கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

enayam beach

மத்திய பாஜக அரசு இந்துத்துவ பார்ப்பனிய கருத்தியலை நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறு திட்டங்கள் மூலமாக உள்கட்டமைப்பு வேலைகளை உறுதியாக செயல் படுத்தி வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு பண்பாடுகளையும் அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட மக்களை இந்து என்ற ஒற்றை மாய பிம்பத்தின் கீழ் வடிவமைத்து கொள்ள தங்க நாற்கர சாலை திட்டத்தை வாஜ்பாய் கொண்டு வந்ததன் பின்னணியில் இந்துத்துவ கருத்தியல் உட்புகுந்து இருந்தாலும் அதை கொண்டு கோடிக்கணக்கில் பயன் பெற்றவர்கள் இந்துத்துவ பாசிச பெருச்சாளிகள்தான். வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் இந்துத்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் அடையாளங்களை துடைத்தெறிந்து அந்த திட்டங்களை வைத்து கோடி கணக்கில் சம்பாதிப்பது என இரட்டை லாப நோக்கில் இந்துத்துவ பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

மீனவ மக்களின் குரல்வளையை நசுக்கி அவர்களின் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் துடைத்தெறிந்து விட்டு கோடி கணக்கில் ஊழலில் திழைக்க பாஜக அரசு இனையம் துறைமுகத்தை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக குளச்சல் வர்த்தக துறைமுகத்திற்காக போராடி கொண்டிருக்கும்போது இனையத்தில் யாரும் கேட்காமலேயே சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் என்ற அரக்கனை இந்துத்துவ அரசு கொண்டு வருவதன் பின்னணில் அவர்களில் இலக்கு அரசியல் தெளிவாக தென்படுகிறது.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் சுமார் 400 வருடங்களாக வர்த்தக துறைமுகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கிருந்து கயிறு பொருட்கள், தும்பு, தேங்காய் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டும் வர்த்தகம் நடைப்பெற்று கொண்டிருந்தன. குளச்சல் துறைமுகத்தில் டச்சு, பிரஞ்சு காரர்கள் அதிகமாக வர்த்தகம் செய்திருக்கிறார்கள். இந்த கடற்பகுதி மிகுந்த கடல் சீற்றம் உள்ள பகுதியாகும். இதனால் இங்கு ஏழு மாதங்கள் மட்டும்தான் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் நடந்தன. கடைசியாக 1991ம் ஆண்டு வரை மணவாளக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் மணல் ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் மணல் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் சுமார் 4000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வந்தனர்.

1991ம் ஆண்டுக்கு பிறகு குளச்சல் துறைமுகம் முழுமையாக நின்றுவிட்டது. இதன் பிறகு குமரி மாவட்ட மக்கள் மீண்டும் குளச்சல் வர்த்தக துறைமுகத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களில் குதித்தனர். ஏழு மாதங்களில் மட்டும் நடைபெறும் வர்த்தகத்தை வருடம் முழுவதும் நடைபெறும் அளவிற்கு துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்தி இந்த துறைமுகத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும் என்பதுதான் குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

இதை தொடர்ந்து குளச்சல் வர்த்தக துறைமுகம் தொடர்பாக 1998, 2000, 2010 ஆகிய ஆண்டுகளில் தொழில் நுட்ப ஆய்வு அறிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அறிக்கைகளின் படி குளச்சல் கடல்பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி மணவாளக்குறிச்சி வரை குறைவான மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த துறைமுகத்தை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

கடந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது துறைமுக தொடர்புக்கான சாலை மற்றும் ரயில்வே தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டபோது கூட்டுமங்கலம், சேரமங்கலம், மண்டைக்காடு உட்பட இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் என்பதைவிட பாஜக, ஆர்.எஸ்.எஸ் வலுவாக இருக்கும் இப்பகுதியை சார்ந்த மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பல்வேறு கூட்டங்களில் கோஷங்கள் போட ஆரம்பித்தனர். இதனால்தான் குளச்சல் வர்த்தக துறைமுக திட்டம் கைவிடப்பட்டது என்பதுதான் உண்மை.

இந்நிலையில் மத்திய அரசின் இனையம் துறைமுக அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காததும் கோரிக்கை வைக்காததுமாகும்.

வர்த்தக துறைமுகமா? சரக்கு பெட்டக மாற்று முனையமா?

முதலில் வர்த்தகம் துறைமுகம் என்றால் என்ன சரக்கு பெட்டக மாற்று முனையம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இந்த திட்டம் குறித்து தெளிவாக விளங்கி கொள்ள முடியும். வர்த்தக துறைமுகத்தில் இருந்து மிகவும் வித்தியாசமானது சரக்கு பெட்டக மாற்று முனையம். வர்த்தக துறைமுகம் என்றால் வணிகம் நடைபெறும் துறைமுகம். சரக்கு பெட்டக மாற்று முனையம் என்றால் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை தாய்க்கப்பல்கள் என்ற மிகவும் பிரமாண்ட கப்பல்கள் மூலமாக இங்கு வந்து அவற்றில் இருக்கின்ற கண்டெய்னர்கள் இறக்கப்பட்டு சிறிய கப்பல்கள் மூலமாக பல்வேறு துறைமுகங்களுக்கு அனுப்பப்படும். இதுதான் சரக்கு பெட்டக மாற்று முனையம். இதேபோன்ற துறைமுகங்கள் தற்போது துபாய், மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு போன்ற பகுதிகளில் லாபத்துடன் இயங்கி கொண்டிருக்கிறது. இத்தகய பிரமாண்டமான துறைமுகத்திற்கு போதுமான இடம் குமரி மாவட்டம் கிடையாது என்பதுதான் எதிர்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த துறைமுகம் 27 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 10 மில்லியன் கண்டெய்னர்களை கையாளும் அளவிற்கு அமைக்கப்பட உள்ளது.

