வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் ஊரவர் உண்டாட்டு நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். மாண்டால் நடுகல் நட்டுவணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் வெட்சி கரந்தைப் போர்களில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்;குவதற்காக நடப்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளன. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படாமை நோக்கத்தக்கது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணகி தவிர்த்த பிறபெண்களுக்கு நடுகல் நடப்பட்டதா என்பது தெரியவில்லை.

வெட்சிகரந்தைப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நடப்பட்டநடுகற்களை தெய்வமாகக் கருதி வணங்கி வழிபட்ட நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதற்குப் புலவர் மாங்குடி கிழார் சான்றளிக்கிறார். ‘கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே’என்பது அவரது கூற்று. நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது.

‘இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்’

(இல்லங்களில் காய்ச்சப்படும் கள்ளையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சிற்றூரின் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர் . நெய் விளக்கு ஏற்றியதால் உண்டானபுகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் ) என்று, நடுகல் வணங்கப்பட்ட செய்தியைப் புறநானூறு (306) கூறுகிறது.
‘நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும் போது இல்லடுகள்ளும் படைத்து வணங்கினர்” என்று புறநானூறு கூறுகிறது. ‘நடுகற் பீலி சூட்டி நாரரி சிறுகலத்துகுப்பவும்” என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது குறித்து அவ்வையார் கூறுகிறார்.

ஆநிரைகளiயுடைய கோவலர் உயர்ந்த வேங்கை மரத்தின் நல்ல பூங்கொத்துக்களைப் பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலைமாலை சூட்டி நடுகல்லை வணங்கினர் என்று புறநானூறு கூறுகிறது.

ஊர் நனியிகந்த பார் முதிர் பறந்தலை.
ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப்
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லாயினை”என்பது அது குறித்தபாடற் பகுதியாகும்.

வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்காக நடைபெற்ற கரந்தைப் போரில் உயிர்நீத்த வீரனுக்கு ஊரவர் கல்நட்டனர். மரல் நாரில் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியையும் அழகிய மயிலினது பீலியையும் சூட்டிப் பெயரும் பீடும் எழுதிப் பெருமை செய்து வழிபட்டனர் என்று புறநானூறு ( 264 ) கூறுகிறது.


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணி மயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும் ‘என்பது அப்பாடற் பகுதி.

நடுகற்களுக்கு நாள்தோறும் தீப தூபம் காட்டிப் பூசை செய்து வழிபடும் காரியங்களைப் பெண்கள் செய்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணகிக்கு செங்குட்டுவன் அமைத்த நடுகல்லுக்குப் பூசை செய்யும் கைங்கர்யத்திற்கு அவள்தோழியான தேவந்தியென்பாளை அம்மன்னன் நியமித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

ஒலிமென் கூந்தலொண்ணுதலரிவை
நடுகல் கைதொழுது பரவு மொடியாது
விருந்தெதிர் பெறுகதில்யானே யென்னையும்
................................................. வேந்தனொடும்
நாடுதருவிழுப்கை எய்துக எனவே’ - புறநானூறு : 306

(தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒள்ளிய நெற்றியையும் உடைய அரிவையானவள்’ யான் விருந்தினர் எதிர் வரப்பெறுவேனாக என்றும் ‘கணவனும் வேந்தனும் மண்ணாசையால் நாடுகளைக் கைப்பற்றும் போரில் வெற்றி பெறுக” என்றும் நாளும் தவிராமல் நடுகல்லைக் கைகூப்பித் தொழுதாள் ) பெண்கள் ஆடவர்க்கு நடப்பட்ட கல்லை வணங்கினர் என்னும் இச்செய்தியானது, பெண் சமூகத்தின் தலைமையிடத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு அடிமைப்படுகுழியில் ஆழ்த்தப்பட்டதையும் ஆணாதிக்கம் மேலோங்கிவிட்ட நிலையையும் தெளிவாக உணர்த்துகிறது. ‘நடுகல்லை நாள் தோறும் வணங்கினால் விருந்தினர் எதிர்ப்படுவர் ’ என்றும் போரில் கணவனுக்கும் அரசனுக்கும் வெற்றி கிட்டும் என்றும் பெண்களிடையே மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டதனையும் மேற்குறித்த பாடலடிகள் நமக்குக் கூறுகின்றன.

‘நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப்பெய்;யும், வறட்சி நீங்கும், வளம் ஓங்கும் “ என்ற நம்பிக்கையும் மக்களிடையே பரப்பபட்டது. பெண்கள் மட்டுமல்லாது, சமுதாயத்தின் அடிமட்டத்தில், செல்வர்களான புரவலர்களை அண்டியிருந்து அவர்களின் தயவில் வாழ்ந்த இரவலர்களான பாணர்களும் கூட, வீரர்களின் நடுகற்களைக் கண்டு வணங்கிச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்ட நிகழ்வுகளையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறியின்
தொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டு மேம் படூஉ மிவ் வற நிலையாறே
....................................................................
.....................................................................
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன்கல்லே’

(பெரிய யானையின் அடிபோலத் தோன்றும் ஒரு கண்ணினையுடைய பெரிய பறையினையுடைய இரவலனே, நீ போகின்றாயாயின் பகைவரது வில்லில் இருந்து வெளிப்பட்ட அம்புகள் மிகுதியாகத்தைக்கவும் எதிர்நின்று விலக்கியவனது கல்லைத் தொழாமல் போவதைத் தவிர்ப்பாயாக ) என்று, பாணர்கள் நடுகல்லை வணங்கிச் செல்லுமாறு வற்புறுத்தப் பட்டதைப் புறநானூறு ( 263 )கூறுகிறது.’நடுகல்லைத் தொழுது செல்க’ என்னாது, ‘தொழாதனை கழிதலோம்புமதி’ ( கல்லைத் தொழாமல் போதலைத் தவிர்ப்பாயாக ) என்று கூறுதல், கல்லைத் தொழுது செல்லுமாறு பாணனைக் கட்டாயப்படுத்தும் செயலேயாகும் என்பது மிகையன்று.

