இந்திய மக்களின் பெரும்பான்மையினரின் வாழ்நிலைச் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகிவரும் சூழ்நிலையில் உலக அளவில் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்தைப் பிடித்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. கேப்ஜெமினி மற்றும் ஆர்.பி.சி வெல்த் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனம் வெளியிட்ட உலக பொருளாதார வளம் 2015 என்ற ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1.56 லட்சம் கோடியாக இருந்திருக்கின்றது. எப்போதெல்லாம் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றதோ அப்போதெல்லாம் ஏழைகளின் எண்ணிக்கையும் அதற்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கின்றது.

 modi ambani tataபோன மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்திலும் இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் விரோத பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கின்றது. பல இந்திய முதலாளிகளைத் தரகு முதலாளிகளாக மாற்றியிருக்கின்றது. அவர்களின் மூலதனம் இன்று உலகின் மூலை முடுக்கெங்கும் பாய்ந்து, கிடைக்கும் அத்தனை வளங்களையும் சுருட்டிக்கொண்டு செல்கின்றது.

 சாமான்ய மக்களின் உண்மையான கூலி என்பது ஒவ்வொரு வருடமும் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கின்றது. சென்ற ஆண்டு சராசரியாக 80 ரூபாய் கொடுத்து வாங்கிய பருப்பு வகைகள் இந்த ஆண்டு 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. ஆனால் அவர்களின் சம்பளம் என்பது அதே நிலையிலேயே தேங்கி உள்ளது. ஆனால் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு மட்டும் பல நூறுமடங்கு ஆண்டுக்கு ஆண்டு உயர்கின்றது. இதுதான் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடு. ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் கடும் வறுமையும், துயரத்தையும் ஏழைகளிடம் கொண்டுபோய் சேர்க்கின்றது. ஆனால் பெரும் செல்வவளத்தை முதலாளிகளிடம் கொண்டுபோய் சேர்க்கின்றது. அவர்கள் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் லாபத்தை விட்டுக்கொடுப்பது கிடையாது.

 இந்திய மக்களின் லட்சக்கணக்கான கோடி வரிப்பணத்தை மானியமாகப் பெற்று தங்களை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக சேர்த்துக்கொண்ட இந்த நபர்களால் இந்திய மக்களுக்கு நேர்ந்த கதி மிகவும் பரிதாபத்துக்குரியது.

 ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை என்பது மிக அதிகம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை மேற்கொண்ட ஓர் ஆய்வில் இந்தியாவில் 42 கோடியே பத்து லட்சம்பேர் வறுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்வசதி இல்லாமல் மிக மோசமான வறுமையில் 30 கோடிபேர் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. உலகில் உள்ள ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் உள்ளார்.

 இது இந்தியாவின் நிலைமை என்றால் ஒட்டு மொத்த உலக மக்களின் நிலைமையும் பரிதாபகரமான நிலைமையிலேயே உள்ளது. தினந்தோறும் 20000 குழந்தைகள் பட்டினியின் காரணமாக மட்டும் உயிர் இழக்கின்றார்கள். நூறு கோடி மக்கள் உணவு இன்றி பசியுடன் தான் இரவில் படுக்கச் செல்கின்றனர். மேலும் கழிப்பிட வசதி இல்லாததால் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கின்றனர்.

 நிதிமூலதனம் உலகமயம் ஆனபின்பு அதனால் ஏற்படும் பாரதூரமான துயரங்களும் உலகமயம் ஆகியிருக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை என்பது அந்த நாடுகளின் செல்வசெழிப்பைப் பறைசாற்றுவது கிடையாது. மாறாக அந்த நாடுகளின் பெரும்பான்மை மக்களின் வறுமையும், துன்பத்தையுமே பறைசாற்றுகின்றது. உலகில் 80 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு பத்து டாலருக்கும் குறைவான கூலியே பெறுகின்றார்கள். ஆனால் 1 சதவீத பணக்காரர்கள் உலகின் செல்வவளத்தில் 48 சதவீத்ததை தமக்குச் சொந்தமாக வைத்திருக்கின்றார்கள். இதை எப்போதும் அனுமதிக்கச் சொல்கின்றது முதலாளித்துவம். அதற்குப் பெயர்தான் ஜனநாயகம் என்று சொல்கின்றது.

 ஒவ்வொரு முதலாளித்துவ நாடும் தங்கள் நாட்டுமக்கள் பெரும் சமூக ஏற்றத்தாழ்வின் காரணமாக புரட்சியில் இறங்காமல் இருக்கக் குறைந்த பட்ச சமூக நலத்திட்டத்தையாவது செயல்படுத்துகின்றன. ஆனால் இந்தியா போன்ற மிக மோசமான மக்கள் விரோத ஏகாதிபத்திய அடிமை மனோபவம் நிறைந்த ஆட்சியாளர்கள் மக்கள் நலத்திட்டங்களுகான நிதியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கின்றார்கள். சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் என்பது பணக்காரர்களின் வாழ்க்கைத்தரத்திற்கு கீழ்ப்பட்டதுதான் என்பது அவர்களின் எண்ணம். வறுமையைக் குறைப்பதற்கு மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை உயர்த்துவதற்குப் பதிலாக போலியான மோசடி வேலைகளால் வறுமையைக் குறைக்கின்றார்கள்.

 காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட டெண்டுல்கர் கமிட்டி நகரத்தில் இருப்பவர்கள் நாளொன்றுக்கு 33 ரூபாயும், கிராமத்தில் வசிப்பவர்கள் நாளொன்றுக்கு 27 ரூபாயும் சம்பாதித்தால் அவர்களை வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று வரையறுத்தது. அதே போல பா.ஜ.க ஆட்சியில் ரங்கராஜன் கமிட்டி நகர்புறத்தில் வசிப்பவர்களுக்கு 47 ரூபாயும் கிராமத்தில் வசிப்பவர்கள் நாளொன்றுக்கு 32 ரூபாயும் சம்பாதித்தால் அவர்களை வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று வரையறுத்தது. இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் பெரும்பான்மை மக்கள் மீது உள்ள வக்கிரம் பிடித்த சிந்தனை.

ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகும் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தியாவின் வளங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு சாராரிடம் சென்று தஞ்சம் அடைவதையே காட்டுகின்றது. ஆனால் நம் மக்களுக்கு இதுதான் ஜனநாயகம் என்று நம்பவைக்கப் பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் பெரும்முதலாளிகளுக்குச் சேவை செய்வதற்காவே உருவாக்கப்பட்டது என்பது அவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை. தேர்தல் மயக்கத்தில் அவர்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் வறுமைக்கான காரணத்தை நினைத்து கோபப்படுவதை விட இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றார்கள். இந்தியா வல்லரசு ஆகப்போவதாக பெருமிதம் அடைகின்றார்கள். இந்த ஏதும் அறியாத கோடானகோடி ஏழை மக்களை யார் காப்பாற்றுவது. எப்படி இவர்களுக்கான அரசியலை கொண்டுபோய் சேர்ப்பது. நினைத்தாலே மலைப்பாகத்தான் இருக்கின்றது. ஆனால் அதை செய்துதானே ஆகவேண்டும்.

- செ.கார்கி

Pin It