சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு அவரை நான் அமெரிக்காவில் சந்தித்த போதே எங்களுக்குள் அலைவரிசை செட்டாகிவிட்டது. அவரது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களில் ஆரம்பித்து, எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் துறை எப்படியெல்லாம் வளர்ச்சி பெறும் என்பது வரை ஏராளமான விஷயங்களைப் பற்றிப் பேசினார். அப்போது, அவர் தனது அலுவலகத்தில் இருக்கும் ‘ஸ்மார்ட் ஹவுஸ்’ என்கிற கனவு ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் சென்றார்.

அந்த ஸ்மார்ட் ஹவுஸின் சமையல் அறையில் ஒரு பட்டனை அழுத்தினால், ‘இன்று என்ன சமைக்கலாம்?’ என்று அது ஆலோசனைகள் சொல்லும். ‘வத்தக் குழம்பு வைக்கலாம்’ என்று முடிவெடுத்து அதனிடம் சொன்னால், சமையலறையில் அதற்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என்று அதுவே சரி பார்த்துச் சொல்லும். அதே மாதிரி பீரோவைத் திறந்தால், எந்தக் கலர் பேன்ட்டுக்கு எந்தக் கலர் சட்டை போடலாம் என்று அது ஆலோசனை சொல்லும். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் என்பது கீ போர்டு, மவுஸ், மானிட்டர் மட்டும் இல்லை. வீட்டின் கதவு. ஜன்னல், அழைப்பு மணி என அது எல்லா இடங்களிலும் வெவ்வேறு உருவங்களில் இருக்கும். இப்படி பில்கேட்ஸின் கற்பனை அந்த ஸ்மார்ட் ஹவுஸ் முழுவதும் வியாபித்து இருக்கிறது. எதிர்காலத்தில் பெரும்பாலான வீடுகள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறார் கேட்ஸ்.

பில் கேட்ஸின் லேட்டஸ்ட் லட்சியம் என்ன தெரியுமா? மனிதனைப் பார்க்கவும், அவன் பேசுவதைக் கேட்கவும், அவனுடன் பேசவும். சக்தி படைத்த ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க வேண்டும் என்பதுதான். அதில்தான் இப்போது தீவிரமாக இருக்கிறார் பில் கேட்ஸ்!’’ என வியக்கிறார் தயாநிதி மாறன் - ‘ஆனந்த விகடன்’ - 25.12.05

பில்கேட்ஸ் போன்ற அமெரிக்கக் கோடீஸ்வரர்களின் கனவு, உலகத்தையே ஒரு ‘ஸ்மார்ட் ஹவுஸ்’ ஆக மாற்றுவதுதான். இந்த ‘ஸ்மார்ட்’ (Smart) என்பதற்கு ஆரம்பத்தில் ஒழுங்கான, கவர்ச்சிகரமான, நாகரிகமான... என்று பொருள்கூறும் ஆங்கில அகராதி போகப்போக வலி, வேதனை, மனத்துயர், பேரிழப்பு போன்ற எதிர்மறை அம்சங்களுடன் தொடர்புபடுத்துகிறது.

பில்கேட்சின் ‘ஸ்மார்ட் ஹவுஸ்’ என்பது ‘தேவையற்ற மனித’க் கூட்டத்தை ஒழித்துக் கட்டிவிட்ட ‘மனிதத் தேவை’யே இல்லாத உலகம்தான். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் சமையல் அறைக்கு ஆள் தேவையில்லை. ‘வத்தக் குழம்பு வைக்கலாம்’ என்று முடிவெடுத்து அதனிடம் சொன்னால் போதும். ‘என்ன சட்டை அணியலாம்?’ - பீரோவைத் திறந்தால் போதும்.

மனிதனுடன் பேசவும், கேட்கவும், அவனுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவுமான கம்ப்யூட்டர் வந்துவிட்டபிறகு, முத்தமிடவும், இன்ப உறவு கொள்ளவும் பெண்தான் எதற்கு? பில்கேட்சுகள் அந்தக் கம்ப்யூட்டர் அறைக்குள் நுழைவார்கள். ‘மவுசை’ நகர்த்தினால் போதும்; எந்தப் பெண்ணும் தராத சுகத்தை விதவிதமாய் அனுபவித்துக் கொள்வார்கள். பிறிதொரு நாளில் வாழ்க்கை சலித்துப்போகும்போது ஒரு பொத்தானை அழுத்துவார்கள்; மரண அவஸ்தை எதுவுமில்லாமல் இருந்த சுவடே தெரியாது. மறைந்துவிடுவார்கள். என்ன அற்புதமான - பயங்கரம்!

பில்கேட்சின் ‘ஸ்மார்ட் ஹவுஸ்’சைப் பார்த்து வியந்தேற்றும் தயாநிதிமாறனின் ஆர்வக் கிளர்ச்சியைப் பார்த்து நமக்கு அனுதாபமே ஏற்படுகிறது. பில்கேட்சின் ‘ஸ்மார்ட் ஹவுஸ்’சுக்குள் நுழைந்த தயாநிதி மாறன் என்றாவது ஒருநாள் கலைஞரின் படைப்புலகுக்குள் நுழைந்து பார்க்கவேண்டும். அங்கே ‘தேவையற்ற மனிதர்கள்’ என்று ஆதிக்க சக்திகளால் ஒதுக்கப்பட்ட மனிதர்களின் புதியதோர் உலகத்தைக் காணமுடியும்.