வழிச் செல்லும் பாணர்கள் வழியிடைக்காணும் நடுகற்களை வணங்கி யாழை வாசித்து செல்லுமாறு வற்புறுத்தப்பட்ட செய்தியை மலை படுகடாம் பாட்டின் வரிகள் ( 386 – 90 ) கூறுகின்றன.

‘ஓன்னாத் தெவ்வர் உலைவிடத்தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
கல்லேசு கவலை யெண்ணு மிகப் பலவே
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பாகத்
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்தினைமின்’

(ஏவல் பொருந்தாத பகைவர் புற முதுகிட்ட அளவிலே தமது வெற்றி தோன்ற வீரர்கள் ஆரவாரித்தாராக, அது பொறாமல் இவ்விடத்தே உயிர் கொடுத்தற்கு நல்லகாலம் என்று மீண்டும் உயிரைக் கொடுத்த பெயர்களை எழுதி நட்ட கற்கள் மிகுதியாக உள்ளன. இன்பம் மிகுகின்ற தாளத்தையுடைய உங்கள் பாட்டு, அந்நடுகல்லின் தெய்வத்திற்கு விருப்பம் உடையதாதலின் நீங்கள் உங்களுடைய யாழை வாசித்து விரைந்து செல்வீர்.) என்று, பாணர்கள் நடுகல்லைக் கண்டு வணங்கிச் செல்லுமாறு கூறப்பட்டனர். ‘நடுகல்லை நாளும் தவறாது வணங்கினால் மழைவளம் பெருகும். மழை பெய்தலால் கொடுங்கானம் வறட்சி நீங்கிக் குளிரும் மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும், அதனால் வறட்சிமிக்க இக்கொடிய வழியில் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும், வளம் பெருகும்’என்று மக்களை நம்பச்செய்ததனை,

‘தொழாதனை கழிதலோம்பு மதி வழாது
வண்டு மேம்படூஉ மிவ் வறநிலையாறே” என்ற புறநானூற்றுப் பாடலடிகள் தெளிவுற உணர்த்துகின்றன.

இந்நிகழ்வுகள் தனியுடைமைச் சிந்தனையும் ஆணாதிக்கமும் தலைதூக்கியதால் சமூகத்தில் பெண்களும் அடித்தட்டு மக்களும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதைத் தெளிவாக உணர்த்துகின்றன. ஆண்டைகளான ஆண்கள் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பின்னும் அவர்களுக்குப் பெண்களும் அடித்தட்டு மக்களும் அடங்கி நடக்க வேண்டும், பணிந்து போக வேண்டும்’ என்ற சுரண்டும் வர்க்கத்தவரின் ( ஆண்டைகளின் ) - ஆதிக்கமனப்பான்மையையும் அதிகாரமமதையையும் வெளிப்படையாக உணர்த்துகின்றன எனல் மிகையன்று.

கல்லை வணங்கி வழிபடுமாறு பயவுரைகளாலும் நயவுரைகளாலும் மக்கள் வற்புறுத்தப்பட்டனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. இங்கு கடவுளாக்கிக் காட்டப்பட்டது கல் அல்ல, கல் ஒரு அடையாளம் மட்டுமே. ஆண்டைகளும் அதிகார வர்க்கத்தாரும் தான் கடவுளாக்கப்பட்டுள்ளனர். உயிருடன் இருந்தபோது ஆண்டையாக இருந்தவன் இறந்த பின்பு ஆண்டவனாக்கப்பட்டான். இச்செயல், இறந்த பின்பும் ஆண்டைகளை நினைத்து வணங்கினால் நன்மைகள் உண்டாகும் என்று மக்களை நம்பச் செய்யும் சூழ்ச்சியே ஆகும். கல்லை மக்கள் தொடர்ந்து வணங்கி வழிபட வேண்டுமானால், அதற்கு ஒரு சிறப்புத்தன்மையைக் கற்பித்துக் கூற வேண்டும். மேன்மைப் படுத்திக் காட்ட வேண்டும். அவ்வாறு கற்பித்துக் காட்டும் முயற்சியே, அது வரம் கொடுக்கும், வாழ்வு கொடுக்கும், நன்மை விளைக்கும்’என்ற கூற்று.

தெய்வம் தன்னை வணங்குவார்க்கு என்னென்ன வரங்களைக் கொடுக்கும் என்பதனை ஆள்வார்கள் முதல் அபிராமி பட்டர்வரை பட்டியலிட்டுக் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு முன்னோடியாகவே, நடுகல்லைப் புகழ்வாரது செயல் அமைந்துள்ளது என்பது மிகையன்று. இங்கு, ‘அரசர்களை தெய்வமாக்கிக் காட்ட வேண்டும்’ என்று மனு முதலியவர்கள் கூறியுள்ள கூற்றும் நம் கவனத்துக்கு உரியதாகிறது.

(‘சங்க காலத் தமிழகத்தின் சமுக நிலை - மார்க்சீய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு’ என்ற நூலிலிருந்து)

Pin It