'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவனின் வரிகளை, நீர் மேலாண்மை குறித்து கடந்த சுதந்திர தினம் அன்று உரையாற்றும்போது மோடி கூறினார்.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்!' என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை அன்மையில் ஐநா அவையில் மோடி கூறினார்.

modi 272இதனால், ஏதோ மோடிக்கு தமிழின் மீது பற்று அவர் பிறந்த போதே உருவாகிற்று என்பதைப் போல இங்கே உள்ள ஊடகங்கள் திரும்பத் திரும்ப செய்திகளாக்கி அகமகிழ்ந்து கொண்டனர்.

ஆனால் அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோதே ஐநாவில் கணியனின் இதே வரிகளைக் கூறி வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியதை மறைத்து விட்டனர்.

சென்னையில் நடந்த ஐஐடி பட்டமளிப்பு விழாவில், தனக்கு இட்லி - தோசை - வடை மிகவும் பிடித்த உணவு என்று கூறி, மேலும் தனது 'தமிழ்ப் பற்றை' வெளிப்படுத்திக் கொண்டார்.

பாஜகவினரும் தங்களது பங்கிற்கு மோடியை தமிழறிஞர் வீரமாமுனிவர் அளவிற்கு தூக்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆனால் மொழிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தமிழுக்கு 3 கோடியும், அதற்கு நேரெதிராக இந்திக்கு 75 கோடியையும் கொடுத்து தங்களின் சுயரூபத்தினை பாஜகவினர் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

தமிழ், செம்மொழி அந்தஸ்தினை அடைந்து 15 ஆண்டு காலம் ஆகியும், இதுவரையிலும் செம்மொழி உயராய்வு மையத்திற்கு ஒரு முழு நேர இயக்குநர் நியமிக்கப்படவில்லை. சென்னையிலுள்ள அதன் தலைமையகம் வெறிச்சோடி இருப்பதையும், தமிழர் நாகரீகங்களை பிரதிபலிக்கின்ற ஒரே காரணத்தினால் கீழடி அகழாய்வு மெத்தனப்போக்காக ஆக்கபட்டதையும் காணும் போது மோடி உள்ளொன்றும் புறமொன்றுமாக இருப்பதை உணர முடிகின்றது. 

இந்தியாவின் அட்டவணை மொழிகளாகத் திகழும் 22 மொழிகளில் எவற்றுக்குமே கொடுக்காத முன்னுரிமையினை பாஜக இந்திக்கும் - சமஸ்கிருதத்திற்கும் அதிகப்படியாகக் கொடுத்து தன்னுடைய திட்டங்களுக்கு இவற்றின் பெயரையே சூட்டுகின்றது.

8ஆவது அட்டவணையில் தமிழ் உட்பட 22 மொழிகள் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசே ஒரு தலைப்பட்சமாக செயலாற்றிக் கொண்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.

ஒரு வேளை இந்தியாவின் பொதுமொழியாக, ஆட்சி மொழியாக ஒன்றை அறிவித்திட அவசியமேற்படுமாயின் அரசியல் நிர்ணய சபையில் "காயிதே மில்லத்" அவர்களின் முழக்கத்தின் படி தமிழே ஆகப்பெரும் தகுதியானதே அன்றி, இந்தியும் அல்ல! சமஸ்கிருதமும் அல்ல!

ஒரு மாநில மொழி இந்தியாவைத் தாண்டி பிற நாடுகளில் அலுவல் மொழியாக இருக்கின்றது என்றால், தமிழுக்கு மட்டுமே அத்தகைய சிறப்பு இருக்கின்றது
அதனால் தான் ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்கள் தமிழுக்கு இருக்கைகளை வழங்கி கவுரவபடுத்தியிருக்கின்றன.

ஆக பிரதமர் மோடிக்கும், பாஜக பரிவாரங்களுக்கும் தமிழின் மீது உண்மையான அக்கறை இருந்தால் குறைந்த பட்சம் 1969 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் படி தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகவும் ஆக்கட்டும்.

- நவாஸ்

Pin It