அடுத்தவர்களுடைய அறிவுச் சொத்துக்களான (Intellectual Property) சிந்தனைக் கருத்துக்களைத் திருடி தனது சொந்தக் கருத்துக்கள் போலக் காட்டிப் படைப்புகளை, நூல்களை  உருவாக்கி வருவது தமிழ் ஆய்வுலகில் பெருகி வருகிறது.  பிறருடைய ஆய்வு நூல்கள், கட்டுரைகளிலிருந்து கருத்துக்களை வரிகளாகவோ, பத்திகளாகவோ, பக்கங்களாகவோ சில சமயம் கட்டுரையை முழுவதுமாகவோ பெயர்த்தெடுத்து அடிக்குறிப்பிடாமல் தன்னுடைய கருத்துகளாக அச்சிட்டு வெளியிடும் வழக்கத்தைச் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள இவ்வழக்கத்தைக் தமிழுலகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.

சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட இரண்டு அறிவுத்திருடல்களை மிகுந்த மனவேதனையுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்று என்னுடைய நூலிலிருந்து திருடப்பட்டது. மற்றொன்று பேராசிரியர் க. கைலாசபதி நூலிலிருந்து திருடப்பட்டது குறித்ததாகும்.   

இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியம் என்னும் புதிய இலக்கியத்துறை தோன்றி வளர்ந்த வரலாற்றை, ‘ஒப்பிலக்கியம்: இனவரைவியல் சமூகம்’ (காவ்யா பதிப்பகம், சென்னை, 2008) என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டேன். என்னுடைய அந்நூலிலுள்ள கருத்துகளை (பக்.21-52) மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலத்தில் ஒப்பிலக்கியத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் உ. கருப்பத்தேவன் என்பவர், தமது, ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் – நோக்கும் போக்கும்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015) என்னும் நூலில், வார்த்தை மாறாமல் வரிசைக்கிரமத்தைக்கூட மாற்றாமல்  பக்கம் பக்கமாக அப்படியே பெயர்த்தெடுத்து (பக்.127-152) வெளியிட்டுள்ளார். அவர் பெயர்த்தெடுத்த பக்கங்களில் என் நூல் குறிப்புகளை அவர் அடிக்குறிப்பாகக் கூடச்  சுட்டவில்லை.

பல ஆண்டுகள் உழைத்துத் திரட்டப்பட்ட எனது அரிய தகவல்களையும் கருத்துகளையும்  முனைவர் உ. கருப்பத்தேவன் தமது கருத்துக்களாக அவரது நூலில் அச்சேற்றியிருப்பது அருவருக்கத்தக்கத் திருட்டுத் தொழில். கீழ்த்தரமானதுங்கூட.  ஒரு  தமிழ்ப் பேராசிரிருக்கு இது உகந்தது அல்ல .  

முனைவர் உ. கருப்பத்தேவனின் ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் – நோக்கும் போக்கும்’ என்னும் நூலில் எனது கருத்துகள் அச்சிடப்பட்டுள்ளதைப் பார்த்த பின்னர் நான் அடைந்த மனவேதனைக்கும் மன உழைச்சலுக்கும் ஈடு சொல்ல வார்த்தைகள் இல்லை. இதனால் மனநிம்மதி இழந்து  மேலும் பல துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளேன். ஒரு தமிழ்ப் பேராசிரியரின் இத்தகைய அறிவுத் திருடல்கள் கல்வித் துறையில் அதுவும் தமிழகத்தில் தலைசிறந்த காமராசர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ளது துரதிர்ஷ்டமானது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைக்கு ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. எத்தனையோ தலைசிறந்த பேராசிரியர்களைக் கொண்டு விளங்கிய, அத்துறையில் இப்படியொரு கரும்புள்ளி வந்து விழுந்துவிட்டதே என்று எண்ணும்போது மனம் மேலும் வருந்துகிறது.

இந்நூலுக்கு அப்பல்கலைக்கழகத் தமிழியற்புல ஒருங்கிணைப்பாளரும் ஒப்பிலக்கியத்துறைத் தலைவருமான  பேராசிரியர் செ. சாரதாம்பாள் அணிந்துரை வழங்கியிருக்கிறார். அவர் அணிந்துரையில் எடுத்துக்காட்டிக் கூறியுள்ள  பல கருத்துகள்  என் நூலிலுள்ளவை. இத்தகைய அணிந்துரை கருப்பத்தேவனின் அறிவுத் திருட்டுக் குணத்தை மேலும் ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது. முனைவர் உ. கருப்பத்தேவனின் அறிவுத்திருட்டை அடையாளம் காணத் தவறி அணிந்துரை வழங்கிய துறைத்தலைவர் பேராசிரியர் செ. சாரதாம்பாளின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை வேதனையளிக்கிறது.  

என் நூல்  கருத்துகளை எவ்வித அடிக்குறிப்புகளும் தராமல் அவர் கருத்துகளாகவே பக்கம் பக்கமாகப் பெயர்த்துப் பயன்படுத்தியுள்ள  மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் உ. கருப்பத்தேவன் மீது மான நஷ்ட வழக்குத் தொடரக்கூட வாய்ப்புள்ளது. இவருடைய பிற படைப்புகளிலும்  அறிவுத்திருடல்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

முனைவர் உ. கருப்பத்தேவன் மீது உரிய நடவடுக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோருக்கு தக்க ஆதாரங்களுடன்  முறைப்படிக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்வார்கள் என நம்புகிறேன்.

