கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திருமலை நாயக்கர் மகால் வரலாற்று ஆவணமா? அவமானச் சின்னமா?

கல்லறைகளைத் தோண்டும் கரசேவகர்கள் பாரதிய சனதாவின் சங்க பரிவாரங்கள் மட்டும் தானா? அத்தகைய பாசிசக் குரல்கள் தமிழ்த் தேசிய இனத்தின் பெயரால் தமிழ்நாட்டிலும் அண்மைக் காலமாக ஓங்கி ஒலிக்கின்றன.

தமிழின வேட்கை முகிழ்த்து வரும் வரவேற்கத்தக்க இச்சூழலில் அதற்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் இனவாதக் கருத்துக்கள் மேலோங்கி வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது. இனவிடுதலைக்கும், அதன் வழியாக தமிழ்நாட்டு விடுதலைக்குமான தேவை எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதல் முதன்மையானதோ, அதே அளவுக்கு அத்தகைய விடுதலைப் போராட்டத்தை இனவாதம் காவு கொண்டுவிடக் கூடாது என்பதும் முதன்மையான முன் நிபந்தனையாகும்.

Thirumalai nayakkar mahal

தமிழ்த் தேச விடுதலை, தமிழர் பொருள் முதல்வாத மெய்யியல் என்ற அறம் சார்ந்து – அதன் வழி நின்று போராடிப் பெற வேண்டிய ஒன்றாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் நெறியினின்று அணுகப்பட வேண்டும்.

வரலாற்று அனுபவங்களிலிருந்து முன்னேறும் முற்போக்கு இனமாக தமிழினத்தை உந்திச் செலுத்தாமல், பின்னுக்கு இழுக்கும் போக்கானது, இந்துத்துவப் (பார்ப்பனிய) பாசிசம் போன்றது மட்டுமல்ல, அதற்கு துணைபோகும் செயலாகும் என்பதை தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசிய விடுதலை மார்க்சிய லெனிய கோட்பாடுகளின் வழிநின்று அணுக வேண்டும். வரலாற்று நோக்கில் தேசங்கள் பிறப்பெடுத்த புறவய நிலைமைகளைக் காணாமலும், வழி முறைகளை அணுகாமலும், தூய தமிழ்ச்சாதி, தூய தமிழினம் என்ற பித்தம் தலைக்கேறி சில தமிழினக் குழுக்கள் கூச்சலிடுவதை யாம் அவ்வப்போது, மறுத்து வந்துள்ள போதிலும், மீண்டும், மீண்டும் தமிழக இளைஞர்களின் மூளையில் இனவாத நஞ்சூட்டப்படும் வேதனையையும், கவலையையும் தரத்தக்க நிலைமைகளை நாம் அன்றாடம் காணத்தான் செய்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் – சீமான் அவர்கள், அண்மையில் தமது கட்சியின் திருப்பூர் மாநாட்டில் ‘மதுரை நாயக்கர் மகால் தமிழர்களின் அவமானச் சின்னம்’ என்று முழங்கியிருக்கிறார். இதனை அடுத்து, அவரது கட்சியினர் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை இடிப்போம்’ என்று பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த பிறகும், இஸ்லாமியர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆப்கனின் தாலிபன்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தர் சிலையை உடைத்தார்கள். தமிழ் ஈழத்தில் சிங்கள இராசபக்சே ஆட்சியில் பல நூறு சைவ, வைணவக் கோயில்கள் இடிக்கப்பட்டன; யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. நாயக்கர் மகாலை இடிக்கத் தூண்டும் சீமானை சங்க பரிவாரங்களிலிருந்து, தாலிபான்களிலிருந்து, இராசபக்சேவிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?

வரலாற்று வழியாக நின்று, நிலைத்திருக்கிற தொல்பொருள் சின்னங்களை, கட்டிடங்களை, நினைவு மண்டபங்களை அவரவர் விருப்பத்தின்படி, கண்ணோட்டத்தின்படி இடிக்கக் கிளம்பினால் தமிழகத்தில் எந்தக் கட்டுமானங்களும், சிலைகளும் மிஞ்சாது.

சீமானுக்கு நாயக்கர் மகால் பிடிக்கவில்லை; பாரதிய சனதா கட்சிக்கு பள்ளிவாசல்கள் பிடிப்பதில்லை; புத்த மதத்தினருக்கு சிவன், வைணவக் கோயில்கள் பிடிப்பதில்லை; சிவனடியார்களுக்கு வைணவக் கோவில்கள் பிடிப்பதில்லை; சைவவைணவர்களுக்கு – சமண–பௌத்தப் பள்ளிகள் பிடிப்பதில்லை; இந்துக்களுக்கு கிறித்துவ தேவாலயங்கள் பிடிப்பதில்லை; ஒரு சிலருக்கு கால்டுவெல் சிலை பிடிப்பதில்லை; வேறு சிலருக்கு அண்ணல் அம்பேத்கர் சிலை பிடிப்பதில்லை மற்றும் சிலருக்கோ பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் சிலை பிடிப்பதில்லை; இந்து மதவாதிகளுக்கோ பெரியார் சிலை பிடிப்பதில்லை. எல்லாவற்றையும் இடித்து விடலாமா? அனல்வாதத்துக்கும், புனல்வாதத்துக்கும் நமது பண்டைய இலக்கண, இலக்கிய ஓலைச் சுவடிகளை இழந்தது போதாதா? தமிழரல்லாத பல்லவர்கள் எழுப்பிய கற்கோயில்கள், செதுக்கிய குகை ஓவியங்கள், கற்களால் ஆன கலைநயமிக்க சிற்பங்களை என்ன செய்வது?

இப்படியாக ஒவ்வொரு சார்பினருக்கும், ஏதோவொன்று பிடிபடாமல் போனால் அவரவரும் மற்ற சமயத்தார் நினைவகங்களை, வழிபாட்டு இடங்களை இடிக்கக் கிளம்பினால், தமிழ்நாடு பாழடைந்த வீடாக, சுடுகாடாக, பாலைவனமாக காட்சியளிக்குமே தவிர, அழகியல் தொல்பொருள் காட்சிக் கூடமாக வரலாற்றுத் தடமாக விளங்காது.

இதுவா அறநெறி? இதுவா தமிழ்த் தேசிய விடுதலை பெறும் வழிமுறை?

பிரிட்டீசு ஏகாதிபத்தியத்தை அன்றைய சமூகப் பொருளாதாரப் பின்புலத்தில் எதிர்த்த கட்டபொம்மன், மருது சகோதரர்கள், புலித்தேவன், ஒண்டிவீரன், வேலுநாச்சியார், குயிலித்தாய், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துக்கோன், திப்பு சுல்தான் போன்ற தீரர்களில் சிலர் நாயக்கர் வம்ச ஆட்சித் தலைமையை ஏற்றுக் கொண்ட பாளையக்காரர்களாகவும் (வட்டார மன்னர்கள்), பாளையக்காரர்களின் தளபதிகளுமாகவும் தமிழ்ச் சமுகத்தில் வரலாற்று நாயகர்களாக விளங்குகின்றனர்.

