கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல் போன்ற அற்புதங்கள் அனைத்தும் மூலாரம்பத்தில் உழைக்கும் மக்களின் படைப்புக்களே. மருத்துவம் வெகுகாலமாக - வெள்ளையர் வருகை வரையிலும் - ஒதுக்கப்பட்ட மக்களின் தொழிலாகவே ஒதுக்கப்பட்டிருந்தது. சாதிக்கொரு தொழில் என்று மனுதர்மம் பேசுவோரால், ‘தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று கருதப்பட்ட மக்கள்தான் இங்கே மருத்துவர்களாயிருந்தார்கள்.
சேரநாட்டில், இப்போதைய கேரளத்தில் வாரியார் எனக் குறிக்கப்படும் மக்களே ‘ஆயுர்வேதம்’ எனும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மருத்துவத் தொழில் இரத்தம், சதை, சீழ் போன்ற ‘அருவெறுப்பூட்டும்’ அம்சங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால், ‘வேதியரால்’ அது இழிதொழிலாகவே கருதப்பட்டது.
கடல் கடந்து செல்வதே ஆசாரக் கேடானது என்று நம்பிய சாதியினர் வெள்ளையரைப் பார்த்து முன்னேறும் ஆசையில் மேலை நாடுகளுக்குச் சென்று கற்கத் தொடங்கியபோது, மருத்துவமும் பணம் கொழிக்கும் தொழில்தான் என்பதை அறிந்து கொண்டார்கள். அப்புறம் என்ன? மருத்துவம் ‘உயர்’ கல்வியானது. ‘உயர்’ குலத்தோர் எம்.பி.பி.எஸ்., எப்.ஆர்.சி.எஸ் என்று பட்டம் கட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
இப்போது ‘ஆயுர் வேதம்’ என்பது ‘அவர்களுடைய’ கண்டுபிடிப்பு போலவே பேசப்படுகிறது. ‘வேதம்’ என்கிற சொல்லை இணைத்துக் கொண்டதால் ‘இழி தொழில்’ புனிதம் பெற்று விட்டது. ஆசாரக்கள்ளர்களின் ‘புனிதம்’ என்பது போக்கிரித் தனமாகவும், மோசடியாகவுமே இருக்கும். இப்படித்தான், உத்தராஞ்சல் மாநிலம் அரித்துவாரில் ஆயுர்வேத மருத்துவ நிறுவனமும், ‘யோகா பார்மஸி’ என்கிற விற்பனைக் கூடமும் நடத்தி வந்தார் ராம்தேவ்.
உடல் உழைப்பை அற்பமாகவும் கேவலமாகவும் கருதும் ‘நாகரிக’ மக்களுக்கு ‘யோகா’ என்றால் பெருமதிப்பு. இஷ்ட தெய்வத்தை நினைத்து மூச்சுவிடப் பழகுவது என்பது சாதாரண விஷயமா? நீங்கள் நாத்திகரா? பெரியார், அண்ணா போன்ற நவீன தெய்வங்களை மனத்துள் தியானித்தபடி முப்பது வினாடிகள் மூச்சை இழுத்து நிறுத்தி வெளியேற்றிப் பாருங்கள், புத்துணர்ச்சி பெருகும் என்று போதிக்கவும் செய்வார்கள்.
‘ஆயுர்வேதம்’ - ‘யோகா’ என்கிற மதப்பிரயோகங்கள் கவர்ச்சியான வர்த்தகமாகி விடவே ராம்தேவுக்குப் புகழும் பணமும் மழையாய்ப் பொழிந்தன. இந்த மோசடியை ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தி, வர்த்தகச் சூதாடிகளால் மருத்துவம் எவ்வாறு சீரழிகிறது; வேத-யோக மாய்மாலங்களில் அயோக்கியத் தனத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் தோழர் பிருந்தா காரத்.
கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ராம்தேவின் மருந்துகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார் பிருந்தா. அந்த மருந்துகளில் மனித எலும்புகளும், மிருகங்களின் கழிவுகளும் கலக்கப்பட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோடியைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பிருந்தா. எளியமக்களுக்கு அதிர்ச்சி; காவிக் கும்பலுக்கு ஆத்திரம்.
‘வேதம்’ பரிசோதனைக்கு உட்படலாமா? ராம்தேவ் கொதித்தார். கம்யூனிஸ்ட்டுகள் ‘புனிதங்களின்மீது போர் தொடுக்கிறார்கள் என்று ஆவேசத்துடன் தன் மீதான குற்றச்சாற்றை மறுத்தார். அறிவியலை நம்பும் பிருந்தா தனது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினார். இந்திய மருத்துவப் பொருள்கள் சட்டத்தின் முத்திரை மற்றும் உரிமங்களுக்கான விதிமுறைகளை ராம்தேவ் மீறி இருக்கிறார்.
இந்த மோசடிப் பேர்வழியுடன் கொண்ட நட்பின் காரணமாய் மாநில முதல்வர் திவாரியும் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார் - என்று ஆதாரங்களுடன் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். இப்போது சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியும் “ஆம்; ராம்தேவின் மருந்துகளில் மனித எலும்புகளும், மிருகங்களின் கழிவுகளும் கலந்திருப்பது பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது’’ என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
சேரர்களின் உயிர் காக்கும் தொழில் வேதியரால் வர்த்தகமாக்கப்பட்டு, களங்கப்பட்டு நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது. அரசு என்ன செய்யப் போகிறது?
(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)
- இளவேனில்