ஜாக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் போலி சாமியாரின் சாம்ராஜ்யமான ஈசா அறக்கட்டளை மையத்தில், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் விரோதமாக வெள்ளியங்கிரி மலையில் கட்டப்பட்ட , உலகிலேயே மிகப்பெரிய 122 அடி உயர "ஆதியோகி" சிவனின் மார்பளவு சிலையை மஹா சிவராத்திரியன்று, பிப்24 ல் திறந்து வைக்க, நாட்டின் பிரதமரே வருகிறார். ஒரு நிலக் கொள்ளையன், கிரிமினல் குற்றவாளி, இயற்கை மற்றும் சமூகத்தை சீரழிப்பவன், கபட சாமியார் - தனது திரண்ட கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்க பிரதமர் மோடியை அழைத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது. 

தமிழகம் காக்க வந்தாராம் ஜக்கி ?

மைசூரில் பிறந்து, வளர்ந்து தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய, கோவையில் 1989-ம் ஆண்டு, தனது காலடியை வைத்தார்.

பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை, கோபம் போன்றவற்றை தனது ‘யோகா’ என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்குக் கொண்டு வர....

தமிழ் மக்கள் எல்லாம் “ஆனந்த அலையில்” சிக்க வைக்க, “வாருங்கள் உங்களில் மலருங்கள்” என்று அன்போடு அழைக்கும் சத்குரு என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட ஜக்கி வாசுதேவ் அவர்களின் சுருக்கமான கிரிமினல் வரலாறு இதுவாகும்.

jaggi vasudev 453

நவீன கார்ப்பரேட் சாமியார்

ரூ.14 கோடி மதிப்புள்ள R 22 ரக ஹெலிகாப்டர், ரூ.40 இலட்சம் விலையுள்ள ஹம்மர் கார், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள BMW மற்றும் Honda மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில், ஜீன்ஸ் பேண்ட் + கருப்பு கண்ணாடியுடன் வலம்வரும் நவீன சாமியார் தான் ஜக்கி. பக்தர்களிடம் "எல்லவற்றுக்கும் ஆசைப்படு" என்ற கார்ப்பரேட் உலகிற்கு இசைவான, இச்சையைத் தூண்டும் சாமியார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவராக பேசிக்கொண்டே, இந்துத்துவா'விற்கு இசைவான சமயப் பணிகளை மேற்கொள்பவர். 1999ல், வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தியான'லிங்கம்' அமைத்தவர்; சத்சங்கங்கள் என்ற பெயரில் கூட்டு வழிபாடு என்ற சமய வழிபாட்டு முறையை உருவாக்கி இலட்சக்கணக்கான மக்களின் மூளையை சலவை செய்பவர். இப்போது அவரது மெகா திட்டமான "ஆதியோகி" எனும் சிவன் சிலையை அமைத்துள்ளார். அதற்குத் தான் நாட்டின் பிரதமரே வருகிறார் !!!

ஜக்கியின் ஈசா ஆசிரமமானது, கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, வன மற்றும் கட்டிட விதிகளை மீறி, தமிழக அரசை ஏமாற்றி 5 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டியுள்ளதும், பல ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழக அரசு அவற்றை முழுவதும் இடிக்க உத்தரவு போட்டிருப்பதும் கூட பரவலாக அறியப்படாத செய்தி ஆகும்.

நில அபகரிப்பு, சொத்துக் குவிப்பு, இயற்கை அழிப்பு, சமூக விரோத குற்றங்கள் பற்றி...

பதஞ்சலி புகழ் பாபா ராம்தேவ் போன்ற ஒரு யோகா வாத்தியார் தான் ஜக்கி எனப்படும் ஜகதீஸ்.

ஜக்கியின் கோவை பிரவேச(ஷ)த்திற்கு முன் மைசூரைச் சேர்ந்த மறைந்த ‘ரிஷி பிரபாகர்’ என்னும் யோகா குருவிடம் ஆசிரியராக இருந்தவர் ஜக்கி. ரிஷி பிரபாகரால் கோவை-திருப்பூருக்கு வகுப்பு நடத்த அனுப்பப்பட்ட ஜக்கி அங்குள்ள செல்வ வளத்தைக் கண்டு ரிஷியின் தொடர்பை துண்டித்துக் கொண்டார். (இவரோடு ஒன்றாக ரிஷியிடம் இருந்த மைசூர் ராமகிருஷ்ணன் மற்றும் வித்யாகர் இன்றும் யோகா வகுப்புகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.)

கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச் சரகத்தில் உள்ள, நொய்யல் ஆறு உருவாகும் அடர்ந்த வனப் பகுதியை ஒட்டியுள்ள 'இக்கரை போளுவம்பட்டி' என்ற கிராமத்தில், முதலில் 1989ல் சிறிது நிலம் வாங்கினார், படிப்படியாக விரிவாக்கினார். ராஜா வாய்க்கால் கால்வாயை ஆக்கிரமித்துக் கொண்டார்.இது முக்கியமான யானை வழித்தடம் ஆகும்.

1993ல், 37,000 ச.மீட்டர் பரப்பில் ஆசிரமம் உருவாக்கினார். 1999ல், சிவபெருமான் அடையாளமான தியானலிங்கம் அமைத்தார். பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடைகள் பெற்றார். வனப்பகுதியில், அனுமதியின்றி பத்தாண்டுகளில், திமுக ஆட்சியில் கருணாநிதி ஆசியுடன், 42.77 ஏக்கர் பரப்பில், 63, 380 ச.மீட்டர் அளவில் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், மலைத்தல பாதுகாப்புக் குழுமம் HACA அனுமதி பெறப்படவில்லை. (6.7.2011ல் தான், புதிதாக 28,582.52 ச.மீ கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.)

