10 நோயாளிகளுக்கு எங்கள் மருந்தை பரிந்துரை செய்தால் உங்களுக்கு பிளாட்டினம் கூப்பன் தருகிறோம்...25 நோயாளிகளுக்கு கொடுத்தால் உடனடி பரிசுகளுடன் கோல்ட் கூப்பன் தருகிறோம். அதிக எண்ணிக்கையில் மருந்து விற்க துணை புரிந்தால் அதிக அளவிலான அன்பளிப்புகளை (ஆம்... லஞ்சத்திற்க்கு இந்தியர்கள் கண்டுப்பிடித்திருக்கும் இணைப் பெயர்...!!) வெல்லும் வாய்ப்பு...!! அன்பளிப்பு என்றால் பேனா, டைரி, சூட்கேஸ் என நினைத்தால் இந்த நூற்றாண்டின் சிறந்த முட்டாள் என்றப பட்டத்திற்கு சொந்தகாரர் நீங்கள்தான்...!!!

உங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு மாத்திரையிலும் உங்கள் மருத்துவர் ஒரு புள்ளி எடுத்து "போட்டி"யில் முன்னிலைப் பெறுகிறார்..!! குஜராத்தை சேர்ந்த Torrent Pharamaceutical என்ற நிறுவனம் சமீபத்தில் அகமதாபாத், சென்னை, பெல்கம், அம்பாலா மற்றும் ஆக்ரா நகரங்களில் இருந்து, இவர்களின் போட்டியில் முன்னிலைப் பெற்ற மருத்துவர்களை அழைத்துப் பலர் முன்னிலையில் குலுக்கல் முறையில் சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி இருக்கிறார்கள்!

tabletஅதுமட்டுமல்ல. இஸ்தான்புல்லில் நடந்த மருத்துவர்களின் சர்வதேச கருத்தரங்கிற்க்கு மருத்துவர்களை அழைத்துச் சென்றீருக்கிறார்கள். அடடே...நல்ல விசயம் தானே என்றெண்ணி விடாதீர்கள்!! மணி ஓசைக்குப் பின்னே வரும் யானைப் போல் மருத்துவர்களின் பின்னே அதிர்ச்சியும் வரும்..! சர்வதேச கருத்தரங்கிற்கு இவர்களின் கூடவே செல்லும் பொண்டாட்டி, புள்ளக்குட்டி என எல்லா குரங்குக் குட்டிகளின் செலவும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தினுடையது!!! இது தவிர உள்ளூரில் இருக்கும் கேளிக்கைப் பூங்காவிற்கு மாதம் ஒரு முறை இலவச சீட்டு வேறு சில நிறுவனத்தால் வழங்கப்படுகிறது..!

இது ஏதோ மேம்போக்கான குற்றச்சாட்டல்ல...நிறுவனத்தின் இணையதளத்தில் அவர்களின் "வாக்கு மூலத்தை" நீங்கள் காணலாம்..! இதைப் பற்றிய செய்தி the times of india - 15/12/2008 - சென்னைப் பதிப்பில் முதல் பக்கத்தில் வந்துள்ளது. அதில் மேலும் அதிர்ச்சித் தரும் தகவல் என்னவென்றால், டெல்லியில் செயல்படும் முக்கியமான மருத்துவ நிறுவனம் மருத்துவர்களின் அன்பளிப்பிற்காக ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது! வெளிநாடு சுற்றுப் பயணம் இதில் சேராது...அதற்கு தனி தொகை..!!

ஜென் கதைகளில் படித்திருக்கிறேன்... "சரியான பதில் வேண்டுமென்றால், சரியான கேள்வியை கேட்கப் பழகுங்கள்!". இனி மருத்துவரிடம் நீங்கள் கேட்க வேண்டியது "இந்த மாத்திரை சாப்பிட்டால் உடல் தேறிவிடுமா..?" என்பதல்ல..."டாக்டர், உங்களுக்கு பிடித்த ஊர் சிங்கப்பூரா, மலேசியாவா...?"

- தேகி

Pin It