இவர்களில் பலரும் தமிழ் நிலத்தில் தங்களுக்குள்ள ஆட்சி உரிமையைக் காத்துக் கொள்வதற்காக, பிரிட்டீசாரை எதிர் நின்று போரிட்ட அளவில் அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது பாராட்டுக்குரியதும், வரவேற்புக்குரியதுமான வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்பதில் எள்ளின் முனையளவும் ஐயமில்லை. ஆனால் இவர்களில் எவரும், தமிழ் மண்ணில் நீண்ட நெடுங்காலமாக நின்று நிலவிய சாதிய உற்பத்தி உறவுகளை எதிர்த்தோ, அதற்கு முடிவு கட்டவோ தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இல்லை. அதேபோது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான இவர்களில் யாரும், மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சித் தலைமையை எதிர்த்தவர்களும் அல்ல.

தமிழகத்தில் அன்றைக்கு பிரிட்டீசாரின் ஆட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களும், கட்டுப்படாதவர்களுமான இருவகைப்பட்ட பாளையக்காரர்களும் இருந்தனர். இவர்களில் பலரும் தமிழ்ச் சாதிகள் என இன்று பட்டியலிடுவோரின் பட்டியலுக்குள் அடங்கிய தமிழ்ச் சாதியினரே. அதுபோலவே, எதிர்த்தவர்களில் தெலுங்குச் சாதி எனப் பட்டியலிடும் பிரிவினரும் இருந்ததற்கு வரலாறு நமக்கு நிறைய சான்றுகளை அளிக்கிறது.

இவர்களில் பலரும் புறத்தில் காலனி ஆதிக்க எதிர்ப்பாளர்களாகவும், உள்ளடக்கத்தில் சாதி ஆதிக்க பார்ப்பனிய சமூக ஒழுங்கை நிலைநாட்டுபவர்களாகவும் திகழ்ந்தனர் என்பது தான் வரலாறு தரும் பாடம்.

இன்றைய காலத்தில் - 20 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாக - பிரிட்டன் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு, மாண்ட பாளையக்காரர்களின் சாதியப் பின்புலங்களை அடியொட்டி அவர்களை, அவரவர் சாதிகளின் வழிபாட்டிற்குரிய தலைவர்களாக மாற்றிவிடும் போக்கின் பின்னணியை நாம் ஆழ்ந்த கவலையுடன் பரிசீலிக்க வேண்டும்.

பாளையக்காரர்களின் (மன்னர்களின்) காலனியாதிக்க எதிர்ப்பு மரபு என்ற முதன்மை நிலையைப் படிப்பினையாக்கிக் கொள்ளாமல், அவர்களின் சாதியப் பிடிமானத்தை மட்டும் சாதிச் சங்கங்கள் ஏற்றது ஏன்?

இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது, அதன் தலைமை அளவிலேயே பிரிட்டீசு காலனியாதிக்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு, அதனிடத்தில் நிலப்பிரபுத்துவ, இந்து – இந்தி - இந்தியப் பார்ப்பனிய சாதியதிகார ஆற்றல்களும், தரகு முதலாளிகளும், தங்கள் தலைமையில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக நடத்திய போராட்டமே.

இதில் தமிழகத்தில் அல்லது அன்றைய சென்னை ராசதானியில் நடைபெற்ற பிரிட்டீசாருக்கு எதிரான போர், மக்கள் சார்ந்து அல்லாமல், பாளையக்காரர்கள் சிலரால் நடத்தப்பட்ட வீரச்சமராகும். அச்சமர்களை சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்கள் இருட்டடிப்பு செய்தது. அதற்கான முதன்மையான காரணம், அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் சம காலத்தில் முதன்மைப்படுத்துவது நாடாளுமன்ற வகைப்பட்ட ஏகாதிபத்திய தரகர்களுக்கு பல சிக்கல்களை, தடைகளை, ஆட்சிச் சக்கரத்தை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டார்கள். தமிழ் மன்னர்கள், பாளையக்காரர்களின் அரசியல் போராட்ட வரலாறு முன்னெழுவது இந்தியப் பார்ப்பனிய மேலாண்மைக்கு ஆபத்து என உணர்ந்த இந்து, இந்தி, இந்திய வரலாற்றுச் சிந்தனை மரபு அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட மரபை இருட்டடிப்பு செய்து விட்டது.

பிரிட்டீசாரை எதிர்த்த இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின், தென்னிந்தியாவின் பங்கு உரியவாறு அளிக்கப்பட்டிருந்தால், தமிழக இளைஞர்கள் இன்றைய நிலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஓரளவு முன்னணி பாத்திரம் ஆற்றுபவர்களாக விளங்கியிருப்பார்கள்.

ஆனால் சாதி உற்பத்தி முறைகளையும், உற்பத்தி உறவுகளையும் பேணுவதில் பாளையக்காரர்களுக்குள்ள பங்கை உயர்த்திக் பிடிப்பவர்களாக முறையே வன்னியர், முக்குலத்தோர், நாயுடு, ரெட்டி சாதிகள் உள்ளனர். சாதிப் பெருமிதங்களை, சாதி ஆதிக்கத்தை மீட்டுருவாக்கம் செய்து கொள்ளவும், நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்களது சாதிகளில் இருந்த பாளையக்காரர்களை நினைவுகூர்ந்து வருகிறார்கள். இன்றைய இந்துத்துவ பா.ச.கட்சியனர் தங்களது அரசியல் அடித்தளத்தை தமிழகத்தில் வலுவாக்கிக் கொள்ள அத்தகைய சாதிய சங்கங்களுக்கு துணை நிற்கின்றனர்.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில், சுதேசிக் கப்பலோட்டிய வ.உ.சி. 12 ஆண்டுகாலம் செக்கிழுத்து, சிறை அடக்குமுறையில் நொந்து, நைந்து, வறுமைக் கொடுமையில் தத்தளித்தார். அவருக்கான அங்கீகாரத்தையும் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு அளிக்கவில்லை. தமிழகத்தை ஆண்ட காங்கிரசும், பின் வந்த திராவிட ஆட்சியாளர்களும் அவரைப் போற்றாத நிலையில் தான், இன்று அம்மாபெரும் விடுதலைப் போராட்டத் தலைவர் கூட வெள்ளாளர்களின் சாதிகளால் போற்றப்படும் சாதித் தலைவராக தகுதி இறக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது எவ்வளவு வேதனையானது? வ.உ.சி. பிரிட்டீசு எதிர்ப்புப் போராளி மட்டுமல்ல, வளமான பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் கொண்டவர் என்பதை தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களின், “உருவாகாத இந்திய தேசியமும், உருவான இந்து பாசிசமும்” என்ற நூலின் மூலம் அறிய முடிகிறது.

