2019 செப்டம்பர் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்ட இதழில் “ஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த் தேசியமே” எனும் கட்டுரையில் தோழர் மணியரசன் அவர்கள் மிக விரிவாக ஆரிய எதிர்ப்பு என்பது சங்க காலம் துவங்கி திருமூலர், சித்தர்கள், வள்ளலார், மறைமலை அடிகளார் வரை தொடர்ந்து வந்துள்ளது என்று கூறினார். அது உண்மைதான். ஆரிய எதிர்ப்பு என்பது பெரியாரால் துவங்கப்பட்ட ஒன்றல்ல, அது 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் இயங்கிக் கொண்டிருக்கிற கருத்தியல் சண்டை.
இந்தியப் பெருங்கண்டத்தில் ஆரியர் அல்லாத ஒரு பெரும் மரபு இருந்தது. காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டது. இந்த அழிவில் தன்னைப் பாதுகாத்துக் கொண்ட ஒரே மரபு தமிழ்தான். அதற்கு நம் தமிழ்மொழியின் செழுமைதான் காரணம். அந்தக் கருத்தியல் சண்டையின் தொடர்ச்சி நவீன இந்தியா உருவாக்கத்தில் அரசியல் நிர்வாக பிரதிநிதித்துவத்தில் பிரதிபலித்தது. அந்த சூழ்நிலையில் புதுப் பாய்ச்சலுடன் வெகுசன மக்களிடம் ஆரிய பார்ப்பன வைதீக எதிர்ப்பைக் கொண்டு சென்றவர் பெரியார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதை திமுக, அதிமுக பின்பற்றவில்லை என்பதற்காக பெரியாரை இகழ்வதில் அர்த்தமில்லை.
திருமூலர் முதல் மறைமலை அடிகளார் வரை ஏற்றுக்கொள்ளும் நாம் பெரியாரை அந்நியப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது. பெரியார் தமிழர் மரபின் தொடர்ச்சி, நாம் பெரியாரின் தொடர்ச்சி என்பதை ஏற்க என்ன தயக்கம்? எதிர்காலத்தில் ஆரிய வைதீக எதிர்ப்பில் பெரியாரைவிட வீரியமாக ஒருவர் செயல்பட்டால் அவரையும் நாம் பின்பற்றுவோம். ஏன் மணியரசன் ஒரு பெரும் வெகுசன அதிர்வை ஏற்படுத்தி, பெரியாரை விஞ்சிய அமைப்பு கட்டியிருந்தால் கட்டாயம் நாம் அவரையும் தலைமையாக ஏற்றிருப்போம். அதில் எந்தத் தயக்கமும் எங்களுக்குக் கிடையாது. யார் ஒருவர் பெரும்பான்மையான மக்களிடம் ஒரு அரசியல் கருத்தியலைக் கொண்டு செல்கிறாரோ அவர்தான் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுவார். அதுதான் சமூக அறிவியல்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் தமிழரசன், ஐயா நெடுமாறன், ஐயா மணியரசன், தோழர் தியாகு, தோழர் பொழிலன் உழைப்பைத் தாண்டி வேறுயாரும் இங்கு வேலை செய்யவில்லை. ஆனால் இன்று சீமானும், திருமுருகன் காந்தியும் தமிழ்த் தேசியத்தின் இருவேறு அடையாளமாக பல லட்சம் இளைஞர்களால் பார்க்கப்படுகிறார்கள். இதனால் மூத்தவர்களின் உழைப்பை இவர்கள் மறைத்து விட்டார்கள் என்று கூற முடியுமா?
2009க்குப் பிறகு எழுச்சியடைந்த தமிழ்த் தேசிய சக்திகளிடம் உள்ள ஆரிய வைதீக எதிர்ப்பிற்கு விதை போட்டதில் பெரியாருக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை எங்களைப் போன்ற இளைய தலைமுறை ஜனநாயகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஆரிய வைதீக மரபே இந்திய தேசியத்தின் அடிப்படை. அதை ஏற்க மறுப்பதுதான் தமிழ்த் தேசியத்தின் முதல் படி. எனவே பெரியாரின் துணையுடன்தான் பெரும் இளைஞர் கூட்டம் ஆரியத்தைக் கடந்து வந்துள்ளது. எனவேதான் பெரியாரை தமிழ்த் தேசியத்தில் இருந்து அந்நியப்படுத்த முடியாது.