குமரி கடற்கரை கிராமங்கள் அழிந்து போகும் அபாயம்

இனையம் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் 1830 ஏக்கர் பரப்பளவில் கொண்டு வரப்பட உள்ளது. துறைமுக பகுதியை ஒட்டியவாறு ஏனைய கட்டுமானங்களுக்காக இனையம் புத்தன் துறையில் இருந்து கிழக்காக 3 கி.மீ அளவிலும், வடக்காக உள்நாட்டு பகுதியை நோக்கி 2 கி.மீ அளவிலும் 6 ச.க.மீ செவ்வக வடிவிலான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 20 மீட்டருக்கு கடல் ஆழப்படுத்தப்பட்டு அந்த மணலை கொண்டு கடலின் உள்பகுதி சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு நிரப்பப்படுகிறது. துறைமுகப்பகுதியில் சுமார் 7 கி.மீ கடலின் உள்பகுதியை நோக்கி அலை தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக கடல் அரிப்பை தடுக்க 200 மீட்டர் அளவில் அலை தடுப்பு சுவர் அமைத்தாலே அதன் வட மேற்கு பகுதிகளில் உள்ள கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்படும். இந்நிலையில் 7கி.மீ தூரத்திற்கு அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டால் ஹெலன் காலனியின் வட மேற்கு பகுதியில் உள்ள மீனவ கிராமங்களான இனையம், இனையம் புத்தன் துறை, ராமன் துறை, முள்ளூர் துறை, இரயுமன் துறை, தேங்காப்பட்டணம், பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவி புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி உட்பட பல்வேறு கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போகும். இதே போன்று இனையம், தேஙகாப்பட்டணம் பகுதியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பள்ளிவாசல்களும் சிதைக்கப்படும் அபாயம் உள்ளது.

சாலை இணைப்பை பொறுத்தமட்டில் சுமார் 12 கி.மீ நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்ட 4 வழி சாலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. ரயில் இணைப்பு 10 மீ நீளமும் 60 மீ அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

மேலும் அலை தடுப்பு சுவர் அமைக்க 15 மில்லியன் டன் கற்கள் தேவைப்படும். இந்த கற்களுக்காக குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை உடைக்கும் வாய்ப்பும் உள்ளன.

ஏன் இந்த துறைமுகம்?

 இந்தியாவில் இந்த வகையிலான துறைமுகம் கேரள மாநிலம் கொச்சி வல்லார்பாட்ததில் அமைந்துள்ளது. ரூ3500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இத்துறைமுகம் ஆண்டிற்கு குறைந்த பட்சம் 10 லட்சம் சரக்கு பெட்டகங்களையாவது கையாள வேண்டும். ஆனால் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னரும் சுமார் 4 லட்சத்திற்கும் குறைவான சரக்கு பெட்டகங்களே இத்துறைமுகத்தின் மூலம் கையாளப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து கொழும்பு மற்றும் துபாய் துறைமுகங்களுக்கு சரக்கு பெட்டகங்களை ஏற்றி செல்லும் தாய் கப்பல்கள் இங்கு வந்து செல்வதற்கு மறுக்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் கொழும்பில் உள்ள துறைமுகம் வல்லார்பாடத்தைவிட பத்தில் ஒரு பங்குதான் வாடகை வசூலிக்கிறது.

இதே போன்று கேரள மாநிலம் விளிஞ்ஞத்தில் 7525 கோடி மதிப்பீட்டில் இதே வகையிலான துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்திற்கு அடானி நிறுவனம் வெறும் 991 கோடி ரூபாய் மட்டும்தான் முதலீடு செய்துள்ளது. ஆனால் அடானி நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள சலுகைகள் ஏராளம். இந்த துறைமுகமும் நஷ்டத்தில் இயங்கி வரக்கூடிய சூழ்நிலையில் அங்கிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் மீண்டும் ஒரு துறைமுகம் எதற்கு?

சேது சமுத்திர திட்டம் அமல்படுத்தாத சூழ்நிலையில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தூத்துக்குடிக்கு வட கிழக்காக கொல்கத்தா வரைக்கும் அமைந்துள்ள இந்திய துறைமுகங்களுக்கும் வங்கதேசம் சீனா போன்ற தென் கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள துறைமுகங்களுக்கும் இனையம் துறைமுகத்திற்கு தாய்கப்பல்கள் மூலமாக கொண்டு வரப்பட்ட சரக்குப்பெட்டகங்களை கொண்டு செல்லும் சிறிய கப்பல்கள் இலங்கையை சுற்றிதான் செல்ல வேண்டும். ஏற்கனவே கொழும்பில் நவீன துறைமுகம் அமைந்திருக்கும் சூழ்நிலையில் 462 முதல் 784 கி.மீட்டர்கள் வரை சுற்றி வீணாக பணத்தை செலவு செய்து எந்த கப்பல் நிறுவனமும் சரக்குகளை கொண்டு செல்லாது.

ஆகையால் இது ஒரு முட்டாள்தனமான திட்டம். பொன் ராதாகிருஷ்ணன் உட்பட பாஜகவினர் ஊழல் செய்ய திட்டமிட்டு கொண்டு வரப்படும் திட்டமாகும். மேலும் தமிழக மீனவ சமூகத்தில் 20 சதவீத மக்கள் குமரியில்தான் வாழ்கிறார்கள். இவர்கள் எப்போதுமே பாஜாகவிற்கு எதிராகவே உள்ளனர். ஆகையால் அவர்களை சிதறடித்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்க கொண்டுவர உள்ள திட்டம்தான் இனையம் துறைமுகம்.

- ஷாகுல் ஹமீது