Jayalalithaஅண்மையக் காலங்களில் தமிழ்நாட்டு அரசியலில் அறிக்கைப் போர்கள் அதிகரித்து வருகின்றன. இவை மிகவும் தரம் தாழ்ந்து வருவதுதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வழக்கம் போல் தரம் தாழ்ந்து தனிநபர் தாக்குதல் அறிக்கை வெளியிடுவதில் அதிமுகவின் தலைவி ஜெயலலிதா தற்போதும் முதலிடம் வகிக்கின்றார். நானும் அரசியலில் இருக்கின்றேன் என்பதை நினைவூட்ட தினம் ஒரு அறிக்கை என்ற பெயரில் எழுதித் தரப்படும் தனி நபர் தாக்குதல் அறிக்கையைக் குறைந்தபட்சம் சரிப்பார்த்துத் திருத்தம் செய்யாமல் கூட வெளியிட்டு விடுகிறார்.

திமுகவையும் அதன் தலைமையையும் எரிச்சல் படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளைத் தவிர குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் அறிக்கையில் விஷயங்கள் இல்லாத விபரங்களைக்கூட அவரால் உணர்ந்து கொள்ள இயலாத நிலை பரிதாபத்துக்குரிய ஒன்றாகும். மேலும் தான் வெளியிடும் அறிக்கைகளில் வயதுக்கு கொஞ்சம் கூட மரியாதை இன்றியும் முதுமையைக் கேலி செய்தும் (தள்ளாடும் கருணாநிதியை விட அவரது அரசு கூடுதலாகத் தள்ளாடுகிறாதாம்) அறிக்கை வெளியிட்டுத் தன் தரத்தை தானே தாழ்த்திக் கொள்கிறார் ஜெயலலிதா. அவரை திருப்திப்படுத்த அறிக்கை எழுதித்தருபவர் கடுமையான சொற்பிரயோகம் பயன்படுத்தி எழுதித்தருகிறார். ஆனால் தமிழர்களுக்கு என்று சில நாகரீகங்கள், பண்பாடுகள் உள்ளன. அவற்றை அம்மையாருக்கு அறிக்கை எழுதித்தரும் பண்பாளர் உணர்ந்து கொள்ளுதல் நலம். அல்லது எதிர்கால சந்ததியினர்களுக்கு தவறான வழி காட்டுதலைத் தரும் செயலாக அவை அமைந்துவிடும்.

உங்களிடம் மட்டுமே எழுதுகோல் உள்ளது. எப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் கூடாது. குட்டக் குட்ட எத்தனை நாட்களுக்குத்தான் எவரும் குனிந்துகொண்டே இருப்பார்கள்? பகைவர்கள் நம் அளவிற்கு தரம் தாழ்ந்து நம்மைத் தாக்கி எழுத மாட்டார்கள். அவர்களுக்கு அவை நாகரீகம், பண்பாடு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சேற்றை வாரி இறைத்துக்கொண்டு இருப்பீர்களேயானால் எதிரிகளும் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுப்பார்கள்? அவர்களும் பதிலுக்கு நரகல் நடையில் அறிக்கைகள் விட ஆரம்பித்தால் அரசியலே அசிங்கமாகிவிடும். எனவே சற்று அடக்கி வாசிப்பது அவசியம். தனிநபர் தாக்குதல் கூடாது. கருத்துகளை வெளியிடுவதில் கண்ணியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நமக்கு, அற்புதமான ஜனநாயக அமைப்பு அமைந்திருக்கிறது. அதில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதையாவது பேசியோ எழுதியோ நாட்டை நரகல் ஆக்க முயல வேண்டாம்.

தற்போது ஆங்காங்கே நகர்ப்புறங்களிலும் மாவட்டத் தலைநகர்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இங்கும் தரம் தாழ்ந்த கோஷங்களும் தனிநபர் தாக்குதலும் சற்று அதிகமாகவே உள்ளன. இவை தேவையற்ற விரோத மனப்பான்மையே வளர்த்துவிடும். கோரிக்கைகளைக் கண்ணியத்தோடு வெளிப்படுத்தப்படாவிட்டால் மக்கள் யாரும் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எதற்காக ஆர்ப்பாட்ட அரசியல் நடத்துகிறீர்களோ அந்த நோக்கமே காணமல் போய்விடும். சன் தொலைக்காட்சியில் நம்மைக் காட்டுகிறார்களே என்று புளங்காயிதம் கொண்டு தரம் தாழ்ந்து நடந்து கொள்வதைத் தவிர்க்க முயலுவதே அறிவுடைமையாகும். 

- அக்னிப்புத்திரன்

Pin It