சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்திருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று விளம்பரங்களில் கூவிக் கொண்டிருந்தாலும் இப்படத்தின் வழியாக சில சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.

அது என்ன சர்ச்சை? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு தமிழகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் கஜா புயல் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அதன் பின்பு சர்ச்சைக்குள்ளான ரஜினி ரசிகர்கள் குறித்துப் பேசுவோம்.

rajini milkbathகடந்த நவம்பர் 15 ஆம் தேதி கஜா புயலினால் ஏழு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் புயலால் பலர் மரணமடைந்திருக்கின்றனர். ஏராளமான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், தென்னை மற்றும் வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓடு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்று சொல்வதைவிட, குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய செய்தி.

இதில் கொடுமை என்னவென்றால் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிலுள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இயற்கை விவசாயியான இவருக்கு கவியாழினி என ஐந்து மாத கைக்குழந்தை உள்ளது. கஜா புயலால் இவரின் வீட்டின்மீது மரம் விழ, கைக்குழந்தையோடு மொத்தக் குடும்பமும் நிவாரண முகாமில் தஞ்சமடைந்திருக்கிறது.

வீட்டை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் தமிழ்ச்செல்வனின் மிகப்பெரிய சோகம், அவருடைய கைக்குழந்தைக்குப் பால் கிடைக்கவில்லை என்பதுதான். தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும். அப்போதுதான் நன்றாகப் பால் சுரக்கும். ஆனால் எல்லாவற்றையும் இழந்து நிவாரண முகாமில் நாட்களைக் கழித்துவரும் அவர்களுக்கு மூன்று வேளையும் போதிய உணவு கிடைக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. இந்த நிலையில் சத்தான உணவுக்கு எங்கு போவது? அதனால் போதிய தாய்ப்பால் இல்லாமல் தன் குழந்தை கஷ்டப்படுகிறது என்று மனம் நோகிறார்.

சரி பால் பாக்கெட்டாவது கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் அதுவும் சாத்தியமில்லாததாக இருக்கிறது என்கிறார். பால் பாக்கெட்டுகளை அதிகம் பயன்படுத்தாத கிராமாக அது இருக்கிறது. தினமும் புதிதாக கறந்த பாலை, மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து நேரடியாகப் பயன்படுத்துபவர்கள் தான் இங்கு அதிகம். கஜா புயலால் ஏராளமான மாடுகள் இறந்துவிட, இருக்கும் மாடுகளும் மேய்ச்சலுக்கு நிலமின்றி தவித்து வருகின்றன. மாட்டுக் கொட்டகைகளைப் புயல் புரட்டிப் போட்டதோடு நின்றுவிடாமல், மாடுகளின் தீவனமான வைக்கோல் போர்களையும் சீரழித்துவிட்டது. எனவே டெல்டா மாவட்டங்களில் பாலுக்குத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

வெளியூர்களிலிருந்து பாக்கெட் பால் இங்கு கொண்டு வந்தாலும் மின்சாரம் இல்லாததால் சேமித்து வைக்கும் வசதி இல்லை. எனவே குறைவான அளவு பால் பாக்கெட்டுகளே டெல்டா பகுதிகளில் கிடைக்கின்றன. அவற்றையும் நகரங்களில் இருப்பவர்கள் வாங்கி விடுவதால் கிராமங்களில் இருப்பவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற வேதனையான செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்குப் பொருந்தும்.

தமிழ்ச்செல்வன், “என் குழந்தைக்குத் தேவையான பால் கிடைச்சாலே போதும் சார்” என்று சொல்லும் போதே அவரின் குரல் உடைந்து அழுகையாக மாறுகிறது. ஊருக்கெல்லாம் சோறு போட்ட இயற்கை விவசாயிக்கு இந்த அவலமா? என்ற கேள்விதான் நம்முள் உடனே எழுகிறது.

