இந்தியாவில் எந்த விடயத்திற்கெல்லாம் விவாதங்கள் நடத்தப்பட வேண்டுமோ, அதைத் தவிர மற்ற விடயங்களின் மீது கவனத்தைத் திருப்புவது தான் தற்போது தமிழக, இந்திய ஊடகங்கள் செய்து வரும் பணி. உண்மையை வெளிக்கொணரும் பணியில் இருப்பவர்கள், வெளிவரும் உண்மைகளைக் கூட எடுத்துச் சொல்வதில் பயம் கொள்கிறார்கள் அல்லது அரசியல் செய்கிறார்கள்.

அதனால் தான் இன்று ஊடகங்கள் செய்ய வேண்டிய பணியை தனிமனிதர்களாக சமூக வலைத்தளங்களில் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஊடகங்கள் எடுத்துக் காட்டத் தயங்குகிற உண்மைகளையும் தயக்கமில்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுத்தளங்களில் விவாதிக்கிறார்கள்.

Cobrapost operation karokeவெகுஜன ஊடகங்கள் வீடுதேடி வந்து கொடுத்த செய்திகளில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட சூழலில் உண்மையான செய்திகளைத் தேடி சாமானியர்களும், இளைஞர்களும் நகரத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் உண்மை செய்திகளை வெளியிடும் பிரபலம் இல்லாத ஊடகங்ளும் உலகளவில் பிரபலமாகின்றன. அப்படியொரு ஊடகம் தான் கோப்ராபோஸ்ட்.

அரசியல்வாதிகளையும், நேர்மையில்லாத ஊடகங்களையும் ரகசிய கேமராக்கள் மூலம், அவர்கள் மூலமே உண்மையை வெளிக்கொண்டு வருவதில் இதுவரை பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளனர். இதன் வரிசையாக பாலிவுட் நடிகர்களின் உண்மை முகத்தையும், பாஜகவின் இணையப் பிரிவு எப்படி இயங்குகிறது என்பது பற்றியும் "ஆப்ரேஷன் கரோக்" என்ற பெயரில் ஒரு புலனாய்வை நிகழ்த்தியுள்ளனர்.

இது இந்தியா முழுவதும் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தேசிய கட்சிக்கு சார்பாக மக்களால் விரும்பப்படும் நடிகர்கள் பிரச்சாரம் செய்து, அதில் மறைமுகமாக பணத்தைப் பெற்றுக் கொள்வதும் தெரிய வந்திருக்கிறது.

பிப்.19ம் தேதி வெளிவந்த இந்த புலனாய்வு இன்று வரையும் சமூக வலைத்தளங்களில் பெருமளவு விவாதிக்கப்படுகிறது. ஆனால் வெகுஜன ஊடகங்கள் இதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை.

முன்னனி நடிகர்களாகவும், பாடகர்களாகவும் உள்ள விவேக் ஓப்ராய், சன்னி லியோன், அபீஜித் பட்டாச்சார்யா போன்ற ஏராளமான நபர்கள் பணம் பெற்றுக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வலைத்தளங்களில் பாஜக தரும் செய்திகளை வெளியிட ஒத்துக் கொண்டனர். தாங்கள் போடும் ஒரு கருத்துக்கு 2 லட்சம் வரை தரப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாம் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல கோப்ராபோஸ்ட் செய்தியாளர் பாஜக இணைய பிரிவிலிருப்பது போல் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதால், மொத்த தொகையில் 10% மட்டும் வெள்ளைப் பணமாக செக் அல்லது வங்கி கணக்கில் போட்டு விடுவதாகவும், மீதித் தொகையை (கருப்பு) பணமாக வாங்கிக் கொள்ளுமாறும் அனைவரிடமும் கூறுகிறார். இதை வித்யா பாலன், அர்ஷத் வர்ஷி, ராசா முர்ஷாத், சௌமியா டண்டன் போன்ற பிரபலங்களைத் தவிர மற்ற அனைவரும் முன்வந்து ஏற்றுக் கொண்டனர்.

ஊடகங்களில் விவாதிக்க வேண்டிய முக்கியத்துவம் நிறைந்த இச்செய்தியைப் பற்றி எந்த வெகுஜன ஊடகங்களும் கவனம் செலுத்தவில்லை. இந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கூட இதன் மீதான விசாரணைக்கு வலியுறுத்தவில்லை. இதுபோன்று பணத்தை பெற்றுக்கொண்டு நடுநிலை பிரபலங்களாக காட்டிக் கொள்ளும் மனிதர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இப்படி பணம் கொடுத்து தான் பல நடிகர்கள் பாஜகவுக்கான ஆதரவுக் கருத்துகளை வெளியிடுகிறார்கள் என்ற சந்தேகம் இருந்த நிலையில், அதனை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது இந்தப் புலனாய்வு. இதற்கான விசாரணையும், தண்டனையும் இம்மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டியது இந்நாட்டின் நீதித்துறையின் கட்டாயம்.

- அபூ சித்திக்

Pin It