இலட்சக்கணக்கான மரங்கள், காட்டுயிர்கள் அழிக்கப்பட்டன. சந்தன மரங்கள் உட்பட பழமையான, அரிதான மரங்கள், செடிகள் அழித்தொழிக்கப்பட்டது. ஆசிரமத்தை சுற்றியும், சட்டவிரோதமான மின்வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் தடம் மாறியதால், பழங்குடியினர் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. விலங்கு- மனித மோதல்கள் நடைபெற்றன. 2006-11 காலங்களில் மட்டும் 50 யானைகள் இறந்ததாகவும், 57 மனிதர்கள் கொல்லப்பட்டதாகவும் அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2011-12 ல், கோவை வனத்துறை பலமுறை எச்சரிக்கை செய்தது. ஈசா ஆசிரமத்தால், கட்டிடங்கள் விரிவடைவதால், பக்தர்கள் வருகை இலட்சத்தில் அதிகரிப்பதால், வனம் மற்றும் வன உயிர்களுக்கு (குறிப்பாக யானைகளுக்கு) பெரும் தீங்கு ஏற்படுகிறது என்றும், அருகாமையில் உள்ள தாணிக்கண்டி பழங்குடியினர் குடியிருப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது என்றும் எச்சரித்தது.

நகர திட்டமிடல் இயக்குநரகம், 24.12.2012 ல், ஈசா ஆசிரமத்தை இடிக்குமாறும் உத்திரவிட்டது. புதிய கட்டுமானங்களை நிறுத்தவும் கோரியது. ஆனால், இதற்கெல்லாம் பிறகும் கூட, மாவட்ட ஆட்சியரிடம் வெறும் 300 ச.மீ கட்ட அனுமதியை வாங்கிவிட்டு, 1 இலட்சம் ச.அடியில், 112 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தொடரும் எதிர்ப்புகள் 

பழங்குடியினர் அமைப்புகள், சுற்றுச் சூழல் அமைப்புகள், விவசாய சங்கங்கள், இடதுசாரிகள் தொடர்ந்து ஈசா ஆசிரமத்தை எதிர்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்தில் வரும் மஹாசிவராத்திரி விழா, சத்சங்கங்கங்கள் எனப்படும் கூட்டுத் தியானத்தில் பங்கேற்க வரும் 3 இலட்சம் பேரின் நடமாட்டம், விழாவின் ஆரவார ஓசைகள் பெரும் கேடாக மாறியுள்ளது என, 2013, 2015ல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. எதிர்ப்புகளும் கட்டமைக்கப்பட்டன.

தற்போது 2017 - பிப் 17ல், வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விழாவை தடுக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், ஈசாவுக்கு ஆதரவாக வழக்கு மார்ச் 3 ந் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, பிப். 24 அன்று இத்தகைய கிரிமினல் ஜக்கியோடு பிரதமர் மோடி கரங்கோர்த்து விழா நடப்பது உறுதியானது.

ஜக்கி எனும் சமூக விரோதியின் மனிதகுல விரோத செயல்பாடு!  

ஜக்கி, ஜக்கியின் குடும்பம், சிஷ்யர்கள், ஆசிரமம், போதனைகள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 தன்னை ஒரு "வாழும் enlightened குரு" என்றும், இது தனது "மூன்றாவது பிறவி" என்றும், முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்த்த ஜாதியில் பிறந்தவன் என்றும், இரண்டாவது பிறவியில் சத்குரு ஸ்ரீப்ரமா என்ற பெயரில் தேனி அருகில் பிறந்து, ஊட்டியில் வாழ்ந்து, வெள்ளியங்கிரி மலையில் உயிரை விட்டதாகவும் பிரசங்கத்தில் கதைகள் பலவும் சொல்லி வருகிறார். 

தியானலிங்கம் கோவில் கட்டுவது தான் தனது மூன்று பிறவியின் நோக்கம் என்றும், அது முடிவடைந்த உடன் உயிரை விட்டு விடுவதாக உறுதி கொடுத்திருந்தார். ஆனால், ஆதி யோகி சிலை எனத் தொடர்கிறார்.

ரிஷி பிரபாகரிடம் யோகா ஆசிரியராக ஜக்கி இருந்தபோது, முந்தைய மணவாழ்க்கை முறிந்து மனமுடைந்த நிலையில், யோகா வகுப்பில் கலந்து கொள்ள வந்த கர்நாடகத்தைச் சார்ந்த விஜி என்பவரோடு ஜக்கிக்கு தொடர்பு ஏற்பட்டு, அது திருமணத்தில் முடிந்தது. விஜி, ஜக்கியோடு 1998-ம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார். அதன்பின் மர்ம்மான முறையில் இறந்தார். ஜக்கியின் கொலைகளில் அதுவும் ஒன்று.

கோவையில் பாரம்பரியமிக்க பெருமுதலாளித்துவ ELGI குரூப்பைச் சேர்ந்த ELGI வரதராஜ் அவர்களின் மகன் சுதர்சன் வரதராஜ். அவர் ELGI நிறுவனத்தின் செயல் அதிகாரி (EXECUTIVE DIRECTOR) ஆவார். தனது மனைவி பாரதி வரதராஜை யோகா கற்றுக்கொள்ள அறிமுகம் செய்து வைத்தார். இவர் நடத்திய 90 நாள் ‘முழு யோகா’ வகுப்பில் தனது அலுவல்களையும் விட்டு தனது மனைவியுடன் கலந்து கொண்டார் ELGI சுதர்சன். செல்வ சீமாட்டி பாரதி ஆந்திரா முன்னாள் எம்.பி., ஒருவரின் மகள். அவர் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாய் ஆவார். பாரதியை ஜக்கி பூர்வ ஜென்மக் கதைகள் பேசி கவர்ந்தார்.

