மும்பையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நானும் என் தோழர்களை அழைத்துக் கொண்டு உரை எழுச்சியோடு இருக்கும் என்று எதிர்நோக்கி காத்திருந்தோம். எழுச்சியோடு என்றால் என்ன?

1) தன்னிலை மறந்த தாழ்த்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் பற்றி

2) மற்றவர்களைவிட தாழ்த்தப்பட்டவர்கள் அதிகளவில் சாதி ஒழிப்பில் ஈடுபட வேண்டியதன் கட்டாயம்.

3) எம்மதம் நம்மை தாழ்த்தி, நம் அடையாளங்களை அழித்து நம் தனித்துவத்தை ஒழித்த்தோ, அம்மத சூழ்ச்சியிலிருந்து வெளிவர வேண்டிய கட்டாயம். இந்துத்தவத்திலிருந்து விடுபட்டு வரவேண்டிய நிர்பந்தம்

4) பகுத்தறிவின் தேவை.

5) நமக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களாகிய அம்பேத்கர் போற்றிய பெரியார், பெரியார் மதித்த அம்பேத்கர் பற்றிய குறிப்புகள்.

6) சாமியார்களிடம் ஏமாந்து திரிவதால், நம் அகச்சூழல் மற்றும் நம் புறச்சூழல் பாதிக்கபடுவது குறித்து.

7) பகுத்தறிவின் தேவை.

8) போராட வேண்டிய சூழல்.

9) வாழ்க்கை முறை மேம்பட அரசியல் அதிகாரம்.

10) தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே நாம் காட்டும் பாகுபாட்டை ஒழிப்பது

முதலான கருத்துக்களை முழங்குவார் என்று எதிர்பார்த்தோம். அதை திருமாவிடம் தெரிவிப்பதற்காக நாங்கள் பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்த துண்டுப் பிரசுரமும், அத்தோடு சேர்த்து நாங்களும் ஒரு காகிதத்தில் மேற்சொன்ன கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு மேடையில் அமர்ந்திருந்த ஒரு தோழரிடம் கொடுத்தோம். அதை அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழரிடம் கொடுத்தார். அந்தத் தோழரோ அதை படித்துப் பார்த்துவிட்டு தன் சட்டைப்பையில் வைத்து கொண்டார். (பிறகு நானே நேரடியாக சென்று அந்தத் தாள்களின் இன்னொரு பிரதியை திருமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன், என்பது இன்னொரு செய்தி)

இது எப்படிப்பட்ட சூழல்! தோழர் திருமா சிந்தித்து பார்க்க வேண்டும். தங்களோடு களம் நின்று சாதி ஒழிக்க ஆயத்தமாய் இருக்கும் என் போன்ற தோழர்களின் கருத்துக்கள் கூட திருமா வரை போகக்கூட அனுமதிக்க முடியாத இந்த மாதிரியான கொள்கை அரைவேக்காட்டுகளை வைத்துக் கொண்டு நாம் எதை அடையப் போகிறோம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். ஆனால், இதே போன்று பலர் எல்லா இயக்கத்திலும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும். சாதி ஒழிப்பு, சமத்துவம் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இவர்கள் களைகள், இவர்கள் கண்டிப்பாக களையப்பட வேண்டியர்கள், அல்லது திருத்தபட வேண்டியர்கள்.

தோழர் திருமா பேசும் போது குறிப்பிட்டார், "எந்த சமூகம் தங்கள் தலைமை யாரென சரியாக தேர்ந்தெடுக்கவில்லையோ அது உருப்படவே செய்யாது" என்று. உண்மை. ஆனால், ஒரு நல்ல தலைமையின் கீழ் கொள்கை-பிடிப்பு, கொள்கை தெளிவில்லாதவர்கள் இருப்பார்களேயானால், அந்த தலைமையின் மேலான நோக்கமே சிதைக்கப்படக்கூடிய அதிகப்படியான வாய்ப்புண்டு என்பதை தோழர் திருமா மறந்து விடக்கூடாது.

