இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது என் தந்தை தலைமை ஆசிரியர். அவரே மாணவர்களை போராட்டத்தில் இறங்க உற்சாகப்படுத்தினார். மாணவர்களோடு நானும் சேர்ந்து பஸ் மறியலில் ஈடுபட்டபோது இட்ட கோசங்கள் எல்லாம் இப்போது நினைவில் இருக்கிறது.
நானே, "பக்தவச்சலக் குரங்கே பதவியைவிட்டு இறங்கு" என்று தொண்டை கிழியக் கத்தியிருக்கிறேன். அதுபோன்றதொரு நிலை விரைவில் வரும்போலிருக்கிறது. போலிருக்கிறது என்ன வரும்! கருணாநிதியே பதவி உனக்கு ஒரு கேடா? பதவியைவிட்டு இறங்கு என்று கோசம் எழும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.
அன்று இறங்கிய காங்கிரசு இன்னும் எழமுடியாமல் திராவிடக் கட்சிகளின் முதுகிலும் தோளிலும் மாற்றி மாற்றி தொடர்ந்து இன்றுவரை சவாரி நடத்திக்கொண்டிருக்கிறது. இதே நிலை திமுக பெற்றிடப்போகும் அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன.
அரசியல் கட்சிகள் இடும் கோசம் வேறு! அமைப்புகள் இடும் கோசம் வேறு! இது மாணவர்களால், பொதுமக்களால் ஒரு எழுச்சியோடு உத்வேகத்தோடு இப்போது கிளம்பியிருக்கிறது. கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், கோவை காந்திபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ‘பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, பிரணாப்முகர்ஜிக்கு எதிராக கோஷமிட்டு அவர்களது படங்களைத் தீ வைத்து எரித்தனர். அதோடு இல்லாமல் 2 காங்கிரஸ் கொடியையும் தீ வைத்து எரித்தனர்’ என்ற செய்தியைப் படிக்கும்போது காங்கிரசின் இரட்டைவேடம் அறிந்து மாணவர்கள் விழிப்படைந்து விட்டதையே காட்டுகிறது.
மாணவர்கள் மட்டுமில்லை, தொழிலாளர்கள், பொதுமக்கள் என்று மெல்லமெல்ல களம் காணத் துவங்கிவிட்டனர். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தம் காரணமாக இங்குள்ள 350க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்தத் தமிழுணர்வு கொழுந்துவிட்டு எரியத்துவங்கிவிட்டது பலநிலைகளிலும்!
என்றைக்காவது சிறைச்சாலைக் கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததாக தமிழகத்தில் வரலாறு உண்டா? இதோ வரலாறு படைத்துவிட்டார்களே! மத்திய சிறைச்சாலையின் 1-ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 750 பேர், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனரே. மாலையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபின் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனரே. இது எந்தக்காலத்தில் நடந்திருக்கிறது? இனிமேல் அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டிருந்தால் தமிழன் என்ற ஒரு இனத்தையே அழித்து ஒழித்துவிடும் அபாயத்தை தமிழர்கள் உணரத் துவங்கிவிட்டனர்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீரன் முத்துக்குமார் தீக்குளித்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம், உண்ணாவிரதம், வகுப்பு புறக்கணிப்பு ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனை உணர்ந்த அரசு உடனே தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் விடுதிகளை காலவரையின்றி மூட தமிழக அரசு தலைமைச் செயலர் ஸ்ரீபதி, சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களிடையே அமைதியின்மை நிலவுவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு விடுமுறை விட்டுவிட்டால் பிரச்னை அடங்கி கட்டுக்குள் வந்துவிடும் என்று கோபாலபுரத்தார் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் பகற்கனவு பலிக்கப்போவதில்லை. இதுதான் துவக்கம் என்பதை அறியாமலே பயத்தில் ஏதேதோ செய்கிறார். அனைத்தும் அவருக்கு எதிராகவே பள்ளம் பறிக்கப்போகிறது என்பதை உணரும்போது அவர் பதவியில் இருக்கப்போவதில்லை!
சீமான் பேசுகிறார், கொளத்தூர் மணி பேசுகிறார், கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று ஒரு காங்கிரசு எம்.எல்,ஏ., அறிக்கை விட்டுவிட்டால் போதும்; பிடித்து உள்ளே போடு என்று உள்ளே போட்டுக்கொண்டிருக்கிற கோபாலபுரம் நேற்று முத்துக்குமார் ஊர்வலத்தில் முழுக்க முழுக்க புலிகள் கொடிகளாக, பிரபாகரனின் படங்களை ஏந்தியவர்களாக இருந்தார்களே! அவ்வளவு பேர்களையும் கைது செய்து காங்கிரசுக்கு தனது ராஜவிசுவாசத்தைக் கோபாலபுரத்தார் காட்டியிருக்கலாமே! காட்டியிருந்தால் போரூர் மருத்துவமனையிலிருந்து அவர் கோபாலபுரத்துக்குத்தான் போயிருக்க முடியும் கோட்டைக்குப் போயிருக்க முடியாது!