மனைவி விஜி கொலை வழக்கு! 

ஜக்கியும், பாரதியும் தியானலிங்கம் கட்டுவதற்காக பல கோவில்களைப் பார்த்துவர இந்திய முழுவதும் காரிலே பயணித்தார்கள். அதற்கு “கர்ம யாத்ரா” என்று பெயர். இவர்கள் நெருக்கம் வளர, மனைவி விஜிக்கு ஜக்கிமேல் சந்தேகம், சண்டை. அது யோகா வகுப்பில் தீட்சை கொடுக்கும் இடம் வரை பரவியது.

பிறகு விஜி தனது “அணாகத்தா” சக்ராவில் இருந்து தனது உயிரை விட்டார். விஜியின் தந்தை காங்கன்னா தன் மகளை ஜக்கிதான் கொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் ஜக்கிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கொடுத்த புகாரில் இவர் சிக்காமல் 6 மாதம் ஓடி ஒளிந்து, கரூர் மற்றும் திருப்பூர் தொண்டர்களின் தயவால் தப்பி, மனைவி விஜிக்கு ஒரு சமாதியும் எழுப்பிவிட்டார். பாரதியும் தனது கணவர் சுதர்ஷனை விவாகரத்து செய்துவிட்டு குடும்பத்தைத் துறந்து ஜக்கியுடேனே ஆன்மீகப் பணியாற்ற வந்து விட்டார்.

விஜி என்ற விஜயகுமாரி கொலையில் குற்றவாளி ஜக்கிதான் என்று போலீஸ் விசாரணை நடந்தது பற்றி 12, அக்டோபர் 1997 இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை விரிவாக எழுதியது. கொலை செய்தது, அத்துடன் சாட்சியங்களை மறைத்தது என்ற (Section 302 of IPC (murder) and IPC 201 (suppression of evidence) குற்றப் பிரிவுகளில் கோயம்புத்தூர் (கிராமப்புற) காவல்துறை வழக்கு தொடுத்தது. ஜக்கி தலைமறைவானார்.

கார்ப்பரேட் சாம்ராஜ்யம் உருவாக்கினார், ஜக்கி!  

விஜிக்கும் ஜக்கிக்கும் பிறந்த ராதே, ரிஷி வேலி (Rishi valley) என்ற சிறந்த பள்ளியில் பள்ளிப்படிப்பை துவங்கினார். தன் மாமனார் குடும்பத்தோடு குழந்தை நெருங்காமல் ஜக்கி பார்த்துக் கொண்டார். ராதே பள்ளி படிப்பை முடித்தவுடன் இந்தியாவின் தலைசிறந்த நாட்டியப் பள்ளிகளில் ஒன்றான சென்னையில் உள்ள கலாஷேத்திராவில் சேர்த்துவிட்டார் ஜக்கி.

பெண் வளர்ந்து வந்த பின்பு அவளுக்கு ஒரு தொழிலும் அமைத்துக் கொடுக்க திட்டமிட்டார். அதற்கு கோவையில் சிறப்பாக நடந்து கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தொழிலையும் தேர்ந்தெடுத்தார்.

ஈஷாவின் கட்டிடம் அனைத்தும் சிறப்பாக வியக்கத்தகும் வகையில் அமைய உண்மையில் காரணமானவர்கள் கார்த்திக் மற்றும் அவர் மனைவி பாமா ருக்மணி என்ற கட்டிடக் கலை நிபுணர்களே. கோவையில் துரியா பர்னிச்சர்ஸ் (Thuriya furnitures) என்ற பெயரில் சிறப்பாக தங்கள் தொழிலை நடத்திக் கொண்டும் எந்த பிரதி உபகாரம் பாராமல் ஈஷாவிற்கு கட்டிடம் கட்ட உதவி புரிந்து கொண்டும் இருந்தார்கள்.

2005இல் architect கார்த்திக்கை அழைத்து தனது மகள் ராதேக்கு ஒரு தொழில் அமைத்துக் கொடுக்கும் ஆசையைத் தெரிவிக்க thrishul shelters என்னும் நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் பங்குதாரர்களாக...

1. பாமா ருக்மணி (Managing Director) 2. பாரதி (Director) Race Course, Coimbatore 3. V.ஜகதீஷ் (Director) Mysore address என்று கோவை Registrar of companies (ROC) யில் பதியப்பட்டுள்ளது.

1989இல் இருந்து கோவையில் வசிக்கும் ஜக்கி, தேர்தலுக்கு மறக்காமல் வரிசையில் நின்று ஒட்டு போடும் ஜக்கி, எதற்காக கள்ளத்தனமாக மைசூர் விலாசத்தைக் கொடுக்க வேண்டும்? அதிலும் தனது தொழில் – வியாபாரம் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் பாரதியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து தங்கள் உறவை உறுதிப்படுத்தியும் உள்ளார். 

இந்த Thrishul Shelters துவங்க கார்த்திக்கின் சொத்துக்களையே கோவை City Union Bank, oppanakara st branch-ல் வைக்கச் செய்து 6 கோடி கடன் பெற்று தொழில் துவங்கினர்.

