வணக்கம்

உங்கள் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உங்கள் எண்ணவோட்டத்தை நச்சென்று கூறியுள்ள தங்களின் எழுத்து வலிமையைப் பாராட்டுகிறேன்.

"மரம் அதன் கனிகளால் அறியப்படும்" எனறு விவிலியம் சொல்வதும் நம் அனுபவம்தான்; ஆனால் அதுமட்டுமே முழு உண்மையல்ல. சில மரங்கள் அதன் கனிகளுக்காகவும் சில மரங்கள் அதன் பட்டைகளுக்காகவும், சில மரங்கள் அதன் வேர்களுக்காகவும், சில மரங்கள் வேறு சில பயன்பாடுகளுக்காகவும் அறியப்படும். இதுவும் அனுபவம் தான். யதார்த்தம் தான்.

உங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்ட திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள் பெரும்பாலும் சரியானவை. உடன்படுகிறேன். சில மாறுபாடுகளும் உண்டு. ஆயினும் அது முக்கியமானது அன்று. விட்டுவிடுவோம். 'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்கிற கிராமத்து சொலவடை அர்த்தச் செறிவுள்ளது அன்றோ! காயம்பட்டவனின் உணர்வை பார்வையாளன் பெறமுடியாதுதான். ஆயினும் பார்வையாளனின் கரிசனத்தை, அக்கறையை, அன்பை, சகோதரத்துவத்தை உதாசீனப்படுத்தி விடக்கூடாது அல்லவா?

வள்ளுவன் ஏன் "உபரி உழைப்பை" கண்டு சொல்லவில்லை என இன்று வினா எழுப்புவது பொருத்தமாக இருக்காது; வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் கார்ல்மார்க்ஸ் இருந்திருந்தால் அவரும் உபரி உழைப்பை கண்டு சொல்லியிருக்கமாட்டார். மாறாக திருக்குறள் போல் தந்திருக்கக் கூடும். வள்ளுவன் மார்க்ஸ் காலத்தில் பிறந்திருந்தால் மார்க்சியம் என்பதற்குப் பதில் வள்ளுவம் அந்த இடத்தை நிரப்பியிருக்கக் கூடும். என் தாத்தாவை விட நான் புத்திசாலி. சரியாகப் போராடுகிறேன். என்னை விட என் பிள்ளையும் அவர்களைவிட என் பேரன் பேத்திகளும் சரியாக மிகச் சரியாகப் போராடுவார்கள். என்பதே என் நம்பிக்கை.

புதுமைப்பித்தன் மீதும் சாதிய விமர்சனம் உண்டு; வீரவணக்கம் வேண்டாம் என தி.க.சி எழுதினார். இதன் பொருள் புதுமைப்பித்தனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்பதா? அல்ல. குறைகளை சுட்டிக்காட்டுவதும் விமர்சிப்பதும் மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் ஒன்றை மறுத்து இன்னொன்றை உற்பத்தி செய்வதும் வளர்ச்சிப் போக்குகளே! ஆனால் அதை 'எடுத்தேன் கவிழ்த்தேன்' பாணியில் செய்வதில்தான் எனக்கு மாறுபாடு. கொடுமைக்கு எதிராக சுட்டுவிரலையாவது அசைப்பவர்கள் கொடுமைக்கு உடந்தையாய் இருப்பவர்களையும் மௌன சாட்சியாய் இருப்பவர்களையும் விட மேலானவர்கள் அல்லவா? அதை அங்கீகரிப்பதில் தயக்கம் ஏன்?

Leninநீங்களோ, நானோ, அல்லது வேறு யாருமோ சாதிய பண்பாட்டுச் சூழலில் வளர்ந்தவர்களே. நம்மையும் மீறி சில நேரங்களில் நம் ரத்தத் துகள்களில் கலந்திருக்கும் சாதியம் வெளிப்பட்டுவிடும். அதை எதிர்கொண்டு முறியடிப்பதில் நம்மில் சிலர் வெற்றி பெறலாம்; பலர் தோற்றுப் போகலாம்; காலம் அவர்களை அடையாளம் காட்டும்.

எனக்கு ஒரு அனுபவம். நான் வாலிபர் சங்க மாநிலச் செயலாளராக, தலைவராக ஊர்ஊராய்ச் சுற்றி வந்த நேரம். ஆட்சியாளர்களை காவல்துறை அடக்குமுறையை பொதுமேடையில் விமர்ச்சிக்கும் போது சண்டாளர்கள், சண்டாளத்தனம் என்று கூறுவது உண்டு. அப்போது அது எனக்குத் தவறு என்று உறைத்ததில்லை. ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு கீழிறிங்கியபோது எனது பேச்சை சுருக்கெழுத்ததில் பதிவு செய்ய வந்திருந்த காவல்துறை நண்பர் என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்றார். நானும் டீக்கடை பக்கம் ஒதுங்கிப் பேசினேன்.

நான் அடிக்கடி குறிப்பிடும் அந்த இரு வார்த்தைகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சாதி ரீதியாக இழிவுபடுத்தும் தன்மை உடையவை என்பதை எடுத்துச் சொன்னார். நானும் உணர்ந்து கொண்டேன். வருத்தம் தெரிவித்தேன். அதன்பிறகு அந்த வார்த்தைகளை தவிர்க்க என்னுள் பெரும் போராட்டமே நடத்தினேன். இப்போதும் சமத்துவத்துக்காக உறுதியாகப் போராடும்.சில தலைவர்களிடம் அத்தகைய வார்த்தைப் பயன்பாட்டைப் பார்க்கிறேன். "இவர்கள் தாம் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள். மன்னித்தருளுங்கள்" என்றுதான் கூறத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் அப்பழுக்கற்ற போராளிகள்.

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தந்த சமூக அறிவியலை ஈயடிச்சான் காப்பியடிக்காமல் தங்கள் தங்கள் சமூகச்சூழலுக்கும் தேவைக்கும் ஏற்பப் பிரயோகித்து வளர்த்து சரியான வியூகம் அமைத்ததால் தான் லெனின், மாசேதுங், ஹோசிமின், கிம்இல்சுங் காஸ்ட்ரோ என ஒவ்வொருவரும் வெற்றி பெற்றனர். அவர்களுக்குள் பொதுத்தன்மையும் உண்டு தனித்தன்மைகளும் உண்டு. அதுதான் வரலாற்று அனுபவம்.

இங்கு நாம் வர்ணம், வர்க்கம் என்ற இரண்டு நுகத்தடிகளை சுமந்து கொண்டிருக்கிறோம்; சாதியம், சுரண்டல் இரண்டையும் எதிர்த்து முறியடிக்க வேண்டி உள்ளது. இதற்கான படைதிரட்டல் குறித்தும் வியூகம் குறித்தும் நமக்குள் கருத்து மாறுபாடுகள் சில இருக்கக்கூடும் ஆயினும் போராட்டக் களத்தில் நாம் தோள் இணைய வேண்டியவர்களே. அதற்கொப்ப என் புரிதலுக்கும் உங்கள் புரிதலுக்கும் சற்று இடைவெளி இருக்கலாம் ஆனால் அது பிளவாகாது. இணைந்து முன் செல்வோம்.

வாழ்த்துகளுடன்

-தோழமையுடன்

- சு.பொ.அகத்தியலிங்கம்

Pin It