மேற்குறிப்பிட்ட பிரிட்டீசார் ஆட்சியை எதிர்த்தவர்களில் வ.உ.சி. பாளையக்காரர் மரபில் வந்தவரல்லர். ஏனைய பாளையக்காரர்களின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள இடைநிலைச் சாதிச் சங்கங்கள் குறிப்பிட்ட மன்னர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்ட விழுமியங்களைக் கைவிட்டுவிட்டு, தலித்துகளை எதிர்ப்பதிலும், அடக்கி ஒடுக்குவதிலும் தங்கள் கவனத்தை குவித்து வருகின்றனர். இதன் பொருள் தலித்துகளை முற்றாக அழிப்பது அச்சாதிகளின் நோக்கமல்ல. மாறாக, அவர்களை அச்சுறுத்தி, அடக்கியாண்டு, தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குட்பட்ட சேவைச் சமூகங்களாக வைத்துக் கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர் என்பதேயாகும். தங்களது மேலாதிக்கத்துக்கு கருத்து ரீதியாகவும், உடல் உழைப்பு அளவிலும், அரசு/ தனியார் பணி அளவிலும் சேவை செய்யத் தயாராக இருக்கிற அல்லது வளைந்து கொடுக்கிற தலித்துகளைப் போற்றுவதும், சலுகை அளிப்பதும் அவர்களது மேலாதிக்கத்தை எதிர்க்கிற தலித்துகளை கொன்றழிப்பது, பொய்வழக்கில் சிறைப்படுத்துவது, வீடுகளுக்கு தீவைப்பது, உடைமைகளைச் சூறையாடுவது போன்ற இன்னல்கள் விளைவிப்பது என்ற இருவேறு உத்திகளைக் கையாள்கிறார்கள். அதாவது சாதிய சமூக உற்பத்தி முறை வலுவாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டு, கெட்டி தட்டிப் போன சாதிய உற்பத்தி உறவுகளைப் பேணுவதற்காகவே தற்போதும் இடைநிலைச் சாதிச் சங்கங்கள் செயலாற்றுகின்றன.

இதில் கவுண்டர், மறவர், அகமுடையார், கள்ளர், வன்னியர், நாயுடு, ரெட்டியார் சாதிகளைச் சேர்ந்த பாளையக்காரர்களின் வழிவந்த எந்தச் சாதிகளும் விதிவிலக்கல்ல. இதற்கு இந்துத்துவ இந்திய அரசும், தரகு முதலாளிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளும் ஒப்புதல் அளித்து காவல் காக்கின்றன. தோழர் தமிழரசன் தனது தமிழ்த் தேச விடுதலைக்கான திட்டத்தில்,

“சிங்கள வர்த்தக (தரகு) முதலாளிய வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்ட இலங்கையின் சிங்கள தேசிய இயக்கம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு மாறாக, சிறுபான்மையினராகிய தமிழர்களையம், முஸ்லீம்களையும், கிறித்தவர்களையும் எதிர்த்து தாக்கத் தொடங்கியது” என்று சொல்வார்.

அதைப்போலவே, தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய தரகு முதலாளிய வர்க்கமும், இடைநிலைச் சாதிகளின் அதிகார வர்க்கமும், சாதிச் சங்கங்களும் – தங்களின் தொழிலுக்கும், வணிகத்திற்கும், சந்தைக்கும் தடையாக இருக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளையும், அவர்களது காப்பாளரான இந்திய அரசையும் எதிர்த்துப் போரிடுவதற்கு மாறாக, தங்கள் இனத்தின் நலிவடைந்த பிரிவினரான தலித்துகளை ஒடுக்க இடைநிலைச் சாதிச் சங்கங்களையும், இஸ்லாமியர்களை ஒடுக்க சங்கப் பரிவாரங்களையும் களத்தில் இறக்கி தங்களது சுரண்டலைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அரண்மனைகளும், கோவில்களும், நினைவுச் சின்னங்களும், புராதனக் கட்டிடங்களும் எழுப்பப் பெற்ற நிலப்பிரபுத்துவ-முடியாட்சிகள் காலத்தில், அவற்றால் உருவாக்கப்பட்ட சமூக உற்பத்தி உறவுகளும், சாதி ஏற்றத் தாழ்வுகளும், அவைகள் நீடித்திருக்க முன்மொழியும் விதித் தத்துவங்களும் மூட நம்பிக்கைகளும், ஆண்டான் – அடிமை, பண்ணையார் - படியாள் உறவுமுறைகளும் என அடித்து உடைக்கப்படுவதற்கான காரணங்கள் எத்தணையோ இருக்கும்போது கட்டிடங்களைத் தகர்ப்பதா தமிழ்த் தேசியம்? இதுவா தமிழர் அறம், தமிழர் மெய்யியல்?

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மல்லிப்பட்டிணம் என்ற ஊரில் மனோரா என்று ஒரு நினைவுக் கோபுரம் உள்ளது. பிரிட்டீசுப் படைகளுக்கும், பிரெஞ்சுப் படைகளுக்கும் நடந்த போரில் பிரிட்டீசுப் படைகள் பெற்ற வெற்றியைப் பாராட்டி அவர்களின் ராச விசுவாசியான சரபோஜி மன்னனால் ‘ஊரில் கல்யாணம் மாரில் சந்தனம்’ என்ற மனநிலையில் கட்டப்பட்டதுதான். இன்று அது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கால ஓட்டத்தில் அது தானாகவே சிதிலமாகி விடலாம். அதை யாரும் இடிக்க வேண்டியதில்லை. இதே சரபோஜி மன்னன்தான் அரிய தமிழ்நூல்களின் ஓலைச் சுவடிகளைக் கொண்ட சரசுவதி மகால் நூலகத்தை தஞ்சாவூரில் உருவாக்கினான். இப்படி சதுரங்கப்பட்டிணம் கோட்டை, செஞ்சிக்கோட்டை என எத்தனையோ வரலாற்றுச் சின்னங்கள் தானே சிதிலமடைந்து வருகிறது. இவைகளை இடித்துத் தரைமட்டமாக்குகிறேன் என தமிழக இளைஞர்களை சீமான் போல ஒவ்வொருவரும் இனவாத உசுப்பேற்றினால் அது எங்கு கொண்டு போய்விடும்? சீமான் போன்றவர்களின் முழக்கங்கள், மலிவான சந்தர்ப்பவாத அரசியலேயன்றி, தமிழ்த் தேச விடுதலைக்கான கடைக்காலன்று.

புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கப் போவதாகச் சொல்லும் சீமானுக்கு, பிரிட்டீசார் கட்டிய அந்தக் கோட்டை மட்டும் உவப்பானதாக்கும்?! திருமலை நாயக்கர் கட்டியது என்பதற்காக அதை இடிப்பதனால், நாயக்கர் வம்சத்தவர் மட்டும் தான் தமிழகத்தை ஆண்டார்களா?