ஆகாஷமல்லி போன்ற பல கட்டிடங்களை வாஸ்து முறைப்படி கட்டி விற்பனை செய்து வருவாயை பெருக்கியது நிறுவனம். 2013ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 70 கோடி. கோவை மற்றும் மைசூரிலும் சொத்துக்கள் வாங்கி போடப்பட்டுள்ளது.

தனது மகள் ராதேவை, ராதே ஜக்கியாக ஆக்கி Thrishul Shelters-ன் Managing Director ஆக்கி விடுமாறு கார்த்திக்கிடம் கூற இவரின் தந்திரம் கார்த்திக்கிற்குப் புரிய……. சண்டை தொடங்குகிறது. வெள்ளாள கவுண்டர் சமுகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க கார்த்திக்கும் தனது பலத்தைக் காட்ட… விஷயம் கோவை போலீஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் பஞ்சாயத்துப் பேசி முடியாததால் தற்போது ஹை கோர்ட்டில் கேஸ் நடத்தப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, கிரிசி லேண்ட் பார்ம், ஈசா நேச்சுரல் பியூட்டி பிராடெக்ட்ஸ், ஈசா நேச்சுரல் ஆர்கானிக் சொலுசன், ஈசா கிரேடிட், ஈசா லைப் பைனான்ஸ், ஈசா கேபிடல், ஈசா ஆரோக்கியா, வேதிக் பயோ சோர்ஸ்...

என பல்வேறு கம்பெனிகளை நிறுவினர். தனது வாழ்க்கைக் கூட்டாளி பாரதியையும், பணக்கார சிஷ்ய கேடிகளையும் பங்குதாரர்கள் ஆக இணைத்து தனக்கான கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

தியானம்அமைதிஆனந்தம் 

“வாழ்க்கையைத் தீண்டாமல் பயணப்படுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்போது வாழ்க்கையோடு விளையாடுங்கள். அப்படி விளையாடினாலும், வாழ்க்கை உங்கள் மீது சிறு கோடு கூட போட முடியாது. இந்த அற்புதத்தை ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கொண்டுவரத்தான் நாங்கள் உழைக்கிறோம்’’

(” You can go through life untouched, you can play with life whichever way you want, and still life cannot leave a scratch upon you. That is the miracle that we are working to manifest in every human “)

மேலே உள்ளதுதான் ஜக்கி விற்பனை செய்யும், இல்லை, ஜக்கியின் ஆன்மீகம். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்தாமல் விடக்கூடாது என்று தானே தோன்றும் ? 

இப்படி ஜக்கி பல கார்ப்பரேட் இச்சை மொழிகளை உதிர்ப்பார். (மேலும் படிக்க http://www.ishafoundation.org/Inner-Transformation/sanyas-brahmacharya-path-of-the-divine-sadhguru-isha-foundation.isa )

இவரின் வார்த்தையை உண்மையென்று நம்பி 400-க்கும் மேலானோர் இதுவரை துறவறம் எடுத்திருப்பார்கள். துறவறம் கொடுப்பதற்கும் பயங்கர பில்டப் எல்லாம் கொடுப்பார். அவர்களுக்கு கேள்வியே பட்டிராத வாயில் நுழையாத பெயர் மாற்றம், அவர்கள் முக்திக்கு மட்டுமல்ல… அவர்கள் குடும்பத்தினர் அனைவரின் முக்திக்கும் (முக்திக்கும் மட்டும்) உத்திரவாதம், மறுபிறவி இல்லை என்ற உறுதி எல்லாம் கொடுப்பார். அவர்களை தனது அங்கங்கள் (ஈஷாங்க) என்று வர்ணிப்பார். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அனைவர்க்கும் தான் ஒரு கவசமாக இருந்து காப்பாற்றுவேன் என்றெல்லாம் நம்ப வைப்பார். ஆனாலும் அனைவருக்கும் வருடம் தவறாமல் Health insurance premium கட்டிவிடுவார்.

"ஆன்மீகப் பாதைக்கு துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்றும், குடும்ப வாழ்க்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது" என்றெல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிளந்து கட்டுவார். இதைக் கேட்டு, எதுக்கு சுமை என்று பலர் தங்கள் குடும்பங்களை (கணவன்/மனைவி) கூடத் துறந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வரும்போது மறக்காமல் அவர்கள் சொத்துக்களைப் பிரித்து வாங்கி வந்து விடுமாறு அறிவுறுத்தப்படும். கரூரில் பிரபலமான பரமேஷ் என்பவரின் குடும்பக் கதையே இதற்கு சான்று. 2006 இல் இது சன் டிவியிலும் அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்தது.

இப்பேற்பட்ட ஆன்மீகத்தின் உச்சமான… தெய்வீகத்தின் அம்சமான… துறவற வாழ்கையை யார் பெத்த பிள்ளைகளுக்கோ கொடுக்கும் இவர் தான், அந்த வாய்ப்பை தான் பெத்த பிள்ளைக்குக் கொடுக்கவில்லை.

jaggi vasudev daughter marriage

"குடும்ப வாழ்கையில் விருப்பம் உள்ளவர்களுக்கு துறவறமோ, ஆன்மீகத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு திருமணமோ செய்து வைத்தால் மிகுந்த பாதிப்பு உண்டாகும்" என்று கூறுகிறார். மேலும் "நான் யாரையும் துறவறத்தில் தள்ளுவதில்லை, விருப்பப்படும் நபர்களை அவர்களின் உயிர் சக்தியை நீண்ட பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்த்த பின்னர் தான் துறவறம் வழங்கப்படுகிறது" என்றும் கூறுகிறார். 