கலைஞரின் படைப்புலகம் என்பது, படைப்பாளிகளின் உலகம். உழைப்பாளித் தோழர்களின் உலகம். மனித ஆற்றலை மதிப்போரின் உலகம். மானுடம் செழித்துச் சிரிக்கும் சிங்கார உலகம். அங்கே அறிவியல் படைப்புகளை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைத் தனிச் சொத்துரிமையின் பெயரால் அடிமையாக்கிக் கொள்ளையடிப்போரைக் காணமுடியாது. மூலதனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் சிறைப்படாத அறிவியலின் வளர்ச்சி அங்கே பூரண சுதந்திரத்துடன் மானுடம் காக்கும்.

கலைஞரின் படைப்புலகமே மனித இனத்தின் எதிர்காலத்தை நிச்சயமாக்கும்; சத்தியமாக்கும்; சாத்தியமாக்கும். அந்த சோஷலிச பூமியில் பில்கேட்சுகளுக்கும் கூட உழைப்பும், உரிமையும், மனித அந்தஸ்தும் வழங்கப்படும். சாதிக்க விரும்பும் தயாநிதி மாறனின் ஆர்வம் பாராட்டுக்குரியதே! அதே சமயம் அவர் ‘இகாரஸ்’ ஆகி விடக்கூடாதே!

கணித நிபுணரும், தத்துவவியலாளரும், மனித நேயருமான ரஸ்ஸல் ‘இகாரஸ் அல்லது விஞ்ஞானத்தின் எதிர்காலம்’ என்கிற புகழ்பெற்ற நூலில் விஞ்ஞானப் புதுமைகளின் மீது நியாயமான தமது அச்சங்களை வெளிப்படுத்தினார். இகாரஸ் என்பவன் கிரேக்க புராணக் கட்டுக் கதையில் வரும் ஒரு துடிப்புள்ள இளைஞன். டேடாலசின் மகன். கிரெடான் தேசத்து மன்னன் மினோஸ் என்பவன் டேடாலசையும் அவனது மகன் இகாரசையும் கைதியாக்கி வைத்திருந்தான்.

டேடாலஸ் ஓர் அற்புதமான ‘எஞ்சினீயர்’, விஞ்ஞானி, சிற்பி, கட்டடக் கலை நிபுணன். தனது மேதா விலாசத்தின் உயர்வால் ‘கிரெடான் புதிர்’ என்னும் மர்மக் குகையையே உருவாக்கினான். அந்தப் புதிருக்குள் நுழைந்த எவரும் வெளியே வருவதற்கு வழியைக் கண்டுபிடிக்க முடியாதபடி தந்திரமாகப் பாதைகளை உருவாக்கியதும் டேடாலஸ்தான். அந்தப் புதிரில் தான் மனித உயிர்களை விழுங்கும் - பாதி மனிதனும் பாதி எருதுமான - மினோடார் வசித்து வந்தது.

டேடாலசின் அறிவே அவனுக்கு எதிரியானது. அவன் மினோசின் கைதியானான். மினோசிடமிருந்து தப்பிப்பதற்காக வானில் பறந்து செல்லும் விதத்தில் செயற்கையாகப் பறவையின் இறக்கைகளை உருவாக்கினான் டேடாலஸ். செயற்கை இறக்கைகளின் உதவியோடு தனது மகன் இகாரசை வெளியே பறக்கவிட்டான். அந்தப் பையன் உயரே உயரே பறந்து சென்றான். தகப்பனின் முன்னெச்சரிக்கைகளையெல்லாம் மறந்துவிட்டு மேலும் மேலும் உயரே, சூரியனை நோக்கிப் பறந்தான்.

சூரியனின் வெப்பம் தகித்தது. இகாரசின் இறக்கைகளைப் பிணைத்திருந்த மெழுகு உருகிற்று. இறக்கைகள் பயனற்றுப் பறக்க முடியாத சுமைகளாகின. துணிவு மிகுந்த, ஆனால் கீழ்ப்படிதலில்லாத அந்தப் பையன் கடலிலே மூழ்கடிக்கப்பட்டான். இகாரசின் தந்தை டேடாலஸ் மனமுடைந்தான். தனது கலைக்கும் திறமைக்கும் எதிராகத் திரும்பினான். ஆற்றலையும் விரைவையும் கொண்ட பறக்கும் இறக்கைகளைக் கண்டுபிடித்த துக்க தினத்தையும், நோக்கத்தையும் சபித்தான் - என்பது கதை.

டேடாலசின் புகழ் பெற்ற செயல் அவனை உயர் இயந்திரவியல், விமானவியல் ஆகியவற்றின் முன்னோடியாக்கிற்று. நமது தற்போதைய நாகரிகம் முழுவதும், தீரமுள்ள ஆனால் பரிதாபத்திற்குரிய இகாரசை நகலெடுத்து நிற்கிறது; இல்லையா? இதுவரை அறிந்திராதவற்றை நோக்கி, தலை சுற்றும் பயணத்தில், மும்முரமான வேகத்தையும் உச்சத்தையும் தொட விழைகிறோம். இல்லையா? - ரஸ்ஸல் அஞ்சினார்.

‘‘தனது தகப்பனார் டேடாலசிடமிருந்து பறக்கக் கற்றுக் கொண்ட இகாரஸ் தனது துடுக்குத்தனத்தால் அழிந்தான். நவீன அறிவியல் துறை நபர்களால் பறக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள மனித குலத்திற்கும் அதே கதிதான் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்... இறுதியில், விஞ்ஞானம் மனித குலத்திற்கு வரமாக அமையுமா, அல்லது சாபமாக விளங்குமா என்பது என் மனத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு கேள்வியாகவே இருக்கிறது’ என்றார் ரஸ்ஸல்.

(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)

Pin It