களப்பிரர் தமிழரா? வெளியிலிருந்து வந்தவர்களா? என்பது வரலாற்றுத் தரவுகளின் விவாதத்தில் உள்ளது. ஆனால் 300 ஆண்டுகாலம் ஆண்ட களப்பிரர்களின் பண்பாட்டுக் கலப்பு, இரத்தக் கலப்பு இல்லாமலா தமிழகம் தனது வரலாற்றைக் கடந்திருக்க முடியும? பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், நாயக்க மன்னர்கள், பிரிட்டீசார் எனப் பலரும் தமிழகத்தை ஆண்ட வேற்று இனத்தவரே. இதில் நாயக்கர் வம்சம் மட்டும் என்ன தனியே தண்டைனைக்குரிய ஆட்சிக்காலமாகும்?

இடைக்காலச் சோழர்களான விசயாலயன் தொடங்கி, அவ்வரசர்களின் இறுதிக்காலம் வரை நடந்த ஆட்சிகள் மட்டும் தான் குருதிவழித் தமிழர்களின் ஆட்சிக்காலமாகும். அவர்களும் கூட, இன்றைக்கு அவ்வரசர்களின்மேல் தங்கள் சாதிக்குரிய வாரிசுரிமை கோரும் இடைநிலைச் சாதிகளில், எந்தச் சாதியிலும் தங்கள் மனைவியரைத் தேர்வு செய்யவில்லை. தங்களது தங்கைகளையோ, தமக்கைகளையோ, எந்தத் தமிழர் சாதியினருக்கும் மணம் முடித்துக் கொடுக்கவில்லை. தங்கள் தகுதிக்கேற்ற வேற்று நாட்டு மன்னர்களோடு தான் அவர்கள் மண உறவு கொண்டிருந்தார்கள். பல்லவ, பாண்டிய, பிற்கால சோழ, நாயக்கர், பிரிட்டீசார் போலவே இடைக்காலத் தமிழ் சோழர்களும், பார்ப்பன சேவையையும், தலித்துகளை ஒடுக்கும் ஆட்சிமுறைகளையும் மேற்கொண்டவர்கள் தான் என்பதை தூய தமிழின, தூய தமிழ்ச்சாதி வாதம் பேசும் எவரேனும் மறுத்துவிட முடியுமா?

இன்றைக்கு இருக்கிற இந்தியாவோ, தமிழகமோ, பல நூறு பேரரசுகளும், சிற்றரசுகளுமாக உருவாகியும், சிதைந்தும், எழுந்தும், வீழ்ந்தும், ஒன்றுபட்டும், பங்கிடப்பட்டும், ஆளும் எல்லைகள் இடம் மாறியும், சுருங்கியும் என்று பல மாற்றங்களுக்கும் பண்பாட்டுக் கலப்புக்கும் இலக்கான நாடுதான். இவ்வரலாறு நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகம் முழுமைக்கும் இந்த வரலாறு பொதுவானது. முடியாட்சிகளுக்கு முடிவுரை எழுதப்பட்ட காலங்கள்தான் 19, 20ஆம் நூற்றாண்டுகள்.

இத்தகைய வரலாற்றுக் கட்டம் அதன் போக்கில், தவிர்க்க இயலாத வரலாற்றுக் கட்டம்தான். அதற்காக இன்று யார் வருந்தி ஒப்பாரி வைத்தாலும், அழுதுபுரண்டாலும் இந்த வரலாற்றுத் தடயங்களை மறந்துவிட்டு, மறுத்துவிட்டு நமது வரலாற்று அறிவை செழுமைப்படுத்திக்கொள்ள முடியாது.

முடியாட்சிக் காலங்களில் இங்கே ல் பழங்காலத்திலிருந்து வதிந்து வந்த தமிழின மக்களும். கால ஓட்டத்தில் ஆரிய சமஸ்கிருதக் கலப்பால் புதுப்புத இனங்களாக உருமாற்றம் பெற்றுத்தான் தெலுக்கு, கனெட, மலையாள இனங்களாகப் பரிணமித்தனர். ஆரியக் கலப்பையும், சமஸ்கிருதக் கலப்பையும் இனநிலையிலும், மொழிநிலையிலும் எதிர்த்து வந்த தமிழினமாக பெருந்தொகையான தமிழர்கள் வாழும் சேதமாக தமிழ்நாடு விளங்குகிறது. இன்றுள்ள அண்டை தேசிய இனங்களுக்கும், தமிழனத்துக்கும் பாரிய வேறுபாடுகள் என்பது. பிற இனங்களோடு ஏற்படுகிறபோது மிகவும் குறைவுதான்.

மன்னராட்சிக் காலங்களில் நடந்த படையெடுப்புகள், எல்லை மாற்றங்கள், பண்பாட்டுக் கலப்புகள் இங்கேயே வாழ்ந்த தமிழர்களுக்கும், வெளியே இருந்து வந்த அரசு, வணிக, கைவினை வேளாண்மைக் குலங்களுக்கும் இடையே நடந்த இனக்கலப்புகள் என்பது நடந்தேறவே இல்லை என்பது மானுடவியல் சூழமைவுக் கோட்பாடுகளுக்கே எதிரானது.

இன்று தெலுங்கர்கள் எனத் தூய தமிழினவாதக் குழுக்களால் பட்டியலிப்படும் நாயுடு, ரெட்டிகள், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது, அவர்களது தாய்மொழியாக தமிழ் என்றே பதிவு செய்கின்றனர். வீட்டு மொழியாக மட்டுமே தெலுங்கைக் கொண்டுள்ள இலக்கக் கணக்கான நாயுடு, ரெட்டியார்கள், 24 மனைத் தெலுங்குச் செட்டியார்கள், பொதுவெளியில் தமிழில் மட்டுதான் தங்கள் வாழ்க்கையை பொருள் பொருந்திய வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.

தமிழகத்திலே வாழ்கிற, வீட்டுமொழியைத் தெலுங்கில் பேசிக் கொண்டிருக்கிற, சாதிகள் – நடப்பில் ஆந்திராவில் வழக்கில் உள்ள தெலுங்கில் பேசுவோரின் மொழியோடு பெரிதும் வேறுபட்டவர்கள். தமிழ் நாட்டிலே வாழும் ஒரு ரெட்டி, நாயுடு சாதி இளைஞனை ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கராடு பேசவிட்டால், அவர்கள் மொழி இவர்களுக்குப் புரியாது. அந்த அளவுக்கு தெலுங்கோடு அவர்களது உறவுகள் துண்டிக்கப்பட்டு சிந்தனையில், வாழ்க்கைமுறையில் தமிழர்களாகவே இருக்கின்றனர். தமிழறிஞர் க.சுப்பு ரெட்டியார், கவிஞர் சுரதா போன்றவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றி, தமிழநாட்டில் ஓங்கி உயர்ந்து நிற்பவர்கள்.