எனினும், இதுவரை 150-க்கும் மேலான சாமியார்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். மேலும், குடும்ப வாழ்கையில் இருந்து கொண்டும் ஆன்மீகத் தொண்டு என்று இவர் கூறியதை நம்பி வந்தவர்களில் மீண்டும் வெளியே சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும்.

 இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலமுருகன் என்னும் பஞ்சாப் cadre IAS , 5 வருட காலம் ஈஷாவின் CEOவாக சம்பளம் இல்லாமல் தொண்டு புரியும் ஆவலோடு வந்தவருக்கு இரண்டு வருடத்திலேயே பல உண்மைகள் புரிய வெளியேறிவிட்டார்.

 20-25 ஆண்டுகள் ஈசாவின் மேல் மட்டத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த பலர் இன்று வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக திலீப் அண்ணா என்கிற திலீப்/ AUDITOR ராஜரத்தினம் ஈஷாவின் Managing Trustee யாக 1999-2010வரை இருந்து வந்தார். விஜியின் இறப்பின் மர்மத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்து ஜக்கி அவருக்குப் பதிலாக இந்தப் பதவியில் திலீப்பை அமர்த்தினார். இவரின் ஆன்மீக அறிவுரையைக் கேட்டு ஒரு குழந்தை கூட பெற்றுக்கொள்ளாமல் தவிர்த்து விட்டனர் திலீப்- வித்யா தம்பதியினர். நிலங்கள் வாங்குவதில் ஜக்கி காட்டும் பொறுக்கித்தனத்தையும், பேராசையையும், குறுக்குப் பாதையையும் கண்டு Managing Trusteeயாக கையெழுத்திட பயந்து ஜக்கியை எதிர்க்க, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து விட்டார். ஈஷாவில் நடந்த அத்தனை தகிடுதத்தங்களுக்கும் ஒரே சாட்சியாக இருந்தவர் திலீப் ஒருவரே. ஈஷாவில் இருந்து விலகியே இருந்த திலீப் மூன்று வருடம் முன்பு அக்டோபர் மாதம் கோத்தகிரி மலைப்பாதையில் ஒரு மர்மமான விபத்தில் மரணம் அடைந்தார். 

சொல்வதும், செய்வதும் வெவ்வேறு 

"பெத்த தாய் தந்தையை அனாதையாக விட்டு விட்டு அப்படி என்ன ஆன்மீகம். இது அவசியமா?" என்று கேட்டதற்கு “உங்களுக்கு எல்லாம் பக்கத்து வீட்டு விவேகானந்தரைத் தான் பிடிக்கும். உங்கள் வீட்டில் உருவாக விடமாட்டீர்கள்” என்று நக்கல் அடிப்பார்.

" உங்கள் மகளை ஏன் ஒரு பெண் விவேகானந்தராக உருவாக்காமல், பப்களில் , பார்ட்டிகளில் கூத்தடிக்க அனுமதி கொடுத்து வைத்துள்ளீர்கள் " என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லமாட்டேன் என்கிறார்.

"இயற்கைக்கு எதிராக எந்தச் செயல் செய்தலும் தவறாகத் தான் போகும்" என்று கூறும் இவர், சந்நியாசத்தில் இருக்கும்போது தங்களுக்குள் இயற்கையின் தேவையால் மலர்ந்த காதலைக் கூறி தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு வேண்டிய கரூர் வேலாயுதம் சோமு, புதுச்சேரி ஸ்ரீதேவி அவர்களை தனது சுய லாபத்தை மனதில் கொண்டு மற்றவர்களும் இந்த பாதைக்கு மாறிவிடுவார்கள் என்று பயந்து, காதலர்களைப் பிரித்து தனி அறையில் அடைத்து வைத்தார்.

 இருவரும் சேர்ந்தால் சோமு இறந்துவிடுவான் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி வந்தார். ஆனால் திருமணம் என்ற முடிவிலும், காதலில் தீவிரத்தோடும் இருந்த அவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்க, ADMINISTRATOR சுவாமி நிசர்கா என்ற ஹெப்பர் என்பவரை வைத்து அடித்து, துன்புறுத்தியும் பார்த்தார் ஜக்கி. 

ஆனாலும் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்தார் சோமு. அவருக்கு ஏற்கனவே காசநோய்(T.B) இருந்த காரணத்தால் எதிர்ப்பு சக்தி குறைந்து மரணத்தின் தருவாயை எட்டியதும், வடநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சென்றார்கள். போன சோமு போனது தான். 

சோமுவைவிட காதலில் தீவிரமாக இருந்த பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவி கடைசிவரை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து மரணத்தை தழுவினார். அவர்கள் குடும்பத்தினரிடம் நல்ல பாம்பு கடித்தது இறந்துவிட்டதாகக் கூறி உடலை ஒப்படைத்து விடுமாறு கூறிவிட்டார். 

மறைத்த கொலைகள் பல

1997ம் வருடம் அப்போது வச்சிருந்த TATA Siearra வண்டியில கோவையில் இருந்து மைசூர் நோக்கி வழக்கம்போல் பறந்து கொண்டு இருந்தபோது, பண்ணாரி அருகில் வண்டி ஒரு சிறுவனை அடித்து, தூக்கியது. குருஜியால் காப்பாற்ற முடியாமல் சிறுவன் இறந்துவிட்டான். ஒரு விபத்து நடந்தால் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டு நடத்துவது தான் பொது நடைமுறை. ஆனால் இவர் வழக்கை எதிர்கொள்ளப் பயந்து, 'நெருங்கிக்கொண்டு இருக்கும் தியானலிங்க பிரதிஷ்டை வேலை இதனால் தடைபடும்…' என்று கூறி, ராமு என்ற ஒரு தீவிர பக்தனை இவருக்குப் பதிலாக மாட்டிவிட்டு, இவர் தப்பித்து கொண்டார். 

