரும்பான்மை மக்களின் வளர்ச்சிக்கான மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களை மண்டலின் தேவதூதன் என்று பரிகாசமாய் இன்று வரை எழுதமுடிகிறதென்றால், யார் வளர்ச்சியடையாமல் நாகரீகமில்லாமல் இருக்கின்றனர்? இது ஊடகங்களுக்குப் புரியாத விஷயமா என்ன? இதன் காரணமாக வி.பி சிங் குறித்து மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் 'இந்தியா டுடே' பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரை கேவல உணர்வின் உச்சம் என்றால் மிகையாகாது. கெட்டாலும் அதை எழுதியவர்கள் மேன்மக்களல்லவா? எனவே வாழ்க அந்த மேட்டுமைத்தனம். வளர்க அந்த மேதாவிகளின் மேதாவிலாசம் !!

இன்றளவும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் பயன் பெற்றவர்களின் சதவிகிதக் கணக்கை வெளியிடவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் தாமதப்படுத்துவோர் யார்? முடிந்தளவில் மத்திய அரசிலும் அதன் பொதுத் துறைகளிலும் உள்ள உயர் சாதி அதிகாரிகள் இட ஒதுக்கீட்டில் நடத்தும் குளறு படிகளை தட்டிக் கேட்பவர்களை பழி வாங்கும் சூழ்நிலை இன்றும் நடந்து கொண்டுதானே உள்ளது.

மத்திய அரசுப் பணிகளில் செயலாளர்களாகவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு அதிகாரிகளாகவும் கணக்கெடுப்பு நிகழ்ந்தால் உண்மை வெளிப்பட்டு விடுமென பதறும் முற்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நபர்களும் துணை போகும் பாரதீய ஜனதாக் கடசியும் ஓரு வகையில் பொதுவுடைமைக் கட்சியும் பிற்படுத்தப்பபட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை நம்பித்தான் போட்டியிடுகின்றன. விழிப்புணர்வற்ற மக்களின் அறியாத் துயில் இந்த அறி துயில் கொள்பவர்களுக்கு வசதியாக உள்ளது. உறக்கம் கலைந்த தமிழகத்தில் அரியணைக் கனவுகளால் நிகழும் குழப்பம் ஆரியக் கூத்துக்களுக்கு வழிவகுக்கும் பரிதாபம்.

உலகெங்கும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலுள்ள பிரச்சினையானது இந்தியாவில் சாதீயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரியாதவர்களா பொதுவுடைமைக் கட்சியினர்?. இந்த நிலைப்பாடு யாரைப் பாதுகாக்க என்பதை வெளிச்சம் போட வேண்டிய நிலையில்தான் நாமிருந்து கொண்டுள்ளோம்.

கிரீமி லேயர் விவகாரத்தில் சறுக்கிய தோழர் காரத், இந்த தேர்தல் ஆணையர் விஷயத்தில் குறைந்த பட்சம் அரசுடன் இணைந்து கருத்துக் கூறியதுடன் குறிப்பாக இத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிடா வண்ணம் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கூறியது கொஞ்சம் ஆறுதலாயுள்ளது. இதில் ஆறுதல் அதிகமாக அடையாதது ஏனென்றால், அவருக்குத்தானே தடை போட முடியும், முன்னரே கூறியது போல் அவரின் நெருங்கிய நெருங்காத உறவினர்களுக்கு என்ன தடை போடமுடியும்?

எப்படியோ ஜனநாயகத்தின் உச்சகட்ட பாதுகாப்பாளர்கள் தங்களின் வேறுபாட்டின் மூலமாக தங்களை வெட்ட வெளிச்சமாக்கி தாங்களும் சாதாரண மனிதர்களைப் போல தங்களின் பதவிகளை சுய லாப நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்களே என்பதை மேலுமொருமுறை நிரூபித்துள்ளனர்.

- பாலமுருகன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It