seeman 330சீமான், நாயக்கர் மகாலுக்கு எதிராகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து 16.11.2015ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ரெட்டிகள், நாயுடுகள் தெலுங்கு சம்மேளனம் என்று தமிழில்தான் சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியிருந்தனர். அவர்களை அத்தகைய செயலுக்கு, எதிர்வினைக்குத் தூண்டிய குற்றத்துக்குரியவர் சீமானே தவிர, அம்மக்கள் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் எதிர்வினையை வேறுவடிவில் தெரிவித்திருக்கலாம். தெலுங்கு சம்மேளனம் என்று கூடியதில் எமக்கும் உடன்பாடில்லைதான். தேர்ந்த தமிழின தமிழ்த் தேசப் போராளிகள், சிந்தனையாளர்கள் எவரும் அப்போராட்டங்களில் பங்கேற்கவில்லை. சாதி உணர்வும், தங்களை தனித்து ஒதுக்கிப் பேசுகிறார்களே என்ற கோபமும் கொண்ட நாயுடு, ரெட்டி சாதிகளைச் சேர்ந்த சிலர்தான் அப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒரு துண்டறிக்கையையும், சுவரொட்டியையும் கூட தமிழில் அச்சிட்டுத்தான் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டிய புறவயச் சூழலில், அவர்கள் தமிழினமாக தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பதுதான் வெள்ளிடைமலை. அவர்களைப் போய், வந்தேறிகளாக தனித்துப் பேசுவது, தமிழின தேசிய விடுதலைக்கு ஊறுவிளைவிக்கும் செயலேயன்றி வேறல்ல.

நாயுடு, ரெட்டி, 24 மனைத் தெலுங்குச் செட்டியார் என்பதெல்லாம் தமிழனத்தின் பல்வேறு இடைநிலைச் சாதிக் குழுக்களில் ஒரு சாதியினராக வைத்து எண்ணத்தக்கவர்களே அன்றி, அவர்களைத் தெலுங்கர்களாகப் புறந்தள்ளுவது பெருந்தவறாகும். நடைமுறை வாழ்வில் அவர்கள் தெலுங்கு இனத்தின் சாதிக்குழுவாக இல்லை.

இதுபோலவே தமிழினவாதிகள் பட்டியலிடும் தமிழ்ச் சாதிகள் அனைவரும், வரலாறு நெடுக கலப்பற்ற தூய தமிழ்ச்சாதிகளாக இருந்து வருகின்றனர் என்பதும் பேதமையே. அப்படியே சாதிகளிடையே கலப்புள்ள இனமாக தமிழினம் உருமாறியிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே தவிர, மாபெரும் வரலாற்றுப் பிழையன்று. தூய தமிழினம் என்பது, தூய தமிழ்ச்சாதிகள் என்பதன் மறுவடிவமே. சாதிகளிடையே கலப்பைத் தடுத்துக் கொண்ட இனமாக தமிழினம் விளங்குவது, தமிழினத்துக்கு இழுக்கே தவிர பெருமைக்குரியதல்ல.

அருந்ததியர்கள் பேசுகின்ற வீட்டு மொழியில் பலநூறு தமிழ்ச் சொற்கள் உள்ளன. அச்சொற்கள் தமிழர்களின் வழக்கிலிருந்து மறைந்துவிட்டன. மருதநில சமவெளிகளில் - மைய மாவடட்ங்களில் உள்ள தமிழர்களிடம் வழக்கொழிந்துபோன தமிழ்ச்சொற்களை, வேறுபட்ட புறச்சூழலில், வேறுபட்ட திணை நிலங்களில் வாழுகின்ற தமிழ் மக்கள் பேசினால், அவர்கள் வேற்றினத்தவர் எனப் புரிந்து கொள்வதும், வாதிடுவதும், மருதநில நாகரிகத் திமிரேயன்றி வேறு ஒன்றுமல்ல. நதிக்கரை நாகரிக தமிழ்க் குடிகளுக்கு அருந்ததியர் பேசும் தமிழ் புதிய மொழியாகத் தெரிகிறது.

தமிழை, தெலுங்கு குரல் தொனியில் உச்சரிப்பதால், ஒலிப்பதால் அருந்ததியர்கள் அனைவருமே தெலுங்கர்கள் என்ற கருத்தும் சிலருக்கு இருக்கிறது. ஆங்கிலம் பேசுகிற தமிழர்கள் எப்படி ஆங்கிலேயர்கள் இல்லையோ, அதுபோல கன்னடம், தெலுங்கு பேசுகிற அருந்ததியர்களும் தெலுங்கரோ, கன்னடரோ அல்ல, அவர்கள் தமிழர்களே. தமிழகத்தில் தமிழும், தெலுங்கும் தெரிந்த அருந்ததியர்கள், தமிழும் கன்னடமும் அறிந்த அருந்ததியர்கள், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத அருந்ததியர்கள் என மூவகைப் பிரிவினர் இங்கே காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

குரல் தொனி, உச்சரிப்பு, ஒலிப்பு வேறுபாடு என்பது தமிழ்ச்சாதிகள் எனப் பட்டியலிடப்படும் சாதிகளுக்குள்ளேயும் வேறுபட்ட மாவட்ட அளவுகளிலும், ஒரே மாவட்டத்துக்குள்ளேயே வேறுபட்ட வட்டாரங்களுக்குள்ளும் கூட இருக்கிறது. இலக்கிய, இலக்கண, செம்மொழித் தகுதி நிலையில் வைத்து மக்கள் பேச்சு வழக்காற்று மொழியை எல்லாவிடத்தும், எங்கும் ஒரே தன்மைத் தானது என்று சமப்படுத்திவிடமுடியாது.

சமவெளி மாவட்டங்களிலிருந்து, வேறுபட்ட புவிச்சூழலில் வாழுகிற அருந்ததியர்களும் தமிழ் மக்களே, தமிழர் தொப்பூள் கொடியுறவிலிருந்த வந்தவர்களே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் உணர முடியும்.

தமிழ்த் தேச விடுதலை அரசியலுக்கு நாயுடு, ரெட்டியார்கள், சவுராட்டிரர்கள், அருந்ததியர்கள், 24 மனை தெலுங்குச் செட்டியார் போன்ற சாதிகள் – எந்த இடத்திலும் – எப்போதும் எதிர் நிலையில் இல்லாதபோது, அவர்களைத் தனித்து ஒதுக்கிப் புறந்தள்ளுவது தமிழ்த் தேச விடுதலைக்கு இரண்டகம் செய்வதாகும்.

முடியாட்சிக்கால படையெடுப்புகள், புதிய புதிய குடியேற்றங்கள், குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலவாழ்வின் உற்பத்திப் பொருள்கள், வணிகங்கள், பண்பாடுகள், மருதநில வாழ்வின் நாகரிகத் திமிரின் மேட்டிமைச் சிந்தனைகள், இனக்கலப்புகள் எல்லாம் சேர்ந்துதான் இன்றுவரை தமிழினம் ஏழரைக் கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு தேசமாக – தனது தாயகமாக மாறியுள்ளது. அரசியல் அளவில் தமிழினம் – தமிழ்நாடு இந்திய அரசின் கீழ் ஒடுக்கப்படும் தேசமாக இருக்கிறது. சர்வதேச நியதிகளின்படி தமிழினம் ஓர் இறையாண்மையுள்ள ஓர் இனமாகும். அது தனக்கான விடுதலை பெற்ற ஒரு தேசத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் ஏழரைக் கோடி தமிழர்களும் – 15 கோடி கரங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதற்கான உத்திகளை சிதைப்பவர் எவராயினும் அவர்கள் தமிழனத்திற்கு எதிரானவர்களே.