 2010-ல் கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டிலும் நடந்த விபத்திலும் இதே மாதிரியான வழிமுறையைத் தான் கையாண்டார்.

இளைய தலைமுறையை நாசமாக்கும் ஜக்கி!

யோகா பயிற்சியின் முதல்நாள் ஜக்கியின் பெரிய படம் வைக்கப்பட்டு, பூஜை நடைபெறும். கடவுள் படைத்த மனிதர் போல ஜக்கியின் "இமேஜ்" உருவாக்கப்படும். மூளைச் சலவை செய்யப்படும்.

யோகா வகுப்பிற்கு வரும் துடிப்பான தன்னார்வத் தொண்டர்களிடம் மெல்ல பேசி ஆசிரம வலையில் சிக்க, ஆரம்பத்தில் சற்று குறைவான வேலைகளைக் கொடுத்து தியானலிங்க கோவிலில் அதிக நேரம் செலவிட வைப்பார்கள்.

மெல்ல மெல்ல அவர்கள் மனம் அந்த சூழ்நிலையால் ஆக்கிரமிக்கப்பட்டு, முடிவில் மொட்டை போட்டு சந்யாசம் எடுக்கும் எண்ணத்திற்கு வருவார்கள். 

தங்கள் பிள்ளைகள் யோகா தியானம் கற்றுக் கொள்வதில் பெருமை அடையும் பெற்றோர்கள், பிள்ளைகள் பல மாதம் வருவதும் இல்லை, போனும் பண்ணுவது இல்லையே என்றவுடன் சந்தேகம் வந்து, நேரில் பார்க்க வருவார்கள்; பிள்ளைகள் வர மறுப்பார்கள். அடுத்த கட்டமாக தங்கள் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் சொல்லி ஒரு ஏட்டுடன் வருவார்கள், பிள்ளையை பெற்றவர்கள். ஆனால், கோவை ஆலந்துறை ஸ்டேஷன் லிமிட்டோடு வண்டியைத் திருப்பிவிடுவார்கள். இதை எல்லாம், சமாளிக்கவே பயிற்சி கொடுக்கப்பட்ட கை தேர்ந்த ஒரு குழு ஈசா மையத்தில் உண்டு. 

சந்நியாசம் எடுக்கும் 18 வயது ஆனவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளும் உரிமையை சட்டம் கொடுக்கிறதோ, அதே போலத்தான் வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று முதியோர் நலச் சட்டம் கூறுகிறது. 

"சந்நியாசிகள் தங்கள் பெற்றோர்கள் உயிருடன் இருந்தாலும் கூட அவர்களுக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை செய்துவிட்டுதான் இந்தப் பாதைக்கு வருவார்கள்" என்று பெருமையாக கூறிக் கொள்வார் ஜக்கி.

ஆனால், சந்நியாசம் எடுத்தபின் அவர்கள் குடும்பத் தொடர்பு முழுவதுமாக நிறுத்தப்படும். ADMINISTRATOR என்ற தலைமை சந்நியாசிகளால் கண்காணிக்கப் படுவார்கள். கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் வாங்கி வைத்துக் கொள்ளப்படும். அவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, வண்டி வாகனம், தங்க நகைகள் போன்றவற்றை வாங்கி வரும்படி அறிவுறுத்துவார்கள்.

சிஷ்யர்கள் மீதான கடும் உழைப்பு சுரண்டல்!

கர்மா, விழிப்புணர்வு, சம்போ, சிவசம்போ, அண்ணா, அக்கா போன்ற வார்த்தைகளை மட்டுமே அதிகம் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அவர் வளர்க்கும் சித்தா, மல்லி, லீலா சம்சன் போன்ற பெயர் கொண்ட பல ஜாதி நாய்கள் முதல் மாடுகள் வரை மேய்க்கும் பொறுப்புகள் கொடுக்கப்படும். சிஷ்யர்களுக்கு என்று கொடுக்கப்படும் சில தனிப்பட்ட பயிற்சிகள் எப்போதும் இவர்களை ஒரு அரை மயக்கத்தில் வைத்திருக்கும்.

jaggi vasedev with his team

நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் வேலை வாங்கப்படும். தங்கள் கர்மாவை வேகமாக கழிக்க பல மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஜக்கி அறிவுறுத்துவார். அதாவது ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் கழியும் கர்மாவை 18 மணி நேரம் செய்து 18 நாள் கர்மாவை ஒரே நாளில் கழிக்க முடியும் என்று 1-ஆம் கிளாஸ் கணக்குப் பாடம் சொல்லித்தருவர். ஆனால் அவர் கணக்கோ வேறு. “ஒரு ஆளுக்கு 3 ஆள் வேலை கொடுத்து விரட்டுவார். காலை 5மணி முதல் இரவு 12-1 மணி வரை வேலை. இரண்டு வேலை உணவு, தீவிர ஹட யோகா என்று உடலைப் பிழிந்து எடுத்து, இரவு படுத்தால் பிணம் போல் கிடப்பார்கள். ஓய்வு என்று கொடுக்கும் காலத்தில் கூட மௌனத்தில் (silence) இருக்கச் செய்து விடுவார். இப்படியாக அவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒரே திசையில் வைத்திருப்பார்.