இப்படியொரு வேதனையான செய்தியை கேள்விப்படும் அதே நேரத்தில், நாமெல்லாம் 'பூரித்துப் போகும்' அளவுக்கு ரஜினி ரசிகர்கள் ஒரு செயலைச் செய்திருக்கிறார்கள். அதைத் தெரிந்து கொண்டு அப்படிப்பட்ட அரிய செயலை செய்த ரஜினி ரசிகர்களை என்ன நினைக்கத் தோன்றுகிறது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல ரஜினி ரசிகர்கள் செய்த அந்த அரிய செயலை பால் முகவர்கள் சங்கம் 'பாராட்டி' அவர்களுக்கு வாழ்த்துகளையும் குவித்து வருகிறது. அவற்றை கொஞ்சம் இங்கே பார்ப்போம்.

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரஜினி ரசிகர்கள் வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்காததற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை இரத்த தான முகாம்கள், உடல் உறுப்பு தானம், கண்தானம், மது மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திட தனது ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு கபாலி திரைப்படம் வெளியான போதும், 2018 ஆம் ஆண்டு காலா திரைப்படம் வெளியான போதும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகளின் கவனத்திற்கும் கோரிக்கையாகக் கொண்டு சென்றோம். ஆனால் எங்களது கோரிக்கைகள் குறித்து குறைந்தபட்ச அளவில்கூட பரிசீலிக்க அவர்கள் முன்வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே எங்களது சங்கத்தின் கோரிக்கையாக மூன்றாவது முறையாக மீண்டும் கடந்த நவம்பர் 19 ஆம் தேதியன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளுக்கும் பதிவுத் தபால் வாயிலாக ஒப்புகைச் சீட்டுடன் அனுப்பியிருந்தோம். அந்தப் பதிவு தபாலினை இருவர் தரப்பிலும் பெறப்பட்டதற்கான ஆதாரமாக ஒப்புகைச் சீட்டு எங்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் அனுப்பிய கோரிக்கையைப் பெற்ற பின்பும் ரஜினி வாய் திறக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி துவங்கிப் புரட்சி செய்யப் போவதாக கூறும் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விசயங்களில் வாய் மூடி மௌனம் காப்பது போல உயிரற்ற கட்அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திட கண்டிப்பான உத்திரவை இடவேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை வழக்கம் போல் மௌனமாகக் கடந்து புறக்கணித்துச் செல்கிறார்.

rajini milkbath 1இதைப் பார்க்கையில் கொஞ்சம்கூட சமூக அக்கறை இல்லாத தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த எண்ணாத நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களை இனிமேல் அந்த ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது என்பது தெள்ள‌த் தெளிவாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் தனது ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வைக்க முன் வராத இவர், தமிழக அரசியலில் நுழைந்து மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்பது அவரது ரசிகர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி தனது திரைப்படங்களை ஓட வைத்து, அதன் மூலம் கோடிகளைக் குவிக்கும் யுக்தி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" என்று அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

தன்னைப் பற்றியே தெளிவான ஒரு சிந்தனை இல்லாதபோது நடிகர் ரஜினிகாந்த் எப்படி தனது ரசிகர்களை நல்வழிப்படுத்துவார்? காலா திரைப்படம் வெளியான நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரிய போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று சாடியவர்தானே. திரையில் அவர் போராடினால் அது போராட்டம். நிஜத்தில் அது சமூகவிரோதம். என்ன ஒரு முரண். இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அவர் கைநீட்டி சம்பளமாக கோடிகளில் வாங்குவதற்கு இயக்குநர் சொல்கிறபடி வாய்மூடிக் கொண்டு, இயக்குநர் சொல்லிக் கொடுக்கப்படும் சைகைகளையும் வசனத்தையும் உச்சரித்து நடிக்கிறார். அதற்காகத்தான் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ரஜினி உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்தவர்தான். அவர் நல்லதொரு அரசியல் செய்கிறார் என்பதை நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். சினிமாவை வைத்து பிழைப்புவாத அரசியல் செய்கிறார். அதையும் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு யார் பொறுப்பு? ஏற்கனவே இருபது ஆண்டுகளாக நம்பி விட்டார்கள். இனியும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்க வேண்டாம். நாமும் அவர்களுக்காக கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேண்டிக் கொள்வோம், ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதற்காக.