மோடியைப் பிடிக்காதவர்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள், மாட்டிறைச்சி சாப்பிட விரும்புகிறவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிடலாம் என்று நடுவண் அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகிறார். தத்தமது தேசிய இனங்களின் தேசங்களில் வாழும் இஸ்லாமியர்களை, தங்களது தாய் மண்ணிலிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்குச் செல்லக் கோரும் இந்துயிச பாசிசத் திமிர் எங்கிருந்து வருகிறது? நம் தமிழ் இசுலாமியர்கள், நம் தமிழ் கிறிஸ்தவர்கள், நம் தலித் தமிழர்கள் தங்கள் தாயகமான தமிழகத்தைவிட்டு வெளியேறக் கோரும் உரிமை ஒரு மதப் பயங்கரவாதமன்றி வேறென்ன? அதைத்தானே சீமான் போன்றவர்களும், தூய தமிழினவாதிகளும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதகளில், குறிப்பாக ஓசூர், வடஆற்காடு, பேரணாம்பட்டு, திருவள்ளுர், கோயம்புத்தூர் மாவட்டம் பாலக்காடு, தேனி மாவட்டம் கம்பம், போடி மெட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போன்ற ஊர்களில் வாழ்கிற தமிழர்கள் பலரும், தமது அண்டைத் தேசியப் பண்பாட்டு தாக்குதலில் முறையே கன்னடம், தெலுங்கு, மலையாளம் கலந்தும் அல்லது அத்தகைய மொழிகளின் தொனியில் கலந்து தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காக நாம் அவர்களை கன்னடர், தெலுங்கர், மலையாளி என்று வரையறுத்து விடுகிறோமா? அவர்கள் மாற்று மொழிகலந்தும் எல்லைப்புற மொழிகளின் தொனியில் பேசினாலும் அவர்கள் தமிழினவாதிகள் பட்டியலிடும் தமிழ்ச் சாதிகளாகவும் இருக்கலாம் அல்லவா? அத்தகையவர்களை தமிழர் என்று கருதுவதா? கன்னடராக, மலையாளியாக, தெலுங்கராக கூறுவதா? வட்டார வழக்குகளின் தாக்கத்தை வைத்து ஒருவர் தமிழரா இல்லையா என முடிவுக்கு வருவதும் அபத்தமானதே. தமிழரின் தனித்த அடையாளம் சாதிதான் என்றால், அந்தச் சாதிக்குரிய அடையாளத்துக்கு தீ மூட்டுவோம். சாதி அடையாளம் இல்லாமல் ஒருவன் தமிழனா இல்லையா என்று அறிந்து கொள்ள முடியாது என்கிற வறட்டுத்தனமான, பிற்போக்கான கருத்துக்கள் தான் தமிழினத்திற்கு அடையாளம் என்றால், அப்படி ஒரு இன அடையாளமோ, அதற்கான ஒரு தேசமோ வேண்டுமென்றால் அத்தகைய இன அடையாளத்தையும், தேசத்தையும், பெறுவதைவிட இழிவானது வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழ்ச் சாதிகள் பட்டியலில் முல்லை நில மக்களின் வாரிசாக ஆயர்கள், இடையர்கள், கோனார்கள் என்று அழைக்கப்படுகிற மக்கள் பன்னெடுங்காலமாக தமிழராக, தமிழ் மண்ணின் பூர்வகுடிகளாக இருந்து வருகிறார்கள். அண்மைக் காலத்தில் அவர்கள் தம்மை யாதவர்கள் என்ற வட இந்திய அடையாளத்துடன் அழைத்துக் கொள்கிறார்கள். அவர்களை தமிழர்களாக அணுகாமல், பீகர், உ.பி.யில் உள்ள லல்லு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் வழியினராக கருதி விடமுடியுமா? இதைப் போலவே தருமபுரி, சேலம், நீலகிரி மாவட்டங்களின் பாறை, குன்றுகளின் தாழ்வான பகுதிகளில் கோனார்களுக்கு இணையாக ஆடுமேய்க்கும் தொழிலை மேற்கொண்டு குரும்பர்கள் வாழ்கிறார்கள். இவர்களது தாய்மொழி தமிழ்தான். கன்னட தேச எல்லையை ஒட்டி இருந்ததால் அவர்களில் பலரும் கன்னடம் பேசுவார்கள். அவர்களை தமிழர் என்று கொள்ளாமல் கன்னட தேசத்தவராக தள்ளிவிட முடியுமா?

தமிழர்களது வாழ்க்கை முறையை, பண்பாட்டை ஏற்று, தமிழை தனது தாய் மொழியாகக் கொண்டு, வழிவழியாக தமிழ்த் தேசத்தின் வாழ்க்கை நீரோட்டத்தோடு இரண்டறக் கலந்து வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரும் தமிழர்களே. இந்தச் சிந்தனை ஓட்டம்தான் நவீன தமிழ்த் தேசிய அரசியல் சூழலை வளர்த்தெடுக்கப் பெரிதும் பயன்படுமே தவிர, தூய இனவாதம் அதற்கு எதிரான விளைவுகளையே உருவாக்கும்.

பெரும்பான்மையான மக்களால் தமிழ் வழங்கும் நிலமாதலால் தான் இது தமிழ் நிலம், தமிழ்நாடு, தமிழகம், தமிழ்த்தேசம் எனப் பல பெயர்களால் – தமிழ் என்ற முன்னெட்டோடு அழைக்கப்படுகிறது. இந்தப் பெரும்பான்மையில் நாயுடுகளும், ரெட்டியார்களும், 24 மனைத் தெலுங்குச் செட்யடியார்களும், மராட்டியர்களும், சவுராட்டிரர்களும் உள்ளடக்கம்தான். தூய தமிழினவாதிகள் பட்டியலிடும் தமிழ்ச் சாதிகளோடு, மேலே யாம் பட்டியலிட்டுள்ள எல்லாரும் இணைந்துதான் ஒரு புரட்சிகரமான புதிய தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தமிழ் இலக்கிய/இலக்கணத் துறையில் பெயர் பெற்ற நாயுடு, ரெட்டிககளையும், தமிழ்நாடு விடுதலைப் படையில், வீட்டுமொழியாக தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட நாயுடு, ரெட்டி சமூகத்தில் பிறந்து, தமிழ்த்தேச விடுதலைக்காகப் போராடி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த தோழர்களையும் நான் அறிவேன். அவர்களை இயக்கியது சாதி உணர்வோ, அவர்களின் வீட்டுமொழியான தெலுங்கோ அல்ல. ஒடுக்கப்படும் தேசத்தின் விடுதலைக்கான மார்க்சீய லெனியை கண்ணோட்டம்தான் அவர்கள் அப்படிப்பட்ட போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டதற்கு காரணம். எனவே, ஒருவரின் கோட்பாடு, கொள்கைகள், யாருக்காக எதற்காக பாடாற்றுகின்றன என்று கண்டறியாமல் வெறுமனே தமிழ்ச்சாதி, தெலுங்குச் சாதி, கன்னட சாதி என்று பிரித்துப் பேசும் தமிழ்த் தேச விடுதலைக்கு எதிரான கருத்துக்களை என்ன விலைகொடுத்தும் தடுக்க தமிழக இளைஞர்கள் முன்வரவேண்டும்.

