ஸ்டெர்லைட் துவங்கி CAA வரை ரஜினிகாந்த் அவர்களின் கருத்து என்பது இந்துத்துவப் பாசாங்குடன் புண்ணுக்கு புனுகு தடவுவதுதான் ஒழிய தீர்வுக்கான கருத்து கிடையாது.

rajini 369குடியுரிமைத் திருத்த சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்து விட்டால் குரல் கொடுப்பதில் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று சொல்கிறார். ஆனால் இவர் பிறந்த கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்வாவல்லி கடந்த 11 ஆம் தேதி பெங்களூரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழக்கூடிய பகுதியை ஆக்கிரமிக்கப்பட்ட பூமி என்றும், அந்த ஆக்கிரமிப்பாளர்கள் சமூக விரோதச் செயல்கள் செய்கின்றனர் என்றும் ஒரு பொய்யான தகவலை சமூகவலைத்தளத்தில் பரப்பினார். அதன் அடிப்படையில் பாஜக உறுப்பினர்களும், அரசு ஊழியர்களும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை இடித்துத் தள்ளுகின்றனர். நடுரோட்டிற்கு மக்கள் வந்தபின் ஒரு சில சமூக ஆர்வலர்களின் முயற்சியால் அந்த மக்களின் ஆதாரங்களை சரி பார்க்கும் பொழுது அவர்கள் இந்த தேசத்தின் பூர்வகுடிகள் என்று தெரிய வருகிறது.

NRC அமையக் காரணமாக இருந்த அஸ்ஸாம் மாநிலத்தில் அதனுடைய முன்னாள் முதலமைச்சரும், முதல் பெண், அதுவும் இஸ்லாமியப் பெண் முதல்வர் குடியுரிமைத் திருத்த சட்டத்தினால் தன்னுடைய இந்திய அடையாளத்தினை இழந்திருக்கிறார்.

மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்தோ, 

முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது அவர்களின் குடும்பத்தினரிடம் குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி குடியுரிமை மறுத்திருப்பது குறித்தோ,

கார்கில் போரில் தீவிரமாக செயல்பட்டு, வீரதீரச் செயல்களை செய்தமைக்காக பதக்கங்களைப் பெற்ற சனாவுல்லா, தற்போது NRCயினால் குடிமகன் என்ற அந்தஸ்தினை இழந்ததைக் குறித்தோ,

ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? இவர்களும் குடியுரிமையினைக் காரணம் காட்டி பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அல்லவா?

முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜினி, இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

ஆக இவருடைய செயல்களெல்லாம் பூசி மழுப்பும் செயல் தான் ஒழிய எந்த ஒரு தீர்வுக்கும் உண்டானது அல்ல! உண்டாக்கப் போவதும் அல்ல!!

- நவாஸ்

Pin It