இதுபோல சுமார் 10-20 வருடம் வேலை செய்தும் கர்மாவை முழுவதும் கழிக்க முடியாமல் பலர் வயதாகி திணறிக்கொண்டு இருக்கிறார்கள். யாராவது "எனக்கு கைவலி, கால்வலி" என்று ஜக்கியிடம் கேள்வி கேட்டால் தொலைந்தது. "உன் கர்மா மூட்டை வெயிட் அதிகம். உனது முக்திக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் " என்பார். இதைக்கேட்கும் மற்றவர்கள் அடுத்து அப்படி கேட்க மாட்டார்கள் இல்லையா !

சந்நியாசிகளுக்குள் பிணக்கு ஏற்படும்போது அவரிடம் முறையிடும் நபரை "நீ ஏன் அவன் கர்மாவை சுமக்கிறாய்? போச்சு போ… உன் அக்கௌண்டில் புது கர்மாவும் சேர்த்துவிட்டது. கோட்டை அழி… மொதல்ல இருந்து துவங்கு" என்று கூறி விடுவார். ஜக்கி ஒரு இண்டெலக்சுவல் ப்ராடு சாமியார்! 

பிஞ்சுக் குழந்தைகளை கொல்லும் சம்ஸ்கிருதி என்னும் குருகுல பள்ளி!

6-10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் ரூ.7,00,000 கட்டணம். எந்த பாடத்திட்டத்திலும் வராத குருகுலக் கல்வி, இரண்டு வேலை மட்டும் உணவு, அதிகாலை 5 மணிக்கு எழுந்து தீர்த்த குண்டம் என்னும் குளத்தில் 10-12 டிகிரி குளிர்ந்த நீர் குளியல், கடும் யோகா பயிற்சி, களரிப் பயிற்சி, இதன் இருப்பிடங்கள் ஒவ்வொன்றையும் அடைய சுமார் 2-3 கீ.மீட்டர் நடை, இவை அனைத்தும் முடிய காலை மணி 8.15. மீண்டும் ஒரு குளியல்.

இந்நிலையில் அந்தக் குழந்தையின் வயிற்றில் நெருப்பு எரிவது போல் பசி எடுக்கும். காலை/மாலை உணவு இவர்களுக்காக பிரத்யோகமாக தயாரிக்கபடும் பழம் காய்கறி உணவு. அதாவது எளிதில் செரிமானம் ஆககூடிய உணவு. பால், தயிர் கிடையாது. மீண்டும் மாலை 7 மணிக்கு தான் அடுத்தவேளை உணவு. இடையில் ஒன்றும் கிடையாது.

வளரும் குழந்தைக்கு இத்தனை பயிற்சிக்குப் பிறகு 10 மணி நேர உணவு இடைவேளை இருந்தால் அந்தப் பிஞ்சுகள் எப்படி பசியை பொறுத்துக் கொள்ளும், அதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்னும் உண்மையை அடுத்தவர் உழைப்பில் வயிறு வளர்க்கும் இந்த பரதேசிப்பயலுக்குத் தெரியவில்லை.

பல குழந்தைகளுக்கு இதனால் வயிற்றுப்புண் வந்து, உடல்நிலை கெட்டு பெற்றோர்கள் திருப்பி அழைத்துச் சென்றுவிட்டார்கள். அவர்களின் 7 லட்ச ரூபாய் பணத்தைத் திருப்பித் தாராமல் ஏமாற்றினான், இந்த மோசடி யோகி.

இந்த குழந்தைகளுக்கு 11ம் வயதில் பிரமச்சரியம் வழங்கப்படும்.19 வயது வரை ஆசிரமத்தில் எந்த படிப்பும் இல்லாமல் பாட்டு, தாளவாத்தியம், களரி மட்டுமே பயிற்றுவிக்கப்படும். அதன் பின் அவர்களாக விருப்பப்பட்டால் சன்னியாசத்தைத் தொடரலாம். வேண்டாம் என்றால் பெற்றோருடன் செல்லலாம். வெளி உலகத்தில் கோடி வாய்ப்பு காத்திருக்க இவர்களுக்கு மட்டும் இரண்டே வாய்ப்பு என்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா? இது அந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செய்யும் துரோகம் அல்லவா?

வருடத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை தான் பெற்றோர்களுடன் இருக்க அனுமதி, இடையில் பார்க்க அனுமதி இல்லை. வீட்டிலும் சாக்லேட் போன்ற தின்பண்டங்கள் கொடுக்கக் கூடாது. TV காட்டக்கூடாது. முக்கியமான கட்டுப்பாடு குழந்தையை பெற்றோர் உட்பட யாரும் கொஞ்சவோ, முத்தம் கொடுக்கவோ கூடாது. வேற்று நபர்கள் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது.

இதையெல்லாம் செய்தால் குழந்தையின் ‘ஆரா’ கலைந்து விடுமாம். ஆனால் உண்மையான காரணம் அவர்களை பந்த பாசங்களை அறுத்து சன்னியாசப் பாதைக்கு தயார் செய்வதே!

இவர் ஆராகலையாதா?

“குழந்தைகள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்த ஒரு உயிர் மட்டுமே. அதைத் தாண்டி அவர்களிடம் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்கு நீங்கள் எதையும் கற்றுக்கொடுக்க முயற்சிக்காதீர்கள், அவர்களை நீங்கள் அதிகாரம் பண்ண முயற்சிக்காதீர்கள் ” என்றெல்லாம் பத்தி பத்தியாக ஜக்கி எழுதிக் கிழித்து தள்ளியுள்ளார்.

