பணமும் அதன் செயல்பாடுகளும்

பணவீக்கம் பற்றி அறிய வேண்டுமானால் முதலில் பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் உங்களுக்காக பணத்தின் பல செயல்பாடுகளைப் பற்றி முதலில் விளக்கி விடுகிறேன். எப்பொழுதெல்லாம் இரண்டு தனிநபர்கள் அல்லது குழுக்கள் இடையே பரிவர்த்தனை நடைபெறுகிறதோ அங்கே பணத்தின் செயல்பாடு வந்து விடுகிறது.

MoneyFlowநம்மூர்களில் சந்தை நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள். அங்கே ஒரு சிறுமி 10 நாட்டு கோழி முட்டைகளை வைத்துக் கொண்டு அதற்கு சமமான அரிசி வாங்க நினைக்கிறாள். அனால் அன்று பார்த்து முட்டைகளை பெற்றுக் கொள்ளும் அரிசி வியாபாரி வரவில்லை. உடனே சிக்கலைத் தீர்க்க நம்முடைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்தைக்கு காய்கறி வாங்க வருகிறார். அவர் சிறுமி படும் சிரமத்தைப் புரிந்துகொண்டு ஒரு செவ்வக வடிவ காகிதத்தில் ஏதோ எழுதி அந்த சிறுமியிடம் கொடுத்து முட்டைகளை பெற்றுக் கொள்கிறார். சிறுமியும் அதே காகிதத்தை அரிசி கடைக்காரரிடம் கொடுத்து அரிசியைப் பெற்றுக் கொண்டு போகிறாள். அப்படி என்னதான் எழுதியிருந்தது அந்த காகிதத்தில் என்றால் "இந்த நபர் கொண்டு வரும் காகிதத்தின் மதிப்பு ரூபாய் 100 என்று உறுதியளிக்கிறேன்" என்று (I PROMISE TO PAY THE BEARER THE SUM OF ONE HUNDRED RUPEES) எழுதி கையொப்பமிட்டு கொடுத்துள்ளார். இப்பொழுதே உங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஆக அரிசிக்கும், முட்டைக்கும் இடையே பணம் எனும் காகித ஊடகம் உள்ளே நுழைந்து பரிவர்த்தனையை எளிமையாகவும், மென்மையாகவும் ஆக்கிவிட்டது பாருங்கள். இதுமாதிரி உணவு காய்கறி வகைகளுக்கு சரி.. ஆனால் பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வெவ்வேறான உற்பத்தி பொருள்களுக்கு என்ன தீர்வு என்று பார்ப்போம். உதாரணமாக ஓர் ஆண்ட்ராயிடு போனின் மதிப்பு இந்திய ரூபாயில் அறுபதாயிரம் என்று வைத்துக் கொண்டால், 60,000 ஒற்றை அலகுகளுக்கு சமம் என்று பொருள். வேண்டுமானால் இங்கே அலகு என்றிருப்பதை ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். மேலும் அலகிற்கு பணம் ஓர் ஊடகமாக செயலாற்றுகிறது.

பணத்தின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கு மிகுந்த நிதானமும், ஓரளவு கற்பனை சக்தியும் தேவைப்படுகிறது. நீங்கள் 50,000/- மாத ஊதியமாக ஒரு பன்னாட்டு மளிகைப் பொருள்கள் விற்கும் நிறுவனத்தில் மேலாளராகப் பணி செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் பெறுகிறீர்கள். உங்கள் மாத செலவை சீராக கவனிக்கிறீர்கள். மாத இறுதியில் உங்களிடம் பூஜ்ய ரூபாய் உள்ளது. அதாவது மாத முதலில் உங்கள் கையில் 50,000/- மும், மாத இறுதியில் 0/- ரூபாயும் உள்ளதால், உங்களின் சராசரி பண இருப்பு 25,000/- என்பதுடன் [(50,000 +0)/2] நீங்கள் ரூபாய் 50,000/- பணத்தை 30 நாள்களில் பரிவர்த்தனை செய்துள்ளீர்கள் என்று பொருள்.

அதாவது இதன் மூலம் பணத்தை வைத்திருப்பதன் முக்கிய நோக்கமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத்தான் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது இப்படி பார்ப்போம்… நீங்கள் பணிபுரியும் மேற்சொன்ன நிறுவனத்தில் உங்கள் முதலாளி மற்றும் நீங்கள் மட்டுமே உள்ளீர்கள். மாத முதலில் முதலாளி உங்களின் உழைப்பிற்கு ஈடாக உங்களிடம் மாத ஊதியமாக 50,000/- தருகிறார். நீங்கள் மீண்டும் அந்தத் தொகையை உங்கள் நிறுவனத்திலேயே மாதம் முழுதும் அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பெறுவதன் மூலம் செலவழிக்கிறீர்கள். அதாவது மாத முதலில் உங்களிடம் பணம் உள்ளது உங்கள் முதலாளியிடத்தில் பணமில்லை. ஆனால் மாத இறுதியில் நிலைமை மாறி உங்களின் ஊதியம் நீங்கள் மேற்படி நிறுவனத்தில் பெற்ற சேவைக்காக நிறுவனத்திற்கே சென்று விடுவதால், இப்போது முதலாளியிடத்தில் முழுப்பணமும் உள்ளது. உங்களிடம் பண இருப்பு பூஜ்யம்.

