முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அவர்கள் மீது பெரும்பான்மை மதத்தினர் நடத்தும் தாக்குதல்களை அரபு நாடுகள் நினைத்தால் தடுக்க முடியும். ஆனால், அவர்கள் அதை ஒருபோதும் செய்ததில்லை. காரணம், அவர்களே தங்களுக்குள் மதப்பிரிவுகளால் பிளவுண்டு, சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆங்கிலேயர்களால் இந்து மதம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இங்கு எப்படி சைவ, வைணவ மதங்களுக்கு இடையே மோதல் நடைபெற்றதோ, அதேபோன்று அரபு நாடுகளில் சன்னி, ஷியா பிரிவுகளுக்கு இடையே மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

beheaded child in Saudi Arabia

கடந்த 7 ஆம் தேதி சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள நபிகள் நாயகம் மசூதிக்கு தன் தாயுடன் சென்ற ஸகாரியா அல் ஜபிர் என்ற 6 வயது சிறுவன் கொடூரமான முறையில் தாயின் கண் முன்னால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவன் கொலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் அவன் ஷியா பிரிவைச் சேர்ந்தவன் என்பதுதான். பெரும்பான்மை சன்னி முஸ்லிம்கள் வணங்கும் மசூதிக்கு ஷியா பிரிவு முஸ்லிம்கள் வருவதைக் கூட சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகி கெட்டி தட்டிப்போன மதவெறியே, அந்தச் சிறுவனை கொலை செய்யத் தூண்டியுள்ளது. ஆனால் சவுதி அரசு அந்த சிறுவனைக் கொலை செய்த கார் ஓட்டுநர் மனநிலை சரியில்லாதவர் எனத் தெரிவித்துள்ளது. சவுதி அரசு இப்படி சொன்னாலும் நிச்சயம் அங்கிருக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஒருவர்கூட இதை நம்பவில்லை. காரணம் தொடர்ச்சியாக ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிரான வன்மத்துடனேயே சவுதி அரசு செயல்பட்டு வருவதால்தான்.

இப்படி சிறுபான்மை ஷியா பிரிவு முஸ்லிம்களை வேட்டையாடுவதற்கென்றே சவுதி பெரும்பான்மை பெற்றெடுத்ததுதான் வகாபிசம் ஆகும். ஈராக்கிலும், சிரியாவிலும் உள்நாட்டுப் போர் நிகழ்த்தி மக்களைக் கொன்று குவிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு முதன்மையான நிதிமூலதனம் வழங்குவதும் சவுதி அரேபியாவின் சன்னி அரசாங்கம்தான். சிரியாவிலும், ஈராக்கிலும் நடைபெற்றுவரும் ஷியா பிரிவு ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சன்னி அரபு தேசங்கள் என்று அழைக்கப்படும் சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, குவைத் போன்றவை மில்லியன் கணக்கான டாலர்களுக்கு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன.

வகாபிச கடுங்கோட்பாட்டுவாதத்தை உலகம் முழுவதும் பரப்ப பெரும் நிதி கொடுக்கும் சவுதி அரசு, தங்கள் சொந்த நாட்டை அமெரிக்காவின் நியூயார்க், லாஸ்வேகஸ் போன்ற நகரங்களின் மாதிரி வடிவமைப்பில் கட்டி எழுப்பிக் கொண்டு இருக்கின்றன. மக்கா, மதீனாவில் உள்ள பல வரலாற்றுத் தளங்களை அழித்து அந்த இடங்களில் எல்லாம் மிகப் பெரிய கட்டுமானங்களை எழுப்பிக் கொண்டு இருக்கின்றன. அண்மைக்காலத்தில் சவுதியில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளன‌. அவற்றில் ஒன்று பொதுக்கழிப்பிட வசதிக்கு இடமேற்படுத்தித் தரும் பொருட்டு உம்முல் முஃமினீன் சுதீஜா அல்குப்ராவுக்குச் சொந்தமாயிருந்த பழைய வீடொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.’மக்தபா மக்கா அல் –முகர்ரமா’ எனப் பெயரிடப்பட்டு மக்காவில் ஒரு நூலகமாக இயங்கி வந்த இறைத்தூதர் பிறந்த வீடு வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளது. முதல் கலீஃபா அபூபக்கர் சித்தீகின் பெயர் கொண்ட தொன்மையான பள்ளிவாசல் இருந்த இடத்தில் இன்று ஏ.டி.எம் திறக்கப்பட்டுள்ளது. மக்காவின் ஹில்டன் ஹோட்டலுக்கு இடம் வேண்டி இமாம் அபூபக்கரின் வீடு இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த உஹது, பத்ரு போர்க்களங்கள் இன்று வாகன நிறுத்தங்களாக மாறியிருக்கின்றன. இதுதான் இஸ்லாத்தை உண்மையில் கடைபிடிப்பதாய்ச் சொல்லும் சன்னி மதவெறி பிடித்த சவுதியின் உண்மையான முகம்.

சவுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் உண்மையில் இரண்டாம்தர குடிமக்களாகவே எப்போழுதும் நடத்தப்படுகின்றார்கள். சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் 15 சதவீதத்தினராக உள்ளார்கள். இவர்கள் சவுதி அரேபியாவின் அல் அஹ்ஸா, அல் கத்திஃப் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இந்த இடங்களே சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளாக உள்ளன. சவுதி அரேபியாவின் சன்னி மன்னராட்சியின் முக்கிய கொள்கையான வகாபிசத்தின் படி, ஷியா பிரிவினர் காபிர்களாகவும், ஈரானின் ஏஜெண்டுகளாகவும் பார்க்கப்படுகிறார்கள். மேலும் மனித உரிமை கண்காணிப்பகம் 2009இல் வெளியிட்ட அறிக்கையில். சவுதி ஷியா பிரிவினர் மீது பரவலான பாரபட்சமும், அரசாங்கக் கல்வி அமைப்பில் பெரும் கட்டுப்பாடுகளும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியது. ஷியா பிரிவினர் அவர்களது மதத்தைப் பற்றி அறிவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்றும், இவர்கள் சன்னி தலைவர்களால் காபிர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் தேசபக்தியானது கேள்விக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் இராணுவத்தில் சேருவதில் இருந்தும் தடுக்கப்படுகின்றார்கள். அந்த நாட்டு நீதிமன்றத்தில் இருந்து அத்தனை அரசு உறுப்புகளும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன.

நவம்பர் 2014இல் அல் அஹ்சா நகரில் உள்ள ஷியா பிரிவினர் மசூதியில் நடந்த தாக்குதலில் தொழச்சென்ற எட்டு ஷியா பிரிவினர் கொல்லப்பட்டார்கள். அதே போல 2015 ஆம் ஆண்டு மே மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், மனித குண்டு தீவிரவாதி நடத்திய தாக்குதலில், தொழுகையில் ஈடுபட்ட 20 பேர் பரிதாபமாகப் பலியாயினர், 50 பேர் காயம் அடைந்தனர். ஷியா பிரிவினருக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல் என்பது சவுதியைத் தாண்டி இன்று அவர்கள் வாழும் உலகின் பிற பகுதிகளுக்கும் நீண்டிருக்கின்றது. 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறி வைத்து நடந்த தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐஎஸ் அமைப்பு அறிவித்தது. அதே போல 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி ஹீரத் நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடந்த போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

சன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் திருமண உறவு கூட வைத்துக் கொள்வதில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் முரண்பாடுகள் தீவிரமடையும் காலங்களில், சமூகத்தால் ஒதுக்கப்படும் ஆபத்தும் ஏற்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், சன்னி பிரிவினர் அதிகம் வாழும் ஈராக்கில் பல தடவைகள் இனக் கலவரங்கள் வெடித்துள்ளன. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பிழையான சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டார்கள். பரஸ்பரம் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடந்தன. ஆயுதமேந்திய குண்டர்கள் வழியில் செல்லும் வாகனங்களை மறித்து, பயணிகளை சன்னி - ஷியா என்று பிரித்தறிந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சவுதியில் ஷியா பிரிவு சிறுபான்மையாக இருப்பதால் அங்கு அவர்கள் பழிவாங்கப்படுவதைப் போன்றே ஷியா பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியா போன்ற நாடுகளில் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சிரியாவை ஆளும் ஆசாத் அரசை பெரும்பான்மை ஷியா முஸ்லிம்கள் தீவிரமாக ஆதரிக்கின்றார்கள். கடந்த நாற்பது வருடங்களாக, அவர்கள் அங்கு மேலாண்மை பெற்றுள்ளனர். இன்று நடக்கும் உள்நாட்டுப் போரில், ஷியா அரசப் படைகளினால் கொல்லப் படுபவர்கள் சன்னி முஸ்லிம்கள் மட்டும் தான். அதனால் தான் சன்னி முஸ்லிம்கள் ISIS போன்ற இயக்கங்களை, அவற்றின் மத அடிப்படைவாதம் தெரிந்திருந்தும் ஆதரித்தார்கள். அரச படைகள் புரிந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக, கிளர்ச்சியாளர்கள் ஷியா கிராமங்களில் தாக்குதல் நடத்தி ஷியா முஸ்லிம்களைக் கொல்கின்றனர்.

எனவே சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற செயலை ஏதோ ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனின் செயலாகக் கருதி நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. பல தசாப்தங்களாக ஊட்டி வளர்க்கப்பட்ட மதவெறியின் வெளிப்பாடாகவே இதை நாம் பார்க்க வேண்டும். சவுதியில் ஷியா பிரிவு மக்கள் அழித்தொழிக்கப்படுகின்றார்கள் என்றால் சிரியாவில் சன்னி பிரிவு மக்கள் அழித்தொழிக்கப்படுகின்றார்கள். வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டிய முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் பொது எதிரியான அமெரிக்காவால் மிக எளிதாக தன்னுடைய கைக்கூலிகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தவும், ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்து தம்முடைய பொம்மை அரசை நிறுவவும் முடிகின்றது.

எல்லா மதங்களும் அன்பை போதிப்பதாக அதைக் கடைபிடிப்பவர்கள்தான் பிரசங்கம் செய்கின்றார்கள். ஆனால் எல்லா மதங்களுமே அது பெரும்பான்மையாக உள்ள இடங்களில் சிறுபான்மை மக்களை அழித்தொழித்து தனிப்பெரும் மதமாக உருவாவதையே செய்கின்றன. மதுரையில் எண்ணாயிரம் சமணர்களைக் கொன்ற சைவ மதவெறியும், குஜராத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துமத வெறியும் இதையேதான் உறுதிப்படுத்துகின்றன. தன்னுடைய சக மனிதனை குண்டு போட்டு கொல்வதையும், கழுத்தறுத்துக் கொல்வதையும்தான் கடவுள்கள் விரும்புகின்றார்கள் என்றால், அந்தக் கடவுள்களை அழிப்பதையும், அந்தக் கடவுள்களை நியாயப்படுத்தும் புனித நூல்களை அழிப்பதையும்தான் நாம் முதலில் செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It