கள்ளர், மறவர், அகமுடையார், கொங்கு வெள்ளாளர்களுக்கு இணையாகத்தான் நாயுடு, ரெட்டிகளும் தத்தமது வட்டாரங்களில் உள்ள தலித் சமூகங்களை அடக்கி ஒடுக்குவதில், ஒத்த தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். இதில் தமிழினவாதிகள் பட்டியலிடும் சாதிகளில் உள்ள சாதி வெறியர்கள் தலித் சாதிகளின் மீது தொடுக்கும் கொலைவெறியாட்டங்களை, ஒடுக்குமுறைகளை, தலித் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தலித்துகள் சுட்டிக் காட்டினால், அது சகோதர யுத்தம், சகோதர சண்டை என்று சில தமிழின சாதியக் குழுக்கள் பேசியும், எழுதியும் வருகிறார்கள். ஆதிக்க சாதித் திமிருக்கு எதிரான போராட்டத்தை தலித்துகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி, சாதிவெறிக்கு எதிராகப் போராடாமல் வெறுமனே அது ஒரே இனத்துக்குள் நடைபெறும் சகோதரச் சண்டை என்று மலினப்படுத்துவது தமிழினவாதிகளுக்குள் ஒளிந்திருக்கும் சாதிய இந்துத்துவ நிலப்பிரத்துவ மனப்பாங்கையே காட்சிப்படுத்துகிறது. இப்படியிருந்தால், தூய தமிழினவாதம் என்பதை சாதிப் பதுங்குழி என்று அழைக்காமல், வேறு எப்படி அழைப்பது?

இதே குற்றத்தைத் தானே தங்கள் வட்டாரத்தில் உள்ள நாயுடு, ரெட்டிகளும் செய்கின்றனர். தலித்துகளின் பார்வையிலும் சரி, மார்க்சிய கோட்பாடுகளின் படியும் சரி, சாதி ஆதிக்கம் பிரபுத்துவ, இந்துத்துவ சமூக அமைப்பின் உற்பத்திப் பொருள். அதைத் தகர்த்தெரியாமல் ஒவ்வொரு ஆண்டை, ஆதிக்க சாதியும் தங்களால் ஒடுக்கப்படும் தலித்து சாதியரின் மீதான வல்லாதிக்கத்தை சகோதர சண்டை என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பது எவ்வளவு பெரிய மோசடி, அயோக்கியத்தனம்! இதை சுயமரியாதையுள்ள, தன்மானத்துக்காகப் போராடும் எந்த தலித்தாவது ஒப்புக் கொள்ளவானா? இதை தலித்துகள் அல்லவா சகோதரச் சண்டையா, சாதி ஆதிக்கவெறியா என்று முடிவு செய்ய வேண்டும்! இடைநிலைச் சாதிகளில் பிறந்து அச்சாதிகளின் தலித் விரோதப் போக்கை தடுத்து நிறுத்தும் துணிவும், வலிவும், யோக்கியதையும் இல்லாத சாதியினர் பேசும், முன்வைக்கும் தமிழின சகோதரச் சண்டை என்ற பொழிப்புரைக்குப் பெயர்தான் அடக்குமுறையை அங்கீகரிக்கும் அயோக்கியத்தனம்.

தமிழினவாதிகளால் தெலுங்குச் சாதிகள் எனப் பட்டியலிடப்படும் சாதி இந்துக்களும், தமிழ்ச் சாதி பட்டியலில் உள்ள இடைநிலைச் சாதிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை. தலித்துகளை ஒடுக்குவதில் அனைத்து தலித் அல்லாத சாதிகளும் ஒரே மனநிலையில்தான் இருக்கின்றனர். இதில் தமிழ்ச் சாதி என்ன? தெலுங்குச் சாதி என்ன?

உஞ்சனையும், கோடியும், கொடியங்குளமும், முக்குலத்தோர்களால் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆதிக்க வெறித் தாக்குதல்கள் என்றால்., ஒகலூரும், தொளாரும், நத்தம் காலனி மக்கள் மீதான தாக்குதல்களும், வன்னிய சாதி வெறியர்களால் நடத்தப்பட்டது. தோட்டக் குறிச்சி தீ வைப்பும், கோகுல்ராஜ் படுகொலையும் கொங்கு வெள்ளாளர் சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட ஆதிக்க வெறியாட்டம். இதையேதான் நாயுடுகளும், ரெட்டிகளும் தங்கள் பகுதிக்குள் உள்ள தலித்துகளின் மீது ஆதிக்க வெறியாட்ட அடக்குமுறைகளை ஏவுகின்றனர்.

எட்டையபுரத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஜக்கையனை, நாயுடு சாதியைச் சேர்ந்த துணைத்தலைவர் வெட்டிப் படுகொலை செய்தார். இதே எட்டையபுரத்தில்தான் அருந்ததியர்கள், ஆண் நாய் வளர்க்கக் கூடாது என ரெட்டியார்கள் தடை விதித்தார்கள். கோவை மதுக்கரை அருகில் உள்ள திருமலயான் பாளையத்தில் செட்டியார் வீட்டில் இருந்த அஞ்சலக அலுவலகத்திற்குள் சென்றதற்காக அருந்ததியர் ஒருவர் தாக்கப்பட்டார். கவுண்டர்களால் சாமிலா புரத்திலும், காலப்பட்டியிலும் அருந்ததியர்கள் மீது கொலைவெறியாட்டம் நடத்தப்பட்டது. கழுகு மலை அருகே ரெட்டியார் தெருவுக்குள் அருந்ததியர்கள் நடக்கக்கூடாது என்பதற்காக தங்கள் தெருவைச் சுற்றிலும் கம்பி வேலி போட்டனர். இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதில் தமிழ்ச்சாதி, தெலுங்குச்சாதி என்ற வேறுபாடு ஒரு தலித்துக்கு எப்படி இருக்க முடியும்? நாயுடு, ரெட்டிகளை விட தாங்கள் தலித்துகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள், நெருக்கமானவர்கள் என்று சொல்லிக் கொள்ள தமிழ் சாதிகளின் பட்டியலில் உள்ள இடைநிலைச் சாதிகளில் ஒன்றுக்குக்கூட அருகதையோ, யோக்கியதையோ இருப்பதாக எப்போதேனும், எங்கேனும், எந்தவிதத்திலேனும் மெய்ப்பித்திருக்கிறார்களா?