இருவரும் சராசரி பண இருப்பை அதாவது ஆளுக்கு 25,000/- பெற்றுள்ளீர்கள். இந்தப் பொருளாதாரத்தில் மொத்த பணத் தேவையாக மாதம் முழுவதும் இருந்த தொகை 50,000/- ரூபாய். ஆனால் இங்கே கவனிக்க வேண்டியது மொத்த ஒரு மாத இருவருடைய பரிவர்த்தனையின் மதிப்பு 100,000/- ரூபாய் ஆகும். இந்த வகையான முறை பொருளியல் சார்ந்த பொருளாதாரம் எனப்படுகிறது.

மாத முதலில் மொத்த பணமும் ஊதியமாக முதலாளியின் பாக்கெட்டில் இருந்து பணம் தொழிலாளிக்கு செல்கிறது. பின்பு அதே பணம் ஒரு குறிப்பிட்ட 30 நாள்களில் மீண்டும் முதலாளியிடமே திரும்ப வந்து சேர்கிறது பாருங்கள்.

பண ஓட்டம் 

உங்களுக்கும் உங்கள் நண்பர் உக்கிரனுக்குமான ஒரு பொருளாதாரத்தைப் பார்ப்போம். இப்பொழுது உங்கள் இருவரிடமும் தலா ஒரு இலட்சம் பணம் உள்ளது. ஊரிலிருந்து வந்துள்ள உங்கள் மகள் இப்படி கேட்கிறார். “அப்பா அவர் (இணையர்) அலுவகம் தூரமான இடத்திற்கு மாத்திட்டாங்க… அதனால ரொம்ப சிரமப்படுகிறார். அவருக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுங்கப்பா” என்கிறார். ஆஹா நம்மிடம் பணம் இருக்கும்பொழுது அல்லவா கேட்டிருக்கிறாள் அன்பு மகள் என்கிற மகிழ்வுடன் உடனே உங்களின் நண்பரிடமுள்ள ராயல் என்பீல்டை ஒரு இலட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொடுக்கிறீர்கள்.

உங்கள் நண்பர் உக்கிரன் அடிக்கடி பொதுவுடைமை விவாதங்கள் நண்பர்களுடன் நடத்துவதால், அவருடைய சிறிய வீடு போதவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களின் நண்பர் உங்களிடமுள்ள உங்களின் தேவைக்கு அதிகமான ஒரு வீட்டை, 90,000/- ரூபாய் உங்களிடம் கொடுத்து வீட்டை பெற்றுக் கொள்கிறார். அது பழைய வீடு என்பதாலும், நீங்கள் சிவில் பொறியாளர் என்பதாலும் வீட்டை செப்பனிட நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். அதற்காக உங்கள் நண்பர் மீண்டும் உங்களிடம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுக்கிறார்.

இப்பொழுது உங்கள் மருமகன் புதிதாக ஒரு கார் வாங்கியிருப்பதால் நீங்கள் உங்கள் மகளுக்கு வாங்கிக் கொடுத்த ராயல் என்பீல்டு தேவையற்றுப் போனது. எனவே மீண்டும் ராயல் என்பீல்டை உங்கள் நண்பர் உக்கிரனிடம் 90,000/- ரூபாய்க்கு திருப்பிக் கொடுத்து விடுகிறீர்கள்.

மேற்சொன்ன உங்கள் இருவருக்குமான பொருளாதாரத்தில் நீங்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து தலா இரண்டு இலட்சம் வீதம் மொத்தம் நான்கு இலட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். உங்களிடம் இருந்த தலா ஒரு இலட்ச ரூபாய் மூலமாக. மேலும் இதற்கு "பணவோட்ட பொருளாதாரம்" என்று பெயர்.

அதாவது ஒரு குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு வேகமாக பணம் கைமாறுகிறதோ அதற்கு பண ஓட்டம் என்று பெயர். பண ஓட்டம் அதிகரித்தால் குறிப்பிட்ட தனி நபர்களிடையேயான பரிவர்த்தனை தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பொருள். ஒரே அளவிலான பணம் மீன்டும் மீண்டும் பரிவர்த்தனைகளில் ஈடுபடுத்தப்படுகிறது என்று பொருள்.

இப்பொழுது நினைத்துப் பாருங்கள் 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் எவ்வளவு பண ஓட்டம் நடைபெறுகிறது என்று......! ஆகையால் அதிக அளவிலான கட்டுக்கடங்காத பண ஓட்டம் அதிக பண வீக்கத்தை உருவாக்கும்!!

மீண்டும் பேசுவோம் இந்தியப் பொருளாதாரம்..

- பார்த்திபன்.ப

Pin It