கண்டிப்பாக அவர் வரவேண்டும். ஆம் சினிமா வழியாகவே தான். அப்போதுதான் அவருக்காக தனது சொந்தப் பணத்தை நிறைய செலவழித்து கட்அவுட்கள் வைத்து அதில் பாலைப் பீய்ச்சி அடிக்க முடியும். அதன் வழியாகத்தான் நாடு பெரும் வளர்ச்சியை நோக்கி நகர முடியும்.

அந்த வளர்ச்சி எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

உலக அளவில் பட்டினியாக இருப்பவர்களின் அட்டவணையில் இடம் பெற்றுள்ள 119 நாடுகளில், 103 வது இடத்தில் இருக்கிறது இந்தியா. மிக வேகமாக வளரும் பொருளாதரத்தைக் கொண்ட நம் நாட்டில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, நிலப்பரப்பு ஆகியற்றின் அடிப்படையில் நம் நாட்டுப் பட்டினியை ‘தீவிரம்’ என்று வகைப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் தலைநகரமான டெல்லியில் சாப்பிட உணவே கிடைக்காமல் பசியாலேயே மூன்று சிறுமிகள் கடந்த ஜுலை மாதம் இறந்திருக்கின்றனர். நாட்டிலேயே நபர் வாரியாக வருவாய் அதிகமுள்ள நகரம் டெல்லி என்கிறார்கள். அங்கு நிலைமை இப்படி என்றால் மற்ற நகரங்களின் நிலை என்னவாக இருக்கும்?

ஊட்டச்சத்துக் குறைவால் ரத்தசோகை, உடல் வளர்ச்சிக் குறைவு, வயதுகேற்ற எடை, உயரம் இல்லாமை என்று இந்தியச் சிறார்கள் இருப்பது உலகிலேயே இந்தியாவில்தான் இப்போது அதிகம் என்று தேசிய குடும்ப சுகாதர ஆய்வு -2016 தரும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.

ஒருபக்கம் நாட்டில் பல இடங்களில் சிறார்கள் பட்டினியால் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாடு முழுவதும் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கட் விலைகூட ஆயிரங்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தலைவர் படம் என்றால் சும்மாவா?

வடமாநிலங்களில் படிப்பறிவு இல்லாத ரசிகர்கள் கூட கட்அவுட்களில் பாலைப் பீய்ச்சி அடிப்பது கிடையாது. ஆனால் தமிழகத்தில் படித்த இளைஞர்கள்தான் இவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து இதுபோன்ற செயல்களை கைவிடுமாறு வழிநடத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

போனால் போகட்டும். அவர் தெரியாமல் சொல்லிவிட்டார். தமிழகத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு நிறைய விழிப்புணர்வு இருப்பதினால்தானே புயலால் பாதிக்கப்பட்டு, ஒருவேளை பால்கூட கிடைக்காத சிறு குழந்தைகளுக்குக்கூட, அந்தப் பாலைக் கொடுக்காமல் கட்அவுட்களில் பீய்ச்சி அடித்துக் கொண்டாடுகிறார்கள். இதை அறிவுள்ள ரஜினி ரசிகர்களைத் தவிர வேறு யாரும் செய்துவிட முடியுமா?

ரஜினி ரசிகர்கள் கட்அவுட்களில் பீய்ச்சி அடிக்கும் பாலில் பொங்கி வழிவது எது தெரியுமா?

கஜா புயல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களின் அவலங்களும்… ஒருவேளை உணவுகூட இல்லாமல் செத்து மடியும் சிறார்களின் பட்டினி ஒழிப்பும்… இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் ஆன்மீக அரசியலும்…!

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It