1956 செப்டம்பர் 1க்கு முன்வந்த அனைவரும் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ளும் நீங்கள், நாம் தமிழர் போன்று 300 ஆண்டு தெலுங்கு வந்தேறி என்று பெரும் பரப்புரையில் ஈடுபடும் சக்திகளிடம் எப்படி ஒன்றிணைந்தீர்கள்? தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கு என்று போராடும் நீங்கள், 1956முன் உள்ள அனைவரும் தமிழர்கள் என்று வரையறுக்கிறீர்கள். ஆனால் நாம் தமிழர் அவர்களை வந்தேறி என்கிறது. உங்கள் இரு அமைப்புகளும் சேர்ந்து எந்த தமிழருக்குப் போராடுகிறீர்கள்?. ஒன்று நீங்கள் வந்தேறி அரசியலை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது நாம் தமிழர் 1956 வரையறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது இருவரும் ஒன்றிணையும் புள்ளியில் ஏதேனும் ரகசியம் உள்ளதா?. இதில் 1956க்குப் பிறகு அகதிகளாக வந்த ஈழத் தமிழர் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை.
ஒரு சில இளைஞர்கள் மட்டும் வந்தேறி அரசியல் பேசுவதாக சொன்னீர்களே... இன்றைய சூழலில் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் இந்த வந்தேறி அரசியல் சிந்தனை சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. திராவிடம் என்றால் தெலுங்கு என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி அவர்கள் வந்தேறிகள் என்று ரத்தப் பரிசோதனை செய்யும் ஒரு முகாமாக தமிழகம் இன்று மாறியுள்ளது... இதற்கு யார் பொறுப்பு?
இது தமிழ்த் தேசியத்திற்கு பின்னடைவு கிடையாதா?.
பெரியார் துவங்கி, கருணாநிதி, வைகோ, கோவை ராமகிருட்டிணன், திரைப்பட நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கரு.பழநியப்பன், சமுத்திரக்கனி முதல்கொண்டு பல திரை நட்சத்திரங்களையும் ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தமிழ்த் தேசியத்திற்கு விரோதமாகாதா?
ஏன் 1956 அரசியல் பேசுவதால் மணியரசனும் தெலுங்கர்தான், அவருடைய இயற்பெயர் மணிராஜலு என்று சில ஆண்டுகளுக்கு முன் முகநூலில் பரப்பப்பட்டதே அதுதான் தமிழ்த் தேசியமா?
திருமுருகன் காந்தி, நடிகர் சத்தியராஜ், பேரறிவாளன் போன்ற பெரியாரின் உண்ர்வாளர்களையும் ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது நீங்கள் ஏன் வெகுண்டெழுந்து எதிர்க்கவில்லை?
காஷ்மீர் தேசிய இனவிடுதலை இஸ்லாம் - இந்து பிரச்சனையாக மாற்றப்பட்டு, பின் இந்திய - பாகிஸ்தான் சிக்கலாக உருமாற்றி இன்று தேசிய இனப் போராட்டம் மடைமாற்றப்பட்டுள்ளது. இதே போல் வடகிழக்கு மாநிலத்தின் தேசிய இனப் போராட்டம் வந்தேறி அரசியல் பேசி எப்படி இன்று முட்டுச்சந்தில் நிற்கிறது? இதுபோல் தமிழ்த் தேசிய போராட்டத்தையும் இந்திய அரசு தமிழ் - தெலுங்கர் என்று இரு இனத்திற்குள் ஒரு கருத்து முரண்பாட்டை நாம் தமிழரை மையமாக வைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் பரப்பி வருகிறது இது உங்களுக்குப் பிரதான முரண்பாடாகத் தெரியவில்லையா?.
ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமாக வாழும் தெலுங்கு மக்கள் மீது ஒரு வெறுப்பை உருவாக்கி அதனூடாக தமிழர் நிலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடம் ஒரு இனமோதலை உருவாக்க நினைக்கும் இந்திய பாசிச அரசின் சூழ்ச்சி குறித்து நீங்கள் ஏன் பேச மறுக்கிறீர்கள்?.
இன்று புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் வந்தேறி அரசியல்தான் இனப்படுகொலைக்கு காரணம் என்று பரப்பப்படுவது ஆபத்தாக உங்களுக்குத் தெரியவில்லையா?. தமிழ் இளைஞர்கள் எந்த வித புவிசார் அரசியல் புரிதலும் இன்றி மடைமாற்றப்படுவது உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா?
தமிழர் நிலத்தில் ஒரு இன மோதலுக்கான அடிப்படையை நாம் தமிழர் கட்சி உருவாக்குகிறது. அதுதான் தமிழ்த் தேசியத்தின் மிகப்பெரிய சீரழிவு. இந்த சீரழிவு சக்தியுடன் நீங்கள் ஒன்றிணையும் ஒற்றைப் புள்ளி எது? வெறும் பெரியார் எதிர்ப்பு மட்டுமா?
பெரியார் சந்தர்ப்பவாத அரசியல் செய்தார் என்று பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் ஏன் சீமானின் சந்தர்ப்பவாதம் பற்றிப் பேசுவதே கிடையாது?
பெரியாரின் முரண்பாடுகளைவிட சீமானின் பொய்கள் உங்களுக்கு எப்படி இவ்வளவு சகிப்புத்தன்மையை உருவாக்கியது?
அதேபோல் இந்தியாவை ஏற்றுக்கொண்டு தேர்தல் அரசில் செய்யும் நாம் தமிழர் கட்சி எப்படி தமிழ்த் தேசிய அமைப்பாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது?.
திமுக - அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மூலவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது என்பது உன்மைதான். ஆனால் அந்த மூலவளங்களைக் கொள்ளையடிக்கும் வைகுண்டராசன் போன்ற தமிழர்களும், கல்விக் கொள்ளை பச்சமுத்து போன்றவர்களுடன் சீமான் ஒன்றிணைவதை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை?
தமிழ்நாட்டுத் தமிழன் மட்டும் தமிழனைச் சுரண்ட வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியமா?
தனது சொந்த தேர்தல் லாபத்திற்காக தமிழர் நிலத்தில் இனமுரண்பாட்டை கருத்தியல் அடிப்படையில் உருவாக்கி வரும் நாம் தமிழர் மேடையில் ஒரே ஒருமுறை வந்தேறி அரசியல் என்பது தமிழர் விரோதமானது, 1956க்கு முன்வந்த அனைவரும் தமிழர்கள், கருணாநிதியும், பெரியாரும், வைகோவும் தமிழர்கள்தான் என்று பேசுங்கள்... அடுத்த நாள் நீங்களும் வந்தேறியாக மாற்றப்படுவீர்கள்.
பெரியார் விமர்சனம் என்ற போர்வையில் வந்தேறி அரசியலுக்குத் துணைநிற்கும் அனைவரும் தமிழினத் துரோகிகள் தான், வந்தேறி அரசியலை மௌனமாகப் பார்க்கும் ஒவ்வொருவரும் தமிழர் மண்ணில் நிகழப் போகும் இனப்படுகொலைக்கு துணை போவார்கள்..
பெரியாரை விமர்சிக்கும் தமிழ்த் தேசியவாதிகளே இன்றைய தலைமுறையில் தமிழ்த் தேசிய ஆளுமைகளான சீமானையும், திருமுருகன் காந்தியையும் உருவாக்கியது பெரியார் பாதைதான் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
- தமிழ்ச்செல்வன்