இது அவருக்கும் தெரியும். அதனால்தான் திரளும் மாணவர் சமுதாயத்தை விடுமுறைவிட்டு அடக்கி ஒடுக்கிவிடலாம் என்ற தப்புக் கணக்கு போட்டிருக்கிறார். விடுமுறைவிட்டால் அது அவர்கள் இன்னும் படு உற்சாகத்தோடு இன்னும் பலமடங்கு தீரத்தோடு கிளர்ந்தெழுவார்கள் என்ற சிறுவிபரத்தை காலம் அவருக்குப் புரியவைக்கும்!
முத்துக்குமார் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் படங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி பல்வேறு அமைப்பினர் ஊர்வலத்தில் முழக்கங்கள் எழுப்பினர். தமிழீழம் அமைந்தே தீரும் என்றும், ஈழம் வாழ்க என்றும், மேதகு பிரபாகரன் வாழ்க என்றும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் புலிகள் ஆதரவு முழக்கங்கள் எழுப்பிச் சென்றனர். முத்துக்குமாரின் மரணத்திற்குப் பிறகு ஈழ ஆதரவை வெளிப்படையாக மீண்டும் வெளிப்படுத்தியதை அதிகமாகக் காண முடிந்தது.
அரசியல்வாதிகளிடையே ஒற்றுமையின்மையால்தான் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. எனவே எந்த அரசியல்வாதியும் முத்துக்குமாரின் உடலுக்கு அருகில் செல்லக் கூடாது. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தது அரசியல்வாதிகளை இனியும் நம்பக்கூடாது என்ற அளவுக்கு தெளிவான முடிவோடு துடித்தெழுந்துவிட்டது துல்லியமாகத் தெரிகிறது. இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? இதுவரை மனதுக்குள் குமுறி உள்ளுக்குள்ளேயே கனன்றுகொண்டிருந்த நெருப்பு சுவாலை விட்டு திபுதிபுவென எரியத் துவங்கிவிட்டது.
அதுமட்டுமில்லை நண்பர்களே, வழி நெடுகிலும் நின்று அஞ்சலி செலுத்திய பொதுமக்களில் பலரும் பிரபாகரன் படத்தைப் பிடித்திருந்தனர். குழந்தைகள் கைகளிலும் பிரபாகரன் படமும், புலிக்கொடியும் காணப்பட்டன. என்ன செய்யப் போகிறார்கள் காங்கிரசுக்கட்சி நண்பர்கள்? ஏதோ ஒரு தனிக்கட்சி உதயமானது போல... விடுதலைப்புலிகள் கட்சி இங்கே உதயமாகிவிட்டது போல..... ஒரு எழுச்சியல்லவா இது! இது திமுகவையும் காங்கிரசையும் வேரோடு,வேரடி மண்ணோடும் சாய்க்கப்போகும் துவக்கமல்லவா?
இந்த காட்சிகளைக் கண்டும், முழக்கங்களைக் கேட்டும் மகிழ்ச்சியடைந்த ஈழ ஆதரவாளர்கள், முத்துக்குமார் விருப்பம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது என கருத்துக்களை பலர் காதுபட உரக்கச் சொல்லி மகிழ்ந்த தகவல் கிடைத்தது!
"தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மைகளையும், காங்கிரஸ் கட்சியின் கொடிகளையும் எரித்து வருகின்றனர். அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்ய வேண்டும்" என்று தங்கபாலு செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டார். இது காங்கிரசுக் கட்சியின் அடித்தளமே தமிழகத்தில் இல்லாமல் போகும் துவக்கத்துக்கான பூபாளம்!
“இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டுக்கே விரோதமானது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை மிக மலிவான விளம்பரத்துக்கு உள்ளாக்கிவிடக் கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கோபாலபுரத்தார் அறிக்கை ஒன்றை சொகுசாக மருத்துவமனையில் படுத்துக்கொண்டே கூறி இருக்கிறார். தீரன் முத்துக்குமார் எழுதிய மடலில் கோபாலபுரத்தாருக்காகவே எழுதியிருந்த வரிகள் கண்ணில் தட்டுப்படவில்லையா? கொஞ்சம் கண்ணாடியைத் துடைத்துவிட்டு இன்னுமொரு முறை ஓய்வாகப் படித்துப் பார்த்தால் அவருக்கு தெளிவாகத் தெரியும்.
“உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...!”
இதைவிட கோபாலபுரத்தாருக்கு யார் ஒரு நற்சான்றிதழை அளிக்க முடியும்? நீங்கள் ரெண்டு இலட்சம் ரூபாய் கொடுத்து அந்த இலட்சிய வீரனின் தியாகத்தையே திசைதிருப்பிவிடலாம் என்று ஒரு தப்புக்கணக்கு போட்டீர்கள். இனிமேல் நீங்கள் போடுவது எல்லாமே தப்புத்தாளங்கள்தான்!
“கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் ....”
இதுவும் முத்துக்குமார் கடிதத்தின் வரிகள்தான்.
திமுகவின் செயற்குழு கூடியும் ஒன்றும் கிழிக்கப்போவதில்லை என்பதை முன்கூட்டியே "சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்; செய்யிறதைச் செஞ்சுக்கங்க" என்று முத்துக்குமார் சொல்லாமல்... எழுதியே போய்விட்டார்.
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (
கீற்றில் தேட...
திமுகவையும் காங்கிரசையும் வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்கப் போகும் துவக்கமல்லவா இது?
- விவரங்கள்
- ஆல்பர்ட்
- பிரிவு: கட்டுரைகள்