கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

g ramakrishnan rally for castro

ஃபிடல் காஸ்ட்ரோ தனது உழைப்பை நிறுத்திவிட்டார். தனது 90 வது வயதில் கியூபா மக்களை மட்டும் அல்லாமல், உலகம் பூராவும் உள்ள கோடான கோடி புரட்சிகர சக்திகளை நெஞ்சம் கனத்த வலியில் ஆழ்த்தி விட்டார். யார் யாரோ இரங்கல் தெரிவிக்கின்றார்கள். காஸ்ட்ரோவின் மரணம் தந்த வலிகளைவிட இது இன்னும் அதிகப்படியான வலியைத் தருகின்றது. ஒரு போராளிக்கு வாழ்த்துச் சொல்லவும், இரங்கல் தெரிவிக்கவும் கூட ஒரு தகுதி வேண்டாமா?

ஒரு கம்யூனிசப் போராளி என்பவன் மனித வர்க்கத்தில் முதல் தரமானவன். வாழ்க்கையில் அனைத்தின் மீதான பற்றையும் துறந்தவர்களை முற்றும் துறந்த முனிவர்கள் என்று இந்து மதத்தில் சொல்வார்கள். அதே போல அரசியல் வாழ்க்கையில் தனது சொந்த நலன், தனது குடும்பம் என அனைத்தையும் துறந்தவர்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லுவார்கள். முன்னவர்கள் அனைத்தையும் துறந்தாலும், அவர்கள் மனித வாழ்க்கையின் துயரங்களுக்குப் பயந்து, ஓடி ஒளியும் கோழைகள். ஆனால் பின்னவர்களோ மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த, தனது மகிழ்ச்சியை விட்டுக் கொடுப்பவர்கள். அவர்கள் கோழைகள் அல்ல, தனது உயிரை எந்தச் சூழ்நிலையிலும் தன் நாட்டு மக்களுக்காக கொடுக்க ஆயத்தமாக இருப்பவர்கள். அவர்களை, அவர்களைப் போன்ற புரட்சியாளர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும். வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. அது போன்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவோ, இல்லை இரங்கல் தெரிவிக்கவோ கூட நமக்கு நிச்சயமாக ஒரு தகுதி தேவைப்படுகின்றது.

அது என்ன தகுதி என்றால், அவர்கள் காஸ்ட்ரோவைப் போலவே சாமானிய மனிதனின் கரங்களில் நாட்டின் வளங்களையும், அதிகாரத்தையும் கொடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புரட்சியின் போர்முரசுகள் கொட்டப்படுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சாமானிய மனிதனின் வலியையும் தன்னுடைய வலியாக ஏற்கும் மனித மதிப்பீடுகளில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தக் குறைந்த பட்ச தகுதி உடையவர்கள்தான் காஸ்ட்ரோவுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். ஆனால் யார், யாரோ சொல்லுகின்றார்கள். காஸ்ட்ரோவின் சிந்தனைக்கு நேர் எதிரான மக்கள் விரோதிகள் எல்லாம் இரங்கல் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் உண்மையில் காஸ்ட்ரோவின் மறைவிற்கு மனம் வருந்தி, இரங்கல் தெரிவிக்கவில்லை, மாறாக காஸ்ட்ரோ ஒரு புரட்சியின் குறியீடு, உலக புரட்சிகர சக்திகளால் போற்றப்படும் தலைவர், அது போன்றவர்களை நேசிப்பதாகச் சொல்வதன் மூலம் தனக்கும் ஒரு புரட்சிகர முகம் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக தான் அவர்கள் தாங்களாகவே முன்வந்து இரங்கல் தெரிவிக்கின்றார்கள். தங்களுடைய கீழ்த்தரமான அசிங்கம் பிடித்த முகத்தை மறைத்துக் கொள்ள இது போன்றவர்களுக்குக் காஸ்ட்ரோ முகமூடி தேவைப்படுகின்றது.

காஸ்ட்ரோவின் மறைவிற்கு பல தகுதியில்லாத நபர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்களில் பல பேர் கம்யூனிச விரோதிகள். அப்பட்டமான முதலாளித்துவ அடிவருடிகள், அது பற்றி எல்லாம் நாம் இங்கு பேச வேண்டாம். ஆனால் காஸ்ட்ரோவின் மறைவிற்கு நேற்று CPM கட்சி சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தி தங்களது புரட்சிகரக் கடமையை ஆற்றி உள்ளனர். ஆனால் நமக்குத் தெரிய வேண்டியது எல்லாம், அவர்கள் எந்த அடிப்படையில் காஸ்ட்ரோவிற்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள் என்பதுதான். உண்மையிலேயே புரட்சியாளர்களை CPM நேசிக்கின்றதா? நிலம்பூரில் மூன்று மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை இரக்கமற்று சுட்டுக் கொன்ற ரத்தத்தின் ஈரம் காய்வதற்குள் புரட்சியாளன் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அஞ்சலி செலுத்துகின்றார்களே, எவ்வளவு பெரிய மோசடி நாடகம்?

ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சியாளர் என்றால் அஜிதாவும், குப்புசாமியும் யார்? CPMன் பார்வையில் அவர்கள் மக்கள் விரோதிகள். இந்தியாவிற்கு வெளியே ஆயுதம் ஏந்தி, சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடி வெற்றிபெற்ற காஸ்ட்ரோ புரட்சியாளர், இந்தியாவிற்குள் ஆயுதம் ஏந்தி பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகவும், கனிமவளத் திருடர்களுக்கு எதிராகவும் போராடுபவர்கள் எல்லாம் மக்கள் விரோதிகள்... அப்படித்தானே.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மாவோயிஸ்ட்கள் அரச பயங்கரவாதத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றார்கள். கடந்த மாதம் மல்காங்கிரி மாவட்டம் ராம்கூர்கா வனப்பகுதியில் 27 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மாதம் 23-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லடிஹர் மாவட்டத்தில் 6 மாவோயிஸ்ட்கள் சி.ஆர்.பி.எப் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போது கேரள மாநில எல்லையில் உள்ள நிலம்பூரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பன்னாட்டு கனிமவளத் திருடர்களின் ஏவல் நாய்களாக செயல்படும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, தற்போது இருக்கும் பி.ஜே.பி ஆட்சியிலும் சரி, இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்டுகள் தான். சரி, அவர்கள் எல்லாம் முதலாளிகளின் காலை நக்கி ஆட்சி செய்பவர்கள். அதனால் அவர்களுக்கு சித்தாந்த ரீதியாக மாவோயிஸ்ட்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் CPM கட்சிக்கு? அவர்களுக்கும் அப்படித்தான். இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ், பி.ஜே.பியைவிட இன்னும் ஒரு படி அதிகமாக வெறுப்பவர்கள் CPM-காரர்கள்.

அதற்குக் காரணம் CPM, மற்றும் CPI கட்சிகளின் பாராளுமன்றவாதத்தை இன்று அப்பட்டமாக தோலுரிப்பவர்கள் அவர்கள்தான். எப்படி காங்கிரஸ் மற்றும் பிஜேபி பெரும்முதலாளிகளின் கட்சியாக இருக்கின்றதோ, அதே போல இன்று CPM மற்றும் CPI-யிலும் பல குட்டி முதலாளிகள் உருவாகி விட்டார்கள். அவர்களின் நலன்களைக் காப்பாற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பும் இப்போது அவர்களிடம் சேர்ந்துவிட்டது. அது மட்டும் அல்லாமல் மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல்பாரிகளின் இருத்தலானது இவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்ததலாக உள்ளது. அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தாங்கள் ஆடைகள் அற்று இருப்பது போன்று அவர்கள் உணர்கின்றார்கள். அந்த அவமான உணர்ச்சியே அவர்களை மாவோயிஸ்ட்களை வேட்டையாடத் தூண்டுகின்றது. உண்மைகளைக் கொன்றுவிட்டால் போலிகளையே நிஜம் என மக்களை நம்ப வைத்து விடலாம் என அவர்கள் நினைக்கின்றார்கள். இந்நிலையில் கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கனம் ராஜேந்திரன் இந்த என்கவுன்டர் சம்பவத்திற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளார். இது போன்ற ஒரு சிலராவது இருப்பதால்தான் இன்னும் இவர்கள் மக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க முடிகின்றது. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் மூன்று மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்குவதைவிட ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கச் சொல்லி போராட்டம் நடத்துவது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றார்கள்.

அதனால் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் எந்த தார்மீகத் தகுதியும் CPM மற்றும் CPI-க்குக் கிடையாது. தன் சொந்த நாட்டில் புரட்சியாளர்களைக் கொன்று போட்ட இவர்கள், ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அஞ்சலி செலுத்துவது அருவருப்பானது. இந்தியாவில் மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் தொடர்ச்சியாக என்கவுன்டர் செய்யப்படுவதைப் பற்றி கவலைப்படாத ஊடக மாமாக்கள் ஃபிடல் காஸ்ட்ரோவுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்கள். நாம் உண்மையில் காஸ்ட்ரோவை நேசித்தோம் என்றால், புரட்சியின் பக்கம் நிற்கின்றோம் என்பது உண்மையானால், இது போன்ற அயோக்கியதனங்களை உடனுக்குடன் அம்பலப்படுத்த வேண்டும். இல்லை என்றால் கார்ப்ரேட்டுகள், கழிசடைகள் எல்லாம் தங்களை புரட்சியாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு விடுவார்கள்.

- செ.கார்கி