தூய தமிழினவாதிகளின் தமிழ்ச்சாதிகளின் பட்டியலில், சாதி மறுப்பாளர்கள், சாதி ஒழிப்புப் போராளிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் இருப்பது போலவே, தெலுங்குச் சாதி எனப் பட்டியலிடப்பட்டுள்ள சாதிகளிலும், சாதி மறுப்பாளர்கள், சாதி ஒழிப்புப் போராளிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் இருக்கத்தானே செய்கிறார்கள். இரு சாராரையும் இணைப்பது, சமூக மாற்றத்திற்கு போராடத் தூண்டுவது மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளும். அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சாதியத்திற்கு எதிரான இந்துத்துவாவுக்கு எதிரான கொள்கைகளும் கண்ணோட்டங்களும்தானே. ! இதில் எங்கிருந்து வந்தது தூய தமிழ்ச்சாதி, தூய தெலுங்குச் சாதி?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மனைவி, தெலுங்கை வீட்டு மொழியாகக் கொண்ட ஆசாரித் தாய்க்கும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முன்னாள் அமைச்சர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த க. காளிமுத்துவுக்கும் பிறந்தவர். ஆக திராவிட இயக்க எதிர்ப்பு என்பதும், தெலுங்குச் சாதி எதிர்ப்பு என்பதும் சீமானுக்கு வாய்ச்சவடாலே, ! தமிழகத்தில் இரண்டறக் கலந்துவிட்ட சமூகங்களை தமிழர்-தெலுங்கர் என கொம்பு சீவுவது இன மோதலுக்கும் சாதி மோதலுக்கும் இட்டுச் செல்லும் ஈனச் செயலாகும் என்பதை தமிழர்கள் குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசத்தை - தமிழ்த் தேச விடுதலையை படைப்பதற்கான அறைகூவல்களாக நம்முன் உள்ள சிக்கல்களைப் பட்டியலிடாமல், தமிழ்ச் சாதிகளை மட்டும் பட்டியலிட்டு என்ன பயன்?

தமிழ்த் தேசம் எதிர்கொள்ளும் அறைகூவல்கள்

1 தமிழ் நாடு சாதி, மத பிணக்குகளில், பாகுபாடுகளில், ஏற்றத்தாழ்வுகளில் சிக்குண்டுள்ளது.

2 தமிழ்நாடு இந்தியாவின் அடிமைத் தேசமாக இருக்கிறது.

3 தமிழ்த் தேசம் தனது பரப்பை கணிசமாக அண்டை தேசிய இனங்களிடம் இழந்துள்ளது.

4 தமிழ்த் தேசத்தின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் கொள்ளை போகிறது. தமிழ்த் தேசத்தின் நீர்வளம், மணல்வளம் சூறையாடப்படுகிறது.

5 தமிழ்த் தேசத்து மக்களின் உழைப்பு, ஆற்றல் சுரண்டப்படுகிறது.

6 தமிழ்த் தேசத்தின் நிலங்கள் வேற்று நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

7 தமிழ்த் தேசத்தின் வருவாய் இந்திய அரசால் கொள்ளையடிக்கப்படுகிறது.

8 தொழில் வளர்ச்சி என்ற பெயரால் தமிழ்த் தேசம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் முற்றுகை இடப்படுகிறது.

9 தமிழ்த் தேசத்தின் ஆற்று நீர் உரிமைகள் அண்டை தேச அரசுகளாலும், நடுவண் அரசாலும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

10 தமிழ்த் தேசத்தின் மலை வளம் வெட்டி எடுக்கப்பட்டு கிரானைட் கொள்ளையர்களால் சூறையாடப்படுகிறது.

11 தமிழ்த் தேசத்தின் உயிராற்றலான தமிழ் மொழி - இந்தி, இந்து, இந்திய அரசால் இரண்டாம் தர, மூன்றாம் தர நிலைக்குத் தள்ளப்படுகிறது.

12 தமிழ்த் தேச வரலாறுகள் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு வருகிறது.

13 தமிழர் பொருள் முதல்வாத மெய்யியல்கள் மூடுண்டு கிடக்கின்றன.

14 தமிழ்த் தேச காட்டு வளம், அங்கு வாழும் பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு நவீன முதலாளி வர்க்கத்தால் சூறையாடப்படுகின்றது.

15 தமிழக கடல்வளம், கடற்கரை வளம் மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய இலங்கை அரசுகளால் தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் தொடர் நிகழ்வாகிவிட்டன.

16 தங்களது செந்நீரை சிந்தி நகரங்களை வளர்த்தெடுத்த நகர்ப்புற சேரி ஏழை மக்கள் சென்னை மாநகருக்கு வெளியே தூக்கி வீசப்படுகிறார்கள்.

17 கல்வி உரிமை, வேளாண்மை உரிமை, தொழில் உரிமை யாவும் நடுவண் அரசால் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகிறது.

18 வணிக உரிமை, வரி வசூலிக்கும் உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டு பன்னாட்டு வணிகர்கள் மட்டுமே வணிகம் செய்யும் நிலைமையும் நடுவண் அரசு மட்டுமே வரி வசூலிக்கும் GST வரி மசோதாக்களும் நிறைவேற்றப்படுகின்றன.

19 நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட முடியாதது மட்டுமல்ல; அப்படி உரிமை கோரியதற்காக இன்று சாதாரண ஏழை எளிய விளிம்புநிலைச் சமூக வழக்கறிஞர்கள் தம் வழக்கறிஞர் தொழிலையே செய்ய முடியாமல் நீதிமன்றங்களுக்கு வெளியே விரட்டப்படுகிறார்கள். பாதுகாப்பு படை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள் நடுவண் அரசின் அடக்குமுறைப் படையை நிறுத்தி இந்திய அரசின் அதிகாரப்பிடியை உறுதி செய்திருக்கிறது நீதித்துறை.

20 போராடும் தமிழின இளைஞர்களை அடக்கி ஒடுக்கும் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை (UAPA, NSA) நடைமுறைப்படுத்தி மத்திய மாநில அரசுகள் நசுக்கி வருகின்றன.

இப்படி பட்டியலிட எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன. இவைகளை எதிர்த்து களம் காணும் போராட்ட திசைகளை, புள்ளிகளை ஒன்றிணைக்க வேண்டும். அத்தகைய புள்ளிகளைக் கண்டறிந்து ஒன்றிணைப்பது, தொலைநோக்கான, ஈகங்கள் நிறைந்த திட்டங்களாக இருப்பதால்தான் சந்தர்ப்பவாத அரசியலில், குறைந்தளவு அரசியல் அறுவடைக்காகவே தமிழ்த் தேசிய விடுதலை அரசியலை தமிழினவாத அரசியலாகச் சுருக்குகிறார்கள். அத்தகைய திரிபுவாதங்களை முறியடித்து தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்த் தேசத்தை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!

- அரங்க.குணசேகரன், பொதுச் செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் & தலைவர், தமிழக மக்கள் முன்னணி செல்:9494711184