அப்படி என்றால் அறியாத வயதில் அவர்கள் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்க இவரோ அல்லது பெற்றோர்களோ யார்? பிற்காலத்தில் அந்தக் குழந்தை ஏதோவொரு காரணத்தினால் வெளியே வர நேர்ந்தால் அவர்களின் நிலை என்ன? 

குழந்தை நல சட்டம் மற்றும் RIGHT TO EDUCATION ACT (RTE) சட்டம் என்ன சொல்கிறது என்றால், 8ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு ஏதோ ஒரு பாட திட்டப்படி கண்டிப்பாக இலவசமாகப் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியது அந்தந்த மாநில அரசின் கடமை. (free and compulsory education up to 8th std) இதை UNICEF அமைப்பும் கண்காணிக்கும். ஆகவே இந்தப் பள்ளி நடத்துவதே சட்டப்படி குற்றம் .

இது சம்பந்தமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பொது நல வழக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மூலம் போடப்பட்டது. அதை விசாரணை செய்ய வந்த கோவை CWC (CHILD WELFARE COMMITTE) ஆபீசரிடம் தந்திரமாக இந்த சம்ஸ்கிருதி பள்ளிக் குழந்தைகளை காட்டாமல், மற்றொரு பள்ளியான ஈஷா ஹோம் ஸ்கூல் என்ற international school ICSE syllabus-ஐக் காட்டி யாரோ பொய்யான தகவல் கொடுத்து வழக்கு தொடர்ந்து விட்டார்கள் என்று கூறி, கோவில் பிரசாதத்தையும் கையில் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

நாம் இதுவரை கண்ட குற்றச்சாட்டுகள் ஈஷா மையத்தில் நடக்கும் அநியாயத்தின் ஒரு சிறு பகுதியே !

 கபட சந்நியாசி ஜக்கி! 

 ஈராண்டிற்கு முன்னர், தனது ஆசை மகளுக்கு மட்டும், அவள் காதலித்த மணாளனை கர்நாடக இசைப்பாடகன் சந்தீப் நாராயண் என்பவரை, (அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இந்தியாவில் கச்சேரிகள் நடத்திக்கொண்டு இருக்கிற ஆச்சாரமான பார்ப்பனர்) திருமணம் செய்து வைத்தார். தேவர்களும் (பணம் கொட்டுபவர்கள்) அசுரர்களும் (உடல் உழைப்பை கொடுக்கும் தன்னார்வத்தொண்டர்கள்) வந்து வாழ்த்திய இந்த கும்பாபிஷேகத்திற்கும் (consecration) ஜக்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (திருமணப் பத்திரிகையில் அப்படித்தான் போட்டிருந்தது) வெறும் வாழ்த்து மட்டுந்தான். மகா நடிகன்! 

எத்தனை பெற்றோர்கள் தங்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி தங்கள் குழந்தைகளை ஒரு டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆகி, நல்லதொரு வாழ்க்கையை வாழத்தானே ஆசைப்பட்டிருப்பார்கள்? அவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க கனவு கண்டிருப்பார்கள். வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகள் தங்களைப் பார்த்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்திருப்பார்கள். 

 தன் சுய லாபத்திற்காக, இளைஞர்கள் பலரது வாழ்க்கையையும் சூறையாடி சூன்யம் ஆக்கி விட்டு, குழந்தை பெற்றுக் கொள்வதே ஒரு பாவச்செயல் போல் சித்தரித்து விட்டு, தன் மகள் திருமணத்தை மட்டும் அமர்க்களமாக ராஜா வீட்டு விழாவாக நடத்தினார்.

எச்சரிக்கை!

இப்போது, பிரமாண்டமான சிவன் சிலை அமர்க்களம்!

சுற்றுச்சூழல் சூறையாடல்!

நிலங்கள், வனங்கள் அபகரிப்பு! பழங்குடியினர் வாழ்வாதாரம் பறிப்பு! 

சொந்த வாழ்க்கையில் சொத்துக் குவிப்பு, இல்லற சுகவாழ்வு ; சிஷ்யர்களுக்கு சந்நியாசம், துறவு வாழ்வு என்ற அயோக்கியத்தனமும் கபடநாடகமும்! 

குருபோதனைகள் என்ற பெயரில் உபதேசங்கள் - அறிவியல் அற்ற கட்டுக்கதைகள்!

இளந் தலைமுறையினர் வாழ்க்கையைச் சீரழிக்கவே மோசடி சாமியார் ஜக்கியுடன் காவிப் பாசிச மோடியும், திட்டமிட்டே கை கோர்க்கின்றார்.

என்ன செய்ய வேண்டும்?

மாணவர், இளைஞர்கள், கேடி ஜக்கிக்கும், காவி மோடிக்கும் எதிராகவும் இயக்கம் நடத்திட வேண்டும்! 

சுற்றுச்சூழலுக்கு எதிரான, இயற்கை விரோத ஈசா அறக்கட்டளை கட்டுமானங்கள், தியானலிங்கம், 112 அடி புதிய சிவன் சிலை ஆகியவை இடிக்கப்பட்டு, அகற்றப்பட வேண்டும்!

கிரிமினல் சாமியர் ஜக்கியை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்!

ஈசா நிறுவனத்திடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளை மீட்க வேண்டும்!

சட்ட விரோத ஈசா மையத்தை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும்! 

காவிப் பாசிஸ்டுகள் தமிழகத்தில் நுழைவதற்கு பணியாற்றும் ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்களை புறக்கணிக்க வேண்டும்!

- அ.சந்திரமோகன்

Pin It