நம் மக்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று திருமா கூறினார். கண்டிப்பாக நடக்க வேண்டும். ஆனால், மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவரும் முன் அவர்களை களப்போராளிகள் கொண்டு பிரச்சாரத்தின் மூலம் கொள்கையில் செம்மை படுத்த வேண்டும். தெரிந்த எதிரிகளை விட நமக்கு தெரியாத துரோகிகள் பலர் உண்டு,என்பதை மறந்து விடக்கூடாது. எத்தனை தாழ்த்தப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். கொள்கை தெளிவு பெற்று எழாத வரை, திரளாத வரை உரிமை பெற்றாலும், நம் தோழர்கள் தொலைத்து விடுவார்களேயன்றி வேறென்ன செய்வார்கள். அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும், சரிதான். இந்துத்வம் தலைக்கு ஏறியவர்களையும் கட்சியில் சேர்ப்பது, நம் முன்னேற்றதுக்கு நாமே போட்ட தடையாக போய் முடிய வாய்ப்புள்ளதல்லவா?

இந்துத்வத்திற்கு அடிபணிபவன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் அடிப்படை உறுப்பினராக கூட வாய்ப்பு கிடையாது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சார்ந்தவன் மதபண்டிகளில் கலந்து வாழ்த்து தெரிவிக்க கூடாது. மாறாக நம் இனத்திற்கு தேவையான கருத்துக்களை எங்கும் தெரிவிக்க தயங்க்க்கூடாது. அதற்காக மற்ற மதங்களில் சேரலாம் என்பது பொருளல்ல. மற்ற மதங்கள் இந்து மத்த்தின் அளவு கொடுமை படுத்தவில்லை அவ்வளவுதான்

"அறிவாளி அடுத்தவன் தவற்றிலிருந்து தன்னை திருத்தி கொள்வான்
முட்டாள் தன் தவற்றிலிருந்து திருந்துவான்."

இந்துத்துவம் நம்மை பல்லாயிரம் ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியிருக்கிறது. ஆதலால் நம் முதல் எதிரி இந்துத்தவத்தை கடைபிடிப்பவன். மற்ற மதங்களை பார்ப்போமானால் உலக வரலாற்றில் இரத்தம் அதிகம் சிந்தியதற்கு காரணமே மதங்கள்தான் (அது யூத மதமாகட்டும், அல்லது அதனின்று தோன்றிய கிருஸ்துவ இஸ்லாமிய மதமாகட்டும், இஸ்லாமிய மதங்களாகட்டும், அல்லது புத்தமதமாகட்டும்). ஆனால் நம் தோழர்களை விநாயகர் சதுர்த்தியை ஆண்டுக்கணக்காக கொண்டாடுகிறார்கள். தோழர் திருமா இது நம் தோழர்களை திசை திருப்ப இந்து மத அமைப்புகள் செய்யும் சூழ்ச்சி என்பதை அறிந்து இதை எப்படியாவது தடுத்து நிறுத்த திட்டங்கள் தீட்ட வேண்டும்

நாம் நம்மை செம்மைப்படுத்திக்கொண்டு மனிதனாக மாற வேண்டும் என்றால் மதங்கள் விட்டொழிக்க வேண்டும் என்று தோழர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டனா? அவன் அம்பேதகர் ஆளுப்பா! பெரியார் பேரன்யா! என்ற நிலை வருமளவு நம் தோழர்கள் கற்க வேண்டும். சிந்திக்க வேண்டும். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல அனைத்து தமிழ் அமைப்புகளும் பாடுபட வேண்டும்.

குறிப்பு: திருமாவுக்கு சிந்திக்கக் கற்றுத் தர வேண்டியதில்லை, ஆனால் இந்த அரசியிலில் உள்ள உளவியல் ரீதியிலான பிரச்சினைகளில், சில விடுபட்டு போக வாய்ப்புண்டு. நம் தோழர்கள், கொள்கை தெளிவில்லாமல் சிறுத்தைகள் என்று அழைத்த உடனேயே விசிலடித்து ஆர்ப்பரிக்கும் விசில் குஞ்சுகளாக மாறிவிடக்கூடாது. தோழர்களை கொள்கை தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு கொள்கை உடன்பாடு உள்ளவர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். கொள்கை தெளிவுள்ளவர்க்ளுக்கு பதவி ஒரு பொருட்டாக இருக்காது என்றே கருதுகிறேன். 

- மகிழ்நன்

Pin It