ஆனால், தான் பணிபுரியும் இடத்தில் சக ஆசிரியர்கள் மத்தியில் தன் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள, புகழை ஈட்ட, நூலைப் பாடத்திட்டத்தில் வைத்துப் பெருமை தேடிக்கொள்ள, அந்த நூல் மூலம் பெரும்பணம் ஈட்ட இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்று மட்டும் விளங்கிக்கொண்டேன். இவருடைய இத்தனை சிறப்புகளுக்கும் எனது நூல் பயன்பட்டிருக்கிறது என்பதை நினைத்துப் பெருமிதம்  கொள்கிறேன்.  

பேராசிரியர் கைலாசபதி கட்டுரையையும் சிலர் விட்டுவைக்கவில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட  ‘ஒப்பியல் இலக்கியம்’(சென்னை புக் ஹவுஸ், சென்னை: 1969) என்ற நூலில் உள்ள ‘பாரதியும் சுந்தரம் பிள்ளையும்’ என்ற கட்டுரை முழுவதும் அதாவது பக்கம் 258-லிருந்து 287 வரையிலான 30 பக்கங்கள்  களவாடப்பட்டுள்ளது. அதுவும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் (மா. தயாநிதி, சுப்பிரமணி பாரதியார் தமிழியல் புலம், புதுவைப் பல்கலைக்கழகம்) இக்காரியத்தைச் செய்திருப்பது வேதனைக்குரியது. ஜீரணிக்க முடியாதது !. ஆய்வு மாணவர் மா. தயாநிதி  பேராசிரியர் கைலாசபதியின் மேற்குறிப்பிட்ட கட்டுரையை முதல்  வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தைவரை முழுவதும் அப்படியே பெயர்த்தெடுத்து (201-222) எந்தவித அடிக்குறிப்பும் தராமல் தன்னுடைய கட்டுரை போல வெளியிட்டுள்ளார். முழுக் கட்டுரையையும் திருடி வெளியிட்ட முனைவர் பட்ட ஆய்வாளரின் இந்த முரட்டுத் தைரியம் ஆபத்தானது மட்டுமல்லாமல் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக்குப் பின்னடைவாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கட்டுரை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற(செப்டம்பர் 7,8-2012) ‘சுந்தரனாரின் படைப்புகள்’ என்ற தேசியக்கருத்தரங்கில் முனைவர் பட்ட ஆய்வாளர் மா. தயாநிதியால் வாசித்தளிக்கப்பட்டு பின்னர் கருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அதே பல்கலைக்கழகப் பத்திப்புத்துறை மூலம் நூலாக வெளிவந்துள்ளது. (‘பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் பன்முகப் பரிமாணங்கள்’, முனைவர் சு. அழகேசன், முனைவர். ஞா. ஸ்டீபன், (பதி.), பத்திப்புத்துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி: 2012).

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணிபுரியும் பேராசிரியர்களும் பதிப்பாசிரியர்களுமான சு. அழகேசன் மற்றும்  ஞா. ஸ்டீபன் ஆகியோர்  கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகளின் தரம் மற்றும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் அவற்றைத்  தணிக்கைக்கோ, தரக்கட்டுப்பாட்டுக்கோ உட்படுத்தாமல் நூல் வடிவமாக்கியுள்ளனர். முனைவர் பட்ட ஆய்வாளரின் இந்த அறிவுத்திருட்டை பதிப்பாசிரியர்கள் அடையாளம் காணத்தவறியது வருத்தத்திற்குரியது. ஒரு புகழ் பெற்ற பேராசிரியரின் முழுக்கட்டுரையும் திருடப்பட்டதை மேற்குறித்த இரு தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழ் ஆய்வுலகமும்  கண்டுகொள்ளாததன் காரணம் விளங்கவில்லை.

தமிழ் ஆய்வுலகில் நிகழ்ந்த இந்த இரண்டு அறிவுத் திருடல்கள்  என் கண்ணில் பட்டவை, கண்ணில் அகப்படாத அறிவுத் திருடல்கள் எத்தனையோ இருக்கலாம்.  இத்தகைய கல்விசார் அறிவுத் திருடல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

பிறருடைய கருத்துகளை எடுத்தாளும்போது மூலநூலாசிரியர் மற்றும் அவரது கருத்துகளை அடிக்குறிப்பாகச் சுட்டிக் கவுரவிப்பது நடைமுறை. இதற்கென்று சில நெறிமுறைகள் இருக்கின்றன. இதைக் கையாள்வதில் ஈகோ என்ன வேண்டிக்கிடக்கிறது. ஈகோவுடன் எழுதப்படும் கட்டுரைகளும் நூல்களும் எப்படித் தரமானவையாக இருக்க முடியும். ஒருவர் தான் எழுதும் நூல் அல்லது கட்டுரையில்  தரக்குறைவு  கூட இருக்கலாம், ஆனால் அடுத்தவர் கருத்தைத் தன்கருத்து போல வெளியிடும் கீழ்த்தரமான செயல் கூடாது.

நூல் வெளியீட்டகங்களும், பதிப்பகங்களும் பல்நோக்கு அனுபவமிக்க அறிஞர் மற்றும் ஆசிரியர் குழுவின் துணை கொண்டு தணிக்கை மற்றும் தரக்கட்டுப்பாடு செய்து நூல்களை வெளியிட்டால் இத்தகைய அறிவுத்திருடல்களைக் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாகத் ‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற பாடல் வரிதான் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

- முனைவர் ச.சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, தில்லிப் பல்கலைக்கழகம்

Pin It